22 அக்டோபர் 2018

சொன்னால் நம்பமாட்டீர்கள் - சின்ன அண்ணாமலை

புனைவுகளை விட வரலாறு சுவாரஸ்யமானது, நிஜத்தில் நடக்கும் பல விஷயங்கள் கற்பனையில் கூட நடக்காது. தர்க்கத்திற்கு அப்பாற்பட்டது வாழ்க்கை. அதனாலேயே, அனுபவங்களை கூறும் புத்தகங்கள் எனக்கு சுவாரஸ்யமாக படும். அந்த வகையில் படித்த ஒரு நல்ல சுவாரஸ்யமான நூல் "சொன்னால் நம்பமாட்டீர்கள்". தமிழ்ப்பண்ணை என்ற பெயரில் பல நல்ல தமிழ் நூல்களை பதிப்பித்த சின்ன அண்ணாமலை அவர்கள் எழுதியது.

சின்ன அண்ணாமலை, கல்கி யின் நெருங்கிய நண்பர். காங்கிரஸ்க்காரர். தப்பாக நினைக்க வேண்டாம். இது ஒரிஜினல் காந்தி காங்கிரஸ். போலிகளை நினைத்து திட்டாதீர்கள். பொது வாழ்வில் நேர்மை, தூய்மை, ஒரு லட்சிய வேகம் போன்றவற்றை கொண்ட மனிதர்கள் வாழ்ந்து வந்த ஒரு காலகட்டத்தின் சிறிய பார்வை.  காந்தியின் ஆளுமை எந்தளவிற்கு பரவியிருந்தது என்பதற்கு சின்ன அண்ணாமலை ஒரு உதாரணம். காந்தியால் ஈர்க்கப்பட்டு அரசியலில் நுழைந்து, அதனால் சிறையில் அடைப்பட்டவர். திருவாடனையில் சிறை வைக்கப்பட்ட அவரை ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டு சென்று, சிறையை உடைத்து கொளுத்தி அவரை விடுதலை செய்திருக்கின்றார்கள் என்பது வியப்பான செய்தி. அந்நிகழ்ச்சியில் பலர் உயிரையும் இழந்திருக்கின்றனர். மக்களிடையே அக்காலத்தில் ஏற்பட்ட சுதந்திர வெறியின் உச்சம். 

ராஜாஜியின் மீது அதிக பக்தி கொண்டவர். டிகேசி, ம.பொ.சி, ஏ.கே.செட்டியார், கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை என்று பலருடன் நெருக்கமாக இருந்துள்ளார். நமக்கு தெரிந்த பல பிரபல சம்பவங்களுக்கு பின்னால் இவர் இருந்திருப்பது இப்புத்தகம் மூலமே தெரிகின்றது.  


கப்பலோட்டிய தமிழன், இந்தளவிற்கு பிரபலமடைய அவர் பதிப்பித்த புத்தகமும் காரணம், அதை எழுதியவர் மா.பொ.சி. விற்காமல் இருந்த புத்தகத்தை அனைவரிடமும் சேர்ப்பித்தவர். அதோடு, வீரபாண்டிய கட்ட பொம்மன், கப்பலோட்டிய தமிழன் என்ற இரண்டு திரைப்படங்களும் உருவாக காரணமாகவும் இருந்திருக்கின்றார். சரோஜதேவியை அறிமுகப்படுத்தியவரும் இவரே.

இந்த நூல் நாமறிந்த பலரின் ஆளுமைகளையும் நமக்கு காட்டுகின்றது. 

ராஜாஜி, பலரால் விமர்சிக்கப்படும் அவரது ஆளுமை எத்தகையது. அவரது புத்தி கூர்மை, சபாநாயகர் பதிவி கேட்கும் ஒருவரை சோதித்துவிட்டு,  ஹரிஜன் என்பதை மட்டுமே ஒருவர் தன் தகுதியாக கூறக்கூடாது, அவர்களுது திறமையை வளர்த்து கொண்டு அதை வைத்து அவர்கள் வளர வேண்டும் என்று கூறும் அவரே, உடல்வாகு இல்லாத காரணத்தால் காவலர் வேலை கிடைக்கத ஒரு ஹரிஜன் இளைஞருக்கு உதவுகின்றார் "அவர் ஹரிஜன், அவருக்கு உணவு கிடைப்பதே பெரும்பாடு" என்று அங்கு தகுதியை ஓரம் வைக்கின்றார். ஓட்டுக்காக சிந்திக்காத  தலைவர். தமிழகத்தில் காங்கிரஸ் அழிய காரணமாக ராஜாஜி - காமராஜரின் மோதலை காட்டுகின்றார். இருவருக்குமான மோதலே காங்கிரஸை சிதைத்து என்பது ஓரளவிற்கு ஊகிக்க கூடியதுதான். தவறு எங்கு என்பது அவரவர் சிந்தனைக்கு.

இன்னொரு ஆளுமை கல்கி. எழுத்தாளர்கள் கஷ்டப்படுகின்றார்கள் என்பதே அன்றிருந்து இன்று வரை நிலை. ஆனால் எழுத்தின் மூலம் சாதித்தவர் அவர். சின்ன அண்ணாமலைக்கு காரை பரிசளிக்கின்றார், அவர் கடன்பட்ட போது 6000 தந்து உதவுகின்றார். கல்கியை ஓமந்தூரார் அவரது மந்திரி சபையில் சேருமாறு அழைக்கின்றார். எழுத்து தந்த பலம். அவரளவிற்கு எழுத்தால் சாதித்தவர்கள் யாரும் கிடையாது என்ற எண்ணம் வருகின்றது. 

எழுத்தாளர், காந்தியின் ஹரிஜன் பத்திரிக்கையை தமிழில் நடத்தியவர், திரைப்பட கதாசிரியர், திரைப்பட தயாரிப்பாளர், பதிப்பாளர், அரசியல்வாதி, பேச்சாளர், ஒரு காலத்து தீவிரவாதி என்று பல முகங்கள் கொண்டவர். 

நல்ல எழுத்தாளர். கட்டுரைகள் அவரைப் பற்றியது, அவர் செய்த பல பெரிய விஷயங்களைப் பற்றியது என்றாலும் அதில் ஒரு தற்பெருமை தோன்றிவிடாதபடி எழுதியிருக்கின்றார். 

பல பக்கங்களை மெல்லிய சிரிப்பை வரவழைக்கும்.

படிக்கலாம். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக