30 ஜனவரி 2013

தி. ஜானகிராமன் சிறுகதைகள் - 11



முந்தைய பகுதிகள்


பகுதி 9
பகுதி 10



101. பாரிமுனை டு பட்ணபாக்கம்

   
       இரு போன்ற மனிதர்களை பல முறை பல இடங்களில் பார்த்திருப்போம். அதை எப்படி ஒரு கதையாக்குவது என்பதுதான் சூட்சுமம். ஒரு குடிகாரன் டிராமில் செய்யும் அட்டகாசம். அவனது பேச்சுதான் கதை முழுவது. நன்கு ரசிக்கலாம்

102. கம்ப்ளெய்ண்ட்

       அரசாங்க அலுவலகத்தில் நாம் தரும் கம்ப்ளெய்ண்ட்களின் கதி என்ன? சாதாரண சிறு அலுவலகங்களிலேயே கஷ்டம். மிகப்பெரிய ஒரு யந்திரமான ரயில்வே பற்றி புகார் அளித்தால்? சாப்பாடைப் பற்றி ஒரு புகார், அது என்னவாகின்றது?

103. வேதாந்தியும் உப்பிலியும்

       வேதாந்தி முஸ்லீமாக மதம் மாறிவர், உப்பிலி ஒரு வாய்ச்சவடால் ஆசாமி. சீமாண்டி உப்பிலியின் அண்ணா பையன். அவர்களின் உரையாடல் தான் இக்கதை.


        நமது அரசியல்வாதிகளை நக்கலடிக்கும் கதை. டெல்லியில் யாரையாவது பார்த்திருப்பார் போல, தனியாக பார்க்க வேண்டுமா என்ன எல்லாரும் ஒரே மாதிரிதானே. உளுந்து வாரியத்தலைவருக்கு ஏகப்பட்ட மரியாதை, அதைக் கண்டு வியக்கும் ஒரு சாதரணர். அவர் ஒரு நாட்டின் மந்திரி.


        மீண்டும் உப்பிலியும் சீமாண்டியும். அவரைக் காண வரும் கோவிந்து. அவர்தான் நாதரட்சகர். தனக்குதானே அட்சதை போட்டுக் கொள்ளும் ஒரு கேரெக்டர்.

106. மிஸஸ் மாதங்கி.

        அதிகார வர்கத்தின் முகத்தைக் காட்டும் கதை. பெரிய பதவியில் இருப்பவர்கள் ஒரு தனி ரகம். அதுவும் அரசாங்க பதவியில் இருப்பவர்களை தனியாக கண்டு பிடிக்கலாம். ரயில் நிலையத்தில் நிற்கும் போது அவர்களை தனியாக கண்டு பிடிக்கலாம். ஒரு விரைத்த முகம், ஒரு அலட்சிய பார்வை, வித்தியாசமான உடல் மொழி. அப்படி பட்ட ஒரு அதிகார கோத்திரத்தின் ஒரு புள்ளி மாதங்கி. அவரிடம் மாட்டிக் கொள்ளும் ஒரு சாதாரண கோத்திரன்.


       ஒரு பெரிய மனிதர். அக்கால கிசு கிசு. பல பெரிய மனிதர்களின் ரசனை இப்படித்தான் இருக்கும் போல.

27 ஜனவரி 2013

சொந்த ஊர் புராணம்

எனது சொந்த ஊர் கோம்பை. தேனி மாவட்டத்தில் உத்தமபாளையத்திற்கு அருகில் ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. கோம்பை என்றால் மலைகள் சூழ்ந்த பகுதி என்பார்கள். ஏகப்பட்ட கோம்பைகள் தமிழகத்தில் உள்ளது. 

கோம்பை நாய்களுக்கு பெயர் போனது. வேட்டை நாய்கள். இப்போது உள்ளது போல் தெரியவில்லை. நான் பார்த்ததும் இல்லை. இரண்டு கோம்பை நாய்கள் சேர்ந்தால் ஒரு சிறுத்தையைக் கூட கொல்லும் என்பார்கள். கோம்பை நாய்களுக்கு பேச்சுவார்த்தையில் நம்பிக்கை கிடையாது, நேரடி நடவெடிக்கை.   எதிரியைக் கண்டு குலைத்து நேரத்தை வீணடிக்காமல் நேரடியாக பாய்ந்துவிடும்.

கோம்பையின் மற்றொரு பெருமை, தேர். மிகப்பெரிய தேர் திருவாருர் தேர். அது அகலம், உயரம் குறைவு. உயரமான தேர் ஶ்ரீவில்லிபுத்தூர் தேர். அதற்கு அடுத்த உயரமான தேர் கோம்பைத் தேர். இத்தேர்க்கு சொந்தக்காரரும் ரங்கமன்னார் தான். இக்கோவிலில் குடி கொண்டுள்ளவரும் ரெங்கநாதர்தான். ஊருக்கு வெளியில் மலையடிவாரத்தில் நிம்மதியாக தூங்கிக் கொண்டுள்ளார். யாரும் அவரை தொந்தரவு செய்வதுமில்லை. சனிக்கிழமைகளில், மாத முதல் தேதியில் மட்டும் அவரை எழுப்பி தங்கள் வருகையை பதிவு செய்வார்கள் பக்தர்கள். புரட்டாசி ஐந்து சனிக்கிழமைகளும் அவர் பிசி. காலை ஆறு முதல் மாலை ஏழு வரை. மற்ற நாட்களில் அவரும் என் அப்பாவும் மட்டும்தான்.

அந்த அழகான தேர் ஜாதிக் கலவரத்தால் நின்று போனது. பத்துநாள் உற்சவம். எனக்கு தெரிந்து தேரோட்டம் மொத்தம் நான்கு முறை தான் நடைபெற்றுள்ளது இந்த முப்பது வருடங்களில்.

ஊரில் எனக்கு தெரிந்து வேறு சிறப்புகள் இருக்கலாம், ஆனால் நான் கோவிலைச் சுற்றி வளர்ந்ததால் அதைப் பற்றி தான் அதிகம் பேச முடியும். கோவில் அமைந்துள்ள அழகிய மலையடிவாரம், மேலேறினால் கேரளா. ராமக்கல் மெட்டு என்று அழைக்கப்படும். அப்பெயருக்கு காரணம் இக்கோவில்தான். 

ராமக்கல் மெட்டு பற்றி ஜெயமோகன் தளத்தில் இங்கே. அதில் குறிப்பிடப்பட்டுள்ள குறவன் குறத்தில் சிலை, இம்மலை மேல் உள்ளது. அங்கிருந்து கீழிறங்கினால் கோம்பை. 

ராமக்கல் மெட்டு பெயர்க் காரணத்தை கீழேயுள்ள புகைப்படங்கள் சொல்லும்.

24 ஜனவரி 2013

தி.ஜானகிராமன் சிறுகதைகள் - 10


முந்தைய பகுதிகள்


       அனைவரும் விரும்பும் தபால்க்காரர் தாத்தாச்சாரி, தள்ளாத வயதிலும் ஊர் ஊராக நடக்கும் பெரியவர். அவர் நடந்து நடந்து மறக்க நினைப்பது அவர் மனைவியுடன் வாழ்ந்த வாழ்க்கையை. ரயிலில் தவறான பாதையில் ஒரு முறை சென்ற மனைவியுடன் ஒரே வீட்டில் இரண்டு குடித்தனங்கள் நடத்திய நினைவை மறக்க நடக்கின்றார், நடந்து கொண்டே இருக்க நினைக்கின்றார்.

92. பஞ்சத்து ஆண்டி

     தொழில் நசிந்து போன ஒரு நெசவாளி. பஞ்சம் பிழைக்க ஊர் விட்டு ஊர் வந்து கடைசியில் பிச்சை எடுக்கும் நிலைக்கு வருகின்றான். அவனின் நிலையைக் கண்டு பரிதாபப்படும் குரங்காட்டி அவனது மற்றொரு குரங்கை அவனிடம் தந்து அவனை அதை வைத்து பிழைக்குமாறு கூறுகின்றான். பஞ்சத்து ஆண்டிக்கு பரம்பரை ஆண்டியைப் போல் இருக்க முடியாமல், குரங்கை சாக விட்டு விடுகின்றான். பாவம்.

