19 டிசம்பர் 2012

தி. ஜானகிராமன் சிறுகதைகள் - 4

முந்தைய பகுதிகள்


31. அர்த்தம்

          அனைவரின் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் இருக்க வேண்டும். இல்லையென்றால் வாழ்க்கை போரடித்து விடும். திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் அண்ணன், புதிதாக திருமணம் செய்து கொண்ட தம்பி. அண்ணன் ஒண்டி என்பதால் எதற்கு சரிபாதி தரவேண்டும் என்று நினைக்கும் தம்பிக்காக தன் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தை தேடும் அண்ணன். "சிவன் கோயிலில் விளக்கணைத்து கொண்டிருப்பவன்" இதற்கு என்ன அர்த்தம்?

32.  ராம ஜெயம்

         கெட்டவர்கள் மேலும் மேலும் கெட்டது செய்தால் யாரும் அதை பெரும் தவறாக நினைப்பதில்லை. அவன் அப்படித்தான் செய்வான் என்று நினைத்து விட்டு விட்டு போய்விடுவார்கள். நமது அரசியல்வாதிகள் செய்கின்ற ஊழல் மாதிரி. நல்லவர்கள் ஒரு தவறு செய்தாலும் ஏறி மிதித்துவிட்டு தான் அடுத்த வேலை பார்ப்பார்கள். அவர்களும் சரியாக தவறை செய்ய தெரியாமல் மாட்டியும் கொள்வார்கள் வாழ்வில் ஒரே ஒரு முறை ஒரு முறை அல்ப காரணத்திற்கு தவறு  செய்யும் ராகவாச்சாரி மாட்டியும் கொள்கின்றார். 

33. மாற்றல்

     அக்கால ஆசிரியர்களுக்கு தனி மரியாதை என்பார்கள்.அது பெற்றோர்களின் பார்வையிலாக இருக்கும். ஆசிரியர்களின் மேல் அமர்ந்திருப்பவர்கள் ஆசிரியர்களை படுத்தும் பாடு, சொல்ல முடியாத அவஸ்தை. கல்கி, ஒரு ஆசிரியர் இன்ஸ்பெக்டர் வருகின்றார் என்று பயந்து நடுங்குவதை அவரின் ஒரு கதையில் நகைச்சுவையாக எழுதியிருப்பார். வெங்கிடியா ஒரு சிறந்த ஆசிரியர். அவருக்கு மாற்றல் வருகின்றது, அவரும் தயாராகின்றார். ஊர் மக்கள் அவர் மாற்றலை தடுக்க நினைத்து பிரசிடெண்டிடம் முறையிட, அவர் வெங்கிடியாவை பிடித்து காய்ச்சுகின்றார், அதுவும் அருமையான் செவ்வாங்கிலத்தில். ஆசிரியர்களை அதிகாரம் செலுத்தும் பீடத்தில் உள்ளவர்களின் லட்சணத்தை எள்ளி நகையாடியுள்ளார். ஐ டஸ் நாட் ஸ்லீப் என்று தலைப்பிட்டுருக்கலாம். பிடித்த கதை.

34. வெயில்

         இறந்து போன மனைவியைப் பற்றி நினைக்கும் கணவனின் கதை. நிழலின் அருமை வெயிலில் தெரியும். வயதின் இறுதியில் தான் துணையின் அருமை தெரியும். அவர்களின் காதலை, அன்பை அழகாக சொல்கின்றார். நல்ல கதை.

35. மாடியும் தாடியும்

         நம்மிடம் யாரவது ஒரு யோசனை கேட்டால் போதும், நமக்கு பெருமை தாளாது. சில சமயம் நம்மை விட வயதில் மட்டும் பெரியவர்களிடம் யோசனை கேட்கத் தோன்றும்.  அவர்கள்  சாதாரணமாக கூறும் வரிகளுக்கும் நமக்கு ஒரு அரிய விளக்கம் தோன்றும். யோசித்து பார்த்தால் அவர் கூறும் அனைத்து மறை பொருள் கருத்துக்களும் நம்மிடமிருந்தே உதயமாகி இருக்கும். அது போல, ஒரு வயதானவரிடம் ஒரு அம்மா தன் பையனை அழைத்துக் கொண்டு வருகின்றார். அவரும் தன் பங்கிற்கு அவனுக்கு அறிவுரை கூறுகின்றார். கடைசியில் அவர்கள் அவருக்கு நாஸ்திக தாடிப் பட்டம் கட்டிவிட்டு செல்கின்றனர். சுமாரான கதை.

