03 நவம்பர் 2013

தீபாவளி

அனைவரும் தீபாவளியை பற்றி பல மலரும் நினைவுகளை எழுதி வைத்துள்ளனர். நானும் என் பங்கிற்கு

தீபாவளி என்றால் காலையில் மூன்று, நான்கு மணிக்கு நானும் என் தங்கையும் எழுந்து எண்ணை தேய்த்து குளித்துவிட்டு, பழைய ட்ராயர், பேண்டை போட்டுக் கொண்டு (பழைய உடைதான்), அப்பா கோவிலிருந்து வரும் வரை தூங்கி வழிந்து கொண்டிருப்போம். அப்பா கோவிலில் உற்சவருக்கு அபிஷேகம் செய்து வைத்துவிட்டு வந்து, பூஜையை முடித்து புது ட்ரெஸ்ஸை தருவார். அம்மா மூன்று நாள் முன்பே, லட்டு, மிக்ஸர், காராசேவு எல்லாம் செய்து வைத்திருப்பார்கள். முதல் நாள் உக்காரை தயாராகும்.பட்டாசு நிறைய கிடைக்கும். பெரியப்பாவிற்கு ரயில்வே வேலை என்பதால் சீட்டு கட்டி வாங்குவார். கார்த்திகை வரை தாங்கும். சில சமயம் இரண்டு மூன்று வருடம் வரை தாங்கும். 

புது ட்ரெஸ்ஸை போட்டுக் கொண்டு, பட்டாசு வெடித்து முடித்து வந்தால். பஜ்ஜி, வெள்ளையப்பம் சூடாக. பின் கோவிலுக்கு ஒரு விசிட். 

வந்து ஒரு தூக்கம். பிறகு இட்லி, பஜ்ஜிக்கு அரைத்த சட்னியுடன். 

பிறகு மறுபடியும் வெடி. விதவிதமான ஆராய்ச்சி வெடியை வைத்து. தேங்காய் சிரட்டையில், பாட்டிலில், பக்கத்து வீட்டு சுவர் விரிசலில். மாடியில் அமர்ந்து கொண்டு ஒவ்வொரு வெடியாய் கொளுத்தி கொளுத்தி கீழே எறிவது நல்ல பொழுது போக்கு. அப்பாவிற்கு தனியாக கொஞ்சம் வைத்துவிட வேண்டும். அவர் மதியம் கோவிலுக்கு போய்விட்டு வந்து அதை வெடித்து தூங்குபவர்களை எழுப்புவது வழக்கம். தேங்காய் சிரட்டையில் வெடி வெடிப்பதை கற்று கொடுத்து, ஆராய்ச்சிக்கி தூண்டியது அவர்தான்.

இன்று...........

என்னவோ அந்த உற்சாகம் எல்லாம் போய்விட்டது. ஏழு மணிக்கு எழுந்து குளித்து, எதையோ சாப்பிட்டு, மற்றுமொரு விடுமுறை நாளாக போய்விட்டது.

என்று அனைவரையும் போல எழுத ஆசைதான். 

ஆனால் வழக்கம் போலவே இந்த வருடமும் அதே போல் தீபாவளி கொண்டாடி முடித்தாகிவிட்டது எந்த வித மாற்றமின்றி.  என்ன பட்டாசுதான் 400க்கு ஒரு சின்ன பையில் போட்டு கொடுத்தனர். கொஞ்சத்தை வெடித்துவிட்டு, அப்பாவிற்காக மிச்சம் வைத்தேன். என்ன தங்கை தன் பெண்ணுடன் சென்னையிலும், நான் என் பெண்ணுடன் இங்கும் கொண்டாடி விட்டோம். புதிதாக சேர்ந்தது, போனில் வரும் வாழ்த்துக்களும், போன் செய்து வாழ்த்தவில்லை என்ற வருத்தங்களும்

அப்பா வழக்கம் போல மதியம் தூங்கிய என்னை எழுப்பிவிட்டார். கொல்லைப் புறம் முழுவதும் தேங்காய சிதறல்கள்.

அடுத்த வருடம் என்னய்யா எழுதுவது. யோசிப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக