17 நவம்பர் 2013

ஒரு நதியின் மரணம் - மிஷல் தனினோ

முகம்மது பின் துக்ளக்கில் வரும் ஒரு காட்சி
"உங்களுக்கு தமிழ் தெரியும்ன்னு சரித்திரத்துல இல்லையே"
"உங்கள் சரித்திரம் எல்லாம் பேத்தல்"
"எங்க பசங்க படிக்கின்றதெல்லாம் பேத்தலா"
"அது உங்கள் பிள்ளைகளை பார்த்தாலே தெரியுமே"

சரித்திரம் என்பது அன்றைய தேதிக்கு கிடைத்த ஆதாரங்களைக் கொண்டு புனையப்படுவது. ஒரு விஷயத்தை அறிந்து கொள்ள பல வழிமுறைகள் உண்டு என்பார்கள். நேரில் பார்ப்பது, அனுமானிப்பது என்று பல வழிகள். சரித்திரத்தில் பாதி அனுமானம்தான். கல்வெட்டுகள் மட்டுமே ஒரளவு நம்பகமானது என எண்ணலாம், ஆனால் அக்கல்வெட்டுகள் இன்றைய ஆட்சியாளர்கள் தம் சாதனைகளை அடித்து விடுவது போல இருந்திருந்தால்? புலவர்களின் பாடல்கள் என்பது, இன்றைய சினிமாக்காரர்கள் முதல்வர்களை பற்றி பேசுவதை போல இருந்திருந்தால்? சரித்திரம் என்பது இது போன்று ஒன்றிரண்டு விஷயங்களை கொண்டு அறியப்படுவதில்லையே? அதே போல் முழுமையான ஆதாரங்கள் இல்லை என்பதால் மட்டும் ஒரு விஷயம் நடக்கவில்லை என்றும் கூறமுடியாது.

நமது சரித்திரம் என்பது முழுக்க முழுக்க ஆங்கிலேயர்களால் பல உள் நோக்கங்களை கொண்டு எழுதப்பட்டது. அது இங்குள்ள பலரின் பிழைப்புக்கு வசதியாக இருந்ததால் ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டது.

அன்றைய தேதிக்கு சரித்திரம் உண்மை, நாளை அது மாறலாம். பள்ளியில் அனைவரும் படித்த ஒரு விஷயம் ஆரிய படையெடுப்பு. ஆரியர்கள் கைபர் போல கணவாய் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்தனர் என்பது. பின்னர் படையெடுப்பு ஆரியர் இடப்பெயர்வாகியது. நாளை என்னவாகும் யாருக்கு தெரியும்.

சரஸ்வதி நமது புராணங்களிலும், வேதங்களிலும், இதிகாசங்களிலும் போற்றப்படும் நதி. திரிவேணி சங்கமத்தில் கங்கையுடனும் யமுனையுடனும் கண்ணிற்கு தெரியாமல் கலக்கும் நதி என்று நம்பப்படும் சரஸ்வதியின் சரித்திரத்தை பற்றிய புத்தகம்.


இன்று வரை நமது தோழர்களாலும், பகுத்தறிவாளர்களாலும் விரும்பி நம்பப்படும் ஒரு பொய் ஆரிய படையெடுப்பு. படையெடுப்பு என்று எழுதிவைத்தவர்களே அதை இடப்பெயர்வு என்று கூறலாமா இல்லை ஒரு நட்பு முறை விஜயம் என்று கூறலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் அவர்களுக்கு அதுதான் ஆணிவேர், அதை அசைத்தால் என்ன செய்வது? வசை பொழிவது. அதுதான் முடியும். அவர்களின் ஆதர்சமாக கொள்ளும், அம்பேத்காரே பொய் என்று ஏற்று கொள்ளாத ஒருவிஷயத்தை பற்றி தொங்கிக் கொண்டிருப்பது என்ன பகுத்தறிவோ?

இன்று அப்பொய் மிகப்பெரிய ஆலமரமாக உள்ளது, அதை பக்கம் பக்கமாக வெட்டி எறிந்துள்ளார். சிந்து சமவெளி நாகரீகம் என்பது உண்மையில் சரஸ்வதி நதி நாகரீகம்தான். சிந்து சமவெளி நாகரீகத்தின் முடிவிற்கு காரணம் சரஸ்வதியின் மறைவு. அதன் பின் அது மெதுவாக நகர்ந்து கங்கை கரையில் நிலை பெற்றது என்பதை ஏராளமான சான்றுகளுடன் நிறுவுகின்றார்.

முதலில் சரஸ்வதி நதி ஓடியது என்பதற்கான ஆய்வுகளை விளக்கியுள்ளார். ஹக்கர் நதி என்பதுதான் அன்றைய சரஸ்வதி என்றும், அது இன்றைய கட்ச் பகுதி வரை பாய்ந்துள்ளது என்று கூறுகின்றார். அதற்கு சான்றாக காட்டுவது செயற்கை கோள் புகைப்படங்கள், நதிப்படுகையில் செய்யப்பட்ட ஆய்வுகள், அங்குகிடைத்த நன்னீர் கிளிஞ்சல்கள், இன்றும் அங்கு வற்றாமல் இருக்கும் கிணறுகள், அந்த நீரின் வயது, நீரின் ஐசோடொப்புகளுக்கும் இமயமலையில் உண்டாகும் நீரின் ஐசோடொப்புகளுக்குமான ஒற்றுமை, மக்களிடையே புழங்கிவரும் செவி வழி கதைகள், நமது வேதங்களில் கூறப்படும் பூடகமான பாடல்கள், மகாபாரதத்தில் வரும் நிகழ்ச்சிகள் என ஏராளமான சான்றுகளை காட்டுகின்றார்.

சரஸ்வதியின் படுகை கண்டறியப்பட்டது ஆங்கிலேயர்களின் காலத்தில், ஆப்கானிஸ்தானுக்கு ஒரு சுலப வழியை உண்டாக்க செய்யப்பட்ட ஆய்வுகள் ஒரு மறைந்த நதியை வெளிக் கொண்டு வந்துள்ளது. அங்கு ஆரம்பித்த ஆய்வுகள் இன்று சரஸ்வதி நதி என்னும் நதியை மீண்டும் உயிர்ப்பித்துள்ளது. 

சிந்து சமவெளி நாகரீகம் என்று நாம் கூறுவது உண்மையில் சரஸ்வதி நதி நாகரீகம்தான். சிந்து சமவெளி நாகரீகத்தில் சான்றாக கண்டறியப்பட்ட இடங்களில் பெரும்பான்மையான பகுதிகள் அமைந்திருப்பது, சரஸ்வதி நதி படுகைகளில். அவற்றிற்கிடையிலான ஒற்றுமை, அவர்கள் பயன்படுத்திய அளவுகள், செங்கற்களின் அளவுகள், எடைக்கற்கள், அனைத்தும் ஒத்து போகின்றன. 

நகரங்களின் அமைப்பு, வீட்டில் குளியலறை, கழிவு நீர் வடிகால் வசதி என மிக கச்சிதமாக கட்டப்பட்டுள்ளது. குறிப்பிடதகுந்த விஷயம் அரண்மனை என்று எதுவும் கிடையாது, கோவில்களும் கிடையாது. பிறகு எப்படி நிர்வாகம் சாத்தியம், அதுவும் பல கிலோமீட்டர் தூரத்தில் இருந்த நகரங்களுக்கிடையில் எப்படி ஒரு கச்சிதமான ஒற்றுமை சாத்தியமானது?

சரஸ்வதி வறண்டதால் அந்த நாகரீகம் மெதுவாக முடிவிற்கு வந்தது, அங்கிருந்து மெதுவாக நகர்ந்து கங்கை சமவெளிக்கு வந்து சேர்ந்தது. சரஸ்வதி வறண்டதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றது. ஒன்று கடுமையான வறட்சி, காரணம் அனைத்து கட்டிடங்களும் சுட்ட செங்கற்களால் கட்டப்பட்டவை. அதனால் காடுகள் அழிக்கப்பட்டு மழை குறைந்திருக்கலாம், இரண்டு சிந்து - சரஸ்வதி படுகை முழுவதும் மேடு பள்ளமற்ற சமவெளி. பெரிய பூகம்பத்தால் நதியின் தடம் மாறி ஓடியிருக்கலாம். சரஸ்வதியின் முக்கிய நீர் ஆதரமான நதி, யமுனையுடன் கலந்ததால் சரஸ்வதி வறண்டு ஒரு பாலைவனத்தில் முடிகின்றது.

வேதநாகரீகம் என்பது வெளியிலிருந்து வந்ததல்ல இங்கிருந்ததே என்பதற்கு ஆதாரமாக இதைத்தான் காட்டுகின்றார். ரிக்வேத நாகரீகம் வளர்ந்தது இங்குதான். இல்லை என்பதற்கு காரணமாக கூறப்படும் காரணிகளையும் தர்க்கரீதியாக மறுக்கின்றார். படையெடுப்போ, இடப்பெயர்வோ நடந்திருந்தால் அதற்கான ஆதாரங்கள் கிடைத்திருக்க வேண்டும். அந்த நாகரீகத்திற்கு தொடர்பில்லாத ஏதாவது கிடைத்திருக்க வேண்டும், அப்படி ஏதுமில்லை. அவர்கள் வந்ததாக கூறப்பட்ட வழியிலும் ஏதும் கிடைக்கவில்லை. இங்கிருந்து சென்ற பொருட்கள்தான் உலகின் பல்வேறு இடங்களில் கிடைத்துள்ளனவே தவிர, வெளியிலிருந்து வந்த எதுவும் இங்கு இல்லை.

இவையெல்லாம் ஆசிரியர் சும்மா போகின்ற போக்கில் மேடைப் பேச்சாளர் ரேஞ்சில் அடித்து விடவில்லை. வரைபடங்கள், பல புகைப்படங்கள், அவருக்கு உதவிய பல புத்தகங்கள் என ஏகப்பட்ட ஆதாரங்களை தந்துள்ளார். கூடவே இதற்கு எதிரான கருத்துக்களையும் கூறி, அது ஏன் ஏற்று கொள்ளதக்கதல்ல என்றும் கூறுகின்றார்.

சில கேள்விகள் எழுகின்றன, இந்த காலகட்டத்தில் விந்தியமலைக்கு தெற்கில் என்ன நடந்து கொண்டிருந்தது. யார் இருந்தது? அவர்கள்தான் திராவிடர்கள் எனப்படுவர்களா? இல்லை இவர்கள்தான் அங்கிருந்து நகர்ந்து இங்கு வந்தார்களா? இல்லையென்றால் எப்படி பாரதம் முழுவதும் ஒரே மாதிரியான கலாச்சாரம் சாத்தியமாகும். திராவிடர்களை ஏமாற்றினார்கள் என்பதையெல்லாம் நம்பமுடியவில்லை. ஏனென்றால் அப்படி திராவிடர்கள் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கினார்கள் என்பது உண்மையென்றால், அவர்களை அவ்வளவு சுலபமாக ஏமாற்றிவிட முடியுமா என்ன? இது அவர்களை முட்டாள்கள் என்று கூறிக்கொள்வதற்கு சமம். 

அனைவரும் ஒன்றாக இருந்து வெவ்வேறு காலகட்டத்தில் பிரிந்து பிரிந்து சென்று தமக்கென ஒரு கலாச்சாரத்தை வளர்த்திருக்க வேண்டும், புவியியல் தன்மைக்கு ஏற்ப அவர்களின் உடை, உணவு பழக்கங்களும் மாறியிருக்க வேண்டும் என்றுதான் முடிவிற்கு வர தோன்றுகின்றது.

இன்று பல விஷயங்களுக்கு ஆதாரமே இல்லாமல் இருக்கலாம், இன்னும் பல ஆய்வுகள் தேவைப்படலாம், எத்தனை ஆண்டுகள் ஆகுமோ தெரியாது. அதுவரை அவரவர் மனதிற்கு எது பிடித்தமானதோ, அவரவர் பிழைப்பிற்கு எது தேவையோ, அவரவர் அரசியலுக்கு எது சாதகமானதோ அதை நம்ப வேண்டியதுதான். அதுவரை கிடைத்ததை வைத்து வெட்டிச் சண்டை போடலாம்.

ஆங்கிலத்தில் The Lost River - On the Trial of the Sarasvathi என்ற பெயரில் மிஷல் தனினோ என்னும் பிரெஞ்சு ஆசிரியரால் எழுதப்பட்டது. தமிழில் ஒரு நதியின் மரணம் என்ற பெயரில் மொழி பெயர்க்கப் பட்டு கிழக்கு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.  மிக நேர்த்தியான மொழிபெயர்ப்பு. புத்தகம் முழுக்க ஏகப்பட்ட படங்கள், வரைபடங்களை சான்றாக அளித்துள்ளார். இறுதியில் ஏகப்பட்ட ரெபரன்ஸ் புத்தகங்கள் வேறு. சில இடங்களில் பாடப்புத்தகம் மாதிரி இருந்தாலும், பரிட்ச்சை வைத்து கேள்வி கேட்கமாட்டார்கள் என்பதால் படிக்க முடிகின்றது.

ஆசிரியர் வெளிநாட்டில் பிறந்தாலும், இந்திய குடியுரிமை பெற்று கோயம்பத்தூரில் வாழ்ந்து வருகின்றார். நீலகிரி மலைத்தொடரின் காடுகள் அழிக்கப்படுவதை எதிர்த்து போராட்டங்கள் நடத்தியிருக்கின்றார் என்று விக்கியார் கூறுகின்றார். இப்புத்தகத்தை பலர் எதிர்த்துள்ளனர், காரணம் முதலில் பலரின் பிழைப்பில் கை வைத்துள்ளது. இப்புத்தகம் கூறியுள்ளதை தர்க்க ரீதியாக மறுப்பதை விட்டு விட்டு, ஆசிரியர், இந்துத்துவா கூட்டத்தை சேர்ந்தவர், அவர் அவர்களுடன் சேர்ந்துகொண்டுள்ளார் என்றுதான் தூற்ற முடிகின்றது. இக்கூட்டத்தால் எதைத்தான் ஆதாரத்துடன் நிறுவ முடிந்தது?

இப்புத்தகத்தை பற்றி மேலும் சில கட்டுரைகள்

அரவிந்தன் நீலகண்டன் - தமிழ் ஹிந்துவில்

B.R. மகாதேவன் - தமிழ் பேப்பரில்  பின்னூட்டங்களை தவற விட வேண்டாம். பின் நல்ல நகைச்சுவையை இழந்துவிடுவீர்கள். 

கிழக்கில் கிடைக்கின்றது.

இதை பதிவிட்டு விட்டு, தமில் ஹிந்துவிற்கு சென்றால், அங்கு அரவிந்தன் நீலகண்டனின் ஒரு கட்டுரை. இதற்கு தொடர்பாக இருந்தது. அதன் சுட்டி

http://www.tamilhindu.com/2013/11/murugan/

கார்த்திகை திருநாள் வாழ்த்துக்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக