11 பிப்ரவரி 2013

ஸ்ரீரங்கத்து கதைகள் - சுஜாதா

ஸ்ரீரங்கம் எனக்கு பிடித்த கோவில். காரணம் எங்கள் ஊர்க்காரர்தான் அங்கும் பள்ளி கொண்டுள்ளார். எப்போதும் எங்கும் தனியாக போகப் பிரியப்படாத நான், தனியாக போக வேண்டும் என்று நினைத்து, காலையில் மூன்று மணிக்கு எழுந்து (அது ஒரு அதிசய நிகழ்வு என்று பின்னால் அனைவராலும் வர்ணிக்கப்பட்டது) யாரின் தொந்தரவுமின்றி சுற்றிப் பார்த்தேன். ரங்கநாதரை கூட்டமில்லா நேரத்தில் நிம்மதியாக பார்க்க முடிந்தது. அந்த அளவிற்கு ஒரு ஆர்வத்தை உண்டாக்கியதற்கு மற்றுமொரு காரணம் சுஜாதா.

விகடனில் வரிசையாக வந்த கதைகளைப் படித்து ஸ்ரீரங்கத்தையும் கோவிலையும் பார்க்க அவ்வளவு ஆர்வம் வந்துவிட்டது. சுஜாதாவைப் பற்றிய முழு அறிமுகமும் அதுதான். அதுவும் அவரது தூண்டில் கதைகள் ஸீரிஸும்.

நான் பார்த்த ஸ்ரீரங்கம் அவரின் வார்த்தைகளிலேயே " ஆறாம் நூற்றாண்டிலிருந்து தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்பட்ட கோயில் தம்மிடையே துருத்திக் கொண்டிருப்பதைப் பற்றி கவலை இல்லாத இன்றைய நகரம், மன்மத ராசாவையும் மாத்தி யோசியையும் பாடிக்கொண்டிருக்கின்றது" கோவிலும் தடுப்பு கட்டைகள், சங்கிலிகள், அர்ச்சனை டிக்கெட் என்று வருமானத்தை பெருக்கும் வேலையில் உள்ளது.

கடவுள் பக்தி இல்லாதவர்களின் நிர்வாகத்தில் வேறு என்ன நடக்கும். தில்லை நடராஜனை, திருவரங்க ரங்கநாதனையும் பீரங்கி வைத்து பிளக்க வேண்டும் என்ற ஆசை கொண்டவர்களா கோவிலை பாதுகாக்க போகின்றார்கள்.


முதல் செட் 1983ல் எழுதியுள்ளார். நான் ஒரு வயது குழந்தையாக இருந்த போது எழுதப்பட்ட கதைகள்.  அடுத்த செட், 2003ல். கல்லூரி படிக்கும் போது வரிசையாக படித்தது. நடுநடுவே வெவ்வேறு வருடங்களில் ஸ்ரீரங்கத்தை மையமாக வைத்து நிறைய எழுதியுள்ளார். இது ஸ்ரீரங்கத்தை மையமாக கொண்டதால், இது அந்த ஊரின் கதையல்ல. அம்மனிதர்கள் எந்த ஊரிலும் இருக்கலாம். அவரே சொல்வது போல "ஸ்ரீரங்கம் என்பது ஒரு மெட்ஃபோர், ஒவ்வொருவருக்கும் அவர்களுக்கென்று ஒரு ஸ்ரீரங்கம் இருக்கும், அதை நினைவுபடுத்தவே இக்கதைகள்". 

சுஜாதா ரங்கராஜனாக ஸ்ரீரங்கத்தில் இருந்தபோது கிடைத்த அனுபவங்கள் கதையாகியுள்ளன. சில கற்பனை கதைகளையும் ஸ்ரீரங்கத்திற்கு ஏற்றி அனுப்பியிருக்கலாம்.



ரங்கராஜனின் பல்வேறு வயதில் அடைந்த அனுபவங்கள். சிறுவர்களின் உலகம், சிறுவர்கள் பார்வையில் பெரியவர்களின் உலகம், சிறுவர்கள் பெரியவர்களாக மாறும் தருணம் என்று சிறுவர்கள் உலகத்தை அழகாக எழுதியுள்ளார். 

ஒன்றிரண்டு கதைகளை தவிர பெரும்பாலான கதைகள் தன்மை ஒருமையில் சொல்லப்படும் கதைகள். ரங்கராஜன் தான் கதைசொல்லி, ஒன்றிரண்டு கதைகளில் வேறு யாரோ.

கதைகள் சம்பவங்களைவிட மனிதர்களைப் பற்றியே அதிகம் பேசுகின்றது. சுஜாதாவின் நடை நம்மை அங்கு அழைத்துசெல்கின்றது. 

அனைத்து கதைகளிலும் மெலிதான நகைச்சுவை விரவிக்கிடக்கின்றது. எதிர்வீடு, பேப்பரில் பேர், பெண் வேஷம், பாம்பு, என் முதல் சினிமா அனுபவம், இரண்டனா, பாத ரசம், மஞ்சள் சட்டை, காதல் கடிதம், கிருஷ்ண லீலா, ஓலைப்பட்டாசு அனைத்தும் ஒரு சிறுவனின் கதைகள். சிறுவயதில் அனைவரும் கடந்து வந்திருக்கும் பாதைகள். திருட்டுத்தனமான முயற்சி, கூடப்படிப்பவர்களுடன் சண்டை, டூ விடுதல், கட்சி மாறி சண்டை போடுதல், பப்பி லவ், வயதுக்கு மீறிய அனுபவங்கள், துரோகங்களை அறிதல் என் அனைத்தும் இதில அடங்கும். ஏதோ ஒரு கதை ஏதோ ஒரு சிறு வயது நினைவை தூண்டும். அப்படியே நடந்திருக்க வேண்டியதில்லை ஒரு சின்ன லின்ங். பாதரசம் கதையை படித்த போது, நாங்கள் கெமிஸ்ட்ரி லேபிலிருந்து சுட்ட பாதரசம் நினைவிற்கு வருகின்றது.  

ஒரு சம்பவத்தை கதையாக மாற்றும் வித்தையை நன்றாக அறிந்தவர், மறு ஒரு சாதரண சம்பவம், அதன் கடைசி வரி அதை ஒரு நல்ல சிறுகதையாக மாற்றுகின்றது.

பிசாசு வந்த தினம், என் முதல் தொலைக்காட்சி அனுபவம், வாழ்வா சாவா அனைதும் நல்ல அமைப்பில் எழுதப்பட்ட சிறுகதைகள்.

காணிக்கை, விலை இரண்டும் இன்றைய கோவில்களின் நிலையும், கோவிலை நிர்வகிப்பவர்களின் தரத்தையும் காட்டுகின்றது. கோவில்கள் என்பது அரசுக்கு ஒரு வருமானம் தரும் இடம். 


குண்டு ரமணி, வி.ஜி.ஆர், கடவுளுக்கு கடிதம், திண்ணா, ஏறக்குறைய ஜீனியஸ், ரகசியம், குடுமி, சேச்சா, சீனு, உஞ்ச விருத்தி, ராமன், பாப்ஜி, மாஞ்சு அனைத்தும் சில மனிதர்களின் கதைகள். வாழ்க்கை சுருக்கம், நாமும் எங்காவது இவர்களை சந்திப்போம். 


சுஜாதா ரசிகர்கள் மட்டுமல்ல அனைவரும் படிக்க வேண்டிய கதைகள். அவரின் பெரும்பாலான கதைகளை படித்துள்ளேன். சில கதைகள் அவசரத்தில் எழுதி தந்தவை, முன் ஏற்பாட்டுடன் எழுதப்பட்டவை என்ற எண்ணம் வருவதை தவிர்க்க முடியாது. ஆனால் இத்தொகுப்பில் உள்ள அனைத்து கதைகளையும் அவர் அனுபவித்து நிதானமாக எழுதியுள்ளார். ஒன்று கூட சுமார் என்று சொல்ல முடியவில்லை. மனதிற்கு நெருக்கமானதை எழுதும் போது அது சிறப்பானதாகத்தான் இருக்க முடியும். 

இத்தொகுப்பில் மிகவும் பிடித்த கதைகள்

பேப்பரில் பேர், வி.ஜி.ஆர், பாம்பு, சீனு, மாஞ்சு, குண்டு ரமணி. 

அதிலும் மாஞ்சுவும் குண்டு ரமணியும் மிக அருமை. மனதை நிறையவே தொந்தரவு செய்கின்றது.

முக்கிய விஷயம், இதில் உள்ள ஓவியங்கள். சுஜாதாவின் டேட்டா பேஸ் சுஜாதா தேசிகன் வரைந்துள்ளார். அனைத்து ஓவியங்களும் அருமை. மாஞ்சுவில் உள்ள ஸ்ரீரங்கத்தின் பேர்ட்ஸ் வ்யூ . பிரமாதம். 

அனைத்து கதைகளும் ட்வுன்லோட் செய்யக்கிடைக்கின்றது. சமீபத்தில் வெளியிடப்பட்ட புத்தகத்தின் ஸ்கேன்டு காப்பியை இப்படி உலவ விடுவது குற்றமா இல்லையா? புத்தகத்தில் இருந்து டைப் செய்தால் கூட ஏதோ கொஞ்ச உழைப்பு அதில் உள்ளது எனலாம் (அதுவும் காப்பிரைட் படி குற்றம்தானே), புத்தகத்தை அப்படியே ஸ்கேன் செய்து வைத்துள்ளனர். பதிப்பகத்தாரின் உழைப்பிற்கு என்ன விலை? இதுவும் ஒரு வகை திருட்டுதான். இதில் ட்ஸ்கெள்ய்மர் வேறு, இன்னும் காப்பிரைட் உள்ளது, தனிப்பட்ட பயன்பாட்டிற்கு மட்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக