01 மார்ச் 2017

ஒரு கூர்வாளின் நிழலில் - தமிழினி


ஒரு இனம் இன்னொரு இனத்தை எதிர்த்து போரிடுவது என்பது உலகில் தொடர்ந்து நடைபெறும் நிகழ்வு. பல சமயம் இந்த இன வேற்றுமையை செய்வது மூன்றாவது இனமாக இருக்கும், அவர்கள் குளிர் காய ஒரு வாய்ப்பு.
இலங்கையில் நடந்த பிரச்சினைகளுக்கு மூல காரணத்தை தேடும் போது அது ஆங்கிலேயர்களிடமே போய் நிற்கின்றது. மெதுவாக ஆரம்பித்த இன வேற்றுமை உச்சகட்டமாக தமிழர்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்த, பிரச்சினை வெடித்தது. பல போராட்ட குழுக்கள் தோன்றினாலும், புலிகளுக்கு இந்திய ஆதரவு பலமாக இருந்தது. இந்திராகாந்தி மற்றும் எம்.ஜி.ஆரின் வலுவான ஆதரவு அவர்களை பலமாக்கியது. ஆனால் கடைசியில் அவர்களுக்கு கிடைத்தது தோல்வி. அதற்கு அவர்கள் தந்த விலை மிக அதிகம். இந்தியாவும் அவர்களால் ஒரு தலைவரை இழந்தது. 

சிறிய ஆயுத குழுவாக  இருந்த இயக்கம் வளர்ந்து முப்படையும் வைத்திருக்க முடிந்தது. கடல், வான், தரை என்று மூன்று வழிகளிலும் தாக்குதல் நடத்த முடிந்த இயக்கம் அடைந்த தோல்வியை ஆராய்கின்றது இந்த புத்தகம். தமிழினி புலிகளின் அரசியல் பிரிவில் பணியாற்றியவர். இறுதிப்போரில் சரண்டைந்து, பின்னர் புற்றுநோய் தாக்குதலில் காலமானார். அவர் நோயுடன் போராடிக் கொண்டே எழுதிய புத்தகம். ஒரு வகையில் மரண வாக்குமூலம் என்றே கொள்ளலாம்.

புலிகள் நடத்தியது ஒரு தனி அரசாங்கம், பல பிரிவுகளை கொண்ட மிகப்பெரிய அமைப்பு. இளவயதில் இயக்கத்தில் சேர்ந்த தமிழினி, அரசியல் பிரிவில் பணியாற்றியிருக்கின்றார். இரண்டு மூன்று போர்களிலும் பங்கு பெற்றிருக்கின்றார். ஆனால் இப்புத்தகம் முக்கியத்துவம் பெற முக்கியகாரணம், அவர் பணியாற்றிய பிரிவு. மக்களையும் இயக்கத்தின் தலைவர்களையும் இணைக்கும் கண்ணியாக இருந்திருக்கின்றார். 


தமிழினி இயக்கத்தில் சேர்ந்ததிலிருந்து அவரது திருமணம் வரை, அவரின் கதை வாயிலாக போராட்டத்தின் தோல்வியை படம் பிடிக்கின்றார். அவர் இயக்கத்தில் சேர்ந்த நேரம், ராஜீவ் படுகொலைக்கு பின்னால். புலிகளின் பெளர்ணமி. அதன் பின் அவர்களின் தேய்பிறை காலம். இது புலிகள்மீது மற்றவர்கள் சுமத்திய குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் ஒரு ஆவணம், ஆனால் அது சட்டென்று தெரியாமல் ஒரு பச்சாதபபூச்சுடன் திறமையாக வெளிவந்துள்ளது. யாரைப்பற்றியும் நேரடியான விமர்சனம் இல்லை. அனைத்தும் ஒருவித விரக்தி அல்லது "வேறென்ன செய்ய" என்ற சராசரி மனதின் புலம்பல்களாக வெளிப்படுகின்றது. 

புலிகளின் தோல்விற்கு முக்கிய காரணமாக தெரிவது, அவர்கள் யதார்த்தத்தை புரிந்து கொள்ளாமல் இருந்தது. தலைமையை சுற்றியிருந்த ஒரு இரும்பு வேலி, அவரால் தரையில் இருப்பதை காண முடியாமல் போனது. ஆயுதம் ஒன்றே தீர்வு என்ற முன்முடிவுடனே அனைத்தையும் செய்தது. ஆயுதவழியின்றியும் தீர்வு கிடைக்க வாய்ப்பிருக்கலாம், அதை முயற்சி செய்யலாம் என்று முயலாமல் முழுக்க முழுக்க ஆயுதத்தை நம்பி, மக்களை பலி கொடுத்ததுதான் கடைசியில் சாத்தியமானது. 

போர்க்களத்தில் வீரர்களுக்கு சரியாக உணவு கூட தரமுடியாத நிலையில் இருந்திருக்கின்றது. உணவிற்கு பதில் ஆயுதங்களுக்கு செலவு செய்யப்பட்டிருக்கின்றது. எந்த ஒரு நீண்ட போராட்டமும் ஒரு கட்டத்தில் சலிப்பை தர ஆரம்பித்துவிடும். அதைத்தான் அங்கிருந்த மக்கள் அடைந்திருக்கின்றார்கள். சமாதான காலத்தில் கூட," மறுபடியும் எப்ப ஆரம்பிப்பீங்க, ஐந்து வருடங்களுக்கு தாங்கற மாதிரி கலவை போடுங்கள் போதும்" என்ற அளவிற்குதான் அவர்களின் நம்பிக்கை இருந்திருக்கின்றது. மக்களை கசக்கி பிழிந்து வரி வசூல் செய்திருக்கின்றனர். (வன்னி நிலம் வரவேற்கின்றது (வர வேர்க்கின்றது)) உங்கள் நன்மைக்குத்தான் என்று கூறினாலும், ஏற்கனவே கஷ்டத்தில் திணறுபவர்களிடம் மேலும் பறித்தால் அவர்கள் என்ன செய்வார்கள். 'புலிகளை நம்புவது மட்டுமே மக்களை காக்கக் கூடியது' என்பதை 'புலிகளை நம்பாவிட்டால் அவர்களே அவர்களை அழிப்பார்கள்' என்றுதான் புரிந்து கொள்ள வேண்டியிருக்கின்றது.

சக இயக்கத்தவர்களை எல்லாம் ஒழித்து கட்டிய புலிகள், பின் தங்கள் இயக்கத்திலேயே இருந்த கிழக்கு மாகாண வீரர்களையும் வேட்டையாட ஆரம்பித்து, கடைசி காலத்தில் தப்பி ஓடிய தமிழர்களை காலிற்கு கீழ் சுடுங்கள் என்ற அளவிற்கு வந்து நின்றிருக்கின்றனர். எப்போது ஒரு இயக்கம், கட்சியில் தோல்விக்கு தொண்டர்கள் காரணம் ஆக மாட்டார்கள், தலைவர்களே அந்த கைங்கர்யத்தை செய்வார்கள். தொண்டர்கள் அதை வேறுவழியின்றி முட்டு கொடுக்க ஆரம்பித்து, அதை பிராச்சாரம் செய்ய ஆரம்பித்து, கடைசியில் அவர்களே அதை முழுவதும் நம்பி விடுவார்கள். மாத்தையா மீது அவர்கள் கூறிய குற்றச்சாட்டுகளை பற்றி அவர் கூறுவது, //வழக்கமாக அவர்கள் ஒழிக்க வேண்டியவர்கள் மீது வைக்கும் குற்றச்சாட்டுகளே. தலைவருக்கு எதிரான துரோகம், பண மோசடி, பாலியல் குற்றச்சாட்டு.// மிக எளிதில் யார் மீது வேண்டுமென்றாலும் வைக்கலாம். கருணா மீதும், மற்ற இயக்கங்கள் மீதும், மாத்தையா மீதும், இந்திய அமைதிப்படை மீதும் அனைவர் மீதும் வீசப்படுவை இவைதான்

அரசியல் பிரிவில் இருந்தவர்களின் பணி, பரப்புரை செய்வது. இயக்கத்தை பற்றி, இயக்க செயல்பாடுகள், இயக்க நிலைப்பாடுகள், விளங்கங்களை மக்களுக்கு எடுத்து சொல்வது போன்றவை முக்கிய பணிகளாக இருந்திருக்கின்றது. தலைமை எடுக்கும் முடிவுகளால் சிரமத்தை சந்தித்தவர்கள் இவர்களே. மற்ற இயக்கங்களை அழித்ததை பற்றிய இயக்கத்தலைமையின் விளக்கங்கள் தங்களுக்கே புரியவில்லை என்கின்றார். ஏற்க முடியவில்லை என்பதாக கொள்ளலாம். முஸ்லீம்களுக்கும் - புலிகளுக்குமான பிரச்சினை பற்றி சரியாக தெரியவில்லை, ஆனால் அவர்களை புலிகள் விரட்டினார்கள் என்று படித்திருக்கின்றேன். ஒரு ஆயுதப் போரை காக்க, எத்தனை அன்பின் வழிகளை இழந்திருக்கின்றோம் என்கின்றார். உண்மை.

சமாதான வழிகளில் பிராபகரனுக்கு நம்பிக்கையே இல்லை என்பதாகத்தான் தெரிகின்றது. ராஜபக்ஸே ஜெயிக்கவேண்டும், ஜெயித்தால் போர் வரும், போர் வந்தால் நாம் வெல்வோம் என்றே அவர் விரும்பினார் என்கின்றார். அணையை மூடியதன் மூலம் போரின் முதலடியை எடுத்து வைத்தது  புலிகள் என்று தெளிவாகவே சொல்கின்றார். புலிகள் மீது பெரும்பாலன நாடுகள் நம்பிக்கை இழந்து, தடை செய்யப்பட்டதை கூட வெற்றியென்று எண்ணுவது வீரம் என்று சொல்ல முடியாது. தற்கொலை முயற்சி. புலிகளின் கடைசி போரை தெரிந்து செய்த தற்கொலை முயற்சி என்றே தமிழினி சொல்கின்றார். மக்களா, கோடிக்கணக்கில் கொட்டி வாங்கப்பட்ட ஆயுதங்களா என்று தலைவர் முடிவெடுக்க முடியாமல் தயங்கினார் என்கின்றார்.

இறுதிநாட்களில் மக்களை பணயக்கைதிகளாக புலிகள் வைத்திருந்தார்கள் என்பதை போட்டு உடைக்கின்றார். புலிகள் போகச்சொன்ன பக்கமெல்லாம் போய் கொண்டிருந்தவர்கள் இறுதியில் என்ன ஆனாலும் பரவாயில்லை என்று சிங்களர்களிடமே சென்ற கணம்தாம் புலிகள் முழுத்தோல்வி அடைந்த கணம். சாதரண மக்களிடம் இயக்கத்தின் பால் வளர்ந்திருந்த கோபத்தை எப்படி அவர்கள் கணக்கிலெடுத்து கொள்ளாமல் விட்டார்கள். 

மக்களை வலுக்கட்டாயமாக இயக்கத்தில் சேர்த்தை இங்கு பலர் மறுத்து கொண்டிருந்தார்கள். போலி பிம்பங்கள் அதிக நாள் தாங்குவதில்லை. போராளிகள் பலர் வயதின் காரணமாகவும், காயங்கள் காரணமாகவும், தகுந்த உணவின்றி கிட்டத்திட்ட ஒரு சோகையான ராணுவமாக இருந்திருக்கின்றது. பிரபாகரனின் மகன் (அங்கும் வாரிசு) இந்த வலுக்கட்டாய சேர்ப்பை நடத்தினார் என்கின்றார். தப்பி ஓடியவர்களை கொல்வதும், சேராதவர்கள கொல்வதும் என்று சொந்த மக்களிடம் வெறுப்பை சம்பாதித்து வைத்திருக்கின்றனர்.

இறுதியில் பெரும்பாலன புலிகளுக்கு வந்து சேர்ந்தது விரக்தி

//சனம் இனி ஏலாத கட்டத்தில ஆமியிட்ட போகுது, அப்பிடிப்போற சனத்திற்குக் காலிற்கு கீழே சுடச் சொல்லி இயக்கம் சொல்லுது. என்ர கடவுளே சனத்திற்குச் சுடு எண்டு எந்த மனசோட நான் சொல்லுறது. அப்பிடியிருந்தும் சில பிள்ளைகளிட்ட இயக்கம் இப்பிடிச் சொல்லுது என்ற தகவலைச் சொன்னபோது, அந்தப் பிள்ளைகள் கேக்குதுகள் ‘என்னக்கா எங்கட அம்மா அப்பா சகோதரங்களையோ நாங்கள் சுடுறது. இதைவிட எங்களை நாங்களே சுட்டுச் சாகிறது நல்லது’ எண்டு சொல்லிக் குழம்புதுகள். உண்மை தானேயடி. இப்பிடி கேவலமான ஒரு வேலையை செய்ய வேண்டிய கட்டத்திற்கு இயக்கம் வந்திட்டுது” என்று புலம்பினார்.// புலம்பியவர் புலிகளின் மூத்த பெண் போராளி கேணல் விதுஷா.

ஒரு தனிமனிதனை மட்டும் நம்பி, பல ஆயிரம் உயிர்களை பணையம் வைத்தவர்களை என்ன செய்ய. புலிகளிடம் இந்த தனிமனித துதி எங்குமிருந்தது. "எல்லாவற்றையும் அண்ணை பாத்துப்பாரு" என்ற எண்ணம்,தலைமை செய்ததை எல்லாம் ஆதரிக்க செய்தது. தலைமை ஆயுதத்தை மட்டுமே நம்பியது. இறுதிக்கட்டத்தில் அத்தனை மக்களையும் கேடயமாக நிறுத்தி செய்த போர் யாருக்காக, கண்டிப்பாக மக்களுக்காக அல்ல. ஒரு நாடு தன் பலம் முழுவதையும் செலுத்தி அழிக்க நினைக்கும் போதும், அதனால் அழியப்போவது தான் காக்க நினைத்த மக்கள்தான் என்ற போதும், விடாமல் அதே மக்களை கேடயமாக வைத்து போராடுவது என்பதை செய்ய என்ன காரணம்? 

பல வலிமிகுந்த இடங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழினியின் தங்கையும் இயக்கதிலிருந்து மரணமடைந்துள்ளார். தாயார் அலுமினியச் சட்டியுடன் கஞ்சிக்கு நிற்பதை காணும் போது ஒரு மகளுக்கு வரும் வலி பெரிது. மகள் இயக்கத்திற்கு சென்ற பின் ஒரு பிச்சைக்காரரின் வாக்காக வருவது, " அனைவருக்குமுள்ளது எனக்கும், நாளை சுதந்திரம் வந்தா வெளியிலிருந்து டாக்டரும், இஞ்ஞினியருமா வருவாங்க, போராடின நாங்க படிப்பில்லாம பிச்சைக்காரங்களாத்தான் இருப்போம்". பிற இயக்கங்களை கொன்றது குறித்து "எங்க பிள்ளைகளை நாட்டுக்காக என்று சொல்லி கொன்றுவிட்டனரே, அவர்களும் அதற்குதானே போராடினார்கள்" என்று கேட்டவர்களுக்கு எங்களிடம் பதிலில்லை என்கின்றார்

இது ஒரு பரிமாணம், மற்றொன்று ஒரு பெண் என்ற பார்வையில்.

ஒரு பெண்ணாக போராட்ட களத்தில் இருப்பது சாதரணமல்ல. அதுவும் உணவும், உடையும் கூட கிடைக்காமல். "அடுத்தமுறை வரும்போது ஒரு ஜோடி உடுப்பு கொண்டு வாடியப்பா" என்று பின் புறம் தேய்ந்து கிழிந்த ஜீன்ஸ் அணிந்த போராளியின் வார்த்தைகளுக்கு பின் உடுப்பு மட்டுமில்லை. தங்கச்சி, அண்ணன், பிள்ளைகள் என்றே பழகும் இயக்கத்தில் கட்டுப்பாடுகளும், ஒழுக்கமும் அதிகம் என்றாலும், அங்கும் பாலியல் அத்து மீறல்கள் உண்டு, அதற்காக பலர் தண்டிக்கப் பட்டார்கள் என்பது பெண்களுக்கான் நிலை எங்கும் ஒன்றுதான் என்பதையே காட்டுகின்றது.

இறுதியுத்ததில் பெண் போராளிகள் கிட்டத்திட்ட கைவிடப்பட்ட நிலையில்தான் இருந்திருக்கின்றார்கள். சரியான் வழிகாட்டுதலில்லை. தலைமையும், இன்ன பிற தலைவர்களும் பத்திரமாக தப்ப யோசனை செய்தவர்களுக்கு, பெண்களை பற்றிய கவலையில்லை. போராட்டத்திற்கு பின்னார் அவர்களின் நிலை பல வகையிலும் பயங்கரமானதாகத்தான் இருந்திருக்கும். தமிழினி சரண்டைந்ததாலும், அவர் முக்கிய பொறுப்பிலிருந்ததாலும் சில விஷயங்களிலிருந்து தப்பியிருக்கலாம். ஆனால் இசைப்பிரியா போன்றவர்களின் நிலைக்கு யார் பொறுப்பாவார்கள்.

ஒரே நாளில் இரண்டு முறை படித்த புத்தகங்களில் இதுவும் ஒன்று. 

புலிகளை பற்றி இவ்வளவு விமர்சனங்களை அதுவும் இயக்கத்திலிருந்த ஒருவரே எழுத தைரியம் வேண்டும். பல முறை அவர் துப்பாக்கி குண்டுகளிலிருந்தும், வெடி குண்டு ஷெல்களிலுருந்தும், வாகன விபத்துகளிலிருந்தும் தப்பியது இது போன்ற ஒரு ஆவணத்தை பதிவு செய்யத்தான் போலிருக்கின்றது. 

வழக்கம்போல இப்புத்தகத்தை பற்றியும் பெரிய விவாதமோ, பரபரப்போ இல்லை. இணையத்தில் தேடினால் ஒன்றிரண்டு குறிப்புகள் வருகின்றன. நண்பரிடமிருந்து இரவல் வாங்கி படித்தேன். சொந்தமாக வாங்க வேண்டிய புத்தகம்.

2 கருத்துகள்:

  1. முன்னரே இதன் விளம்பரம் / விமர்சனம் படித்து வாங்கவேண்டிய என்னுடைய புத்தக லிஸ்ட்டில் வைத்துள்ளேன். இது மாதிரி வரும் உண்மைகளை பொதுவெளியில் சொல்லமாட்டார்கள். இதுவே இவர் இந்திய அமைதிப்படை பற்றி எழுதியிருந்தால் நம் ஊடகங்கள் இதை வைத்து கல்லா கட்டியிருப்பார்கள். இணையதளங்களிலும், முகநூலிலும் விவாதங்கள் தூள் பறந்திருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது போன்ற நூலை ஒரு வெளியாள் எழுதியிருந்தால் கும்மியிருப்பார்கள். எழுதியவர் புலிகள் இயக்கத்தில் பெரிய பொறுப்பிலிருந்த ஒருவர் என்பதால், வேறு வழியின்றி மூடிக்கொண்டிருக்கின்றனர். அவர் மீதும் வழக்கம் போல அவதூறுகள் வீசப்பட்டதாகவே நூலிலும் எழுதியிருக்கின்றார்

      நீக்கு