11 டிசம்பர் 2012

தி. ஜானகிராமன் சிறுகதைகள் - 1

தி.ஜா ஒரு மிகச்சிறந்த நாவலாசிரியர் என்பது அனைவருக்கும் தெரியும். அவர் ஒரு மிகச்சிறந்த சிறுகதை ஆசிரியரும் ஆவர் என்பதை காட்டுகின்றது, அவரின் சிறுகதை தொகுப்பு. இது அவரின் படைப்புகளின் முதல் தொகுதி. மொத்தம் 70 கதைகள் பகுதி பகுதியாக வரும்.

அவர் சிறுகதைகளையும் நாவல்களைப் படிக்கும் போது ஒரு அமைதியான நதி அருகில் அமர்ந்து கொண்டு வேடிக்கைப் பார்ப்பது போன்ற சித்திரம் உண்டாகின்றது. இதிலும் பெரும்பான்மையானவை தஞ்சாவூர் ஜில்லா கதைகள் போலத் தெரிகின்றது. அனைத்து கதைகளிலும் பலம் உரையாடல்.


            கங்கைக்கு தன் அக்காவிற்காக வரும் சின்னசாமி, அங்கு தன்னை ஏமாற்றிய அன்னதாதா துரையப்பாவை பார்க்கின்றார். கதை என்று பெரிதாக இல்லை, ஏமாற்றும் மனிதர்களையும், தன்னை ஏமாற்றியவனின் பாவத்தை சேர்த்து கங்கையில் கரைக்கும் மனிதர்களையும் பற்றியது.

2. தீர்மானம்

            இன்றைய சூழலில் இக்கதை பொருத்தமாக இருக்காது. சோழி விளையாடும் சின்னப்பெண், கோபத்தில் இருக்கும் அவரது கணவன் வீட்டுக்காரர்கள் வந்து அழைத்ததும், தன் தந்தைக்கு கூட காத்திருக்காமல் மூட்டைக் கட்டிக் கொண்டு கிளம்புகின்றாள். இதே போன்ற ஒரு குழந்தை திருமணக் கதை படித்துள்ளேன் எங்கு என்று நினைவில்லை.


           இக்கதை கல்லூரியில் எனக்கு பாடமாக இருந்தது. எப்படி அனுகூலசாமி சிறந்த ஆசிரியர் என்று பக்கம் பக்கமாக இக்கதையை விட பெரிய அளவில் எழுதி தள்ளியுள்ளோம். இப்போது நினைத்தால் பைத்தியக்காரத்தனமாக உள்ளது. கதை நமக்கு உணர்த்துவதை எல்லாம் எழுத்தில் வடிக்கவும் தனித்திறமை வேண்டும். யாரையும் புண்படுத்தாத ஆசிரியர் அனுகூலசாமி, அவர் சொன்ன ஒரு சிறு வார்த்தை ஒரு மாணவனை மோசமாக பாதிக்க, அது அவரை முள்முடியாக அழுத்துகின்றது. எனக்கு மிக பிடித்த கதை.

4. அட்சராப்பியாசம்

            பைத்தியமாகும் ஐயாறுவின் மனைவிக்கு குழந்தை பிறக்கின்றது. ஐயாறுவின் தாயாருக்கு அது அவன் குழந்தைதானா என்ற சந்தேகம் வருகின்றது. அட்சாரப்பியாசம் செய்து வைக்க அவனை அனுப்ப மறுக்கின்றாள், உண்மை அறியும் குழுவாக ஒரு சாமியார் வருகின்றார். கதை கடைசியில் குழப்பமாகவே இருக்கின்றது எனக்கு.

5. நாய்க்கர் திருப்பணி

           பிள்ளையார் கோவில் கட்ட அடாவடியாக பணம் வசூலிக்கும் நாயக்கர் கதை. எனக்கு இது ஒரு சுமாரான கதை.


           கோதாவரி குண்டு (ஏதோ ஒரு பாத்திரம் போல, யாருக்கு தெரியும்), ஒரு ஏழைப் பெண்ணால் அடகு வைக்கப்படுகின்றது. நடுத்தர வர்க்க கதை, அவர்களின் மாதக்கடைசி நிலை எல்லாம் அருமையாக வெளிப்பட்டுள்ள கதை. கிளைமாக்ஸ் சூப்பர். இது போலத்தான் பல வீடுகளில் நடக்கின்றது. தத்தோஜி மாதிரி சிலர் எப்படி வாழ்க்கை நடத்துகின்றார்கள் என்பதே ஆச்சரியமாகத்தான் இருக்கின்றது. பிடித்திருக்கின்றது.

7. வெங்கிடி சார் ஏன் ஓடினார்

           இரக்கம் என்பதற்கும் ஒரு அளவு இருக்கின்றது, அதற்கும் சில நிபந்தனைகள் இருக்கின்றது. நாம் இரக்கப்படும் சிலர் நம்மை ஏமாற்றினால் என்னவாகும். பாதி இடங்களில் நாம் தெரிந்தே ஏமாறுகின்றோம். பாவம் உறவினர்களுக்கு எல்லாம் வடித்து கொட்டும் வெங்கிடி சாரை ஏமாற்றினால் என்ன செய்வார்?

8. சக்தி வைத்தியம்

          குழந்தைகளின் சக்தி எல்லாவற்றையும் வேறு விதத்தில் செலவழிக்க வைக்க உபதேசிக்கும் ஆசிரியையும், அவளின் மாணவனின் அம்மாவும். குழந்தைகளின் இயல்பான குறும்பை குறைக்க அவனது சக்தியை செலவழிக்கச் செய்ய வேண்டும் ஆசிரியை, தன் குழந்தைக்கான சக்தியை எங்கோ நாடகத்திற்கு செலவழிக்கின்றாள். இக்கதைக்கா சாகித்திய அகாடமி பரிசு கிடைத்தது? தி. ஜா என்று முடிவு செய்துவிட்டு கதையை தேடியுள்ளார்கள் போல

9. வீடு

          ஒரு மருத்துவர். அவருக்கு கம்பவுண்டராக வரும் ஒருவன் அவர் கட்டிலிலும் இடம் பிடிக்கின்றான். மனைவி அவர்களின் வீட்டை தனக்கு தந்து விட்டு விலகுமாறு கேட்கின்றாள், மருத்துவர் மறுக்கின்றார். வீடும் அவர்களும் என்னவானார்கள். இது போன்ற கதைகள் கொஞ்சம் தப்பினாலும் விரசமாகிவிடும். தெளிவாக, அழகு நடையில் எழுதியுள்ளார். விவரிப்பு பிரமாதம். கொஞ்சம் பெரிய கதை.

10. ஒரு வாக்குவாதம்

         விறகு கடைக்காரருக்கும் அவரது உதவியாளருக்கும் இடையிலான சிநேகத்தைப் பற்றிய கதை. விறகு கடைக்காரர் ஏன் அவரது பரம்பரை தொழிலை விட்டு விட்டு விறகு கடை வைத்தாரென்பதும், அவருக்கும் அவரது வேலைக்காரனுக்குமிடையிலான உரையாடலும் சுவாரஸ்யம். சுமரான கதை.

2 கருத்துகள்:

  1. அன்புள்ள ரெங்கசுப்ரமணி,

    அருமையான விமர்சனம்.

    உங்களுக்கு மிகவும் பிடித்த முள்முடி கதை அழியாச் சுடர்கள் தளத்தில் படிக்கக் கிடைக்கிறது.

    http://azhiyasudargal.blogspot.in/2012/02/blog-post_09.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி.

      நீங்கள் தந்த சுட்டியை கட்டுரையில் இணைத்து விட்டேன்.

      நீக்கு