23 ஏப்ரல் 2013

என் இனிய இயந்திரா, மீண்டும் ஜீனோ - சுஜாதா

விஞ்ஞான கதைகள் என்றால் முதலில் நினைவிற்கு வருவது சுஜாதாதான். அதன் பின்னால்தான் மற்றவர்கள். யார் அந்த மற்றவர்கள் என்று யோசிப்பவர்களுக்கு எனக்கு தெரிந்து சில ராஜேஷ்குமார், ஆர்னிகா நாசர், மாலன், ஜெயமோகன். விஞ்ஞான சிறுகதைகள் சுலபம், நாவல்கள் சற்று கடினம்.

என் இனிய இயந்திராவும், மீண்டும் ஜீனோவும் விகடனில் தொடராக வந்தது. நாவலின் வெற்றிக்கு காரணம் ஜீனோ. ஒரு பெரிய கிரேக்க மேதையின் பெயரைக் கொண்ட நாய். ரோபாட். இயந்திரம். அது அனைவரையும் கவர்ந்ததற்கு காரணம், அதன் மனிதத்தன்மை. இதே ஒரு இயந்திர மனிதனை அங்கு வைத்திருந்தால் இந்தளவிற்கு கவர்ந்திருக்காது. ஒரு நாய் விஞ்ஞான முன்னேற்றத்தினால் மனிதனைப் போல சிந்திக்க ஆரம்பித்ததுதான் கதையின் பெரிய பலம்.

கதை எதிர்காலத்தில் ஏதோ ஒரு நாளில் ஆரம்பிக்கின்றது. மனிதர்களின் பெயர்கள் சுருக்கப்பட்டு, பிறப்பும் இறப்பும் அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்படும் ஒரு காலம். நிலா - சிபி. அவர்களின் வீட்டில் உள்ள அறையில் தங்க அனுமதிக்கப்பட்ட விருந்தாளி ரவி. ரவியுடன் வரும் நாய். தத்துவம் படிக்கும் நாய். நிலாவின் கணவன் காணமல் போக, கதை சுறுசுறுப்பாகின்றது. தலைவர் ஜீவாவை சந்திக்கும் நிலா கடைசியில் ரவியின் கூட்டத்துடன் சேர்ந்து ஜீவாவை கொல்ல துணிகின்றாள். ஜீனோவின் உதவியுடன் ஜீவாவின் பின்னால் உள்ள சதியை கண்டுபிடிக்கின்றாள். பெரும்பாலானவர்கள் படித்திருப்பார்கள் அதனால் கதையின் முடிவை சொல்வதில் தப்பில்லை. படிக்காதவர்கள் கொஞ்ச நேரம் கண்ணை மூடிக்கொள்ளுங்கள்.

ரவி - மனோ இருவர்தான் ஜீவாவின் பின்னால் இருக்கும் சூத்ரதாரிகள். ஜீனோவை அழித்ததாக நினைத்துக் கொண்டு, நிலாவை பொம்மையாக்கி ஆள்கின்றார்கள். ஜீனோ அவர்களை எப்படி வெற்றி கொள்கின்றது என்பது இரண்டாம் பாகம் மீண்டும் ஜீனோ.

கதையின் முக்கிய அம்சம் சுஜாதாவின் சுவாரஸ்யமான நடை, இளமை துள்ளலான விவரிப்புகள். எதிர்காலத்தை பற்றிய ஒரு கற்பனை. அனைத்தையும் விட ஜீனோ. ஜீனோவை ஒரு இயந்திரம் என்று எண்ண முடியாமல் அதை ஒரு நாய் என்று எண்ணும்படி செய்தது. ஒரு நாய் இத்தனை செய்கின்றது என்பதே ஒரு சுவாரஸ்யம். அங்கங்கு ஒரு சில விஞ்ஞான தகவல்கள். அதில் எத்தனை சாத்தியம் என்பது கவலை இல்லை. சுஜாதாவே கூறுவது போல "இந்த உலகில் பெண்கள் மீசை வளர்த்துக் கொள்ளலாம், ஆண்கள் குழந்தை பெற்றுக் கொள்ளலாம்". 

ஒரு கற்பனை உலகம், நீட்ஷே படிக்கும் நாய் (யார் அவர்?), தெருக்கூட்டும் ரோபாட், மனிதனா இயந்திரமா என்று தெரியாத சிலர், அனைவருரையும் சில இலக்க எண்ணில் அடக்கி ஆளும் அரசு. 

ஜீனோ ஒரு சாதாரண இயந்திரம் ஒரு கணத்தில் மனிதத்தன்மை பெறுகின்றது. அத்தருணம் மிக அழகு. இறப்பு என்றால் என்ன என்று தெரியாத இயந்திரம், அதற்கு இணையான இழப்பை அறியும் போது தன்னை அறிகின்றது. தன்னை அழிவில்லாததாக மாற்றிக் கொள்கின்றது. 

ஆனால் பிறந்தது அனைத்தும் அழிந்தே தீர வேண்டும் என்ற விதிப்படி, ஜீனோவின் புரட்சியில் அதுவே அழிந்து போகின்றது. கதைக்கு அந்த முடிவில்லை என்றால் முற்று பெறாமலே போயிருக்கும்.

சிறுவயதில் இதை டிவியில் பார்த்த நினைவு மங்கலாக வருகின்றது. சுரேஷ் மேனன் - சிபி, சிவரஞ்சனி - நிலா. "நீ நிலா, நான் சிபி" ஒரு டயலாக். 

விகடனில் தொடராக வந்தது. தொடர்கதைக்கான ஓட்டைகள் நிறைய உள்ளது. புத்தகத்திலும் சரி செய்யாமல் விட்டுள்ளன்னர். "என் இனிய இயந்திரா" ல் அந்த அளவிற்கு சொதப்பல்கள் இல்லை. ஆனால் முடிவே பயங்கர லாஜிக் இடிபாட்டிற்கிடையில் கிடக்கின்றது. "ஜீவா என்னும் மகத்தான சிந்தாத்தை அமைத்தவனே நீதான்" என்று ரவி மனோவிடம் கூறுகின்றான். அப்படிப்பட்டவர்கள் ஏன் மறைந்து வாழ வேண்டும், அவர்களே ஜீவாவை உருவாக்கி அவர்களே ஏன் அழிக்க வேண்டும். ஜீவாவை அழித்து அதைவைத்து பதவிக்கு வருவதென்றால், வெகு சுலபமாக செய்திருக்கலாம், அதை விடுத்து நிஜமாக ஏன் கஷ்டப்பட வேண்டும். படித்து முடித்தபின் வரும் ஏகப்பட்ட கேள்விகளுக்கு பதிலில்லை.

இரண்டாம் பாகத்தில் இரண்டு அந்தியாயங்களுக்கு நடுவே ஒரு தொடர்புமில்லாமல் துண்டு துண்டாக வருகின்றது. காமாவுடன் நிலா நடனமாடும் நிகழ்ச்சி வருகின்றது, அது அப்படியே அந்தரத்தில் நின்றுவிட்டு கதை எங்கோ போகின்றது. மற்றொரு அந்தியாயத்தில் நிலா ஜீனோவை விவியில் பார்க்கின்றால், அடுத்த அந்தியாயத்தில் நிலாவும் ஜீனோவும் சேர்ந்து வேறு எங்கோ இருக்கின்றார்கள். 

அவ்வளவு பெரிய தில்லாலங்கடி வில்லன்கள் கடைசியில் கோமாளிகளாகின்றனர். அதுவே பெரிய சறுக்கலாகி விட்டது. விகடன் ஆசிரியர் குழுவின் இடையூறு அதிகமாக இருந்திருக்கும் போல. ஆனால் என்ன விஞ்ஞானம் வளர்ந்தாலும் மனிதனின் ஆதர குணம் மாறாது என்பதை சுஜாதா தீவிரமாக நம்புகின்றார். கட்டுப்பாடுகள் விலக்கப்பட்டதும் ஜனங்களின் அடக்கப்பட்ட உணர்ச்சிகள் வெடித்து சிதறுகின்றது. 

கதையை எதிர்கால விஞ்ஞான சாகசங்களுடன் நிறைந்த ஒரு பழைய கால ஆட்சி முறையை காட்டுகின்றார். அரசன், அரசி, வாள்ப்படை தலைவர், காமன் பண்டிகை, அடிமைப் பெண் ஜரீனா என்று. 

மொத்தத்தில் இது வழக்கமான சுஜாதா கதையில்லை, டெட்லைன் நிர்பந்ததில் அவசரத்தில் எழுதிய கதை போலத்தான் இருக்கின்றது. என் இனிய இயந்திரா ஓகே, மீண்டும் ஜீனோ சுமார் ரகத்தில்தான் சேர்க்க வேண்டும். முதலில் இருந்த அந்த பிரமிப்பு, விறுவிறுப்பு இரண்டாவதில் இல்லை. ஜீனோதான் இரண்டாவது கதையை இழுத்து பிடிக்கின்றது. இது போன்ற கதையை சுஜாதாவை தவிர வேறு யார் எழுதியிருந்தாலும், ஒரு அட்டர் ப்ளாப்பாக ஆகியிருக்கும். அந்த வகையில் சுஜாதாவிற்கு வெற்றி. இதோடு ஒப்பிடுகையில் அவரது சொர்க்கத்தீவு ஒரு படி மேல்தான் (வரும் வாரங்களில் அதைப் பற்றி)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக