17 ஆகஸ்ட் 2016

வீரபாண்டியன் மனைவி - அரு. ராமநாதன்

சரித்திர நாவல்கள் என்றால் நினைவிற்கு வருவது கல்கி, சாண்டில்யன் மட்டுமே. இவர்களைத் தவிர இன்னும் பலர் எழுதியிருந்தாலும் இவர்கள் இருவர் அளவிற்கு புகழடைந்தவர்கள் எவருமில்லை. கல்கியின் கதைகளில் சரித்திரம் என்பது வெகு சொற்பமே. சரித்திர சம்பவங்களை ஒரு அடிப்படையாக வைத்துக் கொண்டு, முழுக்க முழுக்க தன் கற்பனையால் வாசகர்களை கவர்ந்தார். ஒரு ஃபேண்டசி வகையில்தான் சேர்க்க வேண்டும். கல்கி வெகு குறைவாகவே எழுதினாலும், ஒவ்வொன்றையும் வித்தியாசமாக எழுதியதால் எங்கும் அலுப்பு தட்டாத நாவல்கள். சாண்டில்யன், கல்கியை ஒட்டியே எழுதினாலும், இவர் வித்தியாசப்படுவது வர்ணனைகளால். சிருங்கார வர்ணனைகள், அமானுஷ்யமான கதாநாயகர்கள். இரும்புச் சலாகையால் உரசும் குரல் வில்லன்கள்.ஒரே டெப்ளேட். இருந்தும் ஒரு சில கதைகள் சுவாரஸ்யமானவை. தொடர்கதைகளுக்கேற்றவை. ஒரு நல்ல எடிட்டரை கொண்டு வெட்டி எறிந்தால், க்ரிஸ்ப்பான

பல நாவல்களும், பல சிறுகதைகளும் கிடைக்கும்.

இவர்கள் இருவரை தவிர மற்றவர்கள் எழுதிய சரித்திர கதைகள் பெரும்பாலும் அலுப்பூட்டுபவையாகவே இருக்கின்றது. பாண்டிமாதேவி, மணி பல்லவம் என்று இரண்டு நாவல்கள். தண்டத்திற்கு காசு கொடுத்து வாங்கியதற்கு இன்று வரை வருந்துகின்றேன். அவை என் கண்ணில் படக்கூடாது என்று ஊரிலேயே வைத்துவிட்டு வந்திருக்கின்றேன். சுஜாதா எழுதிய காந்தளூர் வசந்தகுமாரன் கூட ஒரு சுமாரான நாவலே. அகிலன், ஜெகச்சிற்பியன், உதயணன், என்று  பலர் பல சரித்திர தொடர்கதைகளை எழுதியுள்ளார்கள். ஆனால் அவற்றில் குறிப்பிடத்தகுந்தவை என்று எதையும் சொல்ல முடியவில்லை. அனைத்து கொஞ்சம் ஃபேண்டசி கதைகள். படிக்கவும் சுவாரஸ்யமற்ற மொக்கைகளே. ஆனால் வீரபாண்டிய மனைவியை அந்த வகையில் சேர்க்க முடியாது.

சரித்திரக் கதைகள் என்ற அளவில்லல்ல. சரித்திரத்தை அடிப்படையாக் கொண்ட, சுவாரஸ்யமான கற்பனை நாவல் (அ) தொடர்கதை ஆசிரியர் என்ற வகையில். கல்கி, சாண்டில்யனுக்கு அடுத்த வகையில் அரு. ராமநாதனை வைக்கலாம். அரு. ராமநாதன் பிரேமா பிரசுரத்தில் பணி புரிந்தார் என்று தகவல். உரிமையாளரா என்பதெல்லாம் தெரியவில்லை. பல புத்தகங்களை வெளியிட்டுள்ளார். வீரபாண்டியன் மனைவி அரு. ராமநாதனின் காதல் என்னும் பத்திரிக்கையில்  வெளிவந்த ஒரு தொடர்கதை. தொடர்கதைகளுக்குரிய பலவீனங்களை கொண்ட ஒரு நாவல். தியாக வினோதர் என்று பட்டம் பெற்ற குலோத்துங்கச்சோழன், பாண்டிய மன்னனான வீரபாண்டியனை வென்று அவன் சகோதரான் விக்கிரமபாண்டியனை அரியணை ஏற்றினான் என்ற சரித்திர சம்பவத்தை அடிப்படையாக கொண்ட ஒரு நாவல்.


வீரபாண்டியனை வென்ற சோழர்கள் அவன் மனைவியை சிறை வைத்தனர். சிறை வைக்கப்பட்ட மனைவியை மீட்க வீரபாண்டியன் நடத்தும் முயற்சிகளே மூன்று பாகமாக விரிந்துள்ளது. கம்பராமாயண பாணியில் யுத்தகாண்டம், சுந்தரகாண்டம், பால காண்டம் என்று பிரித்து வைத்ததில் என்ன புதுமையோ தெரியவில்லை. யுத்தகாண்டம் கூட பரவாயில்லை மற்ற காண்டங்களுக்கும் தலைப்பிற்கும் அந்தளவிற்கு தொடர்பில்லை. பற்றாக்குறைக்கு ஜனநாதன் ராமாயணப்பாத்திரங்களை வேறு இழுக்கின்றான். ஒட்டவேயில்லை.

நாவலின் சிறப்புக்களாக நான் கருதுவது, வழக்கமான அமானுஷ்ய நாயகர்கள் இல்லை, மன்னர்கள் புகழ் இல்லை, முடிந்தவரை யதார்த்தமான நிகழ்ச்சிகளை வைத்திருக்கின்றார். அதற்கு நேர் எதிரிடையாக காதல் காட்சிகள் இருக்கின்றன. பலவீனங்கள் அதீத உணர்ச்சி கொண்ட நாடகத்தனமான பாத்திரங்கள். குலோத்துங்க சோழனை ராவண சன்னியாசியாகவே காட்டுகின்றார். வீரபாண்டியன் கடைசி வரை மனைவியை மீட்க போராடிக் கொண்டே இருக்கும் ஒரு மன்னன். கண்டதும் காதலில் விழும் வீரசேகரன். வீரமிருந்தும் இளகிய மனம் படைத்த ஒருவன். அவன் காதலால் உணர்ச்சி வசப்பட்டு செய்யும் செயல்களை கண்டால், இப்படி கிறுக்குகள் உண்டோ என்றுதான் தோன்றுகின்றது.

முக்கிய பாத்திரமாக வரும் ஜனநாத கச்சிராயனின் பாத்திரப்படைப்பே வித்தியாசமானதாக வருகின்றது. சோழ அதிகாரியாக இருந்தும் சோழ நாட்டை அழிப்பதை ஒரு கடமையாக செய்யும் ஒரு பாத்திரம். ஒரு சிறந்த அறிவாளியாக, மனிதர்களின் மனதுடன் விளையாடி காரியம் சாதித்தும் கொள்ளும் ஒருவனாக வருகின்றான். இவனையும் முழுக்க முழுக்க நல்லவனாகவும் காட்டவில்லை. சர்வசாதரணமாக உயிர்களை கிள்ளி எறிந்துவிட்டும் போகும் ஒரு பாத்திரமாகவே வருகின்றான். வீரபாண்டியன் மகன் தலையை வெட்ட வைப்பதிலிருந்து, அவன் செய்யும் வேலைகளை பார்த்தால் நாயகன் டயலாக்தான் நினைவில் வருகின்றது. குலோத்துங்க சோழன் பெயர் மட்டும் வருகின்றது ஆளை காட்டுவதில்லை.

முதலில் பிரமாதமாக ஆரம்பிக்கும் கதை போகப்போக தொய்வடைகின்றது. சில இடங்களில் பக்கம் பக்கமாக காதல் வசனம் வேறு பேசி கொல்கின்றனர். மிகப் பெரிய சைஸ் புத்தகம். கதை வளவளவென்று போவதுடன், எவ்வித சுவாரஸ்ய முடிச்சுகளின்றி போகின்றது. வீரபாண்டியன் சர்வசாதரணமாக மதுரைக்குள் வலம்வருவதெல்லாம் காதில் பூ.

இறுதியில் வரும் திடீர் திருப்பங்கள் எல்லாம் மேடை நாடகங்களுக்கே உரித்தானவை.



பெரும்பாலான சரித்திர கதைகள் சோழர்களின் பொற்காலத்தையே பேசும். பாண்டியர்களை மையமாக கொண்ட கதைகள் மிககுறைவு. அப்படி இருந்தாலும் கயல்விழி மாதிரி தோற்றோடி ஜெயித்த கதையாக இருக்கும். இதுவும் அந்த வகை கதைதான். என்னய்யா பாண்டியர்களில் எல்லாம் பெரிய மன்னர்கள் இல்லையா?

மேலே கூறிய பல மொக்கை கதைகளுக்கு இது எவ்வளவோ பரவாயில்லை. தொடர்கதை மாதிரி தினமும் ஒன்றிரண்டு பகுதிகள் படித்தால் படிக்க முடியும். ஒரே மூச்சில் படிக்க வைக்கும் கதை இல்லை. 

சிலிக்கான் ஷெல்ப்பில் ஆர்.வியின் பார்வையில்...

4 கருத்துகள்:

  1. பிரேமா பிரசுரம் சொந்தக்காரரே அரு ராமநாதன் தான். அவருடைய சமூக நாவல் குண்டு மல்லிகை படியுங்கள். நான் ரசித்த நாவல். லதா ஓவியத்துடன் நான் பைண்டிங் வீட்டிலேயே வைத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை.. நானும் குண்டு மல்லிகை ரசிகன். ஆனால் வீரபாண்டியன் மனைவி படித்த போது ஒரு உண்மை விளங்கியது. குண்டு மல்லிகை "ஜகந்நாதனும்" வீரபாண்டியன் மனைவி "ஜனநாதனும்" ஒரே பாத்திரங்கள் போல தெரியும். இரண்டு பாத்திரங்களின் வசனங்களை கவனியுங்கள் புரியும். பேரில் கூட ஒற்றுமை தெரியும். ஆசிரியரின் நிஜமான குணம், விரும்பும் பர்சனாலுட்டி, மனித உறவுகளை பற்றிய தனது வியாக்யானங்கள் இந்த பாத்திரங்களின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார் என நினைக்கிறேன்.

      நீக்கு
  2. சமீபத்தில் படிக்கச் ஆரம்பித்து உள்ளேன். அவ்வளவு சுவாரஷ்யம் இல்லை. 'ஜவ்வு போல் இழுத்தடிக்கிறது கதை . முடிந்தால் தவிர்க்கலாம்.

    பதிலளிநீக்கு
  3. வீரபாண்டியன் மனைவி நாவலை படிக்கும்போது எனக்கு என்னமோ பிடித்திருந்தது. வீரசேகரன் character சில நேரங்கள் எரிச்சல் ஊட்டினாலும் ஜனநாயகன் character பிடித்திருந்தது. மற்ற நாவல்களில் இல்லாத character இது. இராமாயணம் பற்றிய தொடர்பு வைத்து ஆசிரியர் எழுதியதற்கு காரணம் கம்ப ராணயணம் மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் தான் எழுதப்பட்டது. கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது.

    பதிலளிநீக்கு