01 மே 2013

பாம்பு

கருப்பாக மெதுவாக ஊர்ந்து கொண்டிருந்த அந்த பாம்பை முதலில் பார்த்தது என் பெரியம்மா பெண்தான்.

 "டேய் அங்க பாரு பாட்டி வீட்டு பக்கத்துல என்னமோ போகுது, பாம்பு போல இருக்கு"

எனக்கு ஒன்றும் தெரியவில்லை. இருட்ட தொடங்கும் நேரம். அவளின் கண்ணாடி பவர் வேறு என்னைவிட இரண்டு பாய்ண்ட் அதிகம்.

 "கண்ணாடிய துடச்சு பாரு" என்றேன்.

"நல்ல பாருடா அங்க, நெளிஞ்சு நெளிஞ்சு போகுது"

கண்ணாடியை துடைத்துதான் போட்டிருக்கின்றாள். நல்ல நீளமான பாம்பு, சுமார் ஐந்து அடிக்கு மேல் இருக்கும். நல்ல பருமன். பளபளவென்று உடல். அசங்கி அசங்கி தூக்கத்தில் நடப்பவன் போல் போய்க் கொண்டிருந்தது.

"ப்பா என்ன பெருசு, பளபளன்னு இருக்குல்ல, தோல பாரு நல்ல லேடிஸ் ஹேண்ட் பேக் போல வளவளன்னு இருக்கு'

"ரசிக்ற மூஞ்சிய பாரு, இப்ப என்ன பண்றது"

எனக்கும் என்ன செய்வது என்று தெரியவில்லை. பாதுகாப்பான தூரம் என்பதை உறுதி செய்து கொண்டு குறி பார்த்து ஒரு கல்லை எடுத்து எறிந்தேன். விளைவு விபரீதமாகி, பாம்பு பாட்டி வீட்டிற்குள் விறுவிறுவென நுழைந்தது.

"ஐயஐயோ பாட்டி"



"இல்ல பாட்டி பெரிய வீட்ல இருக்காங்க"

"சீக்கிரம் வா போய் பாக்கலாம்"

இருவரும் ஓடினோம். எனக்கு கொஞ்சம் திக்திக்கென்று இருந்தது. கொஞ்சம் மெதுவாகவே ஓடினேன். பாம்பு டைப்படிப்பதை படத்தில் மட்டுமே பார்த்தவனுக்கு பாம்பை நேரில் கண்ட படபடப்பு தீரவில்லை.

கூட வந்தவள் கொஞ்சம் கூட பயப்படாமல் மெதுவாக வீட்டிற்குள் எட்டி பார்த்தாள்.

"டேய் வா உள்ள போய் பார்க்கலாம்"

"நீ கல்யாணம் ஆகி இங்க வந்தப்பறம் உனக்கு இது சாதரணமா இருக்கலாம். ஆனா எனக்கு பயமா இருக்கு"

"சீ பயப்படாத, பாம்பு நம்ம ஒன்னும் பண்ணலனா, அதுவும் ஒன்னும் பண்ணாது. நீ இங்கயே இரு நான் போய் பாக்கறேன்"

"இரு நானும் வர்றேன்"

வேட்டியை ஓடுவதற்கு வசதியாக ராஜ்கிரண் ஸ்டைலில் கட்டிக் கொண்டு உள்ளே நுழைந்தேன்.

ஒரு குண்டு பல்ப் வெளிச்சத்தில், ஏகப்பட்ட குப்பைகளுக்கு நடுவில் பாட்டியின் கட்டில். இதில் எங்கு தேட. புஸ்ஸென்று சீற போகின்றது என்று பயந்து கொண்டு, குப்பைகளை கலைக்க யோசித்துக் கொண்டிருந்த போது வெளியில் சத்தம். நாங்கள் ஓடிவந்ததை பார்த்து மாடியிலிருந்து அம்மா, பெரியம்மா, குழந்தைகள் எல்லாம் வந்து கூடிவிட்டனர்.

"சித்தப்பா, மாமா" என்று கூவிகொண்டு குழந்தைகள் உள்ளே ஓடிவந்தனர். வேகமாக அவர்களை வெளியே இழுத்துக் கொண்டு போய், "உள்ள பாம்பு" என்றதும் பரபரப்பு பற்றிக் கொண்டது.

"நீ கரட்டான் கூட அடிக்க மாட்ட, நீ என்ன பண்ற உள்ள"

"பாம்பா, சித்தப்பா வா பார்க்கலாம்"

"என்ன பாம்பு"

"மாமா பெரிய பாம்பா, படம் எடுக்குதா"

"டேய் என்ன பாம்புடா, நல்லதா"

"யாருக்குமா தெரியும், நல்ல கருப்பா பெருசா இருந்தது"

வெளியே இருட்டிவிட்டது. பாம்பை அடிப்பது யார் என்பது அடுத்த பிரச்சினை.

பால் கறக்க வந்த பால்காரனை உள்ளே அனுப்பினோம். வீரமாக,

"என்ன நாங்க பாக்காத பாம்பா" என்று உள்ளே நுழைந்தான். கையில் பாம்பை அடிக்க ஒரு பெரிய கம்புடன்.

உள்ளே கடாமுடா சத்தம். வெளியே குழந்தைகள் எல்லாம் படு உற்சாகத்துடனும், பெரியவர்கள் எல்லாம் பயத்துடனும் நின்று கொண்டிருந்தார்கள்.

பட் என்று ஒரு சத்தம். சத்தம் கேட்ட விதத்தைப் பார்த்தால் பாம்பு அதைப் பார்த்து சிரித்துக் கொண்டிருக்கும் போல. உள்ளே இருந்து அந்த பாம்பு நெளிந்து நெளிந்து வந்தது. அவனும் விடாமல் அடித்து கொண்டே வந்தான். ஹீரோவை பார்த்து சுடப்படும் புல்லட் போல ஒன்று கூட அதன் மேல் விழவில்லை.

வெளியே வந்த பாம்பு, பாட்டி வீட்டிற்கும், பெரிய வீட்டிற்கும் நடுவில் இருந்த சந்துக்குள் போய் ஒளிந்து கொண்டது. அதில் ஏகப்பட்ட குப்பைகள், சாமான்கள்.

"வெள்ளிக்கிழம அதுவும் வீட்டுக்கு வந்த பாம்ப ஏன் அடிச்சு விரட்டுரீங்க, விட்டுடுங்க" இது பெரியம்மா

"ஏது வீட்டுக்கு வந்த பாம்பா? ஒரு டம்ப்ளர்ல பால் கொண்டாந்து குடு"

குழந்தைகள் எல்லாம் குதித்துக் கொண்டு பாம்பை பார்க்கும் ஆர்வத்தில் அங்கும் இங்கும் ஓட  அவர்களை நிறுத்தி வைப்பது பெரும் பாடாய் போனது.

பெரிய வீட்டில் இருந்த பாட்டி மெதுவாக வெளியே வந்தார்.

"பாட்டி பாட்டி, உன் வீட்ல பெரிய பாம்பு, இப்பத்தான் வெளிய வந்து ஓடுது"

"பாம்பா" என்றாள் அலட்சியமாக, "அது என்ன ஏழவுக்கு என் சுடுகாட்டுல வந்து எரியுது.என்ன பாம்பு"

"பாட்டிமா அது நல்ல பாம்பு"

"இல்ல அது சாரப்பாம்பு, நல்ல பாம்பு மஞ்சாளா இல்ல இருக்கும்"

"இது கருப்பு நல்ல பாம்பு கருநாகம். பயங்கர விஷம். ஒரு போடு போட்டா உங்க காம்பவுண்ட் தாண்டறதுக்கு முன்னாடி அவ்வளவுதான்"

"கருநாகமா கொஞ்சம் மோசமானதுதான், பாத்து அடி. மேலே பாஞ்சிடும்" என்றாள் பாட்டி.

"உங்க பாட்டிக்கு ஆனாலும் தைரியம்தான். ஏற்கனவே ஒரு அடி விழுந்திடுச்சு, இனி கொல்லாம விட்டா அவ்வளவுதான். எப்படியாவது கொன்னுடுங்க" சொல்லிவிட்டு பால்க்காரனும் போய்விட்டான்.

இரவு மணி எட்டு.

பாம்பு அங்கே இருக்கின்றதா, வெளியே போனதா ஒன்றும் தெரியவில்லை. ஒரு பெரிய எல்.ஈ.டி டார்ச் சந்தை பகலாக்கிக் கொண்டிருந்தது. வீட்டின் முன்னால் முதல் நாள் நடந்த விசேஷத்திற்கு போடப்பட்ட ட்யூப் லைட்டுகள்.

"டபடப" என்று பழைய எஸ்டி பைக்கின் சத்தம். மாமா பையன்.

"என்னடா இங்க கூட்டம்" என்ன என்று கேட்ட படி வந்தார்.

அவர் வந்ததும் கொஞ்சம் பயம் போனது. அவர் அடித்த பாம்புகளை சேர்த்தால் விஷ்ணுபுரம் விஷ்ணுவுக்கே ஒரு மெத்தை செய்துவிடலாம்.

விஷயத்தை சொன்னதும், வெகு ஆர்வமாக சந்திலிருந்த சாமான்களை தூக்கி வெளியே போட ஆரம்பித்தார். மாமாவும் வந்துவிட்டார். நிதானமாக நின்று அட அற்பற்களே என்ன விளையாட்டு என்று பார்த்துவிட்டு, ஏதோ முனங்கிக் கொண்டே உள்ளே போய்விட்டார்.

"டேய் விடுடா, அது போயிருக்கும் ராத்திரி வேளைல போய் அத கலச்சிட்டு இருக்க"

"என்ன விளையாட்றீங்களா, குழந்தைங்க இருக்ற இடம். நடுராத்ரி மறுபடியும் வெளிய வந்திச்சுன்ன என்ன பண்றது.

சந்திலிருந்த பொருட்கள் ஒவ்வொன்றாக வெளியே வந்து விழுந்தது. விழும் பொருட்களில் பாம்பு இருந்தால் என்ன செய்வது என்று வேறு பயம்.

நடுநடுவே பால்க்கரனிடமிருந்து ஸ்டேடஸ் ரெக்வெஸ்ட் வேறு.

"சரசர".

சந்து சுத்தமாக இருந்தது. ஒன்றையும் காணவில்லை. மெதுவாக உள்ளே எட்டி பார்த்தேன். தரையில் ஒரு பொந்து. பெருச்சாளி வேலை. கண்டிப்பாக அதற்குள்தான் போயிருக்கும்.

"டேய் இங்க வா, போய் ஒரு தீப்பந்தம் ரெடி செய்"

"எதுக்கு, டார்ச் இருக்குல்ல"

"உள்ள போன பாம்ப வெளிய கொண்டுவரணும், பந்தத்த கொளுத்தி உள்ள விடுவோம் சூடு தாங்காம வந்துடும்"

"அதுசரி, இது ஒரு வழி. வேற வழி இருந்து அதுவழியா போயிருந்தா."

"தொண தொணன்னு கேள்வியா கேட்காத, கொண்டு வா. பாப்போம்"

மணி பதினொன்று.

"சரி விடுங்க பாம்பு போயிருக்கும்."

"எப்படி தெரியும், இங்கே இருந்ததுன்னா?"

"இருந்ததுன்னா இந்நேரம் வந்திருக்குமே."

"பாம்பு மறுபடியும் வந்தா பாட்டி என்ன பண்ணுவா, அம்மா நீ ஒரு நாள் இங்க பெரிய வீட்டு வாசல் ரூம்ல படுத்துக்க"

"இங்கயா, பாட்டி ராத்திரி ஒன்னுக்கு போய் வச்சா யார் கழுவுறது"

"சரி பின்னாடி பாத்ரூம் பக்கத்துல இருக்ர ரூம்ல படுத்துக்கட்டும்"

"அதுவும் தூரம், படி ஏறணும், அதுவரைக்கும் தாங்காது பாட்டிக்கு, பக்கத்துல சமயக்கட்டு வெற இருக்கு"

"ஏன் ஒரு நாள்ல் என்ன ஆய்டும்"

"டெய்லி இருக்றவங்களுக்குத்தான தெரியும், சும்மா இரண்டு நாள் வந்துட்டு அம்மா, அம்மானு சொல்லிட்டு போய்ட்டா போதுமா"

வார்த்தைகள் பாய ஆரம்பித்தது,

"அண்ணா நீயாவது ஏதாது சொல்லேன், அம்மா உள்ள போய் படுக்கட்டும்"

"ஹூம்"

"நான் போறேன் அங்க என் வீட்லயே போய் செத்து ஒழியறேன். இந்த பாம்பு கடிச்சிதான் நான் போகனும்னு இருந்ததுதான் என்ன செய்ய முடியும், வரட்டும் கொத்தட்டும். மத்தவங்களாவது நிம்மதியா இருக்கட்டும்"

"என்னம்மா பேசற, இது உன் வீடு, உன் புருஷன் கட்டினது. நீ யாரக் கேக்கனும். நீ எங்க வேணும்னாலும் படு, என்ன வேணும்னாலும் பண்ணு"

"அம்மா வீட்டுக்கு வந்தோமா, போனாமான்னு இல்லாம் இது என்ன வேலை, அம்மாவ பாத்துக்க எங்களுக்கும் தெரியும்"

ஒரு பக்கம் இது போய்க் கொண்டிருக்க, அங்கு பந்தம் எரிந்து முடிந்து, கொஞ்சம் பெட்ரோலும் ஊற்றி பார்த்தாகிவிட்டது.

மணி பன்னிரெண்டை நெருங்கிக் கொண்டிருந்தது.

கடைசியில் வேறு வழியின்றி ஒரு பெரிய கடப்பாரையை எடுத்து தோண்ட ஆரம்பித்தார். ராஜாக்கால குகை மாதிரி எங்கெங்கோ போனது அது. கடைசியாக ஒரு வளைவில் இருந்து பாம்பு வெளியே வந்தது.

அது ஒரே செகண்ட் தன் தலையை காட்டிவிட்டு இன்னோரு கிளை வளையில் போய் ஒளிந்து கொண்டது.

 மாமா பையன் கடப்பாரையை கீழே போட்டுவிட்டு வெகு வேகமாக வீட்டிற்குள் போனார். அக்கா என்ன ஆச்சு என்ன என்ன என்று பதறியடித்து ஓடினாள்.

கொஞ்ச நேரம் கழித்து வெளியே வந்த அவர் உடல் முழுவது விபூதிப் பட்டை.

"உள்ள போனது சாதரண நல்ல பாம்பு இல்ல, ரொம்ப பயங்கரமானது. கருநாகம். தாலியை கெட்டியா பிடிச்சுகிட்டு வேண்டிக்க. ஒரு செகண்ட் தப்பினாலும் போச்சு, உன் புருஷன் கதி அவ்வளவுதான்"

"அய்யயோ வேண்டாம்" என்று அவள் அழ ஆரம்பித்தாள்.

"சும்மா கிட, ஆரம்பிச்சாச்சு இனி அடிக்காம விடக்கூடாது. அது மேல ஒரு அடி பட்டாலும் போச்சு, பால்க்காரன் வேற அடிச்சிருக்கான். அது என்ன நல்ல பாத்துட்டு உள்ள போயிருக்கு இனி மிச்சம் வச்சா ஆபத்து"

கடப்பாரையை எடுத்துக் கொண்டு தயாரானார்.

மாமாவின் இன்னொரு பையனும் வந்தான். விஷயத்தை சொன்னது.

"இரு இரு அடிக்க வேண்டாம். நம்ம குருவுக்கு போன் பண்ணுவோம், ஏதாவது சொல்வாறு"

"ம்கும். உனக்கு பாம்பு கடிச்சப்ப போன்ல மந்திரம் சொன்னமாதிரி, பாம்பு காதுகிட்ட போன வை, மந்திரம் சொல்றேன், பாம்பு போய்டும்பாறு. போடா."