93. நான்தான் ராமன் நாயர்

       ஆஸ்பத்திரியில் இருக்கும் ஒரு வித்தியாசமான கேரெக்டர். பிழைக்க வழியில்லாமல் மருத்துவமனையில் நோயாளி என்ற போர்வையில் உண்டு உறங்கும் ஒரு ஆள். கடைசியில் அதுவே ஒரு தொழிலாகின்றது, அங்குள்ள நோயாளிகளுக்கு எடுபிடி வேலை செய்து வாழ்கின்றான். கடைசியில் ஒரு நாள் வெளியேற்றப் படுகின்றான்

22 ஜனவரி 2013

நடந்தாய் வாழி காவேரி - தி. ஜா, சிட்டி

எப்போதும் போல சுயபுராணத்துடன் ஆரம்பிக்கின்றேன். என்னிடம் எனக்கு தெரிந்த ஒரு நல்ல குணம், அடுத்தவரைப் பார்த்து பொறாமை படும் குணம் இல்லை, அவரிடம் உள்ளது நம்மிடம் இல்லையே என்று யோசித்ததில்லை, நமக்கு தேவையானது நம்மிடம் உள்ளது என்று திருப்தி படும் ஜாதி. ஆனால் இரண்டு விஷயங்களை கண்டால் மட்டும் ஒரு பொறாமை, அல்லது ஒரு வயித்தெரிச்சல் என்று கூட சொல்லலாம்.

ஒன்று காடு மலை என்று சுற்றித்திரிபவர்களையும், இசையை அதன் நுணுக்கத்துடன் அனுபவித்து ரசிப்பவர்களையும் கண்டால், என்னால் அது முடியவில்லை என்று  கண்டிப்பாக ஒரு பொறாமை ஏற்படும். டபுள் வயித்தெரிச்சல் இப்புத்தகத்தை படித்து. 

என் சொந்த ஊர் ஒரு காய்ந்த பகுதி, மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் என்றாலும், அது ஒரு மழை மறைவு பிரதேசம். எங்களூரிலிருந்து ஆறு கி.மீ சென்றால் முல்லையாறு, ஒரு முறைகூட அதில் குளிக்கும் பாக்கியம் கிடைத்தில்லை. ஊரிலிருந்த பத்தொன்பது வருடங்களும், வீடு, பள்ளி, புத்தகங்கள் (பாட புத்தகங்கள் அல்ல) என்றே இருந்துவிட்டேன். ஊரிலிருந்த மலையில் கூட ஏறியதில்லை. ஆனால் அனைத்தையும் செய்ய ஆசை உண்டு. அந்த ஆசை இப்புத்தகம் மூலம் நிறைவேறியது.

பயணங்களைப் பற்றி படித்தது என்றால் வெகு குறைவு. எஸ். ரா விகடனில் எழுதியது, அது எனக்கு போரடிக்க ஆரம்பித்து. ஒரு கிராமத்தில் ஆட்டு மந்தை கடந்து செல்வதை சிலாகித்து பத்து பக்கம் எழுதினால் எப்படி படிப்பது. அதன் பின் ஜெ.மோ எழுதும் பயணக்கட்டுரைகள், படிக்கும் போதும், படங்களை பார்க்கும் போதும் நேரில் சென்று பார்க்க வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும். இப்போது கூட அவரது குகைப்பயணத்தை படித்து காதில் புகைவருகின்றது. என்ன செய்ய? 

19 ஜனவரி 2013

பயாஸ்கோப் - அசோகமித்திரன்

அசோகமித்திரனின் கட்டுரை தொகுப்பு. சினிமா பற்றிய கட்டுரைகள் மட்டும். அசோகமித்திரன் சினிமா துறையுடன் நெருங்கிய தொடர்புடன் இருந்து வந்திருக்கின்றார். அந்த அனுபவங்கள் ஏற்கனவே நாவல்களாக மாறி இருக்கின்றது. அதைத் தவிர சினிமா பற்றி எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு. 

இந்திய சினிமா, உலக சினிமா (இந்தியா வேறு உலகம் என்பது பலரின் எண்ணம் போல, பெரும்பன்மையோர் வழியே நம் வழி) பற்றி விபரமாக எழுதியுள்ளார். 

கட்டுரைகளை சினிமா புள்ளிகளை பற்றியவை, குறிப்பிட்ட சினிமாக்களை பற்றியவை, ஜெமினி ஸ்டூடியோவின் வரலாறு (கிழக்கில் இருந்து ஏன் இன்னும் ஜெமினி ஸ்டூடியோ - கனவின் கதை வரவில்லை?)  என பல வகையாக பிரிக்கலாம். பல சுவாரஸ்யமான தகவல்களை அவருக்கே உரித்தான சுருக் நறுக் நடையில் எழுதியுள்ளார். சில தகவலகள் மிகப் பழையவை, அது தேவையா, அது ஏன் இப்போது என்று கூட எண்ணலாம், அதற்கு பதில் அவரே தருகின்றார். "மனித நினைவு, மனித தேர்விற்கும் கட்டுபாட்டிற்கும் உட்பட்டதா என்பது சந்தேகத்திற்கு உரியது"