25 ஜூன் 2014

வெண்முரசு : முதற்கனல் - ஜெயமோகன்


முதற்கனல் புத்தகம் வந்து பல மாதம் ஆகிவிட்டது. இருந்தும் தொடர்ச்சியாகப் படிக்க முடியவில்லை. காரணம் மற்றுமொரு புதுவரவு. நேரம் கிடைத்ததும் இரண்டு முறை படித்து விட்டேன். தினமும் ஆன்லைனில் படித்தாலும் எனக்கு அது அந்தளவிற்கு பிடித்தமானதாக இல்லை, படித்தவுடன் மறந்துவிடும். பலருக்கு அதுதான் பிடித்திருக்கின்றது போல, படித்துவிட்டு நாளெல்லாம் அதைப்  பற்றி நினைத்து கொண்டிருக்க வசதியாக இருக்கின்றது என்கின்றார்கள், ஆனால் எனக்கு அலுவலகம், குடும்பம் என்று இருப்பதால் அதற்கும் கொஞ்சம் நினைவை தர வேண்டியிருக்கின்றது. முழுப்புத்தகமாக கையில் வைத்து படிப்பதுதான் எனக்கு திருப்திதரக்கூடியது. அதைப் பற்றி எழுதுவதற்கு இன்னும் அதிக நேரம் பிடித்துவிட்டது. எதை விட்டு எதைப் பற்றி எழுத.

மகாபாரதம். 

இல்லாதது எதுவுமில்லை என்று அனைத்தையும் கொண்ட இதிகாசம். இதிகாசம் என்றால் இது நடந்தது என்று பொருளாம். மேலோட்டமாக பார்த்தால் மகாபாரதம் முழுவதும் அரசியல் சதுரங்கமாகத்தான் தோன்றும். அரசியல் சதிகள், போர்கள். ஆனால் மகாபாரதம் முழுவதும் பேசப்படுவது தர்மம். ஜெயமோகனின் மகாபாரதம் என்பதால் அறம் என்றே சொல்வோம். 

எது தர்மம், எவ்விடத்தில் எது தர்மம் என்று பல விவாதங்களை கிளப்பி அதற்கு விடையை கூறிச்செல்லும். இது ஒரு பரிமாணம் என்றால் மறுபுரம் பல தரப்பட்ட பாத்திரங்களை படைத்து அவற்றை மோதவிட்டு பார்க்கும் ஒரு பரிமாணம். கருப்பு வெள்ளை போல பாத்திரங்கள் தட்டையானவை அல்ல. சராசரி மனித உணர்ச்சிகளின் கலவை. நம்மை போன்ற மனிதர்கள்தான். இதுதான் மகாபாரதத்தை பலருக்கும் நெருக்கமானதாக காட்டுகின்றது. பாத்திரங்கள் அனைவரும் அந்தந்த நேரத்திற்கு தர்மானதை செய்கின்றனர்.

பாண்டவர்களுடன் சமாதானமாக போகச்சொல்லும் சகுனிதான் வேறுவழியின்றி துரியோதனனுக்கு பகடையாடி நாட்டை வென்று தருகின்றான். பழி வாங்க சபதம் ஏற்கும் பீமனும் அர்ச்சுனனும் போருக்கு முன் சமாதான பேச்சிற்கு ஆதரவளிக்கின்றனர். இந்த முரண்பாடுகள்தான் சுவாரஸ்யத்தை தருகின்றன.