30 ஜூலை 2016

அதிர்ஷ்டம் தந்த அனுபவங்கள் - சோ

சோ.

ஒரு எழுத்து என்றாலும் அதன் பின்னால் இருக்கும் ஆளுமை பெரியது. வழக்கறிஞர், நாடக நடிகர், நாடக ஆசிரியர், நாடக இயக்குனர், திரைப்பட நடிகர், இயக்குனர், வசனகர்த்தா, பத்திரிக்கை ஆசிரியர், எழுத்தாளர், அரசியல்வாதி என்று பல முகங்கள். அவரது சமீபத்திய சில செயல்பாடுகளில் உடன்பாடில்லை என்றாலும், எனக்கு மிகப்பிடித்த ஒருவர். இவரின் பலமும், பலவீனமும் இவரது நகைச்சுவை உணர்வே.

மகாபாரதத்தை நன்கு கற்றவர். அவரது மகாபாரதம் பேசுகின்றது நூலே, எனக்கு மகாபாரதத்தை பற்றிய மற்றொரு பார்வையை அளித்தது. அதுவரை எனக்கு அது ஒரு சுவாரஸ்யமான கதை நூலே. ராமாயணமும், அதே போல் கம்பராமாயண பகுதிகளுடனும், துளசிதாசரின் ராமாயண பகுதிகளையும் சேர்த்து தந்திருந்தார். 

அதிர்ஷ்டம் தந்த அனுபவங்கள் அவரது வாழ்க்கையில் அவர் சந்தித்த முக்கியமானவர்களுடனான அவரது அனுபவங்கள். ஆரம்பம் முதல் கடைசி வரை அக்மார்க் சோ குசும்பு. இப்புத்தகத்தில் கூறப்பட்டுள்ளதுதான் அவரது உண்மையான குணம் என்றால், அனைத்தும் அதிர்ஷ்டம்தான். கடவுள் அவருக்கான வாய்ப்பை அருமையாக அமைத்து தந்திருக்கின்றார், அதை அவர் அருமையாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளார். உண்மையில் சுவாரஸ்யமான திருப்பங்கள் நிறைந்த அனுபவங்கள். அனைத்தும் தற்செயலாக நடந்தவை, ஆனால் அதை ஏற்றுக் கொண்டு அதில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பு அவரிடம் இருந்திருக்கின்றது.


தன்னம்பிக்கை அவரிடம் ஏராளமாக இருந்திருக்கின்றது என்றுதான் சொல்ல வேண்டும். நம்மால் முடியும், முடியாவிட்டாலும் சமாளிக்கலாம் என்பது அசட்டு துணிச்சல் என்றாலும் பின்னால் ஒரு தன்னம்பிக்கை இருக்கின்றது. அது வெற்றி பெறவும் செய்துள்ளது.

முதல் சில பகுதிகளை சிரிக்காமல் படிப்பது மிகக்கடினம். ஒருவர் இப்படியெல்லாம் தடாலடியாக முடிவெடுத்து பேச, செய்ய முடியுமா என்று யோசிக்க வைக்கின்றது. தன்னைத்தானே கிண்டல் செய்து கொள்வது ஒரு நல்ல யுக்தி. அது புத்தகமெங்கும் கொப்பளிக்கின்றது.

பொறியியலாளர் ஆக வேண்டும் என்ற தாத்தாவின் விருப்பம் இவரது மதிப்பெண்களை கண்டு மறைந்தது . வழக்கறிஞர் வேடம் அடுத்து வந்தது. அதிலும் அவர் சாதரணராக இல்லை, டிடிகேவில் பணிபுரிந்த போதும் வெற்றி அடைந்துதான் இருக்கின்றார். அவர் சந்தித்த சில வழக்குகளை பற்றிய விபரங்கள் சுவாரஸ்யமானவை.

நாடகத்துறையில் முதலில் நுழைந்தது அவரின் தம்பி என்பது புதுச்செய்தி. தம்பி ஆரம்பித்த குழுவில் தடாலடியாக நுழைந்து, நாடகக்குழுவே சோ குழு என்றாக்கியது அவரது தடாலடி. கூத்தப்பிரானை மிரட்டி ஒரு பாத்திரத்தை எடுத்து கொண்டது அவரது குசும்பு என்றால் அதை அனைவரையும் ரசிக்கும் படி செய்தது அவரது திறமை. அவரது நாடகங்கள் அனைத்தும் ஹிட். ஆனால் இன்று அவர் நாடகங்கள் கொஞ்சம் அவுட் டேட்டடாக தெரியலாம், காரணம் அனைத்து நாடகங்களும் அன்றைய அரசியல் நிலைமையை கிண்டலடிப்பது, இன்று அதன் காண்டெக்ஸ் புரியாமல் ரசிப்பது கொஞ்சம் கஷ்டம். 

அவரை தீர்க்கதரிசி, நடப்பதை முன்கூட்டியே யூகிப்பதில் வல்லவர் என்று பலர் கூறுவதுண்டு. இப்புத்தகத்திலும் அது போல பல நிகழ்ச்சிகள் வருகின்றன. மற்றவர் கண்ணிற்கு தெரியாதது, இவருக்கு தெரிய காரணம் வெகு சுலபம். அரசியல்வாதிகள் சில சமயம் மிகவும் கீழிறங்குவார்கள் என்பதும், மக்கள் எவ்விதம் எதிர்வினையாற்றுவார்கள் என்பதை எவ்வித முன்முடிவின்றி பார்ப்பது. இவரின் பல யூகங்கள் தவறாகவும் ஆகியுள்ளன, முக்கியமாக தேர்தல் விஷயங்களில், அதையும் வெளிப்படையாக கூறியுள்ளார்.

சோவின் பிரதாபங்களை விட, இதில் அவர் சந்தித்த பல பெரிய மனிதர்களை பற்றிய விபரங்களே இதில் முக்கியமானவை. பலரை பற்றி வெகுஜன ஊடகங்கள் பேசுவதில்லை. பாட புத்தகங்கள் பேசுவதில்லை. சோவிற்கு மிக பிடித்த தலைவர்களுள் ஒருவர் காமராஜர். காமராஜரை சந்தித்தேன் என்று ஒரு தொடரும் எழுதியுள்ளார். ஆனால் அவருடனான முதல் சந்திப்பே மோதல், வேறு யாருக்கும் அந்த அசட்டுத் துணிச்சல் வருமா என்பது சந்தேகமே,  இருந்தாலும் தாட்சண்யம் தடுத்திருக்கும். காமராஜரின் பெருந்தன்மை பெரியவர்களுக்கே உரியது. 

எம்.ஜி.ஆர் - கருணாநிதி சண்டை. அதற்கு சோவின் ஐடியா, உண்மையில் நடந்திருந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்தாலே சிரிப்புதான் வருகின்றது. 

எமர்ஜென்சி பற்றிய பல குறிப்புகள், அதை எதிர்த்த தலைவர்களுடனான நட்பு. மொரார்ஜி தேசாயின் நேர்மை, என்.டி.ஆர் - இந்திராகாந்தி மோதல் என்று பல விஷயங்கள். பல தலைவரகளை பற்றி அதிகம் அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பு.

மிகவும் கவர்ந்தது காமராஜர், மொரார்ஜி தேசாய் பற்றிய அனுபவங்கள். தனக்கு ஒரு நன்மை கிடைக்கும் என்றாலும், அதற்காக சற்றும் நேர்மை தவறி செய்யும் செயலை ஒப்புக்கொள்ளாமை, மற்றவர்களை மதிக்கும் தன்மை, தோல்வியையும் தைரியமாக ஒத்துக்கொள்ளும் குணம் இன்று யாருக்கு இருக்கின்றது?

கருணாநிதியை கடுமையாக விமர்சித்தாலும் அவருடனும் நல்ல நட்பில்தான் இருக்கின்றார். 

சந்திரசேகர், முன்னாள் பிரதமர் என்ற விஷயம் மட்டுமே தெரியும், அவரின் ஆளுமையை பற்றியும் கூறியுள்ளார், புதிய விஷயம். சுப்ரமணிய சாமியை பற்றி அவரது கணிப்பு மிகச்சரியான ஒன்று.

கவனமாக தவிர்த்திருக்கும் விஷயம் ஜெயலலிதாவுடனான அவரது நட்பு. ஜெயலலிதா அவரது நெருங்கிய நண்பர், நாடக காலத்திலிருந்து நெருக்கமான நட்பு. இருந்தும் ஜெயலலிதாவின் நட்பு சோவிற்கு பெருமை என்ற ரீதியில் வெளிவந்த கருத்துக்களால் அவரைப் பற்றி தவிர்ப்பதாக கூறியுள்ளார். அது அவரது தன்மானத்திற்கே இழுக்கு என்றும் கூறுகின்றார். சரிதான்.

பல இடங்களில் அவரது செயல்பாடுகள், யோசனைகள் எல்லாம் பலருக்கு சில சமயம் வரும் குதர்க்கமான யொசனைகளே, ஆனால் செயல்படுத்துவத்தில் ஒரு தயக்கம் இருக்கும். தாட்சண்யம், யார் என்ன சொல்வார்களோ என்ற எண்ணம். ஆனால் அதைப்பற்றி எல்லாம கவலைப்படாமல் அதைச் செய்யும் தைரியம், கூடவே அச்செயல்களின் விளைவுகளை சமாளிக்கும் புத்திக்கூர்மை அதுவே அவரது வெற்றிக்கும் காரணமாக அமைந்துவிட்டது. படிக்கும் போது இன்னொன்றும் தோன்றாமல் போகவில்லை, அவரது குடும்ப பின்புலம். ஏற்கனவே வசதியான குடும்பம். கொஞ்சம் அரசியல் பின்புலும் உண்டு என்பதே அவருக்கு ஒரு தைரியத்தை தந்திருக்கும். இல்லையென்றாலும் அவர் அப்படியே இருந்திருக்கலாம், ஆனால் இதே வெற்றி கிடைத்திருக்கமா? என்ற  எண்ணம் தோன்றுகின்றது.

சோவை பற்றி தெரிந்து கொள்வதுடன், பல முக்கிய தலைவர்களை பற்றியும், முக்கிய நிகழ்ச்சிகளை பற்றியும் தெரிந்து கொள்ள உதவும் ஒரு நல்ல புத்தகம்.

அல்லையன்ஸ் பதிப்பகம். இங்கே கிடைக்கும்.

2 கருத்துகள்:

  1. தொடராக வந்தபோது சில வாரங்கள் வாசித்திருக்கிறேன். புத்தகமாக வாங்க வேண்டும்.

    இந்தமுறை அதிசயமாக (யொசனைகளே, பிராதபங்களை , தலைவர்களுல், அவர்து, சாதரணராக, பார்வையை அழித்தது. போன்ற) சில எழுத்துப்பிழைகள் பதிவில்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குழந்தைகளை சமாளித்துக் கொண்டே டைப் செய்தது, பின்னர் சரி பார்த்து வெளியிட வேண்டும் என்று நினைத்தேன். பின்னர் கவனிக்காமல் அப்படியே வெளியிட்டு விட்டேன். மிக்க நன்றி.

      நீக்கு