07 பிப்ரவரி 2015

சாயாவனம் - சா. கந்தசாமி

காட்டை அழித்து கொஞ்சம் கொஞ்சமாக மனித வாழிடத்தை விஸ்தரித்து கொண்டு போவதன் விபரீதத்தை இன்று கண் கூடாக கண்டு வருகின்றோம். இந்த பிரச்சினைகளை ரப்பர், காடு நாவல்களில் காணலாம். அதே பிரச்சினையை வேறு ஒரு தளத்தில் காட்டுவது சாயாவனம்.

ஒரு குறுங்காட்டை அழிப்பதுதான் நாவலின் கதை.

வெளிநாட்டிலிருந்து வரும் சிதம்பரம், தன் சொந்த ஊருக்கு அருகிலிருக்கும் ஒரு நிலத்தில் சர்க்கரை ஆலை கட்ட நினைத்து, அதை முடிப்பதை விலாவாரியாக விவரித்துள்ளார். எப்போதும் புதிய எழுத்தாளர்களை படிக்க நினைத்தால் அவரின் சிறந்த நாவல் என்று பலர் சிபாரிசு செய்யும் ஒன்றை முதலில் படித்து ஓகே என்றால் மேலும் முன்னேறுவது வழக்கம்.அந்த வகையில் சா. கந்தசாமியின் சாயா வனம்.

ஒரு குறுங்காட்டின் அழிவை காட்சிப்படுத்தியுள்ளார். பாத்திரங்களும் அதிகமில்லை. சிதம்பரம், அவரது மாமா, இரண்டு உதவியாள சிறுவர்கள் அவ்வளவே.

பல நூறு ஆண்டுகளாக உண்டான காட்டை  சில மாதங்களில் அழித்து அவன் கட்டும் ஆலை ஊருக்குள் பல மாற்றத்தை கொண்டு வருகின்றது. பணம் என்பது முதன்முதலில் ஊருக்கு வருகின்றது, பயிரிடும் பயிர்கள் மாறுகின்றன. ஆனால கடைசியில் ஒரு வெறுமையும் உண்டாகின்றது. 

இதை பற்றி அதிகம் எழுத எனக்கு ஒன்றுமில்லை. காடு அழிப்பது என்பதை குறியீடு என்று கருதுபவர்கள் அதை நாட்டுடன் பொருத்தி பார்த்து,  கூடவே உலகமயமாக்கல், தொழில்மயமாதல், மறு காலனியாதிக்கம் போன்ற வார்த்தைகளையும் சேர்த்துக் கொண்டு உருகலாம். எனக்கு அப்படி எல்லாம் ஒன்றும் தோன்றவில்லை. ஒரு சுமாரான நாவல். காட்டின் அழிவு வருத்தம் தர வைக்கும் விஷயம். அதையும் இது அழுத்தமாக ஒன்றும் கூறவில்லை. காட்டை அழிப்பதை ஒரு சாகசமாகவே காட்டுகின்றது.

கதை நடக்கும் காலம், நடக்கும் இடம் பற்றிய குறிப்புகள் ஏதுமில்லை. ஆனால பண்டமாற்றை பற்றி பேசுவதாலும், காங்கிரஸ் பற்றிய குறிப்புகள் வருவதாலும் 1930  - 40 என்று இருக்கலாம். 

படிக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக