11 ஜனவரி 2013

தெய்வீக உணவு

அம்மா எப்போது ஊருக்கு போனாலும் எங்கள் ஊர் முருகன் கோவிலில் உள்ள பிள்ளையாருக்கு ஒரு நப்பாசை துளிர் விடும். ஒரு விடல் தேங்காய் கிடைக்கும் என்று அவர் ஆசைப்பட்டுக் கொண்டிருப்பார். எப்படி நடக்கும்? வேண்டுதல் என் பாட்டியுடையது என்றாலும்,  அது நிறைவேறுவது என் கையில் அல்லவா இருந்தது. என் பாட்டி என்றால் எல்லாருக்கும் ஒரு டெரர்தான். அனைவருக்கும் ஒரு பயம். அவருக்கும் யாரும் லட்சியம் கிடையாது, தடால் புடால் தான். அவர் எங்கள் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு பார்த்ததில்லை, ஆனால் தலையில் பீரோ விழுந்து அடிப்பட்ட கட்டுடன் தலைக்கு குளித்துவிட்டு கோவிலுக்கு பொங்கல் பிரசாதம் போட போய்விடுவார். அப்படி பட்ட பாட்டி;

" அப்பா பிள்ளையாரப்பா, இந்த பையன் எதுவும் சொல்லாமல் சாப்பிட்டு போகடும் உனக்கு ஒரு விடல் போடுகின்றேன்" என்று வேண்டிக் கொள்வாள்.

பாவம் அது என்றும் நடந்ததில்லை.

இந்த சாப்பாட்டு ராம புத்தியால் பல பேர் சாபத்தை வாங்கிக் கொண்டுள்ளேன்,

அப்படி வக்கனையாக சாப்பிட்டுக் கொண்டிருந்த நான் பெங்களூரில் வந்து மாட்டிக் கொண்டேன். அனைவரின் சாபமும் வேறு வழியில் வேலையைக் காட்டத் துவங்கியது. இனிப்பு சாம்பாரும், புளித்த சட்னியும், தகடு தோசையுமாக என் வாழ்க்கை போனது. அதைக் கூட சகித்துக் கொண்ட எனக்கு, பொங்கல் என்ற பெயரில் தரப்படும் கஞ்சியையும் அதற்கு தொட்டுக் கொள்ள தரப்படும் தயிரும் தாங்க முடியவில்லை. அப்படியும் அதைக் குடித்துக் கொண்டு உயிருடன் வாழ்ந்தேன்.

அலுவலகத்தில் வழங்கும் உணவு, அதை தின்று எப்படி அத்தனை பேரும் உயிருடன் இருக்கின்றார்கள் என்பது புரியாத புதிர். அலுவலகம் உள்ள இடத்தில் அனைத்து ஹோட்டல்களும் நின்று கொண்டு சாப்பிடும் ஹோட்டல்கள். எனக்கு டைனிங் டேபிளில் உக்கார்ந்து சாப்பிடுவதே எரிச்சலாக இருக்கும், கீழே தரையிலமர்ந்து சாப்பிட்டால்தான் திருப்தி. இதில் நின்று கொண்டு உண்பது அதைவிட கடினம். ஆனால் வேறு வழியில்லாமல் நின்று கொண்டு சாப்பிட பழகிவிட்டேன்.

அலுவலகத்திற்கு பக்கத்து பில்டிங்கில் கார் பார்க்கிங்கில் ஒரு சாப்பாட்டு கடை. வரிசையில் நின்று கொண்டு வாங்கி ஏதாவது அப்பாவியின் பைக்கில் அமர்ந்து சாப்பிட்டு விட்டு வர வேண்டும். வண்டிக்காரர் மாலை அவர் வண்டியைப் பார்த்தே தெரிந்து கொள்ளலாம் என்ன மெனு என்று. 

ஒரே தட்டில் சப்பாத்தி, புளியோதரை, புலாவ், ஜாங்கிரி, வடை, ஃப்ரூட் சாலட் என அனைத்தையும் வாங்கிக் கொண்டு வர வேண்டும். (அனைத்திற்கு தனித்தனி விலை) தட்டு கடைசியில் பிச்சைக்காரன் தட்டு போலவே இருக்கும். தயிர்சாதம் கண்டிப்பாக பழைய சாதத்தில் செய்ததுதான். 

பேஸ்மெண்ட் என்பதால் பல தொல்லைகள், மேலே செல்லும் பெரிய குழாய்களுக்கு அடியில் நிற்க கூடாது, இருட்டான இடங்களில் நிற்க கூடாது. சாப்பாட்டில் தேவையில்லாத சேர்மானங்கள் சேர வாய்ப்பு அதிகம்.  அனைத்தையும் விட, அந்த ருசி என்றும் மாறாதது. ஒரு கட்டத்தில் அது போரடித்து வேறு இடம் தேடினோம்.

நான் என் அலுவலக நண்பர்கள் மூவர் போவோம். அவர்கள் பாவம் ஒன்றும் கூறுவதில்லை. நொட்டை சொல்வது நான் மட்டுமே.

கதம்பா எனும் ஹோட்டல் அங்கு டோக்கனை வாங்கிக் கொண்டு பதினைந்து நிமிடமாகியும் வரவில்லை என்று மிச்ச பாதி டோக்கனை அவன் மூஞ்சியில் எறிந்துவிட்டு வந்தேன். அதோடு அது போனது.

அடுத்து அஜந்தா, அங்கு கொஞ்ச நாள். ஒரு நாள் சாப்பாடு கொண்டு வரும்போது சாம்பர், ரசம் எல்லாம் தட்டில் கொட்டி குளம் போன்று இருந்தது, அதோடு அப்பளமும் நனைந்து போனது. சோ அதுவும் கட். கூட வந்தவர்களை இழுத்துக் கொண்டு அங்கங்கு அலைய ஆரம்பித்தேன். அவர்களும் பாவம் என்னுடன் அலைந்தனர். மனதிற்குள் திட்டிக் கொண்டிருக்க வேண்டும்.

ஒன்றரை வருடம் கழித்து கடைசியில் ஒரு இடத்தை கண்டு பிடித்தோம். அலுவலகத்திற்கு எதிரில். முதலில் அதைப் பார்த்து உணவகம் என்றே நம்பவில்லை. பஸ் டிக்கெட் பின்னாலே மெனு கார்டு அடித்துவிடும் அளவிற்கு சின்னக் கடை.  ஒரு பெரிய கிரானைட் மேடை, அதற்கு பின்னால் இரண்டு பிரம்மாண்டமான சிலைகள். சாய்பாபா சிலைகள். இரண்டு பாபாக்களும் புன்னகைத்து கொண்டிருந்தனர். அருமையான் சிலைகள், நிஜமாகவே இருப்பது போன்ற பிரமையை தந்தது.

ஒரு வயதான பெண்மணி அச்சிலைகளுக்கு பின்னால் இருந்த ஒரு கதவை திறந்து கொண்டு வந்தார். எங்களை பார்த்து மலர்ந்து சிரித்தபடி வரவேற்றார். ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தார்

"சாய்ராம்! சாய்ராம்! வெல்கம், உங்களுக்கு வேண்டியதை சொல்லுங்கள், என்ன சாப்பிடுகின்றீர்கள்?"

ஆளுக்கு இரண்டு ஆலு பரோட்டாவை ஆர்டர் செய்தோம். அதுதான் போர்டில் முதலில் இருந்தது.

"தயவு செய்து காத்திருங்கள், உங்களுக்கு முன்னால் இரண்டு பேர் உள்ளார்கள்"

"கொஞ்சம் சீக்கிரமாக தாருங்கள்"

"வரிசை வரிசைதான்"

"சரி"

"உங்கள் பெயர் என்ன"

வரிசையாக சொன்னோம், கூட வந்தவரின் பெயரைச் சொன்னதும் அவருக்கு ஆச்சரியம். பாபாக்களைப்  பார்த்து முஸ்லீம்கள் உள்ளே வரமாட்டார்கள் என்று நினைத்து விட்டார் போல.

"தயவு செய்து உள்ளே சென்று அமருங்கள், பரோட்டாவிற்கு என்ன தரட்டும் தயிரா இல்லை பருப்பா?"

"ஒரு தயிர் ஒரு பருப்பு"

ஏதோ ஒரு பாஷையில் ஏதோ சொல்லிக் கொண்டே உள்ளே போனார். அது கொங்கினி என்று பின்னால் தெரிந்து கொண்டோம்.

உள்ளே சென்று அமர்ந்தோம். ஐந்து டேபிள்கள், டேபிளுக்கு நான்கு நாற்காலிகள். நாங்கள் போகும் போது மதியம் ஒரு மணி, அனைத்து உணவகங்களும் நிரம்பி வழியும்,  ஆனால் அங்கு ஒரு ஆறு பேர் இருந்தனர். பார்க்க இடம் சற்று வித்தியாசமாக இருந்தது. இரண்டு மூன்று பெரிய பீரோக்கள். உள்ளே முழுவதும் புத்தகங்கள். வித விதமான போஸ்டர்கள்.

"தெய்வீக உணவு உடலுக்கு ஊட்டமளிக்கும்
தெய்வீக  வாசிப்பு ஆன்மாவிற்கு ஊட்டமளிக்கும்"

அது ஒரு மினி நூலகம். ஏகப்பட்ட புத்தகங்கள், ஆர்வத்தில் அருகில் சென்று பார்த்தோம். எல்லாம் பக்தி புத்தகங்கள், பெரும்பாலும் சாய்பாபா புத்தகங்கள். சரிதான் என்று எங்களிடத்தில் அமர்ந்து கொண்டோம்.

சமையலரை + கல்லா, சாப்பிடும் இடம், அடுத்து பஜனை அறை. மூன்றும் அவர்களுடையது. இது தவிற மாடி வேறு உண்டு.

மேலே உத்திரத்தில் அழகான சித்திரங்கள், ராமாவதாரக் காட்சிகள். ராமாயணம் முழுவதையும் அடக்கி விட்டான் அந்த சித்திரக்காரன். சுவர் முழுவதும் ஸ்லோகங்கள், அறிவுரைகள், எச்சரிக்கைகள்.

புகை பிடிக்க கூடாது, வெளி உணவுக்கு அனுமதி இல்லை என்ற எச்சரிக்கைகள்.

உணவு புனிதமானது, வீணாக்கக் கூடாது, சத்தம் போட்டு மற்றவர்களை தொந்தரவு செய்யக் கூடாது என்ற அறிவுரைகள்.

அப்போதுதான் எங்களுக்கு புரிந்தது ஏன் இங்கு அவ்வளவு கூட்டமில்லை என்று.

அரை மணி நேரம் கழித்து எங்கள் பரோட்டா வந்தது, கொண்டு வந்தது ஒரு வயதானவர். அப்பெண்ணின் கணவர் போல. பிராமணர் என்பது நன்கு தெரிந்தது. பரோட்டா நன்றாகவே இருந்தது. அவர்கள் ஊரில் கெட்டி மோரை தயிர் என்று சொல்லுவார்கள் என்று எங்களுக்கு தெரியாது.

பிறகு தினமும் அங்கு செல்ல ஆரம்பித்தோம். அதற்கு முக்கிய காரணம் உட்கார்ந்து சாப்பிடும் வசதி, கூட்டமில்லாதது. ஒரே கஷ்டம் அளவு குறைவு, அதனால் அதிகம் செலவழிக்க வேண்டியிருந்தது. தினமும் ஒரு கலந்த சாதம் இருக்கும், சாதம் சாம்பார். சாம்பார் என்பது கோர்ட்டில் கேஸ் போடக் கூடிய அளவிற்கான அவதூறு,  பருப்பு தண்ணீர் அவ்வளவுதான். ஆனால் நன்றாகவே இருந்தது, முக்கியமாக உடலை ஏதும் செய்யவில்லை.

அப்பெண்மணி நன்கு பழக்கமாகி விட்டார். அப்புத்தகங்கள் அனைத்து அங்கேயே இருக்கும், யார் வேண்டுமானாலும் அங்கு சென்று படிக்கலாம். அனைவரையும் பார்த்த உடன் ஒரு சிரிப்பு. சில சமயம் உள்ளே இடமில்லாமல் (எப்போதாவது நடக்கும், அனைவரும் பரோட்டா ஆர்டர் செய்தால்) காத்துக் கொண்டிருக்கும் போது ஏதாவது பக்தி பேச்சு பேசுவார், சில சமயம் சாய் டிவோட்டிஸ் ப்ராண்ட் பக்தர்கள் வருவார்கள். போன வாரம் ஸ்வாமி என்ன பேசினார், தரிசனம் எப்படி என்று கூறுவார்கள். அப்போது அப்பெண்ணின் முகத்தில் அப்படி ஒரு சந்தோஷம் பொங்கும். "சாய்ராம் சாய்ராம்". கண்டிப்பாக அவர் கண்ணிற்கு மட்டும் பாபா தெரிந்திருப்பார். எனக்கு பயமாக இருக்கும், பக்தி பரவசத்தில் மயங்கி, நம் பரோட்டாவை மறந்து விடுவார்களோ என்று.

கணவன் மனைவி இருவரும் பல விஷயத்தில் கண்டிப்பானவர்கள். முதலில் வரிசை. என்ன ஆனாலும் வரிசை மாற மாட்டார்கள். ஆர்டர் கொடுத்த வரிசையில் உணவு வரும், இரண்டு பரோட்டா ஆர்டர் செய்தால் ஒன்றை குடுத்து விட்டு, நம் அனுமதி வாங்கிக் கொண்டுதான் மற்றவர்களுக்கு தருவார்கள்.

உணவை வீணாக்குவது அவர்களுக்கு பிடிக்காது. அங்கு செல்ல ஆரம்பித்த சில மாதம் கழித்து ஒரு நாள், ஒருவர் ஏதோ கேட்டார், 

"நீங்கள் நேற்று வந்தீர்கள், உணவை வாங்கிக் கொண்டு உள்ளே சென்ற பின், பாதி சாப்பாட்டில் வெளியே போய்விட்டீர்கள். அனைத்தும் வீண். உங்களுக்கு என்னால் உணவு தர முடியாது, அது பாவம், மன்னித்துக் கொள்ளுங்கள்." 
என்றார். 

"நேற்று ஏதோ அவசரம் போய் விட்டேன்"

"நான் டீயை மிச்சம் வைத்து போனவருக்கு கூட மீண்டும் தருவதில்லை. உணவு என்பது எவ்வளவு புனிதமானது தெரியுமா? அவரவர் ஒரு வேளையின்றி சாகின்றார்கள். பகவான் உணவை வீணாக்குவது பாவம் என்று கூறியிருக்கின்றார், தயவு செய்து இங்கு வரவேண்டாம்"

எங்களுக்கு ஆச்சரியம், சே என்ன ஒரு கொள்கை பிடிப்பான அம்மாள். இக்கடையில் சாப்பிடுவதே புண்யம், இனி இங்குதான் நிரந்தர சாப்பாடு என்று முடிவு செய்து விட்டோம். அவர்களின் கொள்கையை நாங்களும் ஆதரிக்கும் பெருமையில் தரையிலிருந்து இரண்டடி மிதந்து கொண்டே அலுவலகம் சென்றோம்.

ஒரு நாள் போகும் போது, இரண்டு பெண்கள் உள்ளே அமர்ந்திருந்தார்கள். அன்று கலந்த சாதம் என்பதால் கையோடு வாங்கிக் கொண்டு எங்கள் ஆஸ்தான இடத்தில் அமர்ந்து கொண்டோம். அப்பெண்களில் ஒருவர் கையில் மில்க்‌ஷேக். உள்ளே வந்த ஆண்டி மெதுவாக அவர்களிடம்

"மன்னிக்கவும், இங்கு வெளி உணவிற்கு அனுமதி இல்லை, அதை இங்கே வைத்து குடிக்க வேண்டாம்" என்றார்.

"இது உணவில்லையே, சாதரண ட்ரிங்தானே?"

"இருநதாலும் அது வெளியே தயாரிக்கப்பட்டது தானே, உங்களுக்கு குடிக்க ஏதாவது வேண்டுமானால் இங்கு லஸ்ஸி வாங்கிக் கொள்ளுங்கள், அதை உள்ளே வையுங்கள்"

அப்பெண்களுக்க் முகம் ஒரு மாதிரி ஆகிவிட்டது. சரி என்று உள்ளே வைத்துவிட்டு வேகமாக சாப்பிட்டுவிட்டு போய்விட்டார்கள். எங்களுக்கு இது பழக்கமான விஷயம்தான். 

சுமார் ஒரு வருடத்திற்கு மேல் அங்கு தான் சாப்பாடு, என் தம்பியையும் ஒரு முறை அழைத்துச் சென்றேன். அவனுக்கும் பிடித்துவிட்டது.

"யோவ் இந்த ஒரு இடத்துலதான்யா நீ கிட்டதிட்ட ஒன்ற வருஷம் சண்ட போடாம சாப்டிருக்க" என்றார் நண்பர்.

அலுவலகம் இடம் மாறி கோரமங்களா போனது, ஒரு வருடம் கழித்து மீண்டும் பழைய இடத்திற்கு வந்தது.

வந்த முதல் நாள் அங்கு சென்றேன், தனியாக. மற்றவர்கள் பறந்தாயிற்று. பார்த்தவுடன் அவருக்கு சந்தோஷம். வெல்கம் வெல்கம் என்று வரவேற்றார்.
அவர் கணவரும் புன்னகைத்தது தான் ஆச்சரியம். அவர் சிரிப்பார் என்பதே அன்றுதான் தெரியும். உங்கள் முஸ்லீம் நண்பர் எப்படி இருக்கின்றார் என்று விசாரித்தார்.

வழக்கம் போல் உள்ளே போய் அமரலாம் என்று நினைத்தேன், அங்கு புதிதாக ஒரு போர்டு. உங்கள் உணவை எடுத்துக் கொண்டு உள்ளே வரவும். சரிதான், "ப்ராசெஸ் இம்ப்ரூவ்மெண்ட்" என்று காத்திருந்தேன்.

பரோட்டாவை எடுத்துக் கொண்டு உள்ளே சென்று அமர்ந்தேன். கடையில் இப்போது யாருமில்லை என்னைத் தவிர.

அப்போது ஒரு பெண் வந்தாள் கூடவே ஒரு சிறுமி. பத்து வயது மதிக்கலாம். களைத்து போனது போல இருந்தது. நடக்க முடியாமல் நடந்து வந்தாள் அக்குழந்தை. அப்பெண் அச்சிறுமியை இந்த கடையின் ஒரு சேரில் அமர வைத்தாள். அவள் அமர வைத்த டேபிள் கடையின் வெளியில் இருந்தது. அச்சேரில் அமர்ந்து வராண்டாவை பார்க்கலாம்.  எதிர்க் கடைக்கு போனாள், அங்கிருந்து சாம்பார் சாதம் வாங்கிக் கொண்டு வந்தாள். அதை சிறுமியிடம் தந்து, சிறுமியை சாப்பிடச் சொன்னாள். அச்சிறுமியும் சாப்பிட ஆரம்பித்தாள். அவளும் அருகில் உட்கார்ந்து கொண்டாள்.

"போச்சுடா, பார்த்தா விட மாட்டாங்களே" என்று நினைத்துக் கொண்டேன்

அம்மா சாப்பிடவில்லை, பணமில்லையோ என்னவோ. நான் சாப்பிட்டு முடிக்கும் தருணம். பெரியவர் உள்ளே வந்தார். அச்சிறுமியை பார்த்து ஏதோ திட்ட ஆரம்பித்தார். வந்து வருடம் 5 ஆனதில் கன்னடம் புரிய ஆரம்பித்திருந்தது. அவர் ஆங்கிலமும் கன்னடமும் கலந்து திட்ட ஆரம்பித்தார்.

"வெளியே போ, இங்க உட்கார கூடாது, எங்க கடை கஸ்டமர்களுக்கு மட்டும் தான் இது"

அப்பெண் உடனே எழுந்துவிட்டாள், சிறுமி எழவா வேண்டாமா என்று முழித்துக் கொண்டிருந்தாள்.

"போ வெளியே, அங்க வாங்கினா, அங்க சாப்பிடனும் இங்க வந்து சாப்பிட்டா என்ன அர்த்தம். வெளிய போ, போன்னா என்ன பார்கற. சொல்றது கேட்கலயா?"

அப்பெண் சொன்னதை அப்பெரியவர் கேட்கவேயில்லை.

"அவளுக்கு உடம்பு சரியில்ல,அவளால் நிற்க முடியவில்லை, காலையிலிருந்து வேறு சாப்பிடவில்லை. இப்போதுதான் சாப்பிடுகின்றாள், ஒரு ஐந்து நிமிடம் இங்கு உட்கார விட்டால் அவள் சாப்பிட்டு முடித்து விடுவாள், நாங்கள் போய் விடுவோம்"

"அதெல்லாம் முடியாது, அங்க பார் என்ன போர்ட் இருக்குன்னு, வெளியிலிருந்து கொண்டு வந்து இங்க சாப்பிடக் கூடாது"

"சார், குழந்தைதான, நான் கூட நின்னுட்டு இருக்கேன், அவ உக்காந்து சாப்பிட்டு போகட்டும்"

"முடியவே முடியாது"

அச்சிறுமி சாப்பிடுவதை நிறுத்திவிட்டு பயத்துடன் அப்பெரியவரை பார்த்துக் கொண்டிருந்தாள். அடுத்து அப்பெரியவரின் மனைவியும் வந்து விட்டார். அவரும் தன் பங்கிற்கு கத்த ஆரம்பித்தார்.

"இது சாய் பஜனை செய்யும் இடம், சாய்பாபா கோவில், இங்க வந்து கண்டதையும் சாப்பிட எப்படி விட முடியும், முதல்ல எழுந்திரு"

"ஏற்கனவே அவ பாதிய சாப்பிட்டுட்டா, நீங்க சத்தம் போடாம இருந்திருந்தா மிச்சத்தையும் சாப்பிட்டு முடிச்சிருப்பா"

"சொல்லிட்டே இருகேன், பேசிட்டே இருக்கே"

சட்டென்று அச்சிறுமியை சேரிலிருந்து வலுக்கட்டாயமாக இறக்கி விட்டார், அந்த முயற்சியில் தட்டும் கீழே விழுந்து சாம்பார் சாதம் சிதறியது.

அப்பெண் கண்ணில் தண்ணீர், அச்சிறுமியை தூக்கிக் கொண்டு வேகமாக அங்கிருந்து போய்விட்டாள்.

கணவன் மனைவி இருவரும் விடாமல் திட்டிக் கொண்டே இருந்தனர்.

நான் வேறு எதுவும் தோன்றாமல் அனைத்தையும் பார்த்துக் கொண்டு மவுனமாக இருந்தேன். தட்டில் இருந்ததை மிச்சம் வைத்து விட்டு வெளியே போனேன். என்ன, மறுபடியும் போனால் உள்ளே விடமாட்டார்கள், பரவாயில்லை. இனிமேல் அங்கு போய் அந்த தெய்வீக உணவை உண்ண முடியாது. அதற்கு கார் பார்க்கிங்கில் கிடைக்கும் சாதாரண உணவே மேல்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக