24 பிப்ரவரி 2013

வேங்கடநாத விஜயம் - விஷ்ணுவர்த்தன்

திருப்பதி என்றால் நினைவிற்கு வருவது லட்டு என்றால் தப்பில்லை. அதற்கு பின்னால் தான் அங்குள்ள பெருமாள். அனைவரும் திருப்பதி திருப்பதி என்றாலும் திருப்பதி என்பது மலையின் கீழ் உள்ள ஊர். வேங்கடநாதன் குடி கொண்டுள்ள இடம் திருமலை. அத்திருமலையின் வரலாறுதான் இப்புத்தகம்.

ரிலையன்ஸ் டைம் அவுட்டில் தமிழ் புத்தகங்களும் கொஞ்சமே கொஞ்சம் உண்டு. பல சமையல் புத்தகங்கள், தலைவர்களின் வாழ்க்கை வரலாறு, யார் ..... என்பதற்கு நடுவில் ஒரு ஓரமாக கிடந்தது இப்புத்தகம். பக்திகதைகளை புத்தகமாக வாங்கியதில்லை. இது வரலாறு என்று கூறுகின்றதே என்ன என்று பார்க்கலாம் என்று வாங்கினேன். வீண் போகவில்லை. திருமலை பற்றிய பல புதிய செய்திகளை கூறுகின்றது.

இன்று மிகப்பெரிய பணக்கார கடவுள் (இந்த வரியே கொஞ்சம் அபத்தமாக உள்ளது, இருந்தும் வேறு வழியில்லை). தினம் தோறும் உற்சவம், லட்சக்கணக்கான பக்தர்கள், கோடிக்கணக்கான காணிக்கைகள் என்று காட்சியளிக்கும் திருமலை ஒரு காலத்தில் வெறும் வனாந்திரம். காட்டு மிருகங்கள் சுற்றி திரிந்த அடர்ந்த பிரதேசம். இரண்டு நாழி அரிசியும், இரண்டு நந்தா விளக்குகளுடனும்,  தனியாக நின்று கொண்டிருந்திருக்கின்றார். 

இன்று திருப்பதி ஆந்திராவில் இருந்தாலும் அவர் முழுக்க முழுக்க தமிழ்நாட்டை சேர்ந்தவர். (நல்ல வேளை அங்கு போனார், இங்கிருந்தால் நமது கடவுள் நம்பிகையற்ற அறங்காவலர்கள் கையில் தந்து அவரை மொட்டையடித்திருப்பார்கள்). அங்கிருப்பது பெருமாளே அல்ல, முருகன்; சிவன்; இன்னும் பல கதைகளை கேட்டிருக்கின்றேன். இப்புத்தகமும் அதையே சொல்கின்றது. மூலத்திருமேனியில் சங்கு சக்கரம் கிடையாது. இடையில் வாளும் உள்ளது. அவருக்கு பெயரும் வேங்கடத்துறைவர். இன்று திருமலை அருகில் உள்ள பெரிய ஊர் திருப்பதி, அன்று சந்திரகிரி.


புராணக் கதைபடி வேங்கடநாதனுக்கும் முன்னிருப்பவர் ஆதிவராகர். திருமகளை பிரிந்த விஷ்ணு இம்மலையில் வந்து இறங்கினார். ஆதிவராகரிடம் சிறிது இடத்தை கேட்டு பெற்று அங்கு தங்கியிருந்தார். ஆதியில் அவருக்கு பெயரும் இல்லை, வகுளாம்பிகை அவரைக் கண்டு ஸ்ரீநிவாசன் என்று அழைத்தாள். வகுளாம்பிகை ஸ்ரீநிவாசனை தன் மகனாக வரித்தாள்.ஸ்ரீநிவாசன் ஆகாசராசன் மகள், வேதவதியின் அம்சமான பத்மாவதியை திருமணம் செய்து கொண்டார். கல்யாணத்திற்கு பணம் ஒரு கோடியே பதினான்கு லட்சம் ராமநிஷ்காமம் பணத்தை குபேரனிடம் கடனாக பெற்றுக் கொண்டார் ஶ்ரீநிவாசன். அதற்கு வட்டி ஒரு லட்சம் ராமநிஷ்காமம். திருமண ஏற்பாட்டை செய்தது அவரது அண்ணன் கோவிந்தராஜன். திருமணச் செய்தி கேட்டு கோபமடைந்த லட்சுமி, திருமலைக்கு வந்து சண்டையிட ஸ்ரீநிவாசன் சிலையாக உறைந்துவிட்டார். லஷ்மி இடமார்பிலும், பத்மாவதி வலமார்பிலும் இடம் பெற்றனர். இது ஒரு கதை.

கலிஆரம்பிக்கும் காலம், கிருஷ்ணர் தன் உடலை விட்டு வைகுண்டம் சென்றார்.  அதன் பின் பிரம்மனுக்கு அவர் இப்போது உள்ள ரூபத்தில் காட்சி தந்தார். அதை வடித்தவன் பிர்ம்மன். பின்னால் அடர்ந்தகாடாகி, பிரம்மன் வடித்த சிலாரூபம் புற்றுக்குள் போக, அதை கண்டு கோவில் கட்டியவன் தொண்டைமான் என்னும் மன்னன். இக்கோவில் உண்டான காலம் கலி ஆரம்பித்த காலாம் சுமார் 4500 வருடங்களுக்கு முன்.

ஆனால் வெகுகாலம் வரை அவர் ஸ்ரீநிவாசனாக இல்லை, வேங்கடதுறைவன் என்றுதான் அறியபட்டுள்ளார். அடர்ந்த காட்டில் இருந்த அவருக்கு முதன் முதலில் காணிக்கைகள் அளித்து, பிரம்மோற்சவத்திற்கு ஏற்பாடு செய்தவள் பல்லவ அரசி சாமவை. அவளே மணவாளப் பெருமாள் என்ற உற்சவரையும் அங்கு செய்து வைத்தாள். அதன் முன் வேங்கடநாதனுக்கு கோவில் கட்டியவன் தொண்டைமான் சக்கிரவர்த்தி. சாமவைக்கு முன் ஆழ்வார்கள் பலர் அங்கு வந்து அவனைப் பாடியுள்ளனர். குலசேகராழ்வார் வேங்கடவனுக்கு முன் படியாக இருக்கின்றார். குலசேகரப் படி என்று பேர். நடுவில் கோவில் பாழடைந்து போய் மறுபடியும் பல்லவர்கள் அதை சீர்படுத்தியுள்ளனர். தங்கள் காணிக்கைகளில் கல்வெட்டில் பொறித்து வைப்பதை ஆரம்பித்தவள் சாமவை.  யாரும் அங்கு வரத்துணியாத காலத்தில், அங்கு வந்து பூக்கைங்கர்யம் செய்தவர் திருமலை நம்பி, ஆளவந்தாரின் பேரன். அவர் வழி வந்தவர்களே அங்கு பூஜை செய்து வந்துள்ளனர்.

ராஜராஜன் காலத்தில் மறுபடியும் திருப்பணிகள் நடைபெற்றுள்ளன. பின்னர் அக்கோவில் சிவாச்சாரியார்கள் கையில் சென்று அவர்கள் பூஜித்து வந்துள்ளனர். அப்போதுதான் ராமானுஜர் அங்கு வந்து பெருமாளை மீட்டு வைணவர்களிடம் தந்தார். அவரே இன்று நாம் காணும் தோற்றத்திற்கு காரணம் . பெருமாளுக்கு சங்கு, சக்கரம், நாமம் அனைத்தையும் அணிவித்தவர். வேங்கடவனின் மார்பில் இருக்கும் பத்மாவதி பதக்கத்தையும் அணிவித்தவர். ராமானுஜர் சோழனால் கடலில் வீசப்பட்ட கோவிந்தராஜரை திருமலை அடிவாரத்தில் பிரதிஷ்டை செய்து, திருப்பதி என்ற ஊரையும் உருவாக்கினார். கோவிலுக்கு சட்டங்களை ஏற்படுத்தினார். திருமலையில் யாரும் தலையில் பூ வைக்க கூடாது, திருமலையில் யாரும் வேறு வாகனங்களில் போக கூடாது, கோவில் ஊழியர்களை தவிர யாரும் திருமலையில் தங்க கூடாது. 

இரண்டு நாழி அரிசி நிவேதனம் என்ற நிலையில் இருந்த கோவிலுக்கு அடுத்தடுத்து பல மன்னர்கள், செல்வந்தர்கள் அன்னப்படைகளை அமைத்துள்ளனர்.(முக்கியமான லட்டை ஏற்படுத்தியது யார் என்ற விபரம் இல்லை) ஏகப்பட்ட காணிக்கைகள் அளித்துள்ளனர். சாளுவ நரசிம்மன் காலத்தில் வசத்த உற்சவம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது, திருமலையில் ஒரு குகையில் கண்டெடுக்கப்பட்ட உற்சவர் மலைகுனிய நின்ற பெருமாள். அவருக்குதான் திருமண உற்சவம் செய்துவைக்கப்படுகின்றது. ஏனென்றால் அவர் மட்டும் உபயநாச்சியர்களுடன் கிடைத்தவர்.

அடுத்தடுத்து இஸ்லாமிய மன்னர்களின் படையெடுப்புகளால், திருமலைக்கு செல்லும் அனைத்து வழிகளையும் அடைத்துவிட்டு ரகசியமாக உற்சவங்களை நடத்தியுள்ளனர்.  நமது ஸ்ரீரங்க பெருமாளும் அங்கு விருந்தினராக சென்று நாற்பது ஆண்டுகள் தங்கியிருந்திருக்கின்றார். திருமலையும் வைஷ்ணவர்கள் கையிலிருந்து மாத்வர்கள் கைக்கு போயுள்ளது. மகான் வியசராய தீர்த்தர் கைங்கர்யம் செய்து வந்துள்ளார். அனைத்து வைஷ்ணவர்களும் துரத்தப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் சாளுவ நரசிம்மனால் கொல்லப்பட்டிருக்கலாம். அன்னமார்ச்சார்யாரின் பாடல்களை பட்டயத்தில் பதித்தவனும் இவனே. தமிழ் வெகு போராட்டத்திற்கு பின்பே உள்ளே சென்றுள்ளது.

அதன் பின் உதயமானதுதான் கிருஷ்ணதேவராயர் அமைத்த விஜயநகர பேரரசு. அவர் காலத்தில் திருமலை ஓஹோ வென்று இருந்தது. அவர் தான் வெற்றி கொண்ட அனைத்து வெற்றியையும் வேங்கடத்தானுக்கு சமர்பித்துள்ளார். அவரின் பட்டாபிஷேகமே திருவேங்கடத்தானுக்கு முடிசூட்டு விழாவகத்தான் இருந்திருக்கின்றது. இவர் காலத்தில் இருந்துதான் தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம் என் அனைத்து மொழிகளிலும் கல்வெட்டுகள் பொறிக்கும் வழக்கம் ஆரம்பித்துள்ளது. கோவில் மீண்டும் வைஷ்ணவர்கள் கையில் வந்தது. சகஸ்ரநாம அர்ச்சனையை ஆரம்பித்தவன் அவன். வேங்கடவனுக்கு கனகாபிஷேகம் செய்தவன் அவன்.

திருமலை உள்ளே உள்ளே உள்ள சிலை ரூபங்கள் கிருஷ்ணதேவராயரும் அவரது மனைவிகளும். அச்சுதராயனும் ஏகப்பட்ட திருப்பணிகள் செய்துள்ளான். அவன் அங்கு கற்சிலையாக உள்ளான். அவனே திருமலை வரலாற்றில், பெருமாளுக்கு அர்ச்சனை செய்த பிராமணரல்லாதவன். அவனே ஸ்ரீநிவாச சகஸ்ரநாமத்தை அறிமுகப் படுத்தியவன், சுப்ரபாதம் பாடும் பழக்கத்தை ஆரம்பித்தவன்.

அவனுக்கு பின்னால் வந்த மாடல குமார அனந்தராஜா என்பவனே, இன்று நாம் காணும் படிகளையும், காலி கோபுரத்தையும் கட்டியவன். (காளி அல்ல காலி - காற்று)

விஜயநகரின் அஸ்தமனத்திற்கு பின் திருமலையும் பலர் கையில் சென்றிருக்கின்றது. மகாரஷ்டிரர் கையில் இருந்திருக்கின்றது. இஸ்லாமியர்கள் கையிலும் இருந்திருக்கின்றது.

இஸ்லாமிய மன்னர்கள் தான் கொள்ளை அடித்தார்கள் என்பதில்லை பல மராட்டிய மன்னர்களும் அதைச் செய்துள்ளனர். அதே சமயம் ஹைதர் அலி. தன் வீரர்கள் அக்கோவில அருகில் கூட செல்லக்கூடாது என்று உத்தரவிட்டு அதை காத்துள்ளான். பின்னர் கம்பேனியடம் சென்று கடைசியில் பிரிட்டிஷ் அரசாங்கம், கோவில் நிலங்களை முறைப்படுத்து சட்டதிட்டம் செய்தது.

இது சுருக்கம் இது தவிர அங்கங்கு சின்ன சின்ன சுவாரஸ்யமான தகவல்கள். அனைத்து நிவேதனங்களும் பெருமாளின் முன்னால் படியாக கிடக்கும் குலசேகர பெருமாளைத்தாண்டி செல்வதில்லை. அந்த பாக்கியம் ஒரே ஒரு நிவேதனத்திற்குதான் உள்ளது. திருமலையில் உள்ள விதவிதமான நிவேதன லிஸ்டு, அதில் யாருக்கு பங்கு. அபிஷேக நீர் வரும் துளை மூலமே யாரோ உள்ளே வந்து சங்கு சக்கரத்தை அணிவித்ததால், பின்னால் அது முழுவதும் மூடப்பட்டு, அபிஷேக தீர்த்தம் குடங்களில் வழித்தே வெளியே கொண்டு போகப்படும்.  என பல

திருமலையில் வரலாற்றை அங்கு கிடைத்த கல்வெட்டுகளை கொண்டு எழுதியுள்ளார். இடைவெளியை அவரது கற்பனையை கொண்டு இணைத்துள்ளார். ஆண்டு விபரங்கள், நகைகளின் விபரங்கள், அவற்றின் எடை முதற்கொண்டு, காணிக்கை கிராமங்கள், மான்யங்கள், உற்சவ விபரங்கள். யார் எந்த உற்சவத்தை ஆரம்பித்து வைத்தனர் என்று நிறைய கொட்டியுள்ளார். அவரது உழைப்பு நன்றாக தெரிகின்றது.

கொஞ்சம் தப்பியிருந்தாலும் மிகவும் ட்ரையாக போயிருக்கும். சுவாரஸ்யமான நடையில் அழகாக எழுதியுள்ளார். உரையாடல்கள் அனைத்தும் கற்பனை, சம்பவங்கள் நிஜம். ஏகப்பட்ட புள்ளி விபரங்கள் கொஞ்சம் அலுப்பாகத்தான் உள்ளது. சில இடங்களில் வரிசையாக அவர் இவ்வளவு குடுத்தார், இவர் இவ்வளவு குடுத்தார் என வரிசையாக காணிக்கை வரிசைதான். அனைத்து மன்னர்களும் கடவுளுக்கு என்று அள்ளி கொடுத்துள்ளனர். 

படிக்கும் போது சில இடங்களில், பெருமாளின் செல்வ செழிப்பை மட்டும் பேசும் புத்தகம் போல தோன்றுகின்றது. அங்குள்ள கல்வெட்டுகளின் ஆதாரத்தை கொண்டு எழுதப்பட்டது.

தமிழ் மன்னர்களால் கட்டப்பட்டு, தெலுங்கு மன்னர்களால் வளர்க்கப்பட்ட கோவில். தமிழ், தெலுங்கு, கன்னடம் என்று மும்மொழிகளாலும் போற்றப்பட்ட கோவில், இன்று வட இந்தியர்களாலும் பாலாஜி தர்ஷன் என்று இரண்டு நிமிட தரிசனத்திற்கு நாள் கணக்கில் பிரயாணம் செய்து வணக்கப்படும் ஒரு கோவிலின் வரலாறு. கோவில் வரலாறு அம்மண்ணின் வரலாற்றுடன் பிண்ணி பிணைந்துள்ளது.

வேறு எந்தக் கோவிலுக்கும் இது போன்று ஆயிரம் ஆண்டு கால வரலாறும், கல்வெட்டுகளும் உள்ளதா என்பது சந்தேகம் தான். எனக்கு தெரிந்து ஸ்ரீரங்கம் அப்படி ஒரு பாரம்பர்யம் நிறைந்த கோவில். இது போன்று வேறு கோவில்களின் வரலாறு எழுதப்பட்டுள்ளதா?

பல ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட இப்புத்தகம் மீண்டும் வரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. 

2 கருத்துகள்:

  1. நன்றாக உள்ளது. வரம் பதிப்பகம் விலாசம் மற்றும் தொலைபேசி எண் தெரிந்தால், அதனை தெரிவித்தால் நன்றி உள்ளவனாக இருப்பேன்.

    பதிலளிநீக்கு
  2. கீழ்கண்ட தளத்தில் சென்றால் வாங்கலாம், தொலைபேசியுலும் வாங்கலாம்

    https://www.nhm.in/shop/9788183686051.html

    பதிலளிநீக்கு