15 அக்டோபர் 2012

கரைந்த நிழல்கள்

"சினிமான்னா என்னாங்க  காரு சோறு இது இரண்டும் தானுங்களே. புரொடக்ஷன் நடக்கற வரைக்கும் அஞ்சு ரூபா பத்து ரூபா சாப்பாட்டுக்குக் குறைஞ்சு வேலைக்காரன் கூட சாப்பிடமாட்டான். பத்து பைசா பீடா வாங்க ஆறு மைல் எட்டு மைல் செளகார்பேட்டைக்கு இரண்டு கார் போகும்" என்று முடியும் இக்கதை சினிமாத்துறையினரின் கதையை இரண்டு வரியில் சொல்கின்றது.


சினிமா என்பது இன்னும் பெரும்பாலானவர்களுக்கு ஒரு அதிசய உலகம். அதைப் பற்றி அறிந்தவர்களுக்கு ஒரு வித்தியாசமான உலகம். நமக்கு சினிமா என்றதும் முதலில் நினைவிற்கு வருவது நடிகர்கள் பிறகு இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள் அவ்வளவுதான். இசைரசிகர்கள்  பாடகர்கள், பாடலாசிரியர்கள் பற்றி கொஞ்சம் கவனம் செலுத்துவார்கள். ஆனால் இவர்கள் மட்டுமா சினிமா? இதைத்தவிர எத்தனையோ துறைகள், எத்தனையோ உழைப்பு. அவற்றை பதிவு செய்த எழுத்துக்கள் மிக குறைவு. படித்தவரை சுஜாதாவின் கனவுத் தொழிற்சாலை, அசோகமித்ரனின் கரைந்த நிழல்கள் இரண்டும்தான்.

கனவுத் தொழிற்சாலை சினிமாவை ஒரு தளமாக கொண்டு எழுதப்பட்ட கதை. அதில் சினிமாவைப் பற்றிய செய்திகள் குறைவு என்றுதான் எனக்குப் படுகின்றது. ஆனாலும் அந்த உலகை ஓரளவிற்காவது காட்டியிருந்தார். ஆனால்  தொடர்கதைக்கு தேவையானத் திருப்பங்கள் என சென்றுவிட்டது. ஆனாலும் அது படிக்க அலுக்காத கதை (சுஜாதா கதை போரடிக்கின்றது என்று கூற முடியுமா?) 

கரைந்த நிழல்கள் சினிமாவைத்தவிர வேறு எங்கும் போகவில்லை. கதை பல மனிதர்களைப் பற்றிய தொகுப்பு. ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறை, வேறு விதமான நிலை, வேறு வர்க்கம். அனைவருக்கும் பிரச்சினைகள் பல வகையில்.

கரைந்த நிழல்கள் தீபம் இதழில் தொடரக வந்துள்ளது. நா.பா கல்கி, அகிலன் பாணியை சார்ந்தவராக இருந்தாலும் பல மாறுபட்ட எழுத்தாளர்களை ஊக்குவித்ததாக கூறியுள்ளார் முன்னுரையில். இது ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.கதை அறுபதுகளில் நடக்கின்றது என்று நினைக்கின்றேன், காலகட்டத்தை பற்றி ஏதும் கூறாவிடிலும், பண மதிப்பு, வடபழனியிலிருந்து மெட்ராஸ் போவது போன்றவற்றால் யூகிக்க முடிகின்றது

ஒர் தயாரிப்பாளர் பாதிப்படத்தை எடுத்துவிட்டு மீதியை தொடர முடியாமல் தலைமறைவாகின்றார். அதனால் படத்தில் பணி புரிந்த அனைவரும் பல விதமாக பாதிக்கப்படுகின்றனர். சிலர் அதிலிருந்து மீள முடியாமல் புதைந்து போகின்றனர். சிலர் அதிலிருந்து மீண்டு வெற்றியின் பக்கம் போகின்றனர், சிலர் புதையுவும் முடியாமல், மீளவும் முடியாமல் கிடைத்தைப் பிடித்து தத்தளித்துக் கொண்டுள்ளனர். 

கதை ஆரம்பித்த உடன் வேகமெடுக்கின்றது. ஒரு அந்தியாயம் முழுவது வரிசையான உரையாடல்கள் சிறு சித்தரிப்புகள் மட்டும்தான். தேவையற்ற விளக்கம் கிடையாது. அதிலேயே பாதிக்கதையை சொல்லிவிடுகின்றார். ஒரு தயாரிப்பு நிர்வாகி காலையில் எழுந்து வெளிப்புற படப்பிடிப்பிற்கு செல்கின்றார். அதற்கான முஸ்தீபுகள், நடைமுறைகள். அப்படத்தில் பங்கு பெறும் மற்றவர்கள், அவர்களின் குணம், தயாரிப்பாளரின் கவலை நிலை என அனைத்தையும் பூடகமாக சொல்லி விரைகின்றார்.

இதில் வரும் கதாபாத்திரங்கள் நாம் திரையில் காண்பவர்கள் அல்ல, அதற்கு பின்னலிருந்து உழைப்பவர்கள். 

காலையில் மூன்று மணிக்கு எழுந்து பரபரவென ஓடி ஓடி உழைத்து கடைசியில் மோசமான நிலைக்கு தள்ளப்படும் தயாரிப்பு நிர்வாகி; 

உதவி இயக்குனராக இருந்து வேலையில்லாமல் திரிந்து, கோவையிலிருந்து அடுத்த வாரம் வரும் தயாரிப்பாளரின் படத்தை இயக்கப் போவதாக 
புலம்பி, கடைசியில் ஒரு நடிகையை மணந்து கொள்ளும் ராஜகோபாலன்; 

ஒரு நடிகை ஒரு நாள் செய்த தகறாரில் படத்தை நிறுத்தி தலைமறைவாகும் தயாரிப்பாளர் செட்டியார்; 

குப்புறத்தள்ளப்பட்டாலும் சுதாரித்துக்கொண்டு இயக்குனராகிவிடும் உதவி நிர்வாகி; 

பணத்தை சம்பாரிப்பதை சுலபமாக செய்து, தன் வாழ்க்கையில் தனியாக நிற்கும் அய்யங்கார். 

இவர்களைத் தவிர சின்ன சின்ன கதாபாத்திரங்களையும் கச்சிதமாக செதுக்கிக்கியுள்ளார், எரிச்சலாகவே எப்போதுமிருக்கும் ஸ்டுயோ ஆள், பளபள உடையணிந்த உதவியாளன், மேஸ்திரி, துண்டு பிலிம் விற்கும் ஆள், அழுக்கு ஜிப்பா அணிந்த கதையாசிரியர்.

கதை துண்டு துண்டாக இருப்பது போல் தோன்றினாலும், ஒரு இழை அனைத்தையும் பிணைக்கின்றது. சினிமா என்பது அனைவரும் நினைப்பது போல பணம் கொழிக்கும் இடம் மட்டுமல்ல, ஒருவனை மொத்தமும் இழக்க வைத்து பிச்சைக்காரனாக்கவும் கூடும் என்பதை காட்டுகின்றது. சினிமா என்பது ஒரு பெரிய இயந்திரம், ஒரு இடத்தின் பழுது என்பது ஒட்டுமொத்த இயந்திரத்தையும் சரித்துவிடும். புத்திசாலித்தனமும் அதிர்ஷ்டமும் உள்ளவன் பிழைத்துக் கொள்ளலாம்.

இதில் காட்டப்படும் சில நுணுக்கமான காட்சிகள் சினிமாஉலகை புரிந்து கொள்ள உதவும். உணவு வழங்குவதில் உள்ள வேறுபாடுகள், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு இடத்திலிருந்து உணவு, சிகரெட், வெற்றிலை என பணத்தை சுலபமாக செலவழிக்கும் நடைமுறை. எங்கும் போய் வர வாகனம், சினிமாவில் நமக்கும் ஏதாவது ஆதாயம் கிட்டாதா என எண்ணி தன்னாலான சலுகைகளை தரும் அப்பாவிகள், ஒரு படம் வெற்றிப் பெற்றால் கிடைக்கும் மரியாதை என பலவித கோணங்களையும் காட்சிப்படுத்தியுள்ளார்.

அசோகமித்திரன் ஜெமினி ஸ்டுயோவில் வேலைப் பார்த்து வந்தார். அங்கு வாசன் அவரிடம் சின்ன வேலைகளையும் தந்துள்ளார், இதனால் கடுப்படைந்த அசோகமித்திரன் "ஒரு எழுத்தாளனை இது போல வேலையெல்லாம் செய்ய சொல்கின்றீர்களே" என்று கூறினார். அவர் நிதானமாக "எழுத்தாளன் என்றால் இங்கிருந்து கொண்டு என்ன செய்கின்றீர்கள்" என்று கேட்க, இவரும் வேலையை விட்டு நின்றுவிட்டதாக ஒரு செய்தியுண்டு (எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை). அங்கு வேலைபார்த்த அனுபவங்களை சரியாகப் பயன்படுத்தியுள்ளார்.

