06 மார்ச் 2017

ஆர் எஸ் எஸ் - மதம் மதம் மதம் - பா ராகவன்

ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் என்ற பெயரில் ஹெட்கேவரால் ஆரம்பிக்கப்பட்டு, குருஜி என்றழைக்கப்படும் கோல்வாக்கரால் வளர்க்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ் பற்றி பா ராகவன் எழுதியுள்ள வரலாற்று புத்தகம். 

ஆர்.எஸ்.எஸ்ஸை பற்றி புத்தகம் என்றவுடன், அதனை பற்றி முழுமையாக எழுதப்பட்ட புத்தகம் என்று நினைத்தது என் தவறுதான். ஆர்.எஸ்.எஸ் பற்றி தமிழக மக்களுக்கு அந்தளவிற்கு பரிச்சியம் கிடையாது. ஏதோ ஒரு ஹிந்திக்கழகம் என்று பலர் நினைத்து கொண்டிருக்கலாம். அதைப் பற்றி எழுதப்பட்ட புத்தகம் என்பது நமக்கு ஆர்.எஸ்.எஸ் பற்றி முழுமையான் சித்திரத்தை தருகின்றது என்றால் இல்லை. இல்லவே இல்லை. விமர்சனம் என்பது தேவைதான்.ஆர்.எஸ்.எஸ் ஒன்றும் தவறே செய்யாத இயக்கமல்ல, ஆனால் மதத்தின் பெயரால் தவறை மட்டுமே செய்கின்ற இயக்கம் என்னும் சித்திரத்தை இந்நூல் தருகின்றது.

காந்தி படுகொலையில் ஆரம்பித்து குஜராத் கலவரம் வரை பல விஷயங்களில் ஆர்.எஸ்.எஸ் பெயர் அடிபட்டு எதையும் நிரூபணம் செய்ய முடியாமல் போனது. அதே வேலைதான் இப்புத்தகமும் செய்கின்றது. ஆர்.எஸ்.எஸ் மதத்தை மட்டும் கட்டிக் கொண்டிருக்கும் இயக்கம் என்று பேசும் ஆசிரியர், ஆர்.எஸ்.எஸ் செய்யும் பல நல்ல விஷயங்களை பற்றி எவ்வித அறிமுகமும் செய்யவில்லை. முழுக்க முழுக்க மக்கள் அமைதியை கெடுக்கும் ஒரு இயக்கம் என்ற தோற்றத்தையே தர முயற்சி செய்கின்றார். அவர்களின் சேவையை குறிப்பிடும் சில இடங்களில் கூட அதற்கு ஒரு உள்நோக்கம் உள்ளது போன்றே குறிப்பிடுகின்றார்.

ஆர்.எஸ்.எஸ் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவர்கள் தவிர்க்க வேண்டிய முக்கிய புத்தகம். காரணம் விமர்சனமல்ல, விமர்சனம் செய்யக்கூடாத இயக்கம் என்று ஒன்றுமில்லை. ஹிஸ்புல்லா, ஹமாஸ் போன்ற இயக்கங்களையே போராளிகள், மக்கள் ஆதரவு பெற்றவர்கள் பாலஸ்தீனத்தில் பல நல்லது செய்பவர்கள் என்றெல்லாம் எழுதும் அதே ஆசிரியர், ஆர்.எஸ்.எஸ்ஸின் சேவைகளில் ஒன்றை கூட பாராட்டி எழுத மாட்டேன் என்பது அவர் உரிமை. அப்புத்தகத்தை தவிர்ப்பதும் நம் உரிமை. 

2 கருத்துகள்: