31 ஜூலை 2017

இரவல் காதலி - செல்லமுத்து குப்புசாமி

நாவலைப் பற்றிய பல குறிப்புகள் இதை ஒரு ஐடி துறை சம்பந்தப்பட்ட நாவல் என்று கூறுகின்றன. ஐடி துறையின் வளர்ச்சி காரணமாக சமூகத்தில் உண்டான மாற்றங்களை பேசுகின்றது என்றும் எழுதியிருந்தார்கள். பாத்திரங்கள் ஐடி துறையில் வேலை செய்வதால் மட்டுமே அப்பாத்திரங்களின் அனைத்து செயல்களுக்கும் அத்துறையே காரணம் என்ற மொன்னையான அபிப்ராயம் மட்டுமே இது. கள்ளக்காதல் எல்லா துறைகளிலும் நடக்கக்கூடியது. 

கதை ஆரம்பம் என்னவோ ஐடி உலகை காட்டுவது போலத்தான் ஆரம்பிக்கின்றது. ஒவ்வொரு துறைக்கும் சில தனித்துவமான சில விஷயங்கள் உண்டு. கதையோடு ஒட்டி அத்துறை ஞானத்தை கொஞ்சம் நம்முள் கடத்தலாம். அப்படி செய்தால் மட்டுமே அந்த நாவலை துறை சார்ந்த நாவல் என்று கூறலாம். உதாரணம் ஆழி சூல் உலகு, கரைந்த நிழல்கள்.  இதில் அது போன்ற விஷயங்கள் ஏதுமில்லை. சொல்லப்படும் சின்ன சின்ன விஷயங்களும் படிப்பவர்களிடம் ஒரு எதிர்மறை விளைவை ஏற்படுத்தும்படி ஒரு வித கிண்டலாகவே சொல்லப்படுகின்றது

ஐடி துறையை பற்றி ஆரம்பிக்கும் நாவல் கடைசியில் ஒரு கள்ளக்காதலில் சென்று சேர்கின்றது. 


ஐடி துறையில் வேலை செய்பவர்களில் பலருக்கு அவர்கள் வாங்கும் சம்பளம் அவர்களிடம் ஒரு குற்ற உணர்வை உண்டாக்கி விடுகின்றது போல. செய்யும் தொழிலை பழிப்பதில் முதலிடத்தில் இருப்பவர்கள் அவர்கள்தான். ஐடி கூலி, அடிமை வேலை, வெள்ளைக்காரனுக்கு அடிமை என்று பல வகையில் அவர்களை அவர்களே செருப்பால் அடித்துக் கொள்கின்றார்கள். ஐடி துறை பற்றிய விமர்சனம், கேவலமான ஒப்புமை. டயபர் மாற்றும் அளவிற்கு தகுதியிருப்பவனுக்கு அந்த வேலைதான் கிடைக்கும். பிறகு என்ன குழந்தைக்கு ஆப்ரேஷனா செய்ய முடியும். ஐடி துறை முழுவதும் ஏதோ வெள்ளைக்காரனுக்கு வேலை செய்வது போலவும், அவன் தூக்கி போடும் சொற்ப பணத்திற்காக உயிரை விடுவது போன்ற பிரமையை இன்னும் எத்தனை காலத்திற்குதான் வளர்க்க போகின்றார்களோ. பல சிறிய நிறுவனங்கள் இன்றும் தங்களுக்கென ஒரு சாம்ராஜ்யத்தை வைத்து நடத்தி வருகின்றது. சில ஏரியாக்களில் பெரிய நிறுவனங்கள் ஆட்டத்திலேயே கிடையாது. 

ஒரு சாதரண கள்ளக்காதல் கதைக்கு ஐடி துறை என்ற கோட்டிங்கை தடவி தந்திருக்கின்றார். 

எளிதான பாத்திரங்கள், யூகிக்க முடிந்த காட்சிகள், சினிமாத்தனமான முடிவு. நடுநடுவே மானே தேனே போல சில ஐடி ஜார்கன்கள். வேறு ஒன்றும் கிடையாது. நடுவே சாரு பாணியில் ஒரு பெரிய சாட்டிங் ஹிஸ்டரி. அலுப்பான நடை. ஓசியில் கிடைத்தால், பயணத்தின் நடுவில் படிக்கலாம், வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டே படிக்கலாம்.

மேஜர் சுந்தர்ராஜனை பற்றி யாரோ எழுதியிருந்த ஒரு வரி நினைவிற்கு வருகின்றது. பூவர் மேன்ஸ் ரங்கராவ் என்று. அதே போல் இவர் பூவர் மேன்ஸ் சேத்தன் பகத். 

2 கருத்துகள்:

  1. "பல சிறிய நிறுவனங்கள் இன்றும் தங்களுக்கென ஒரு சாம்ராஜ்யத்தை வைத்து நடத்தி வருகின்றது. சில ஏரியாக்களில் பெரிய நிறுவனங்கள் ஆட்டத்திலேயே கிடையாது." உங்களது தற்போதைய நிறுவனத்தை சுட்டி காட்டுகிறீரோ

    ஐடி துறையில் இருப்பதால் உங்களுக்கு அத்துறையை சாடும் போது கோவம் வரலாம்...நியாயம் தான்!!

    உங்களிடம் ஒரு கேள்வி.... உங்களின் பதிவுகள் அனைத்தும் உங்கள் அலுவல் வேலை நேரத்தின் போதே வருகிறதே?? அதுவும் மதிய உணவுக்கு பிறகே வருகிறதே??? ஏதேனும் பிரத்தியேக காரணங்கள் உண்டோ??? விளக்கவும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்களையும் காதுகளையும் திறந்து வைத்திருந்தால் நமது துறை பற்றி பல விஷயங்கள் தானாக தெரியவரும், அது நம்முடைய நிழலின் கீழ் நடக்கவேண்டும் என்பதில்லை.

      துறையை சாடுகிறதா, இந்தநாவலில் அப்படிப்பட்ட வஸ்துவெல்லாம் ஏதுமில்லை. இதை ஐடி துறைநாவல் என்று நினைப்பவர்களின் குறிப்புகளினால் வந்த எரிச்சல்.

      பதிவுகள் வரும் நேரத்தைப் பற்றி விளக்குவதற்கும் இந்த புத்தக அறிமுகத்திற்கும் என்ன சம்பந்தம்? விளக்க வேண்டிய அவசியமில்லை என்று நினைக்கின்றேன்.

      நீக்கு