02 செப்டம்பர் 2016

ஹிந்துத்துவ சிறுகதைகள் - அரவிந்தன் நீலகண்டன்

தமிழ்ஹிந்து தளத்தில் ஆலந்தூர் மள்ளன் என்ற புனைப்பெயரில் அரவிந்தன் நீலகண்டன் எழுதிய கதைகளின் தொகுப்பு. 

அரவிந்தன் நீலகண்டனை எனக்கு அறிமுகம் செய்தது திண்ணை இணைய தளம். அவரது பல கட்டுரகள் எனக்கு பல புதிய அறிமுகங்களை தந்துள்ளன. அவரின் கம்யூனிசம் பற்றிய புத்தகம் வெகு சுவாரஸ்யமான, விவரங்கள் நிறைந்த ஒரு புத்தகம். 

சிறுகதைகள் என்பது மிகக்கடினமான ஒரு வடிவம். பலர் அதை பலவிதமாக கையாண்டுள்ளனர். அதில் ஒரு வகை சிறுகதைகளை பிரச்சாரத்திற்கு பயன்படுத்துவது. கல்கி மதுவிலக்கை பற்றி ராஜாஜியின் இதழ்களில் பல கதைகள் எழுதியிருக்கின்றார். அவை மிக வெளிப்படையான பிரச்சாரக்கதைகள். அவற்றில் அவர் கூறவந்த கருத்து வெகு தெளிவாக, வெளிப்படையாக வரும். பேங்கர் வினாயக்ராவ் என்ற பெயரில் ஒரு தொகுப்பாக வந்துள்ளது ஆனால் அரவிந்தன் நீலகண்டன் எழுதிய இக்கதைகள் அனைத்தும் அத்தகையவை அல்ல. ஒரே ஒரு சிறுகதையை மட்டும் அப்படி முழுக்க முழுக்க பிரச்சாரக்கதை என்று கூறலாம். மற்றவை அனைத்தும் சிறந்த சிறுகதைகள் என்ற அளவிலேயே படிக்கலாம். வேண்டியதை எடுத்துக் கொள்ளலாம்.



பிரச்சாரக்கதைகள் என்று கூறுவதன் காரணம், இக்கதைகள் முன்வைக்கும் நமது கலாச்சாரம் சார்ந்த கருத்துக்கள்தான். உடனே பக்தி ரசம் ஒழுகும் கதைகள் என்று நினைக்க வேண்டியதில்லை.

ஒவ்வொரு கதைகளின் பின்னாலும் நல்ல உழைப்பு தெரிகின்றது. படித்துவிட்டு மறந்து விட்டு போகின்ற கதைகளும் அல்ல. கதைகளில் வரும் சம்பவங்கள் பற்றி அடுத்த கட்ட வாசிப்பிற்கு பயன்படும் பல குறிப்புகளும் தந்துள்ளார். 

பலவிதமான கதைகள். நமது பாரத பாரம்பர்யத்தை பற்றிய கதைகள், கிறிஸ்துவத்தை பற்றிய விமர்சனங்கள், நமது சுதந்திர போராட்டத்தலைவர்களை பற்றிய கதைகள், தொன்மங்களை அடிப்படையாக கொண்ட கதைகள்.

யாதுமாகி, சுமைதாங்கி இரண்டு கதைகளும் இத்தொகுப்பில் இருப்பதில் மிக அருமையான கதைகள்.  அழகான மொழி, நடை என்று மிகச்சரியாக அமைந்த கதைகள். 

திருப்பலி கதையில் வரும் ஒரு பாரா

“ஆமாம் உன் செவிகளில் பிரச்சினை இல்லை. ப்ராஜெக்ட் கத்தோலிக் ரமணர் என்றுதான் நான் சொன்னேன்…”
வெளியே இரவுப்பூச்சிகளின் ஒலிகள்.
“விரூபாக்ஷக் குகைக்குள் சென்றுகூட கிறிஸ்தவ பலியை நடத்தினோம் தெரியுமா?”
“தவறில்லையா ஃபாதர்? இன்னொரு மதத்தினர் வழிபடும் இடத்தில்…”
“இன்னும் உனக்குப் புரியவில்லை. இது போர். சொன்னேனே, சிலுவைப் போர். உங்கள் வழிபாட்டை நாங்கள் எந்த அளவு மதிக்கிறோமோ அந்த அளவு அது எங்கள் தேவனுக்கே உரியது என்றும் நம்புகிறோம். எனவே அதனை எங்களதாக்குகிறோம். புரிகிறதா?”
“புரியவில்லை” என்றேன் நான். உண்மையாகவே புரியவில்லை.
“உன்னால் மட்டுமல்ல, எந்த ஹிந்து மனதாலும் அதைப் புரிந்துகொள்ள முடியாது

என்னால் இன்னும் புரிந்து கொள்ள முடியாத ஒரு விஷயம். 

தமஸோ மா...., இனிப்பு, பால் சில உண்மை சம்பவங்களையும், மனிதர்களையும் அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட கதைகள். இவை கொஞ்சம் நாடகத்தனம் கலந்த கதைகளாகிவிட்டன. சரித்திர உண்மைகளை கொண்டு சேர்க்கும் நோக்கு அதிகமாகிவிட்டது.

அமுதம், சுமைதாங்கி, யாதுமாகி - கற்பனையான அல்லது எங்கோ சாத்தியமாகியிருக்ககூடிய தொன்மங்களை அடிப்படையாக கொண்டவை. சுமைதாங்கி ஜெயமோகனின் மாடன் மோட்சத்தின் மறு பக்கம்.

சாட்சி, விலக்கபட்ட மலர் இரண்டும் கிறிஸ்துவமத நிறுவனங்கள் (மதத்தின் மீதல்ல) மீது நேரடியாக வைக்கப்பட்ட விமர்சனம். ஆனாலும் சிறுகதைக்கான அம்சம் குறையவில்லை.

கரங்கள், கல் இவையிரண்டும் விஞ்ஞான சிறுகதைகள். கரங்கள் கதை முதலில் கொஞ்சம் குழப்பமாக இருந்தாலும், இரண்டாம் முறை படிக்கும் போது தெளிவாகின்றது. கல் எத்தனை தடவை படித்தாலும் குழப்பமே.

இவை பிரச்சாரக்கதைகள் என்று பதிப்பகத்தாராலேயே குறிப்பிடும் போது, நாமும் குறிப்பிடுவதில் பிரச்சனையில்லை. பல பிரச்சாரக்கதைகளை படித்ததுண்டு, ஆனால் அவற்றின் முக்கிய பிரச்சினை, அவை வெறுப்பு பிரச்சாரக் கதைகள். அவற்றால் முடிவது எதிர்தரப்பை தாக்குவது. அதைத்தாண்டி அவற்றால் சாதிக்க முடிவது ஏதுமில்லை. ஒரு எதிர்மறை எண்ணத்தை உண்டாக்கும் அவ்வளவே. இரண்டாவது, ஒரு சிறுகதையை படிக்கும் அனுபவத்தை தராது. 

அரவிந்தன் நீலகண்டனின் இக்கதைகள் எதிர்தரப்பை விமர்சனம் செய்கின்றது, தேவையான இடங்களில். அவ்வளவே. அதுவும் குறிப்பாக உணர்த்துவது அதற்கு மேல் இல்லை. அதே சமயம், தன் தரப்பை மிக அழுத்தமாக வைக்கின்றது. நம்மை மேலும் அதிகம் சிந்திக்க வைக்கின்றது.

மேலே குறிப்பட்டபடி, ஒன்றிரண்டு கதைகளைத் தவிர மற்ற அனைத்து கதைகளும், தனியே சிறுகதைகள் என்ற வகையில் கட்டுக்கோப்பானவை. சிறு சிறு வரிகளில் பல நுணுக்கமான விஷயங்கள், கிண்டல்களை வைக்கின்றார். 

உதாரணமாக, திருப்பலி கதையில் பிரபந்ததை கீழே வைத்து விட்டு பாதிரியாரின் விஸ்கி பாட்டிலை வைப்பது, கிழவிக்கு விபூதி வைக்கும் போதெல்லாம் “அந்த சிவெந்தான இந்த பாடு படுத்தரான்” என்று சிவாஜி குரல் கேட்பதும், யாதுமாகி கதையிலும், கரங்கள் கதையிலும் வரும் சின்ன சின்ன கம்யூனிசக்கிண்டலகளும் அருமையாக இயல்பாக வந்தடைந்துள்ளன.

ஹிந்துத்துவர்களும் வாங்கிப்படிக்கலாம். சிறுகதை ரசிகர்களும் படிக்கலாம். அரவிந்தன் நீலகண்டன் சிறுகதைகள் என்றே தலைப்பு வைத்திருக்கலாம். அப்படி வைத்தாலும் இப்படித்தான் இண்டர்ப்ரெட் செய்யப்படும் என்பதால் நாமே அப்படி வைப்போம் என்று ஹிந்துத்துவ சிறுகதைகள் என்று வைத்துவிட்டனர் போல.

தடம் பதிப்பகம் வெளியீடு. இங்கு சென்று வாங்கலாம்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக