28 டிசம்பர் 2012

பேசும் பொம்மைகள் - சுஜாதா

கணேஷ் வசந்த் வரும் சைன்ஸ் ஃபிக்‌ஷன். டவுன்லோடிங் என்பதை அடிப்படையாக கொண்ட ஒரு நாவல். 90களில் குங்குமத்தில் தொடராக வந்துள்ளது. மனிதனின் மூளை என்றும் அனைவருக்கும் புதிர். விஞ்ஞானிகளின் பல ஆராய்ச்சிகளால் இன்னும் முழுவதும் புரிந்து கொள்ள முடியாத ஒரு பகுதி. மனம் என்பது ஒரு தனியான பகுதியா, மூளையின் ஒரு பகுதியா, வெறும் நினைவுகளா அதுவே இன்னும் குழப்பம்.

உலகின் மிக வேகமான கம்ப்யூட்டர் மனித மூளை. எப்போதோ சுமார் 15 வருடங்களுக்கு முன்பு பார்த்த ஒருவரை, அவரது சாயல் மாறியிருந்தும் சில நிமிடங்களில் கண்டு பிடிக்கும் ஒரு கம்ப்யூட்டர். அது வைத்திருக்கும் டேட்டாக்களை சேமிக்க எத்தனை டெரா பைட் தேவைப்படும். அதை அலசி ஆராய எத்தனை வேகமான ப்ராசசர்கள் தேவை. அப்படிபட்ட மூளையின் அமைப்பை கண்டு கொள்ள முடிந்தால் என்னாவாகும், அதுதான் கதை.

கதை மனிதனின் நினைவுகளை இயந்திரத்திற்கு மாற்றி மீண்டும் அதை மனிதனுக்கு மாற்றும் சாத்தியத்தை பேசுகின்றது. எப்படி அது சாத்தியம் என்பது எல்லாம் இங்கு தேவையில்லை. அது தெரிந்தால் ஏன் கதை எழுத வேண்டும், நோபல் பரிசு வாங்கப் போயிருக்கலாம்.

ஒரு ஆராய்ச்சி கூடத்திற்கு நேர்முகத்தேர்விற்கு போகின்றாள் மாயா, அங்கு அவளின் அக்கா மேனகா ஏற்கனவே வேலை செய்து கொண்டு இருந்து, சொல்லாமல் கொள்ளாமல் அமெரிக்கா போய்விட்டாள். மேனகாவின் சகோதரி என்பதால் உடனே வேலை கிடைக்கின்றது. அங்கிருக்கும் இரண்டு ஆராய்ச்சி டாக்டர்களின் அரசியலில் மாட்டிக்  கொள்கின்றாள்.


அவளுக்கு அங்கு ஏதோ சரியில்லை என்ற எண்ணம் உண்டகின்றது. மாயாவை வைத்து ஏதோ ஆராய்ச்சி செய்கின்றனர். அவளின் அக்கா மேனகாவும் அவளுக்கு தொலைபேசியில் பேசுகின்றாள், ஆராய்ச்சிக்கு ஒத்துழைக்க சொல்கின்றாள். அமெரிக்கா செல்லும் மாயாவின் காதலன் மேனகா அமெரிக்காவில் இல்லை என்கின்றான். மாயா குழப்பத்தில் ஆராய்ச்சி நிலையத்தை விட்டு தப்பிக்க நினைத்து மாட்டிக் கொள்கின்றாள்.


பெற்றோர்கள் கணேஷிடம் செல்ல கதை வேகம் எடுக்கின்றது. மாயா என்னவானாள், மேனகாவிற்கு என்ன ஆனது, டவுன்லோடிங் ஆராய்ச்சி என்றால் என்ன என்பதை ஆந்திரா எல்லாம் அலைந்து கண்டு பிடிக்கின்றார்கள். 

கதை நல்ல விறுவிறுப்பு. சும்மா கொஞ்ச நேரம் படிக்கலாம் என்று எடுத்து ஒரே மூச்சில் படித்து முடித்தேன். ஆரம்பத்தில் சாதரணமாக செல்லும் கதை, மாயா தப்பிக்க ஆரம்பிப்பதிலிருந்து விரைகின்றது. முடிவு சுஜாதா வின் முத்திரை. 

வசந்த் வழக்கம் போல் சாகசங்கள் பல செய்கின்றான்.முதல் முறையாக கணேஷ் சட்டத்தின் வழியிலிருந்து விலகி குற்றவாளியை தண்டிக்கின்றான். இது என்னை பொறுத்த வரை சைன்ஸ் ஃபிக்ஷன் ஜாதியில் வராது.  டவுன்லோடிங், அப்லோடிங்க் என்பது கதையின் ஒரு முடிச்சு அவ்வளவுதான். அந்த இடத்தில் வேறு எதை வைத்தாலும் கதையோட்டம் பாதிக்காது.

ஒரு விறுவிறுப்பான கணேஷ் வசந்த் கதை. சினிமாவாக எடுத்து குதற தோதான நல்ல நாவல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக