22 மார்ச் 2014

பள்ளிகொண்டபுரம் - நீல பதமநாபன்

திருவனந்தபுரத்தை மையமாக வைத்து நீல.பத்மநாபன் எழுதிய கதை.

அனந்தன் நாயரின் இரண்டு தினங்கள்தான் நாவல். பத்மநாபன் பள்ளிகொண்டுள்ள கோவிலில் ஆரம்பிக்கும் கதை, அனந்தன் நாயரின் வீட்டில் முடிகின்றது. அனந்தன் நாயரின் ஐம்பதாவது பிறந்தநாள் காலையில் ஆரம்பிக்கும் கதை அவரின் மரணத்தில் முடிகின்றது. அடுத்த இரண்டு நாட்களும் அவரது நினைவில் சுழன்றடிக்கும் அவரது வாழ்க்கை சூறாவளிதான் கதை. மிகச்சாதரண கதையாக போயிருக்க வேண்டிய கதை, அந்த நகருடன் கொண்ட பிணைப்பினால் ஒரு நல்ல கதையாக உருவெடுத்துள்ளது.

அனந்தன் நாயரின் மனைவி கார்த்தியாயனி, இரண்டு குழந்தைகளை விட்டுவிட்டு வேறொருவருடன் ஓடிவிடுகின்றாள். அவளின் நினைவை ஒதுக்க முடியாமல் "மருந்தை குடிக்கும் போது குரங்கை நினைக்ககூடாது" கதையாய் அவளை மறக்க முயற்சி செய்கின்றார். 

ஒரு மனிதனுக்கு தான் செய்வது என்பது என்றும் தவறாக தோன்றாது, தோன்றுவது வெகு அபூர்வம். அதோடு அவன் செய்யும் செயல் மற்றவரிடம் வேறுபட்டால், மற்றவர்களை விட ஒரு படி மேலானாதாக தோன்றினால் கேட்கவே வேண்டாம். அனந்தன் நாயருக்கு அவரின் மனைவி அவரை விட்டு ஓடிய பிறகு தனியாக வாழ்ந்து அவரின் மக்களை வளர்த்தது ஒரு பெருமையாகவும், அதன் காரணமாகவே அவருக்கு நடக்கு எதிர்மறை நிகழ்ச்சிகள் அனைத்தும் நியாயமற்றவையாகவும் தோன்றுகின்றது.


அவர் மனைவியை கண்டு ஆசைப்படும் பெரியமனிதரால் அலுவலகத்தில் பதவி உயர்வு பெறும் அவருக்கு அதன் பின்னால் இருக்கும் நோக்கத்தை தெரிந்தும் அதை மறுக்க முடியவில்லை. கோழைத்தனம் என்பதுடன், அவரின் நோக்கத்தை மறைமுகமாக அனுமதித்து, ஊக்குவித்தார் என்பதும், மனைவி ஓடிப்போனதும், அவர் கொஞ்ச கொஞ்சமாக அவளை அங்கு நகர்த்தி சென்று அவளுக்கு அதை விட வேறு வழியில்லாதபடி செய்துள்ளார் என்பதும் முகத்திலறையும் உண்மை. 

மகள் ஒரு வழியிலும், மகன் தன் அம்மாவுடன் சேர்ந்து கொண்டு ஒரு வழியுலும் செல்லுவதை கண்டு மனம் கலங்கி நிற்கும் அவர், மேற்கொண்டு அக்கேள்விகளுக்கு பதில் தேவையில்லாத இடத்திற்கு போகின்றார். கதை முடிகின்றது.

கதையில் உயிருள்ள மற்றுமொரு ஜீவன் திருவனந்தபுரம். ஒவ்வொரு இடத்தையும் நிதானமாக வர்ணனை செய்கின்றார், அதன் வழியே அவரது கதையும் செல்கின்றது. கதையின் வழியே பல செய்திகள் சொல்லப்படுகின்றன. கேரள நாட்டின் மருக்கள் தாயம், அதனால பாதிப்படைந்தவர்கள், ஜாதி முறைகள், கோவிலின் அமைப்பு, பத்மநாபதாசனாக இருக்கும் ராஜ பரம்பரையின் தேய்வு, கேரளாவில் நன்கு காலூன்றியிருக்கும் அரசியல்.

ஒரு விஷயத்தை பார்க்கும் போது, கேள்விப்படும் போது இயல்பாக அனைவருக்கும் தன்னை அவ்விடத்தில் பொருத்தி பார்க்க தோன்றும், இல்லை அந்நிகழ்வை, இடத்தை தன்னுடன் இணைத்து நமது அனுபவத்தை அசை போட வைக்கும். இதைப் படிக்கும் போதே, பலருக்கு திருவனந்த புரம் சென்ற நினைவு வரலாம், இப்புத்தகத்தை படிக்கும் நினைவு வரலாம். அது போல அனந்தன் நாயர் பார்க்கும் ஒவ்வொன்றிலும் தன்னை கண்டு, தன்னைப் பற்றி எண்ணி மாய்ந்து போகின்றார்.

கதையை ஒரே மூச்சில் எல்லாம் என்னால் படிக்க முடியவில்லை. கொஞ்சம் ஆயாசம் தரும் நடை. கொஞ்சம் நிதானமாகவே படிக்க வேண்டிய எழுத்து. வழக்கமாக ஒரே மூச்சில் படித்துவிட்டு கீழே வைக்கும் வழக்கமுடைய என்னை, தொடர்க்தை போல் பல நாட்களாக படிக்க வைத்துவிட்டது. கதையை சுவாரஸ்யமாக்குவது நகரம்தான். அதை உருவி எடுத்து போட்டுவிட்டால், படிப்பது என்பது சாத்தியமில்லை. அவார்டு படம் பார்ப்பது போன்ற நினைவுதான், என்ன இந்தப்படத்தில் விஷுவல்கள் அபாரமாக உள்ளது.

படு தீவிர, பயங்கரவாத இலக்கிய பிரியர்களுக்கு மிகவும் பிடிக்கலாம். எனக்கெல்லாம் கொஞ்சம் சுவாரஸ்யம் இருக்க வேண்டும், எனக்கு அது கிடைக்கவில்லை. என்னை பொருத்த வரை ஒரு சுமாரான நாவல்.ஒரு முறை படிக்கலாம், சரியாக படிக்கவில்லை என்றால் இரண்டாம் முறை படிக்கலாம்.

காலச்சுவடு பதிப்பகம்.- 225. அகநாழிகையில் கிடைக்கின்றது

4 கருத்துகள்:

  1. படித்திருக்கிறேன், என்னிடம் இருக்கிறது! கடைசி பாராவுக்கு முதல் பாரா - முற்றிலும் உண்மை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பரிட்ச்சைக்கு படிக்கும் போது தவிர வேறு எப்போதும் படிக்கும் போது தூங்கியதில்லை. பாட புத்தகங்களுக்கு பிறகு எனக்கு தூக்கத்தை தந்த புத்தகம் இதுதான். நல்ல புத்தகம்தான், கொஞ்சம் சோகையான புத்தகம்.

      நீக்கு
  2. வணக்கம்...

    வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

    அறிமுகப்படுத்தியவர் : சீனு என்ற ஸ்ரீனிவாசன் அவர்கள்

    அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : திடங்கொண்டு போராடு

    வலைச்சர தள இணைப்பு : திடங்கொண்டு போராடு என்னும் நானும் பதிவுலகமும் - 1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி தனபாலன்

      சீனு அவர்கள் கூறியது போல கஷ்டப்பட்டு அந்த Followers கண்டுபிடித்து சேர்த்து விட்டேன்.

      நீக்கு