23 அக்டோபர் 2014

சிங்கமய்யங்கார் பேரன் - சுஜாதா

கரும்பு தின்ன கூலியா என்று கேட்பார்கள், சாப்பிடவும் கூலி தருவதும் உண்டு என்று தெரிந்த காரணத்தால் அதை மேற்கோள் காட்ட முடியாமல் போனதற்கு மன்னிக்கவும். உங்களுக்கு தெரிந்த நல்ல பழ மொழியை பயன்படுத்தி கொள்ளவும். ..... போல, புத்தகத்தையும் தந்து அதற்கு ஒரு மதிப்புரை(!!!)யும் எழுத சொன்னால் வேண்டாம் என்றா சொல்வார்கள். அதைத் தானே இங்கு செய்து கொண்டிருக்கின்றேன் என்று முயற்சி செய்தேன். உடனே புத்தகமும் கிடைத்தது. மதிப்புரை.காமில் வெளியான எனது புத்தகத்தை பற்றிய எனது கருத்துக்கள். 


சினிமா காலத்திற்கு முன்பு மக்களை மகிழ்வித்தது நாடகங்களே. நாடக நடிகர்களைக் கடவுளாகப் பார்த்த மக்களைக் கொண்டது நம் தமிழகம். பெரும்பாலான நாடகங்கள் புராணக் கதைகளை அடிப்படையாகக் கொண்டவை, மெதுவாக சமூகக் கதைகள் உள்ளே வர ஆரம்பித்தன. திராவிட இயக்கங்களின் தாக்கம் அதை மேலும் வளரச் செய்தது. புராணங்கள் மூலம் பக்திக் கண்ணீரை பெருக்கெடுக்க வைக்கும் நாடகங்கள், குடும்ப, சமூகக் கதைகள் மூலம் சோகக் கண்ணீரை பெருக்கெடுக்க வைத்த நாடகங்கள், உள்ளத்தைக் கொதிப்படைய வைத்து வியர்வையைப் பெருக்கும் அரசியல் நாடகங்கள் என்று இருந்ததை மாற்றி, நக்கலும் கிண்டலுமாக மக்களை அடைந்தவர் எம். ஆர். ராதா. அந்த வகையில் சினிமாவின் வெற்றிக்கு பின்னும் நாடக உலகில் வெற்றி பெற்றவர் ராதா.


அதன் பின்னர் அத்தகைய வெற்றியை கண்டவர் சோ. சோவின் சிறப்பு நாடக எழுத்தாளரும் அவர்தான். சோவின் நாடகங்கள் அந்தக் காலத்தை ஒட்டியவை, நாடகத்தை ரசிக்க அக்கால கட்டத்தைப் பற்றிக் கொஞ்சமாவது தெரிந்திருக்க வேண்டும். நாடகம் என்றவுடன் இவர்களைத் தவிர மற்றவர்கள் பட்டென்று நினைவில் வரமாட்டார்கள். காரணம் நாடகத்தை அழகாகக் கையாண்டவர்கள் மிகவும் குறைவு. அப்படி குறிப்பிடத்தகுந்த நாடக ஆசிரியர்கள் இந்திரா பார்த்தசாரதி, ஜெயமோகன், சுஜாதா.


சுஜாதாவின் தனிச்சிறப்பு சுருங்க சொல்லி விளங்க வைத்தல். அதோடு முக்கியமானது அவரது நகைச்சுவை உணர்வு. சாதரண, சராசரி மனிதர்கள் பேசும்போது என்ன விதமான நகைச்சுவை வந்து விழுமோ அதுவே அவரது நகைச்சுவை. சராசரி மனிதர்கள் என்னும் போது, நகைச்சுவை உணர்வு இருக்கும் ஆசாமிகள் என்று அர்த்தம் கொள்க.
சுஜாதா பல நாடகங்கள் எழுதியிருக்கின்றார். இவர்களின் நாடகங்கள் மற்றவர்களால் பல முறை மேடையேற்றப்பட்டு வரவேற்பைப் பெற்றவை. பல பூர்ணம் விஸ்வநாதனால் மேடையேற்றப்பட்டுள்ளன. அதே போல் அவரது நாடகங்களை அதிகம் மேடையேற்றிய மற்றொருவர் பாரதி மணி. சமீபத்தில் கூட பாரதி மணி மேடையேற்றிய சுஜாதாவின் “கடவுள் வந்திருந்தார்” நல்ல வரவேற்பைப் பெற்றது.
“சிங்கமய்யங்கார் பேரன்” பூர்ணம் விஸ்வநாதனுக்காக, தேசிய ஒருமைப்பாட்டு விழாவிற்காக எழுதித் தந்த நாடகம்.
ஐயங்கார் பையன், பஞ்சாபி பெண். காதலித்துப் பதிவுத் திருமணம் செய்துகொண்டு வரும் நாளில் கதை ஆரம்பிக்கின்றது. ஐயங்காரப்பாவும், சிங்கப்பாவும் துரத்திவிட, குடவாசல் ஐயங்கார் பையன் சிக்கன் டிக்கா சாப்பிட்டுக் கொண்டு, கிழிந்த பேண்டுடன், மூஸிபத், கியா என்று பேசிக்கொண்டு ஆட்டோ ஓட்ட, பஞ்சாபிப் பெண், விலை உசர்றதாம், வாய்ண்டு வந்தீங்களா என்று பேசிக் கொண்டு சிக்கன் சமைத்து வருகின்றாள். பேரன் பிறந்து தாத்தாக்களை சேர்த்து வைக்கின்றான்.

கதையை படிக்க வைப்பது சுஜாதாவின் நகைச்சுவை வசனங்கள்தான்.
“கடுப்ப கிளப்பாதே” “கடுப்புன்னா குளக்கட்டதானே”
“யாரிந்த ரிஷி” “ரிஷியில்ல சிங்” “பஞ்சாப்ல இருந்தா” “பின்ன சிங் தஞ்சாவூர்லயா இருப்பான்”
கதாநாயகனும், நாயகியும் தனிக்குடித்தனம் போகும் வரை இருக்கும் கலகலப்பு, தனிக்குடித்தன சோகத்தில் காணாமல் போகின்றது.. கிளைமாக்ஸ் எல்லாம் அரதப் பழசு, எளிதில் யூகிக்கமுடியும். முதல்பாதி பின்பாதியின் எதிர்ப்பதம். சுஷ்மா ரகுவின் வீட்டிற்கு வரும்போது நடக்கும் கலாட்டாக்கள் படு சுவாரஸ்யம். ஏன் ஐயங்கார், ஐயர் ஏனில்லை என்று தோன்றலாம். காரணம் சுஜாதா ஒரு ஐயங்கார், வேறுவிதமாக எண்ண வேண்டாம். சொந்த ஜாதியை கிண்டலடிக்கத்தான் இங்கு உரிமையுண்டு. வேறு ஜாதி பற்றி எழுதினால் என்னவாகும் என்று அவருக்கு நன்றாக தெரியும். அந்த உரிமையை தாரளமாகப் பயன்படுத்தியிருக்கின்றார்.
காட்சிகள் நாடகத்தனமாக இருக்கின்றது என்று கதையாக இருந்தால் கூறலாம், நாடகம் என்பதால் என்ன சொல்வது என்று தெரியவில்லை.
தேசிய ஒருமைப்பாடு நாடகம் என்பதால் கடைசியில் கருத்து எல்லாம் வருகின்றது. படித்து விடுங்கள்.
குறுகியகாலத்தில் எழுதப்பட்ட நாடகம் என்கின்றார் பூர்ணம். இந்நாடகத்தை எழுத சுஜாதா மூன்று மணி நேரத்திற்கு மேல் எடுத்து கொண்டிருந்தால்தான் அதிசயம்.
இரண்டாவது நாடகம் சேகர்.
ஆத்மா, நித்யா அவரது அனைத்து விஞ்ஞானச் சிறுகதைகளிலும் வரும் கணவன் மனைவி. சேகர் – இப்பெயரும் அவருக்கு அதிகம் பிடிக்கும் போல. கதைகளின் உள்ளே வரும் கதையின் நாயகன் பெயர் பெரும்பாலும் சேகர், மற்றுமொரு கதையில் வரும் கம்ப்யூட்டரின் பெயர் சேகர். இக்கதையின் ஆத்மா தயாரிக்கும் ஒரு ரோபோ சேகர். ரகசியமாகத் தயாரித்து வீட்டிற்கு அழைத்து வரும் சேகரின் அட்டகாசங்கள்தான் நாடகம். இதைப் பற்றிச் சொல்வதற்கு அதிகமில்லை. எந்திரன் படம் பார்த்தவர்களுக்கு இது பழையது. எந்திரனின் மூலம். முடிவு மறுபடியும் நாடகத்திற்கு ஏற்றது. எப்போதும் எங்கேயும் உண்மை என்பது ஆபத்தானது. கொஞ்சம் அங்கங்கு பொய்யும் தேவை. எப்போது மெஷின்கள் பொய் சொல்ல கற்றுக் கொள்கின்றதோ அப்போது மட்டுமே அவை நம்முடன் முற்றிலும் கலக்க முடியும்.அதுவே நாடகத்தின் முடிவு.
நாடகங்களில் சுஜாதாவின் முக்கிய பலமான அம்சமாக எனக்கு தெரிவது அவரது அபாரமான நகைச்சுவை உணர்வு. சோ, எம்.ஆர்.ராதா போன்றவர்களின் நாடகங்களில் இருப்பது நக்கலும், நையாண்டியும். அரசியல் கேலி. எஸ்.வி.சேகர் நாடகங்களில் இருப்பது நகைச்சுவை துணுக்குகள். க்ரேஸி மோகன் அதிகம் கையாள்வது வார்த்தை விளையாட்டு, குழப்ப காமெடி. இயல்பான நகைச்சுவை என்பது இதில் கிடையாது.அந்த இடத்தில்தான் சுஜாதா ஜெயிக்கின்றார்.
சுஜாதா பிரியர்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும். அவருக்கு மட்டுமே அப்படிபட்ட வாசகர்கள் கிடைத்துள்ளனர் என்று கூறமுடியும்.
கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இங்கே வாங்கலாம். தொலைபேசியிலும் வாங்கலாம் - டயல் ஃபார் புக்ஸ் 94459 01234

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக