27 பிப்ரவரி 2013

துப்பறியும் சாம்பு - தேவன்

தேவனின் மிகவும் பிரபலமான கதாபாத்திரம் துப்பறியும் சாம்பு. விளாங்காய் தலையும், ஜாடிக் காதுகளும், வழுக்கை தலையும், வளைந்த மூக்கும் கொண்ட ஒரு முட்டாள் (அ) அசடு சாம்பு. ஒரு நாள் ஒரு ஜவ்வாது வாசனையால் சாம்புவின் வாழ்க்கை மாறுகின்றது. ஒன்றுமில்லை வேலை போகின்றது. வேலை போன சாம்பு, வேறு குழப்பத்தில் சிக்கி ஏதோ உளற, அது வேலை செய்கின்றது. சாம்பு துப்பறிபவனாகின்றான். கோபாலன் என்னும் போலிஸ் இன்ஸ்பெக்டர் கூட சேர, சாம்புவின் திறமை (!) ஊரெங்கும் பரவுகின்றது. தமிழ் நாட்டிலும் பம்பாயிலும் பிரக்யாதி பெற்ற சாம்பு, லண்டனிலும் சென்று தன் திறமையை காட்டுவதில் முடிகின்றது.

ஐம்பது கதைகள் மொத்தம். தொடர்ச்சியாக எழுதினாரா, இல்லை விட்டு விட்டு அவ்வப்போது எழுதினார என்று தகவலில்லை. கதைகளை பார்த்தால் தொடர்ச்சியாக எழுதியதுபோலத்தான் உள்ளது.

அனைத்து கதைகளும் ஒரு சில டெம்ப்ளேட்டுகளில் அடைத்துவிடலாம். ஒரு குற்றம், சாம்பு ஏதாவது அச்சு பிச்சு என செய்ய போக, குருட்டு அதிர்ஷ்டத்தில் குற்றவாளி மாட்டிகொள்வான். கோபாலன் கண்ணில் நீர் வழிய சாம்பு நீர் கெட்டிக்காரனய்யா என்று புகழ, சாம்பு மெளனமாக முழிப்பான இல்லை மூர்ச்சையாகி விடுவான். குற்றம் பெரும்பாலும் நகை திருட்டு / வைரக்கடத்தல் / பணதிருட்டு. கொலைகள் பக்கம் சாம்பு அதிகம் போவதில்லை. கொஞ்சம் பயந்தாங்கொள்ளி.

ஐம்பதும் ஒரே மாதிரி என்றாலும், அனைத்தையும் ரசிக்கும் படி எழுதியுள்ளார். குழந்தைகள் விரும்பும் கதைகள் என்றாலும், நாமும் ரசிக்கலாம். சிரிப்பின் அளவு அவரவர் மனநிலையை பொருத்தது. குழந்தைமனமுடையவர்கள் விழுந்து விழுந்து சிரிக்கலாம். மிக சீரியசான, ஐம்பது வார்த்தைகளால் ஆன வாக்கியங்கள் கொண்ட குண்டு குண்டு புத்தகங்களை படிப்பவர்களும், எழுத்துக்களை கலைத்து போட்ட கவிதைகளை படிப்பவர்களும், எப்போதும்  வர்க்க வேறுபாடுகளை பேசி பேசி, பேசி பேசி களைத்து போகும் நபர்களும் யோசித்து படிக்கவும்.


 நான் எப்படியும் பத்து முறைக்கு மேல் படித்திருப்பேன், போரடிக்கவில்லை . தெரிந்த முடிவுதான் என்றாலும் அதைப் படிப்பதில் ஓர் ஆனந்தம்.  கடைசியில் சாம்பு ஜெயிக்கும் போது ஒரு சந்தோஷம் ஏற்படுகின்றது. ஒன்றிரண்டு கதைகள் கொஞ்சம் சுவாரசியம் கம்மியாக இருக்கலாம் ஆனால் கண்டிப்பாக போர் அடிக்காது. 

கோபாலன் சாம்புவிற்கு உதவவே அவதாரம் எடுத்துள்ளார். ஒவ்வொரு முறையும் சாம்புவின் செயல்களுக்கு அவர் காரணம் கண்டு பிடிக்கும் போது, நமது விமர்சகர்கள் நினைவுதான் வருகின்றது. கமல் படங்களில் உள்ள, அவருக்கே தெரியாத குறியீடுகளை கண்டுபிடித்து ஒருவர் வியந்து, பெருமிதமடைந்து, புளகாங்கிதமடைந்து ஆனந்த கண்ணீர் உகுத்து வருகின்றார் அது போல. சாம்பிளுக்கு - கமல் ஏன் முழித்துக் கொண்டே குறட்டை விட்டார், சரியாக சொன்னால் உங்களுக்கு கமல் படம் பார்க்கும் தகுதி உண்டு என்ற சர்டிபிகேட் கிடைக்கும்.

சாம்புவின் திருமணமும் ஒரு கதை. சாம்புவிற்கு ஏற்ப வேம்பு. சாம்பு வேம்புவிற்கு சுந்துவும் சுப்புவும்.

