20 ஜூலை 2013

காபி

காலை எழுந்ததிலிருந்து ஒரே பரபரப்பு.

"இன்னும் டிபன் ரெடி பண்ணலயா?"

"இப்போதான பல் தேய்க்க போறீங்க, நீங்க உள்ள போய் பல்லு தேச்சிட்டே, ஹிண்டு பேப்பர் படிச்சு முடிக்க முன்னாடி, டிபன் என்ன ஒரு கல்யாணத்துக்கே சமச்சி வச்சிடலாம்"

"உனக்கு வரவர எகத்தாளம் ஜாஸ்தியா போய்டுச்சி".

குளித்துவிட்டு வந்தவன் டைனிங் டேபிளில் அமர்ந்தவன் அடுத்து கத்த ஆரம்பித்தான்.

"டிபன் எங்க"

"வர்றேன், வர்றேன்"

அவசர அவசரமாக இட்லியை விழுங்கிவிட்டு, "காபி எங்கே" என்று கத்தினான்.

சோபாவிற்கு வந்தவன், அங்கே இருந்த முந்தைய நாள் காபி டம்பளரை பார்த்தவுடன், அவன் டென்ஷன் தலைக்கு ஏறியது.

"நேத்து காபி சாப்ட டம்ப்ளர எடுத்து போடாம அப்படி என்ன உனக்கு பெரிய வேலை""நான் என்ன சும்மாவ இருக்கேன். பையன ஸ்கூலுக்கு அனுப்பனும், உங்கள ஆபீஸுக்கு அனுப்பனும். நீங்க ஏதாவது பண்றீங்களா? சும்மா கத்தாம இருந்தா போதும், அதுகூட பண்றது இல்ல

ஏன் காபி சாப்ட டம்பளர கொண்டுவந்து கிச்சன் சிங்க்ல போட்டா என்னவாம். உங்கள் என்ன கழுவியா வைக்க சொல்றேன், கொண்டு வந்து போட கூட உங்களுக்கு வலிக்கிது.

வீட்ல ஒரு வேலையும் பண்றது இல்ல. சாப்ட தட்ட அப்டியே வச்சிட்டு போறது, டம்பளர குடிச்ச எடத்துல போட்டுடு போறது. வேல முடிஞ்சு வந்தா, டீவிய போட்டுட்டு பேப்பர் படிக்க வேண்டியது, இல்ல இன்டெர்னெட்ல் போய் உக்காந்துக்க வேண்டியது."

"விடு, உன்னோட சண்ட போட நேரமில்ல இப்போ. புது கம்பெனி, புது வேலை, முதல் நாள். நிம்மதியா போக விடு."

டம்பளரை டீபாயில் வைத்து விட்டு கிளம்பினான்.

பெரிய கட்டிடம். எம். என். சி.

உள்ளே ஒரு பெருமை ஆட,எல்லா பார்மாலிடடிஸும் முடிந்து தன் இடத்தில் சென்று அமர்ந்தான்.

மணி பனிரெண்டு, என்ன செய்வது என்று தெரியவில்லை. தலைவலி ஆரம்பித்தது. இன்னும் காபி வரவில்லையே என்று நினைத்துக் கொண்டு அக்கம் பக்கம் பார்த்துக் கொண்டிருந்தான்.

"என்ன எவனுக்கும் காபி குடிக்ற அக்கறையே இல்லையா" என்று மனதுக்குள் கேட்டபடி, அங்கே வந்த ஆபிஸ் பாயை கூப்பிட்டு கேட்டான்.

"ஏம்பா கம்பெனிலே காபி எல்லாம் தர மாட்டாங்களா"

"நியூ ஜாயினியா சார்"

"ஆமா"

"இருங்க சார் இப்ப வர்றேன்" என்று கூறிவிட்டு சென்றான்.

சிறிது நேரம் கழித்து வந்தவன் கையில் ஒரு வாட்டர் பாட்டில், ஒரு காபி கப், அதோடு ஒரு புத்தகம்.

என்னடா இங்க காபி குடுத்துட்டு கையெழுத்து வாங்குவாங்க போல என்று நினைத்துக் கொண்டான்.

"சார் இந்தாங்க, உங்க வாட்டர் பாட்டில். உங்க கப். "

"கப் எதுக்கு"

"காபிக்கு"

"காபிக்கு கப்பா, ஏன். பிளாஸ்க்ல வந்து ஊத்திட்டு போவாங்களா?"

"சார், காபி எல்லாம் சீட்டுக்கு வராது. நீங்கதான் பேன்ட்ரிக்கு போய் எடுத்துக்கனும்."

"ஏன் பேப்பர் கப் கிடையாதா?"

"எக்கோ ஃப்ரெண்ட்லி சார்."

"பேன்ட்ரில, பால், டிகாக்‌ஷன், ப்ரு, பூஸ்ட், டீ எல்லாம் இருக்கு உங்களுக்கு என்ன வேணுமோ கலந்து குடிச்சிக்கலாம். கப்ப கழுவறதுக்கும், சோப்பு, லிக்விட், ஸ்காட்ச் பிரைட், ப்ரஷ் எல்லாம் இருக்கு. குடிச்சிட்டு கப்ப கழுவி எடுத்துட்டு வந்து உங்க எடத்துல வச்சிக்கலாம். "

"இந்தாங்க உங்க கப்பு, உங்க பாட்டில். அங்கேயே கூலரும் இருக்கு தண்ணி பிடிச்சிக்கங்க."

காபி குடித்துவிட்டு கப்பை கழுவி தன் இடத்தில் வைத்தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக