என்னைப் பற்றி

பெயர் ரெங்கசுப்ரமணி. சிறுவயது முதல் புத்தகங்களுடன் வளர்ந்தவன். எம்.சி.ஏ படித்து விட்டு பெங்களூரில் பணியிலிருப்பவன். பிளாக் ஆரம்பித்த பதிமூன்றாவது நாளில் ப்ளாக்கர் பதவியுடன் அப்பா பதவியும் அடைந்தவன். 

கடவுள் நம்பிக்கையும், பக்தியும் உண்டு. அதற்காக வாரா வாரம் கோவிலுக்கு போய் தொந்தரவு செய்யும் பழக்கம் இல்லை. நம் வேலையை செய்வோம், பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடையவன். திருப்பதி பெருமாளும், ரெங்கநாதரும் இஷ்ட தெய்வங்கள். அங்கு மட்டும் போக மனம் விரும்பும். வேறு எங்கு போனாலும் அவர்களே அங்கும் எனக்கு தெரிவார்கள்.

மற்றுமொரு பிடித்த விஷயம் இசை. கர்நாடக இசை கேட்க பிடிக்கும், அதன் நுணுக்கங்கள் எல்லாம் தெரியாது, கேட்பதுடன் சரி. பாலமுரளி கிருஷ்ணா, எம்.எஸ், பாம்பே ஜெயஶ்ரீ இவர்களின் பாடல்கள் அதிக விருப்பம். பாம்பே ஜெயஶ்ரீயின் ஆத்மா ஆல்பமும், எம்.எஸ்ஸின் குறையொன்றுமில்லையும், பாலமுரளியின் ராமதாச கீர்த்தனையும் அடிக்கடி வீட்டில் நிறையும். சினிமாவில் இளையராஜா. கொஞ்சம் பழைய பாடல்கள், மனநிலையை பொறுத்து ஹெட்போனில்.

புதிதாய் பார்ப்பவர்களுக்கு அதிகம் பேசாத, சிரிக்காத, அமைதியின் வடிவம், பழகியவர்களுக்கு நான்ஸ்டாப் நான்சென்ஸ்.

புத்தகங்களை பற்றி மட்டும் எழுத நினைத்து, அதோடு நினைத்ததையும் எழுதி வைக்கின்றேன். அவ்வப்போது நானடைந்த அனுபவங்கள் கொஞ்சம் கற்பனை கலந்து வரும். படிப்பவர்களுக்கு எரிச்சல் வரும் அளவிற்கு எழுதவில்லை என்று நினைக்கின்றேன். வந்தாலும் ஒன்றும் செய்வதற்கில்லை, படித்ததற்கு பரிசு.