படித்துவிட்டு குழந்தைகளுக்கு சொல்லுங்கள். படிக்கவும் வையுங்கள்.

ஓவியர் கோபுலுதான் சாம்புவின் உருவத்தை நமக்கு காட்டியவர். புத்தகத்தில அதை சேர்த்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். இது கீழே உள்ள பதிவுகளை படிக்கும் முன் எழுதியது. சாம்புவிற்கு உயிர் கொடுத்தவர் ராஜூ. 

சாம்புவை பற்றி சில சுவாரஸ்யமான தகவல்கள்

பசுபதிவுகள் 1,2,3,4,5,6

ஏகப்பட்ட தகவல்கள் வைத்திருக்கின்றார் இவர் தளத்தில். தேவன் ஸ்பெஷல் என்றே சொல்லலாம்.

பசுபதி சார், வலிய வரும் வாய்ப்பை வேண்டாம் என்பார்களா, ஐந்து என்ன அதற்கு மேலேயே

1. மைசூர் யானை
2. முந்திரி பருப்பு - பருப்பு தேங்காய்
3. பழம் பெருச்சாளி
4. இஷ்டம் போல பிரயாணாம்
5. வேம்புவின் மாமா பிள்ளை
6. பச்சை வைரம்
7. புது வருஷப் பரிசு
8. வேஷம் பலித்தது
9. சங்கராபுரம் மகாராஜா
10. பங்களா மர்மம்.

நன்றி.



7 கருத்துகள்:

  1. இன்றைய சிறுவர்கள் கூட இந்தக் கதைகளை ஏற்றுக்கொள்வார்களா என்பது சந்தேகமே! அவர்களின் மனப்பாய்ச்சளுக்கு முன் சாம்பு நிற்க முடியும் என்று தோன்றவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருக்கலாம், டிவி, கம்யூட்டர், சினிமா, வீடியோ கேம்ஸ் என்று மூழ்கி குழந்தைகளுக்கு உரித்தான அந்த மனதை இழந்து, இரண்டுங்கட்டான குழந்தைகளுக்கு ஒரு வேளை பிடிக்காமல் போகலாம். ஆனால் இன்னும் கிராமங்களிலும், சிறு நகரங்களிலும், பெரு நகரத்தில் இருக்கும் குட்டி குட்டி காலனிகளிலும் விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகளுக்கு பிடிக்காமல் போகாது.

      ஆர்.வி அவர் தளத்தில் அவரது பெண் சாம்புவின் சாகசங்களை கேட்டு விழுந்து விழுந்து சிரித்ததாக எழுதியிருந்தார். பிடிக்கும். இது போன்ற கதைகளை குழந்தைகள் ரசிக்க முடியவில்லை என்றால் எங்கோ ஏதோ தவறு என்றுதான் அர்த்தம். குழந்தைகள் குழந்தைகளாக இருக்க வேண்டும், அட்லீஸ்ட் சிறிது நாட்களுக்காவது.

      நீக்கு
  2. நன்றி.

    உங்களுக்குப் பிடித்த ஐந்து ‘சாம்பு’ கதைகள் யாவை? இங்கே பட்டியலிடுங்கள்! முடிந்தால், அவற்றுக்கு ‘ராஜு’ எழுதிய ஓவியங்கள் உள்ளனவா என்று தேடுவேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 10 -இல் 2 -க்குத்தான் ( உங்கள் பட்டியலில் 5+9) ‘ராஜு’ ஒழுங்காய்க் கிடைப்பார் என்று நினைக்கிறேன். என்னிடம் எல்லாக் கதைகளும் மூல வடிவில் இல்லை. எல்லாம் கந்தல். கதை 33-க்கு மேலே சில நல்ல பக்கங்கள் கிடைக்கும் என்று நினைக்கிறேன்.

      ( ‘பங்களா மர்மம்’ = என் வலைப்பூவில் சாம்பு -4 . அதற்கு ஒரிஜினல் ‘ராஜு’ ஓவியம் கிடைக்கவில்லை. )

      காமராஜர் சொன்னது போல், பார்க்கலாம். மெதுவாய் இடுகிறேன்.
      இன்னொரு ‘தேவன்’ ரசிகரைச் சந்தித்ததில் மகிழ்ச்சி.

      நீக்கு
  3. 'தேவன்’ ரசிகர்கள் திவாகரின் தொடரை ரசிப்பார்கள் என்று நம்புகிறேன்.
    பகுதி 9
    http://www.vallamai.com/paragraphs/32779/

    பதிலளிநீக்கு
  4. கடந்த புத்தக கண்காட்சியில் வாங்கிட்டேன்.. இன்னும் படிக்கவில்லை.. நான் நினைச்சேன்.. 50 தனிதனி கதைகளா சார் ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. >>நான் நினைச்சேன்.. 50 தனிதனி கதைகளா சார் ?>.

      ஆம், 50 தனித்தனிக் கதைகள் தாம்.

      நீக்கு