21 பிப்ரவரி 2015

வெண்முரசு - வண்ணக்கடல் - ஜெயமோகன்

மழைப்பாடலின் அரசியல் விளையாட்டிற்கு பின் வரும் நாவல். மனித உணர்ச்சிகளும், அரசியலும் கலந்த நூல்.

இந்த  நூலில் கதை சொல்ல ஒரு வித்தியாசமான முறையை எடுத்து கொண்டுள்ளார். இளநாகன் என்னும் பாணன், தென் தமிழகத்திலிருந்து அஸ்தினாபுரியை நோக்கி பயணிக்கின்றான். அவன் வழியே கதை சொல்லப்படுகின்றது. உண்மையான அஸ்தினாபுரியை விட பாணர்கள் உண்டாக்கிய அஸ்தினாபுரிகளின் எண்ணிக்கை மிக அதிகமாக காட்டுகின்றார். இள நாகனின் வழி அக்கால பாரத்தின் பகுதிகளை காட்டுகின்றார். மாறும் அரசுகள், உணவு பழக்கங்கள், கால நிலைகள், வணிகங்கள், கட்டிடக்கலை, வெவ்வேறு வழிபாட்டு முறைகள் என்று ஒரு பெரிய சித்திரத்தை தருகின்றார் ஆசிரியர். இளநாகனின் காலமும், மகாபாரத்தின் காலமும் வெவ்வேறு என்பதை சிறு சிறு குறிப்புகள் மூலம் தெளிவு படுத்துகின்றார்.

வெண்முரசில் வரும் பாத்திரங்களின் மாற்றமே மிகவும் கவனிக்கத்தக்கது. மனித மனங்களின் கோணல்களை மிக தெளிவாக காட்டுகின்றது. நூறு சதம் நல்லவன் நூறு சதம் கெட்டவன் என்று யாரும் இல்லை. சந்தர்ப்ப சூழ்நிலை ஒருவனை மாற்ற முயலும், மனதில் உறுதியுள்ளவன் அதிலிருந்து தப்பிக்கலாம், இல்லை அதனுடன் சென்று ஓடலாம். துரியோதனன் பீமன் வரும் ஆரம்ப காட்சிகள் மெதுவாக மாறி இருவரும் மாறும் இடம், தர்க்க ரீதியாக விளக்கப்பட்டுள்ளது.


இதில் வரும் அரசியல் என்பது சாதரண மக்களுக்கும் அரசிற்குமிடையில் இருக்கும் உறவை பற்றியது. எக்காலத்திற்கும் அது ஒன்றேதான். தன்னை விட வலியவனை வளரவிடாமல் செய்வது என்பது ஷத்ரிய தர்மம் என்ற பெயரில் செய்யப்படும் செயல்கள் மற்றவர்களிடம் ஏற்படுத்தும் விளைவுகளே இதில் அடிநாதம்.

பின்னட்டையில் குறிப்பிட்டுள்ளபடி இது விதியினால் தண்டிக்கப்பட்டவர்களின் கதை.கர்ணன் பாரத கதாபாத்திரங்களில் மிகவும் பரிதாபத்திற்குரியவன்.  பாரதத்தை ஆள வாய்ப்பிருந்து போர்களத்தில் சொந்த சகோதரன் கையால் மாண்டவன். அதே போல் வஞ்சிக்கப் பட்டவர்களில் மற்றுமொருவன் ஏகலைவன் (கமல் படம் பார்த்த விளைவில் தப்பாகவே வருகின்றது). இந்நூல் அவர்களுடன் மற்றுமிருவரை சேர்க்கின்றது. துரோணர், துரியோதனன்.

துரோணர் பிராமண முனிவருக்கு பிறந்து சத்ரியராகவே வாழ்ந்தவர். துரோணரின் கதை புதியது  தந்தையின் அங்கீகாரத்திற்கு ஏங்கும் துரோணர், குலத்திற்காகவும் ஏங்குகின்றார். அதை தரும் அஸ்தினாபுரிக்கு என்றும் அதன் விசுவாசத்தை தருகின்றார். அதுவே அதே அங்கீகாரத்திற்கு ஏங்கும் கர்ணனை விலக்க செய்கின்றது, கல்வியை யாசிக்கும் ஏகலைவனை விரட்டி பின் கட்டைவிரலை கேட்க செய்கின்றது. 

கர்ணன் ஒரு அப்பழுக்கற்ற ஒரு பாத்திரமாக வருகின்றான். கர்ணனின் தோற்றம், அவனின் முதல் சாகசம், கர்ணன் - திருதராஷ்டிரர் சந்திப்பு, என கர்ணனை ஒரு இளவரசன் போலத்தான் காட்டுகின்றார், தேரோட்டி மகனாக அல்ல. கர்ணனை வியாசர் விவரத்திருப்பதை விட ஒரு படி மேலாக விவரித்திருக்கின்றாரோ என்று தோன்றுகின்றது. ஏற்கனவே பாரதக்கதை தெரிந்திருப்பதால், பிற்கால மாற்றங்கள் தெரிந்திருப்பதால் எப்படி இந்த பாத்திரங்கள் மாறப் போகின்றன என்பதை யூகிப்பது ஒரு சுவாரஸ்யம். வாசகனை ஒரு படி மேலே இழுப்பதில் ஆசிரியருக்கு ஒரு சுவாரஸ்யம். துரியோதனின் மாற்றமும், பீமனின் மாற்றமும் சுவாரஸ்யமானது. பீமன் அடுமனையில் இருந்தாலும், அறிவில் எவ்வளவிற்கு குறைந்தவனில்லை என்பதை கர்ணனை தெரிந்து கொள்ளும் காட்சி காட்டுகின்றது. 

தர்மன் - கர்ணன், விதுரர் - அர்ஜுனன் , அஸ்வத்தாமா - அர்ஜூனன், கர்ணன் - அர்ஜுனன், துரியோதனன் - கர்ணன், துரியோதனன் - பீமன் என்று தனிப்பட்ட பாத்திரங்களுக்கிடையிலான உணர்ச்சி மோதல்கள்தான் இதில் அதிகம்.
எனக்கு. ஏகலைவன் கதை அந்தளவிற்கு பரிதாபத்தை எனக்கு எப்போதும் ஏற்படுத்தியதில்லை, ஆனால் இந்த நூல் பல புதிய வழிகளை திறக்கின்றது. ஹிரண்யாக்‌ஷன் ஹிரண்யகசிபுவின் கதை ஒரு புதிய கோணம். 

விதவிதமான வண்ணங்களில் இருக்கும் மனித உணர்ச்சிகளின் கடல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக