21 ஜூலை 2016

எட்டு திக்கும் மதயானை - நாஞ்சில் நாடன்

தலைகீழ் விகிதங்களுக்கு பிறகு வாங்கிய நாஞ்சிலாரின் நாவல்.

வீட்டை விட்டு சென்ற ஒருவனின் கதை. வீடு என்பது வெறும் தங்குமிடமட்டுமல்ல, குடும்பம் என்ற அமைப்பு. அதனுள் இருக்கும் வரை அது ஒரு பெரும் பாதுகாப்பு. வீட்டை விட்டு வெளியேறுதல் என்பது, குடும்பத்தை துறப்பது. தனியனாக இருப்பது. முதலில் வருவது ஒரு பாதுகாப்பின்மை, பயம். அதுவே ஒரு துணிவையும் தரும். அத்துணிவின் எல்லை, முதலில் அடைந்த பயத்தை பொறுத்தது.

கதையின் தலைப்பை பார்த்தே வாங்கினேன். தலைப்பை தவிர வேறு எதுவும் தெரியாது. தலைப்பு, ஒரு மத யானை கட்டின்றி எங்கும் திரிவது போன்ற ஒரு காட்சி தோன்றியது.

தோன்றிய காட்சி சரிதான். கொஞ்சம் நாயகன், புதுப்பேட்டை படங்கள் நினைவிற்கு வருவதை தவிர்க்க முடியவில்லை. அதிகம் நினைவிற்கு வருவது ஜெயமோகனின் புறப்பாடு. ரயில் நிலையங்களும், வட இந்தியாவும் அந்த நினைப்பை தருவதை தவிர்க்க முடியவில்லை. இதைப் படிக்கும் போது அதுவும், அதை படிக்கும் போது இதுவும் நினைவில் வந்து வந்து போகின்றது.

18 ஜூலை 2016

காண்டீபம் - ஜெயமோகன்

மகாபாரத வரிசையில் இந்திரநீலத்திற்கு அடுத்த நூல்.

காண்டீபம், பாரதத்தின் கதையோட்டத்திலிருது விலகி செல்லும் ஒரு நாவல். வெண்முகில் நகரத்திற்கு பின் கதை வெகுதூரம் விலகி விட்டது. இந்திரநீலம். கிருஷ்ணனின் திருமணங்களை பற்றி கதை. பெண்களை வென்ற கதை. காண்டீபம் அர்ஜுனனின் திருமணங்களை பற்றியகதை.

பாரதத்தில் மிகவும் குழப்பமான ஒரு விஷயம். காலம். வருடங்களின் கணக்குகள் எல்லாம் மிகவும் குழப்பமானவை. பல கதைகளின் இடைச்சொருகல்கள் காரணமாக நேர்ந்திருக்கலாம். அதே சமயம் எவை இடைச்சொருகல் என்று காண்பது எளிதல்ல. எவற்றையும் ஒதுக்க முடியாது. ஜெயமோகன், இம்மாதிரி விஷய்ங்களுக்கு கையாளும் உத்தி சூதர் கதைகள். நம்ப முடியாத கதைகளை சூதர்கள் சொல்வதாக அமைத்து விட்டால் ஒரு தொல்லை விட்டது.

அர்ஜுனன். பாண்டவர்களில் தேடல் நிறைந்தவன். பாரதம் முழுக்க திரிந்தவன். காண்டீபம் அர்ஜுனனின் வில். காண்டீபனின் கதையை சொல்வது காண்டீபம்.

13 ஜூலை 2016

இந்திரநீலம் - ஜெயமோகன்

நீலத்திற்கு பின்னால் கிருஷ்ணனை நாயகனாக கொண்ட நாவல். கிருஷ்ணனின் திருமணங்கள் பற்றிய புத்தகம். 

ஒவ்வொரு நாவலுக்கும் ஒவ்வொரு வகையான கதை சொல்லலை எடுத்துகொள்ளும் ஜெயமோகன், இதில் எடுத்துகொண்டது, சியமந்தகம். சியமந்தகத்தின் கதையே ஒரு சுவாரஸ்யமான கதை. என் பெண்ணிற்கு பல நாள் அக்கதையை சொல்லியிருக்கின்றேன். இ.பாவும் இக்கதையை கிருஷ்ணா கிருஷ்ணாவில் எழுதியுள்ளார். ஆனால் அதை வேறு கோணத்தில் காட்டி, அதை மையமாக வைத்துக் கொண்டு, கிருஷ்ணனின் திருமணங்களின் கதைகளையும், யாதவர்களின் அரசியலையும் கூறுகின்றார். வெண்முகில் நகரத்திற்கு பூரிசிரவஸ் போல இதில் திருஷ்டத்துய்மன்.

வழக்கம் போல ஒரு சூதர் கதையுடன் ஆரம்பிக்கின்றது.விஸ்வாமித்திரரின் கதை. திருஷ்டத்துய்மன் துவாரகைக்கு போகின்றான். அவனும் அங்குள்ள அரசியல் சூழலில் மாட்டிக் கொண்டு, கிருஷ்ணனை அறிகின்றான், தன்னையும் சுப்ரை மீதிருக்கும் தன் காதலையும் அறிகின்றான்.

01 ஜூலை 2016

உபசாரம் - சுகா

உபசாரம்

சுகாவின் நான்காவது புத்தகம். வழக்கம்போல கட்டுரை தொகுப்பு. தாயார் சன்னதி, மூங்கில் மூச்சு, சாமானியனின் முகம் வரிசையில் அடுத்த புத்தகம். 

புத்தகத்தில் பல கட்டுரைகள் உள்ளன, ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை. அனைத்தும் பிரமாதம் என்று கூற முடியவில்லை. மூன்று வருடங்களில் எழுதிய அனைத்தையும் கலந்து கட்டி வைத்துள்ளனர். பெரும்பாலும் மறைந்தவர்களை பற்றிய கட்டுரைகள். அவர்களை பற்றிய ஒரு நினைவை நம்முள் கிளப்பிவிடுகின்றது. ஜெயகாந்தன், பாலு மகேந்திரா, கல்பனா, கலாபவன் மணி, வெங்கட் சாமிநாதன், எம்.எஸ்.வி பற்றிய கட்டுரைகள்  எல்லாம் அவர்கள் மறைவின் போதும் அதையொட்டியும் எழுதப்பட்டவை. அவர்களை பற்றிய பொதுவான கட்டுரைகளாக இல்லாமல், அவர்களுடனான தன் அனுபவங்களை கூறியிருப்பதுத்தான் அவற்றை சிறப்பாக்குகின்றது.

26 ஜூன் 2016

நைலான் கயிறு - சுஜாதா

சுஜாதாவின் முதல் கதை.

இறங்கினான் என்பதை ஒவ்வொரு வரியில் எழுதினார் என்பது போன்ற புதுமைகளை(!) பலர் பல இடங்களில் வியந்தோதியிருப்பதை படித்திருக்கலாம். இப்புத்தகம் பதிப்பில் இருக்கின்றதா இல்லையா என்பதை கண்டுபிடிக்கவே கொஞ்ச நாள் ஆனது. உயிர்மையின் சுஜாதா தொகுப்புகளில் இது இல்லை. கணேஷ் வசந்த் தொகுதியில் இது இல்லை. தொகுப்பும் இரண்டுடன் நின்று விட்டது. கிழக்கில் வெளியானதும் கவனத்தில் படாமல் போய்விட்டது. 

கதை வெளிவந்த ஆண்டை கவனத்தில் வைத்து படித்தால், இதன் வீச்சு புரியும். கணேஷ் மட்டும் அறிமுகம். வசந்தை கணேஷ் என்ற பெயரில் அறிமுகம் செய்திருக்கின்றார்.