"என்னடா நீ பாம்ப கண்டா விடமாட்டியே, இப்ப என்ன குருவ கூப்டு மந்திரம் போடேறேங்கற்" என்றேன்.

அது எல்லாம் விவரம் தெரியாதப்ப, இப்போ அடிக்கறது இல்ல.

தோண்ட தோண்ட அந்த வளை பெரிதாகிக்கொண்டே போனது.
கடைசியில் பாம்பு வெளியே வந்தது, ஒரே ஒரு முறை பெரிய சீறலுடன் படமெடுத்தது. கையகலத்திற்கு மேலாக அதன் படம். பளபளவென கண்கள். ஓங்கி ஒரு அடி. சத்தென்று தலையில் விழுந்தது. அடுத்தடுத்து பட்பட். அடங்கியது,

வெளியே கொண்டு வந்து பாட்டி வீட்டிற்கு முன்னால் போட்டார். நாலு அடிக்கு மேல் நீளம்.

அத்தை "அய்யோ பாவம், வயிறு பெரிசா இருக்கு. சினையா இருக்கோ என்னவோ"?

"இல்ல எங்கயோ நல்ல தின்னுட்டு வந்திருக்கு. இங்க வந்து சாகனும்னு இருக்கு"

அம்மா "டேய் நல்ல பாரு, காத்த குடிச்சிட்டு மறுபடியும் உயிர் வந்துரும்"

மாமா "அத பாட்டுக்கு சூ போன்னா போயிருக்கும், தேவையில்லாம அத போய் அடிச்சு கொன்னுட்டு"

"சித்தப்பா வா தொட்டு பார்க்கலாம்" என்று அனைவரும் வம்பாக இழுத்தனர். குழந்தைகள் அனைவரும் அதை தொட்டு பார்த்து, தூக்கி பார்த்து அனைத்தும் செய்து கொண்டிருந்தனர்.

"மாமா பாம்ப அடிச்சிட்ட இல்ல, போ இனி உனக்கு தலவலிச்சிட்டே இருக்கும். டெய்லி ஜண்டுபாம் தான் தேக்கனும்"

"அப்பா இன்னும் ஒரு வாரத்துக்காவது இது கண்ல இருந்து போகாது, ராத்திரி பாத்ரூம் போகக்கூட பயமா இருக்கும். இதுல அம்மா எப்படி அந்த வீட்ல படுக்க போறாளோ. பெரிய வீட்ல படுக்கலாம்னா அதுவும் முடியாது, வயசான காலத்துல அவங்க என்னதான் பண்ணுவாங்க"

பாம்பு பாட்டி வீட்டின் முன்னால் பரிதபமாக கிடந்தது.

பாட்டி மெதுவாக திண்ணையிலிருந்து இறங்கி வீட்டிற்குள் சென்றாள்.

"என்னம்மா எங்க போற"

"படுக்க போறேன். ரொம்ப நேரம் ஆய்டுச்சே, எல்லாரு படுக்க வேண்டாமா"

:என்னம்மா அடிச்ச பாம்பு இங்கதான் இருக்கு, எடுத்து பொதைக்க கூட இல்ல, நீ பாட்டுக்கு உள்ள போற"

"அதுதான் அடிச்சி கொன்னாச்சில்ல அப்புறம் என்ன. நான் என் இடத்துக்கு போறேன்" என்று கூறிவிட்டு உள்ளே போய லைட்டை அணைத்துவிட்டு படுத்துவிட்டாள்.

நான் பாம்பை பக்கத்தில் போய் தொட்டு பார்க்கலாமா என்று யோசித்துக் கொண்டு நின்று கொண்டிருந்தேன்.

பின்குறிப்பு

கடைசிவரை படித்த பொறுமைசாலிகளுக்கும், நல்லவர்களுக்கும்,

இது நிஜமல்ல கதை.

இது எல்லாம் ஒரு கதையா, கர்மம் என்பவர்களுக்கு

கதை மாதிரியான வஸ்து அல்லது வீட்டில் தனியாக இருப்பதன் விளைவு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக