14 ஏப்ரல் 2013

தண்ணீர் - அசோகமித்திரன்

தண்ணீர் ஒரு மணி நேரத்தில் படித்து முடித்துவிடக் கூடிய் ஒரு குட்டி நாவல். ஆனால் அது எளிதல்ல. அது தரும் தாக்கம் அதை அப்படி எளிதில் படிக்க விடாது. 

"யாரோ ஒரு பெண் தண்ணீருக்காக இங்கும் அங்கும் அலைந்ததை தொடர்ச்சியாக பார்த்ததன் விளைவு இக்கதை" என்கின்றார் அசோகமித்திரன்.

தண்ணீர் பிரச்சினை என்றுமுள்ள ஒரு விஷயம். என் ஊரில் முன்பு தண்ணீர் பஞ்சம் படு பயங்கரம், பக்கத்து தெருவில் போய் தண்ணீர் சுமந்து வருவார்கள். வீட்டில் விஷேஷம் என்றால் தண்ணீரை விலைக்கு வாங்கி கொண்டு வருவோம். மழை பெய்யும் போது பிடித்து வைத்துக் கொள்வோம். பின்னர் முல்லையாற்றிலிருந்து தண்ணீர் வீட்டிற்கே வர ஆரம்பித்தது. கொஞ்சம் மூச்சு விட்டுக் கொண்டோம். ஆனால் இப்போதும் சில சமயம் வாரக்கணக்கில் தண்ணீர் வராமல் போய்விடும். இன்றும் தண்ணீரை ட்ரம்மில் கொண்டு வருவது நடக்கிக்ன்றது. ஆனால் முன்பிருந்த கொடுமை இல்லை. இப்போது தண்ணீருக்கு பதில் மின்சாரம்.

இக்கதை அது போன்ற ஒரு கொடுமையான தண்ணீர் பிரச்சினை காலத்தை பேசுகின்றது. அது ஒரு பின்புலம், அதன் மேல் இரண்டு சகோதரிகளின் கதை. அசோகமித்திரனின் தனிப்பட்ட பேட்டிகளை படிக்கும் போது அவர் கூறுவது வாழ்க்கை மேல் எவ்வித குற்றச்சாட்டுமில்லை, வருவதை ஏற்றுக் கொண்டேன் என்பது. அவரது கதைகளும் அவரைப் போலவே, வாழ்க்கையை ஆராய்ச்சி செய்து நம்மை கூறுபோடுவதில்லை. வாழ்க்கையை ஒரு அடி தள்ளி நின்று நமக்கு காட்டுகின்றது. நாம் அதை புரிந்து கொள்ள வேண்டியதுதான். 


ஜமுனா சினிமா ஆசையில் விழுந்து பாஸ்கர் ராவினால் அடிக்கடி ஏமாற்றப்படும் ஒரு பெண், அவளது தங்கை சாயா. கணவன் மிலிட்டரியில், பையன் அவளது மாமா வீட்டில். இருவரும் அவர்களது அம்மாவை மாமா வீட்டில் விட்டு விட்டு தனியே ஒரு வீட்டில் வசிக்கின்றனர். இவர்களது வாழ்க்கை தண்ணீர் பஞ்சத்துடன் சேர்ந்து போகின்றது.


தண்ணீருக்கு அனைவரும் அலைகின்றனர். அனைத்து வீட்டு குழாய்களிலும், கிணறுகளிலும் தண்ணீர் வற்றுகின்றது. சாயா ஜமுனா - பாஸ்கர் ராவின் உறவை சகிக்காமல் ஹாஸ்டலுக்கு போகின்றாள். தெருவில் வைக்கப்படும் தண்ணீர் டேங்கினால் அனைவரும் கொஞ்சம் ஆசுவாசம் அடைகின்றனர். சாயா திரும்பிவருகின்றாள். வீட்டு குழாயில் தண்ணீர் வருகின்றது, ஆனால் அது சாக்கடை கலந்து வருகின்ற தண்ணீர். ஜமுனா கர்ப்பமாகின்றாள். சாயா பாஸ்கர் ராவின் மீது பாய்கின்றாள். ஜமுனா பாஸ்கர் ராவை போகச் சொல்லிவிட்டு, இருவம் அவர்கள் வாழ்க்கையை தொடர்கின்றனர்.

கதை ஒரு ஆரம்பம், ஒரு முடிவு, திடுக்கிடும் திருப்பங்கள் என்றெல்லாம் கிடையாது. சம்பவங்களின் கோர்ப்பு. கதாபாத்திரங்கள் பற்றி விவரிப்பு எல்லாம் கிடையாது. சம்பவங்களின் மூலமும், அவர்களின் உரையாடல் மூலமும் அது சொல்லப்படுகின்றது. ஜமுனா ஏன் அப்படி ஆனாள் என்பதெல்லாம் நம் யூகத்திற்கு விடப்படுகின்றது. அதே போல் கதைஜமுனாவிற்கு உதவும் டீச்சர் கதபாத்திரம் மட்டும் கொஞ்சம் அதிகம் பேசுகின்றது இரண்டு பக்கம். அவ்வளவுதான் மற்றவர்கள் அனைவரும் சுருக்கம். 

மக்கள் தண்ணீருக்கும் பட்ட அவஸ்தையை அப்படியே சித்தரித்துள்ளார். அடுத்தவர் வீட்டிற்கு சென்று கொஞ்சம் அவமானப்பட்டு தண்ணீர் சுமந்து வருவது, தண்ணீர் கொண்டுவரும் ஓட்டுனர் அதற்காக பெற்றுக் கொள்ளும் கப்பம். மழை இரவில் மழைத்தண்ணீருக்கு வரும் சண்டை அனைத்தும் இயல்பானவை. 

அரசு இயந்திரத்தின் செயல் அழகு, ஒரு வேலையை செய்யும் போது முடிந்த வரை ஏற்கனவே செய்யப்பட்ட வேலைகளை கெடுப்பது, பொது ஜனங்களுக்கு அவர்கள் தரும் மரியாதை, வேலையின் மெத்தனம் என நடுத்தர மக்கள் அரசு இயந்திரத்தால் படும் அவஸ்தையை கண் முன் காட்சிபடுத்துகின்றார். 

ஒரு பாட்டி தண்ணீருடன் கீழே விழுந்து மற்றவர்கள் தொட்டதால் மிச்ச தண்ணீரைக் கீழே கொட்டி விட்டு போவதை கண்டு ஜமுனாவின் மனம் லேசாக மாறுவது அழகு. சின்ன சின்ன சித்திரங்கள், இரண்டு குழந்தைகள் தண்ணீர் சுமந்து கொண்டு போவது, கடைசியில் பாஸ்கர் ராவின் கார் சேற்றில் மாட்டி கொண்டதை பார்த்துக் கொண்டே ஜமுனாவும், சாயாவும் வெளியே போவது, ஜமுனாவின் மாமா பெண்ணின் தயக்கம்.

கடைசியில் ஜமுனா கூறுவது "தண்ணி முதல்ல சாக்கடைதண்ணி போல வந்தது. ஆனா அது எல்லாம் சரியாயிடும், தண்ணி வந்தது அதுதான் முக்கியம்"

அவரின் வரிகளிலேயே முடிவுரை
"இந்த 2013ம் ஆண்டில் இந்த தண்ணீர் நாவலுக்கு எப்படி பொருத்தம் தேடுவது? தண்ணீர் மூலம் இருக்க முடியாது. ஆனால் இக்கதையிலுள்ள நெருக்கடிகள் வேறு வேறு பொருள்களுக்காகவும் காரணங்களுக்காகவும் நிகழ்கின்றன. நிர்பந்தங்கள் தொடர்ந்து இருந்து வருகின்றன. முயற்சி வெற்றி, தோல்வி, நிராசை, இன்னும் வாழத்தான் வேண்டுமா என்ற கேள்வி எழுப்பும் தருணங்கள் இருந்து கொண்டுதான் உள்ளன"

சரியாக பொருந்துகின்றது. ஆனால் இன்றும் தண்ணீர் பிரச்சினைதான். ஆனால் அலைய வேண்டியதில்லை. உட்கார்ந்த இடத்திலிருந்து பணத்தை எண்ணத் தரவேண்டியுள்ளது.

அசோகமித்திரனின் வழக்கமன சின்ன சின்ன எள்ளல் இதில் இல்லை. தண்ணீர் பஞ்சம் என்பதால் ட்ரையாக இருக்கட்டும் என்று விட்டுவிட்டார் போல.

இக்கதை என்னை பொருத்த வரை ஒரு நல்ல கதை. ஆனால் அசோகமித்திரன் அதைப் பற்றி கூறுவது "எனக்கு பிடிக்காதது என்றால் தண்ணீர் கரைந்த நிழல்களை சொல்லலாம், என்னவோ அவற்றை எழுதிவிட்டேன்" என்னவோ அப்படி சொல்லிவிட்டார் என்று நினைத்துக் கொண்டு நாம் படிக்க வேண்டியதுதான்.

இந்நாவலைப் பற்றி மற்றவர்களின் கருத்தை படிக்கும் போது படித்த ஒரு விஷயம் இது ஒரு குறியீட்டு நாவல் என்பது. அப்படி என்றால் என்ன என்று ஆராய்ச்சி செய்து பார்த்தேன் ஒன்றும் புரியவில்லை. புரிந்தவர்கள் விளக்கினால் தன்யனாவேன்.

புத்தகத்தில் விலை 100. இரண்டு தண்ணீர் கேன்களின் விலைதான்.

2 கருத்துகள்:

  1. இந்த நாவலுக்கு மேலும் இரு விமர்சனங்கள் இங்கே...

    http://balhanuman.wordpress.com/2012/10/11/

    பதிலளிநீக்கு
  2. தாங்கள் கொடுத்திருக்கும் அசோகமித்திரன் முன்னுரைக் குறிப்பிலேயே அதற்கான(குறியீட்டு நாவல்)பதில் இருக்கிறதே!

    பதிலளிநீக்கு