36. பாஷாங்கராகம்

         ராகத்தில் அது என்ன பாஷாங்க ராகம். முதலில் படிக்கும் போது சரியாக புரியவில்லை. ராகத்தில் அந்நிய ஸ்வரம் கலப்பது என்கின்றார்கள், ஸ்வரம் என்ன என்று தெரிந்தால் தானே அந்நிய ஸ்வரம் பற்றி தெரிய. ஏதோ கலப்பட வேலை என்பது மட்டும் தான் தெரிந்தது. பலராமன் என்னும் சங்கீத விமர்சகர், சங்கீதத்தை ஒரு தியரியாக படித்து வைத்துக் கொண்டுள்ளவர். சங்கீதத்தை பற்றி பேசுவதையே தொழிலாக வைத்துக் கொண்டு, குடும்பத்தை பற்றி நினைப்பில்லாமல் தன்னை ஒரு யோகியாக / ஞானியாக நினைத்துக் கொண்டு வாழ்கின்றார். அவரின் நண்பர் அந்நிய ஸ்வரமாக நுழைகின்றார். பாஷாங்க ராகத்தில் அந்நிய ஸ்வரம் ராகம் வருவது அதை இன்னும் போஷிக்க என்கின்றார் அவரின் மனைவி. கடைசியில் பாஷாங்க ராகம் அவரை பைத்தியமாக்குகின்றது. கடைசி பாரவில் ஒரு சிறிய திருப்பம். நல்ல கதை.

37. அன்பு வைத்த பிள்ளை

          வயதான ஒரு அம்மா அவளின் பிள்ளை. இருக்கும் வரை கிழிந்த பாயில் கிடந்த அம்மா இறந்த பின், அதை நினைத்து உருகும் பிள்ளை. மெகா சீரியலின் ஒரு எபிசோட்

38. மனிதாபிமானம்

          யார் மனிதாபிமானி. நமது இணைய புரட்சிகர கம்யூனிஸ்டுகள்தான் எனக்கு தெரிந்தவரை மிகச்சிறந்த மனிதாபிமானிகள். எப்போதும் ஏழைகளைப் பற்றியே நினைத்து பேசி எழுதி வருகின்றனர். அது போதும் அப்பட்டத்தை வாங்க. ஏதாவது செய்வது என்பது இரண்டாவது. நினைப்பு அது போதும். அது போன்ற ஒரு மனிதாபிமானி தேவுடு, அவரது ஹாங்காங் கடிகாரத்தை எங்கும் சரிபார்க்க முடியாது என்று தெரிந்த அடுத்த கணமே அதை மனிதாபிமானத்துடன் தானம் செய்ய தயாராகின்றார். அதே மனிதாபிமானத்துடன் ஜிலேபி வாங்கிக் கொண்டு வீட்டிற்கு நடையை கட்டுகின்றார். பல புத்தகங்களை படிப்பதால் மட்டும் நாம் அனைவரையும் விட ஒரு படி மேலே, நாம் சாராசரி அல்ல என்று நினக்கும் பலரில் ஒருவர்.

39. மன நாக்கு

        நாம் பெரும்பாலும் வெளிப்படையாக பேசுவதை விட மனதில் பேசுவதுதான் அதிகம். மன நாக்கு அதிகம் பேசும் கேட்காது. திருமணமான ஒரு பெண்ணிடம் மனதால் மட்டும் அதிகம் பேசும் ஒருவனின் கதை. அப்பெண்ணி கணவன் இல்லாத சமயம் செல்லும் அவனின் மனதில், வழியில் சந்திக்கும் சீக்கியன் செய்த மாற்றம்.

40. பாட்டியா வீட்டில் குழந்தைக் காட்சி

     எனக்கு பிடித்த ஒரு கதை. ஒரு வீட்டை வாடகைக்கு எடுக்க செல்லும் தேவாவின் குடும்பம் அங்கிருந்த குழந்தைகளுடன் சிநேகமாகின்றனர். அக்குழந்தைகளைப் பற்றிப் பேசி பேசி மாய்கின்றனர். அவ்வீட்டிற்கு குடி போக முடியாத நிலையில் அக்குழந்தைகள் வேறுவிதமாக மாறுகின்றனர். அக்குழந்தைகளைப் பற்றி தேவா குடும்பத்தின் பார்வையும் மாறுகின்றது. கடைசி வரிகள் யதார்த்தம்.

அடுத்த பகுதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக