29 ஆகஸ்ட் 2017

குருதிப்புனல் - இந்திரா பார்த்தசாரதி

விகடனில் ஈ.வெ.ரா பற்றிய தொடர் வரலாற்று நாயகர்கள் தொடரின் ஒரு பகுதியாக வெளிவந்து கொண்டிருந்தது. அலுவலகத்தில் அப்போது வெட்டியாக இருந்த காரணத்தால் விகடன் பின்னூட்டப் பகுதியில் அனைவருடனும் சண்டை போட்டுக் கொண்டிருந்தேன். ஈ.வெ.ரா பற்றிய எனது விமர்சனங்களுக்கு பலர் வந்து என்னுடன் சண்டைப் போட்டுக் கொண்டிருந்தனர். 

கீழ வெண்மணி சம்பவத்தைப் பற்றி அவர் எதுவும் சொல்லவில்லை என்று எங்கோ படித்ததை ஒரு வாதமாக அங்கு வைத்த போது அதற்கு பதில் மட்டும் வரவில்லை. விதவிதமா விளக்கெண்ணை பதில்கள் கிடைத்தன. அதைப் பற்றி தேடிப்படித்த போது பல விபரங்கள் கிடைத்தன. அதிலொன்று அதை அடிப்படையாக வைத்து இ.பா ஒரு நாவல் எழுதியிருக்கின்றார். 

குருதிப்புனல் என்ற நாவலின் பெயர் அதற்கு முன்னரே பரிச்சியம். கமல் அதை தன் படத்திற்கு தலைப்பாக வைத்ததும், “ப்” ஐ விட்டுவிட்டு தலைப்பை வெளியிட்டதும் பின்னர் அதை சேர்ததும், பின்னர் தலைப்பை வைத்து இது இ.பாவிற்கு சொந்தமான தலைப்பு என்று சர்ச்சையானதும் நினைவிலிருக்கின்றது.


இ.பாவின் எழுத்துக்களின் மீதான அலர்ஜ்ஜியால இதுவரை இந்நாவலை படிக்காமலிருந்தேன். கிண்டிலில் குறைந்த விலையில் (37) கிடைத்ததும் வாங்கிவிட்டேன். 

கிராமத்தில் வசிக்கும் தன் நண்பன் கோபாலை பார்க்க வரும் சிவா அங்கு நடக்கும் பிரச்சினைகளில் சிக்கிக் கொள்கின்றான். கீழவெண்மணியின் அடிப்படையில் எழுதப்பட்டது என்ற தகவலே நாவலின் பலமும் பலவீனமும். அந்த சம்பவத்தின் அடிப்படை விவசாயிகளின் கூலிப் பிரச்சினை. இந்த நாவலில் அது ஒரு தனிமனித ஈகோ பிரச்சினையாக மாறிப் போகின்றது. ஒரு நாவலாசிரியருக்கு அந்த உரிமையுண்டு. 

அந்த காரனம் மாறுவதால் மட்டும் சம்பவத்தின் தீவிரம் குறைவதில்லை. பல உயிர்களை எரித்து கொல்வது என்ற மிருகத்தனம் நியாயப்படுத்தப்படுவதில்லை.  கூலிஉயர்வோ, தனிமனித பிரச்சினையோ, ஒருவனை மிருகமாக்குவது அவனிடமிருக்கும் அதிகார மமதை, திமிர். பணம் எல்லாம் செய்யும் என்ற நம்பிக்கை, அரசு இயந்திரம் போடும் சலாம் எல்லாம் காரணங்களைப் பொறுத்து மாறுவதில்லை.

ஒரு நாவல் என்ற வகையிலும் சிறப்பாகவே அமைந்திருக்கின்றது. சில இடங்களில் வழக்கமான அறிவுஜீவித்தனம் எட்டிப்பார்த்தாலும் அதை விலக்கி விட்டு பார்த்தால் இது ஒரு முக்கிய நாவல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக