02 நவம்பர் 2012

சி.ஐ.டி சந்துரு - தேவன்


 தேவனின் புத்தகங்களை ஏற்கனவே படித்திருந்தாலும் மீண்டும் படிக்கலாம் என்று எண்ணினேன். புதிய புத்தகங்களுடன் இதுவும் ஒரு சைட் டிராக்காக ஓடட்டும் என்று. சி.ஐ.டி சந்துருவை படித்திருந்தாலும் அதை விட்டு விட்டு படித்ததில் அவ்வளவாக மனதில் ஒட்டவில்லை. எனவே ஒரே மூச்சில் படிக்கலாம் என்று நினைத்தேன் முடிக்க மூன்று நாளாகியது.


தேவனின் எழுத்து திறமை பற்றி சுதர்சனத்திலேயே கூறிவிட்டாலும் மீண்டும் ஒரு முறை. அவர் எழுத்து புதிதாக தமிழ் படிப்பவர்கள் படிக்க வேண்டிய எழுத்து. சிறு வயதினருக்கு ஒரு தலையணை போன்ற நவீன நாவலை தந்தால் அவர்கள் அதோடு புத்தகம் பக்கம் செல்லும் நினைப்பை மறந்துவிடுவர். தேவன், கல்கி எல்லாம் ஒரு நல்ல ஆரம்பம்.

சி.ஐ.டி சந்துரு தேவனின் மற்றுமொரு கதாபாத்திரம். சாம்புவிற்கு நேர் எதிரிடையான கதாபாத்திரம். சாம்பு குருட்டு அதிர்ஷ்டத்தால் கண்டுபிடிப்பதை, சந்துரு தன் மூளையால் கண்டுபிடிக்கின்றான். கதை விகடனில் தொடராக வந்துள்ளது. தொடர்கதைக்கு ஏற்ற திருப்பங்களுடன் பரபரவென இருக்கின்றது.



காணாமல் போன ஒரு பையை கண்டுபிடிக்க ஒரு பங்களாவிற்கு சந்துரு போகின்றான். பையோடு சேர்ந்து மனிதர்களும் காணாமல் போகின்றார்கள். அனைத்தையும் எப்படி இருந்த இடத்திலிருந்தே சந்துரு கண்டு பிடிக்கின்றான் என்பதை பல அந்தியாயங்களுக்கு போரடிக்காமல் கூறுகின்றார் தேவன்.

துப்பறியும் சாம்பு கதாபாத்திரத்திற்காக யாராவது நிஜமான துப்பறிபவர்கள் தேவனிடம்  தங்கள் தொழிலை கிண்டலடிப்பதாக வருத்தப் பட்டிருப்பார்கள் போல. அதற்கு பரிகாரமாக அல்லது பழிவாங்க இதை எழுதியிருக்கின்றார் என்று எண்ணத் தோன்றுகின்றது.

 பயங்கர புத்திசாலியாக இருக்கின்றான்.

போனவருடம் புகார் கொடுத்த கண்டெக்டரை சரியாக கண்டு கொள்கின்றான்.
தன் வீட்டிற்குள் நுழையும் முன்பே அங்கு யாரோ உள்ளனர் என்பதை அறிகின்றான்.
வந்தவனின் சென்ட் மணத்தை வைத்து அவன் சென்ற நாடகத்தின் பெயரை கூறுகின்றான். தன்னைப் பார்க்க வருபவரின் பெயரை சரியாக கூறுகின்றான், இன்னும் பல.

புத்திசாலி என்றால் அதற்காக இப்படியா.

இன்ஸ்பெக்டர் கோபாலன் இதுலும் வருகின்றார். ஆனால் மோசம், சந்துருவுக்கு எந்த உதவியும் செய்வதில்லை. சாம்பு என்றால் மட்டும்தான் அவருக்கு பிடிக்கும் போல.

கதையில் யாரையாவது கடத்திக்கொண்டே இருக்கின்றார்கள், கடத்தப்பட்டவர்க்ள் தப்பித்து ஓடுகின்றார்கள், ஓடுபவர்களை மறுபடியும் கடத்துகின்றார்கள், கடத்தப்பட்டவர்கள் தப்பித்து ஓடுகின்றார்கள், ஓடுபவர்களை மறுபடியும் கடத்துகின்றாரகள், கடத்தப்பட்டவர்கள்.......

கதாபாத்திரங்கள் சென்னையின் சந்துகளில் ஒடுகின்றார்கள், மாடிகளில் ஓடுகின்றார்கள்,வயல்களில் ஓடுகின்றார்கள். துரத்துபவர்களும் கார், சைக்கிள், ரிக் ஷா என கிடைத்ததில் துரத்துகின்றார்கள். மாடியில், இருண்ட அறையில், தெருவில், சமையலறையில் என் அனைத்து இடங்களிலும் கட்டிப் புரள்கின்றார்கள்.

சந்துருவிற்கு துணையாக பல பேர் பல இடங்களில் சண்டையிடுகின்றனர். கணேஷ் யோசிப்பதற்கு, வசந்த் சாகசத்திற்கு என்பது போல, சந்துரு மூளையை மட்டும் பயன்படுத்துகின்றான்.

ஏகப்பட்ட கதாபாத்திரங்கள், தொடர்கதையாக எழுதியிருந்தாலும் நடுவில் கதாபாத்திரங்களின் பெயர்களை மாற்றி விடவில்லை. அக்கால சென்னையை முழுவதுமாக சுற்றிப் பார்த்த திருப்தி உண்டாகின்றது. சென்னை என்பது ஏகப்பட்ட சந்துகளும் காலி வீடுகளும் கொண்ட ஒரு பெரிய கிராமமாக இருந்தது என்ற எண்ணமே உண்டாகின்றது.

சந்துருவை கிட்டத்தட்ட ஒரு மாயாவி போல காட்டியுள்ளார் என்றுதான் கூற வேண்டும்.  சங்கர்லால் போன்ற அதிபுத்திசாலித்தனமான, மற்றவர்களால் பெரிதும் வியந்து போற்றப்படும் கதாபாத்திரங்களுக்கு சந்துருதான் முன்னோடி.

சில இடங்களில் ஒரு அலுப்பும் வருகின்றது. இன்னும் எவ்வளவு நேரம்தாண்டா ஓடுவீங்க என்று. அதோடு சந்துருவைப் பார்த்து, அப்பா போதும் ரொம்ப பில்டப் என்று கூறும் அளவிற்கு பொறுமையை சோதித்துள்ளார்.

அங்கங்கு போரடித்தாலும் நல்ல ஒரு பொழுதுபோக்கு புத்தகம்.


2 கருத்துகள்:

  1. விமர்சனம் வாங்க தூண்டுகிறது சார்.. வாங்கியே ஆக வேண்டும்.. என்ன புத்தக சைஸ் தான் கொஞ்சம் பயமுறுத்துகிறது :-)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதை படிக்க முதலில் நம்மை தயார் செய்துகொள்ள வேண்டும். ஐம்பதுவருட முந்தைய நடை, அந்த மக்களுக்கு எழுதப்பட்ட கதை.

      நீக்கு