13 மார்ச் 2013

பேய்க் கதைகளும் தேவதைக் கதைகளும் - ஜெயமோகன்

பேய்கள் சுவாரஸ்யமானவை. அனைவருக்கும் ஏதாவது பேய்க்கதைகள் கண்டிப்பாக தெரிந்திருக்கும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பேய்கள் பரிச்சியமாயிருக்கும். சிறுவயதில் சாதாரண கதைகளை கேட்பதில் உள்ள சுவாரஸ்யத்தை விட அமானுஷ்யக்கதைகள் தரும் சுவாரஸ்யம் அதிகம். என் பேய்கள் எனது பள்ளியிலேயே இருந்தது, தேடி அலைய வேண்டியதில்லை. பற்றாக் குறைக்கு எதிரில் இருந்த பள்ளிவாசல் மாடியில் கட்டி வைக்கப்பட்டிருந்த ஒரு ஜின் வேறு. 

பெரும்பாலும் பேய்கள் என்பது நமது மனதில் உருவாவதுதான். தேவதைகளும் அது போலத்தான். சிலரின் பேய்கள் சிலருக்கு தேவதையாகக் கூடும். பேய் பயம் என்பது பெரும்பாலும் உருவாக்கப்படுவதுதான். தானாக அது உருவாவது, உண்மையான பேயை பார்க்கும் போதுதான். தனியாக பல நாள் இருந்த வீட்டில், கூட இருந்தவனின் பேய் அனுபவம் என்னை தூங்க விடாமல் தடுத்தது. 

தமிழகத்தை விட மலையாளத்தில் அதிக அமானுஷ்ய கதைகள் உண்டு என்று நினைக்கின்றேன். தமிழில் அமானுஷ்யக் கதைகளுக்கு என்று வெகு சிலரே இருக்கின்றனர். சிறுவயதில் படித்தது கலாதர் என்பவரின் கதை. அஷ்டமாசித்திகளை விஞ்ஞானத்துடன் கலந்து எழுதியிருந்தார். பிறகு பேய்க்கதை மன்னன் :) பி.டி சாமி. ஆனால் அந்தளவிற்கு உவப்பாயில்லை. சிறுவயதில் படிக்கும் போதே பயம் வரவில்லை. 

இவ்விஷயத்தில் ஓரளவு வெற்றி அடைந்தவர் இந்திரா சவுந்திரராஜன். அவரது ரகசியம், விட்டுவிடு கறுப்பா, ருந்திர வீணை, சிவம், சிவமயம், காற்று காற்று உயிர் என்று அனைத்தும் படிக்க விறுவிறுப்பானவை.  ரகசியம் விகடனில் படு ஆர்வத்துடன் படித்த கதை. கதையின் சஸ்பென்ஸ் உடையும் இடம் கடைசி வரி. அது டி.வி தொடராக இன்னும் அட்டகாசமாக வந்தது. (டிவிடி கூட வந்துள்ளது, செம காஸ்ட்லி. வாங்க நினைத்தவன், மனைவியின் முறைப்பை கண்டு வைத்துவிட்டேன்) காற்று... கதையை இரவில் தனியாக படிக்க ஆரம்பித்து பயந்து வைத்துவிட்டேன். விஞ்ஞானத்தையும், அமானுஷ்யத்தையும் கலந்து, முடிக்கும் போது இரண்டில் எதை நம்புவது என்பதை வாசகனிடம் விட்டு விடும் திறமை இவரது சிறப்பு.


அனைத்தும் நாவல்களே, சிறுகதைகள் அவ்வளவாக இல்லை. அக்குறையை ஜெயமோகன் போக்கிவிட்டார். அவர் இம்மாதியான அமானுஷ்யங்களில் எக்ஸ்பர்ட். நமது பாரம்பர்ய கதைகள், நாட்டார் கதைகள், வழிவழியாக வரும் கதைகள் எல்லாம் அவரது மொழியில் அட்டகாசமாக நமக்கு கிடைக்கின்றது. அதோடு அவரது புத்திசாலித்தனமும் கதைகளில் தெரிகின்றது. 

அமானுஷ்யக் கதைகள் என்றால் நம்மை பயப்படுத்த தேவையில்லை. அதன் அமானுஷ்யத்தன்மையை நமக்குள் கடத்தினால் போது. இதில் பேய் எது தேவதை என்பதை அவரவர் மனநிலைக்கு தகுந்த மாதிரி பிரித்துக் கொள்ள வேண்டியதுதான். 

இமையோன் - ஒரு பரிபூரண பேய்க்கதை, மலையில் வழிதவறும் ஒருவன் ஒரு இரவில் அடையும் அமானுஷ்ய அனுபவம்

பாதைகள் - கொஞ்சம் குழப்பமான கதை. முழுவதும் புரியவில்லை. 

அறைகள் - கண்ணுக்கு தெரியாத பெண்ணுடன் குடும்பம் நடத்தும் ஒருவரின் கதை,

தம்பி - பிடித்த கதை. ஸ்பிலிட் பெர்சானாலிட்டியயையும், குற்ற உணர்வையும் கலந்து எழுதப்பட்ட கதை. நமது மனதின் குற்ற உணர்ச்சி (அ) மனசாட்சி என்பது மிகப்பெரிய பேய். நம்மை சுலபமாக பழி தீர்த்துவிடும்.

யட்சி - யட்சன் கதை கேள்விபட்டதுண்டு. யட்சகானம் இங்கு கர்நாடகத்தில் பிரபலம் என்று சொல்வார்கள். யட்சி கேரளாவில் பிரபலம். அவரது சொந்த கதையா என்று தெரியவில்லை. கதை சொல்லியின் அம்மாவின் யட்சியின் அனுபவம். கதையில் யட்சியின் கதையை அப்பெண்ணுடன் இணைத்திருப்பது அழகு.

ஏழுநிலை பந்தல் - முதலில் ஏழுநிலை பந்தல் என்றால் என்ன என்றே தெரியவில்லை. பிறகுதான் கதையை முழுவதும் புரிந்து கொள்வது. ஒருவகையான கோபுரம் போன்று கட்டப்படும் பந்தல் என்றுதான் யூகித்தேன். பந்தல் கட்ட போகும். ஒருவனுக்கு அந்த ஊர் ஆசாரி சொல்லும் யட்சிக் கதை. 

இரண்டாவது பெண் - ஒரு லாரி ஓட்டுனருக்கு உண்டாகும் அமானுஷ்ய அனுபவம். அவருடன் கற்பனையில் கூடிக் குலாவும் ஒரு பெண். 

குரல் - இதன் முடிவை அறிந்தவர்கள் சொல்லவும். கள்ள தொடர்பு. மனைவி இறக்கின்றாள். நாய் குலைத்து கொண்டே இருக்கின்றது. கள்ளக் காதலியும் இறக்கின்றாள்.

ஐந்தாவது நபர் - ஆவியுடன் பேசும் ப்ளாஞ்செட். சிறுவயதில் அரைகுறையாக எங்கோ படித்துவிட்டும் டம்பளரை வைத்து ஆராய்ச்சி செய்தது நினைவிற்கு வருகின்றது. 

ரூபி - இப்புத்தகத்தில் எனக்கு மிகவும் பிடித்த கதை. குதிரைகள் ஆவியாக வருமா? மனிதர்கள் வரும் போது மிருகங்கள் ஆவியாக, பேயாக அலையக் கூடாதா?

ஜெயமோகனுக்கு எந்தவித கதைகளும் சுவாரஸ்யமாக எழுத வருகின்றது. அவரின் வர்ணனைகள் வாசகனை அந்த உலகத்திற்கு இழுத்து செல்கின்றது. அமானுஷ்யகதைகளானாலும் அது பயத்தை உண்டாக்குவதை மட்டும் நோக்கமாக கொள்ளாமல், அதையும் தாண்டிய உணர்வை தருகின்றது. உளவியல் ரீதியான கதைகள். 

இரண்டு விதமான கதைகள், தொன்மை சார்ந்த கதைகள். நமது கலாச்சாரத்தில் பாரம்பர்யமாக வழிவழியாக கூறப்பட்டு வரும் கதைகள். யட்சிகள், கிராம தேவதைகள், சிறு தெய்வங்கள். அதை சார்ந்த கதைகள். மற்றவை பேய்க் கதைகள். அப்பேய்கள் நமது மனதால் உருவாக்கப்படுவையாகவும் இருக்கலாம். 

ஆனால் இக்கதைகள் வெறும் திகிலை மட்டும் உண்டாக்கி படித்ததும் மறந்து போகக் கூடிய கதைகள் அல்ல. நமது ஆழ் மன உணர்ச்சிகளை கொஞ்சம் ஆராயச் செய்யும் கதைகள்.

2 கருத்துகள்:

  1. தமிழில் எனக்கு தெரிந்தும் யாரும் அவ்வளவு சுவாரசியமாக பேய் கதைகள் எழுதுவதில்லை சார் - இது எனது கருத்து மட்டுமே...

    சொன்னா நம்ப மாட்டீங்க ரெண்டு நாள் முன்ன லேண்ட்மார்க் போயிருந்தப்போ இந்த புக்க கையில எடுத்துவச்சிட்டு ரொம்ப நேரமா யோசிச்சிட்டு இருந்தேன் வாங்கலாமா வேணாமான்னு..

    அப்புறமா வாங்கிக்கலாம்னு வச்சிட்டு வந்துட்டேன்.. இப்போ உங்க பதிவ படிச்சா வருத்தமா இருக்கு, ஏன் வாங்கமா வந்தேன்னு.. அடுத்த முறை போகும் போது கண்டிப்பா வாங்கணும் சார்..

    பதிலளிநீக்கு
  2. ஜெயமோகன் அறம் தொகுப்பில் யானை டாக்டரும், நூறு நாற்காலியும் பெருவலியும் படிச்சதில் இருந்து ஜெமோவின் வாசகனாகிவிட்டேன் :-)

    பதிலளிநீக்கு