இவரை இத்தனை ஆண்டுகளாக படிக்காமல் விட்டு விட்டோமே என்ற வருத்தமே ஏற்படுகின்றது. இவரை அறிமுகப்படுதிய சில்க்கான் ஷெல்பிற்கும், புத்தகங்களை வாங்குவதை சுலபமாக்கிய என்.ஹெச்.எம்க்கும் நன்றி. அசோகமித்திரனின் இன்னும் சில புத்தக்ங்களும் உள்ளன அனைத்தையும் ஒரு முறை படித்தாகிவிட்டது. இரண்டு மூன்று முறை படித்தபின் அதைப்பற்றியும் எழுதுவேன். ஜாக்கிரதை!! (யார் இதைப் படிக்கின்றார்கள்? )

4 கருத்துகள்:

  1. அன்புள்ள ரெங்கசுப்ரமணி,

    கண்டிப்பாக அசோகமித்திரனின் மற்ற புத்தகங்கள் பற்றியும் எழுதுங்கள். படிக்க ஆவலோடு காத்திருக்கிறோம்...

    Feb 2009, தென்றல் மாத இதழில் அசோகமித்திரன் நேர்காணலில் இருந்து...

    கே: ஜெமினி ஸ்டூடியோவில் பணி புரிந்த அனுபவம்தான் 'கரைந்த நிழல்க'ளாக உருமாற்றம் பெற்றதா, அந்த அனுபவங்கள் குறித்துச் சொல்லுங்களேன்!

    ப: இல்லை. எனது வாழ்க்கை அனுபவத்திற்கும் 'கரைந்த நிழல்கள்' நூலுக்கும் அதிக சம்பந்தமில்லை. அந்த அறிவு பயன்பட்டது. அங்கிருந்த பரிச்சயங்கள் அதற்குப் பயன்பட்டன. நான் நேரடியாக வேலை செய்யாத பல துறைகளைப் பற்றி எழுதியிருக்கிறேன். 'தீபம்' இதழுக்காக எழுதப்பட்ட கதை அது. கரைந்த நிழல்கள் பலருடைய கதை. ஒருவருடைய கதை மட்டுமே அல்ல.

    எனக்குப் பிடிக்காதது என்றால் 'தண்ணீர்', 'கரைந்த நிழல்கள்' ஆகியவற்றைச் சொல்லலாம். என்னவோ அவற்றை எழுதி விட்டேன்.

    பதிலளிநீக்கு
  2. எனக்கு அசோகமித்திரனின் தண்ணீரை விட கரைந்த நிழல்கள் பிடித்திருந்தது.நான் இரண்டைப்பற்றியும் எழுதியுள்ளேன். முடிந்தால் படித்துப் பாருங்கள். http://kesavamanitp.wordpress.com/category/ashokamithran/

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களின் தளத்தில் ஏற்கனவே இவற்றைப் படித்துள்ளேன். பின்னுட்டம் எழுத தேடிப்பார்த்து அதைக் கண்டுபிடிக்க முடியாமல விட்டு விட்டேன். (அதை இன்றுதான் கண்டு கொண்டேன்) பதிவின் கடைசியில் தேடிப் பார்த்து விட்டுவிட்டேன். தண்ணீர் ஒரு முறை படித்து வைத்துள்ளேன் மறுபடியும் படிக்க வேண்டும்.

      நீக்கு
  3. அன்புள்ள திரு.ரெங்கசுப்பிரமணி அவர்களே

    எழுத்தாளர் அசோகமித்ரன் பற்றிய நுண்ணிய பார்வை உங்கள் வலைப்பூவில் கண்டு மிகவும் மகிழ்ச்சி யுற்றேன்.அதனை என் முகநூலிலும் (E Paramasivan Paramasivan) வ‌லைப்பூவிலும்(https://oosiyilaikkaadukal.blogspot.in/) பகிர்ந்து கொள்ளவிரும்பி பதிவு இட்டு உள்ளேன்.மிக்க நன்றி.

    அன்புடன்
    ருத்ரா இ பரமசிவன்

    பதிலளிநீக்கு