27 பிப்ரவரி 2014

ஆழி சூழ் உலகு - ஜோடி குரூஸ்

கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல், எப்போதோ பள்ளியில் படித்தது.

மீனவர்களுக்கும் கடலுக்கும் இடையிலான உறவை அழுத்தமாக சொல்லும் கதை எதையும் படித்ததில்லை. முதலில் கடற்கரை பற்றிய கதைகளே படித்ததில்லை. பா. ராகவனின் அலை உறங்கும் கடல், ராமேஸ்வரத்தை மையமாக கொண்ட கதை என்றாலும், அதில் மீனவர்களை பற்றி ஒன்றிரண்டு வார்த்தைகளே.

கடல் என்றால் அலுக்காத ஒரு காட்சி பொருள் என்றுதான் பல நாட்களாக என் எண்ணம், அதை மாற்றியது சுனாமி. அந்த அலைகளுக்கு பின்னால் ஒரு பெரிய சக்தி அமைதியாக உள்ளது என்பது தெரியவந்த பின் அதைக் காணும் போதெல்லாம் ஒரு சிறிய பயம் தோன்றும். சுனாமியின் போது துணிந்து இறங்கி பலரை காப்பாற்றியது மீனவர்கள், அதில் அதிகம் பாதிப்படைந்ததும் அவர்கள்தான். ஆனால் வெகுவிரைவில் அதிலிருந்து மீண்டு வந்துவிட்டனர்.

இடிந்தகரையில் பல ஆண்டுகளாக போராடிவரும் மீனவர்களை கண்டால் எனக்கு வியப்புதான். அவர்களின் தலைவர்களின் நோக்கம், அவர்களின் செயலில் எனக்கு சந்தேகம் இருந்தாலும், இப்பரதவர்களின் கட்டுப்பாடு ஆச்சர்யமளிக்கின்றது. அதுமாதிரியான கட்டுப்பாடு எப்படி வந்தது என்ற கேள்விக்கு விடை தருகின்றது இப்புத்தகம். வங்கக்கடலில் பரந்துள்ள மீனவர்களை சேர்த்துக் கட்டுவது கத்தோலிக்கம். சவேரியாரியால் மதம் மாற்றப்பட்டவர்கள். நன்றிக்காக மதம் மாறியவர்கள். உள்ளூர் மக்களுடன் ஏற்பட்ட போரில் தங்களுக்கு உதவி செய்த போர்ச்சுகீசியர்களுக்காக மதம் மாறினார்கள். . தங்களுக்கு போரில் உதவி செய்தவர்களுக்கு நன்றியாக  மதம் மாறினாலும் அவர்களின் தாய் மதத்தின் தொடர்ச்சியை விடாதவர்கள். பின்னாளில் சவேரியாரால் முழுவதும் மாறியவர்கள். அவர்களின் வாழ்க்கையை பற்றிய ஒரு புத்தகம். பதிவும் கொஞ்சம் பெரியது, பெரிய நாவலில்லையா!!!!

12 பிப்ரவரி 2014

ஈராறு கால்கொண்டெழும் புரவி - ஜெயமோகன்

ஜெயமோகனின் மற்றுமொரு நாகர்கோவில் குறுநாவல். ஈராறு கால்கொண்டெழும் புரவி. சித்தர் பாடல்கள், பட்டினத்தார் பாடல்கள் தெரிந்தவர்களுக்கான கதை. பாதிக்கு மேல் ஒன்றும் புரிய வில்லை. குறிப்பாக கடைசி பகுதி, புரிந்தவர்கள் மறக்காமல் இங்கு வந்து என்ன என்று தெரிவிக்கவும். தன்யனாவேன்.

இது போன்ற கதைகள் போரடித்துவிடும், இது அவ்வளவாக போரடிக்கவில்லை. காரணம் அவரின் நடை, ஊடாடும் நகைச்சுவை. மதுரை பக்கத்துக்காரன் என்றாலும், அம்மா வழி தமிழான திருநவேலி தமிழும் கொஞ்சம் பழக்கம், அதனாலோ என்னவோ நாகர்கோவில் தமிழும் பிடித்துவிட்டது. கதையை நான் முழுக்க படித்ததற்கு காரணம் அத்தமிழ்தான்.

07 பிப்ரவரி 2014

கன்னிநிலம் - ஜெயமோகன்

வழக்கமாக ஒவ்வொரு எழுத்தாளர்களுக்கும் ஒவ்வொருவிதமான எழுத்துக்களே கை கூடி வரும். அவர்களின் ஏரியா தாண்டினால் சொதப்பிவிடும். ஆனால் ஜெயமோகனுக்கு எல்லா வகை எழுத்தும் அட்டகாசமாக வருகின்றது.

வெள்ளிக்கிழமை வேலை செய்தால் உடலுக்கு நல்லதில்லை என்பதால், இவர் தளத்தை மேய்ந்து கொண்டிருந்தேன். ஏகப்பட்டதை எழுதி குவித்திருக்கின்றார், மூடுக்கு தகுந்தமாதிரி ஒன்றிலிருந்து ஒன்றாக தாவுவது வழக்கம். இன்று இக்கதை. ஆன்லைனில் படிப்பது அவ்வளவாக பிடிக்காது, ஆனால் வேறுவழியில்லை. சமீபத்தில் இப்படி ஒரு விறுவிறுப்பான கதையை படிக்கவில்லை. 

வடகிழக்கு மாநிலத்தில் ஏதோ ஒரு மூலையில், பர்மா எல்லையில் இருக்கும் ஒரு ராணுவ முகாமில் தொடங்கும் கதை, யாருமற்ற நிலத்தில் முடிவடைகின்றது. ராணுவ லெஃப்டினெட் நெல்லையப்பன், காட்டிற்குள் ஒரு போராளி பெண்ணை கைது செய்கின்றான். அவள் மேல் கொண்ட காதலால், காட்டிற்கு அலைந்து, துரோகியாகி, மீண்டும் அவளை அடைகின்றான்.

கதையை மூன்றாக பிரிக்கலாம், முதல் பகுதி ஆக்‌ஷன், இரண்டாம் பகுதி ரொமாண்டிக், கடைசி பகுதி ட்ரமாட்டிக்.