27 ஜனவரி 2013

சொந்த ஊர் புராணம்

எனது சொந்த ஊர் கோம்பை. தேனி மாவட்டத்தில் உத்தமபாளையத்திற்கு அருகில் ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. கோம்பை என்றால் மலைகள் சூழ்ந்த பகுதி என்பார்கள். ஏகப்பட்ட கோம்பைகள் தமிழகத்தில் உள்ளது. 

கோம்பை நாய்களுக்கு பெயர் போனது. வேட்டை நாய்கள். இப்போது உள்ளது போல் தெரியவில்லை. நான் பார்த்ததும் இல்லை. இரண்டு கோம்பை நாய்கள் சேர்ந்தால் ஒரு சிறுத்தையைக் கூட கொல்லும் என்பார்கள். கோம்பை நாய்களுக்கு பேச்சுவார்த்தையில் நம்பிக்கை கிடையாது, நேரடி நடவெடிக்கை.   எதிரியைக் கண்டு குலைத்து நேரத்தை வீணடிக்காமல் நேரடியாக பாய்ந்துவிடும்.

கோம்பையின் மற்றொரு பெருமை, தேர். மிகப்பெரிய தேர் திருவாருர் தேர். அது அகலம், உயரம் குறைவு. உயரமான தேர் ஶ்ரீவில்லிபுத்தூர் தேர். அதற்கு அடுத்த உயரமான தேர் கோம்பைத் தேர். இத்தேர்க்கு சொந்தக்காரரும் ரங்கமன்னார் தான். இக்கோவிலில் குடி கொண்டுள்ளவரும் ரெங்கநாதர்தான். ஊருக்கு வெளியில் மலையடிவாரத்தில் நிம்மதியாக தூங்கிக் கொண்டுள்ளார். யாரும் அவரை தொந்தரவு செய்வதுமில்லை. சனிக்கிழமைகளில், மாத முதல் தேதியில் மட்டும் அவரை எழுப்பி தங்கள் வருகையை பதிவு செய்வார்கள் பக்தர்கள். புரட்டாசி ஐந்து சனிக்கிழமைகளும் அவர் பிசி. காலை ஆறு முதல் மாலை ஏழு வரை. மற்ற நாட்களில் அவரும் என் அப்பாவும் மட்டும்தான்.

அந்த அழகான தேர் ஜாதிக் கலவரத்தால் நின்று போனது. பத்துநாள் உற்சவம். எனக்கு தெரிந்து தேரோட்டம் மொத்தம் நான்கு முறை தான் நடைபெற்றுள்ளது இந்த முப்பது வருடங்களில்.

ஊரில் எனக்கு தெரிந்து வேறு சிறப்புகள் இருக்கலாம், ஆனால் நான் கோவிலைச் சுற்றி வளர்ந்ததால் அதைப் பற்றி தான் அதிகம் பேச முடியும். கோவில் அமைந்துள்ள அழகிய மலையடிவாரம், மேலேறினால் கேரளா. ராமக்கல் மெட்டு என்று அழைக்கப்படும். அப்பெயருக்கு காரணம் இக்கோவில்தான். 

ராமக்கல் மெட்டு பற்றி ஜெயமோகன் தளத்தில் இங்கே. அதில் குறிப்பிடப்பட்டுள்ள குறவன் குறத்தில் சிலை, இம்மலை மேல் உள்ளது. அங்கிருந்து கீழிறங்கினால் கோம்பை. 

ராமக்கல் மெட்டு பெயர்க் காரணத்தை கீழேயுள்ள புகைப்படங்கள் சொல்லும்.

















இப்புகைப்படங்களை ஒரு அலுவலக நண்பரிடம் காட்டினேன். அவர் கேட்ட கேள்வி என்னை மிகவும் வெட்கமுற வைத்துவிட்டது. " நீ எத்தனை முறை இம்மலை மீது ஏறியுள்ளாய்" என்றார், ஒரு முறை கூட ஏறியதில்லை. வெட்கக்கேடான விஷயம்தான் என்ன செய்ய.

3 கருத்துகள்:

  1. கோம்பை என்று நாஞ்சில்நாடன் அருமையான சிறுகதையொன்று எழுதியிருக்கிறார். கோயிலும் மலையும் பார்க்க மிகவும் அழகாகயிருக்கிறது.

    பதிலளிநீக்கு
  2. அக்கதையில் கூறப்பட்ட கோம்பை சித்தர் கோம்பையை சேர்ந்தவர் என்று கூறுவார்கள். பல ஆண்டுகாலம் முன்பு கோம்பையிலிருந்து சென்றவர் என்று கேள்விப்பட்டுள்ளேன். அவர் கூறுவது போல கோம்பை தேவரத்திலிருந்து போடி செல்லும் வழியில் இல்லை. உத்தமபாளையத்திலிருந்து தேவாரம் செல்லும் வழியில் உள்ளது.

    பதிலளிநீக்கு
  3. // பேச்சுவார்த்தையில் நம்பிக்கை கிடையாது, நேரடி நடவெடிக்கை. // ஹா ஹா ஹா

    இதுவரை ஒருமுறை கூட தேனி சென்றதில்லை.. தேனி கிட்டத்தட்ட என் ஊர் தென்காசி போலவே இருக்கும் என்று நண்பன் கூற கேட்டிருக்கிறேன். அதற்காகவாவது அந்த ஊர் பக்கம் ஒருமுறை போய்வர வேண்டும்...

    பதிலளிநீக்கு