சாவி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சாவி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

13 மே 2017

பழைய கணக்கு - சாவி

சாவி புகழ் பெற்ற பத்திரிக்கையாளர். ஆனந்த விகடன், கல்கி, தினமணிக்கதிர் போன்ற இதழ்களில் பணிபுரிந்துள்ளார். சாவி என்னும் இதழையும் நடத்திவந்தார். குங்குமம் இதழை இவருக்காகவே கருணாநிதி தொடங்கினார் என்றும் எங்கோ படித்த நினைவு. சாவியுடன் நெருக்கமாக பணி புரிந்த ரவி பிரகாஷ் தளத்தில் அவரைப் பற்றி பல சுவாரஸ்யமான விஷயங்களை தெரிந்து கொள்ளலாம். 

சாவியின் இளவயது அனுபவங்களை முன் பின் தொடர்ச்சியில்லாது எழுதி கட்டி வைத்த ஒரு புத்தகம் பழைய கணக்கு. மிகப்பழைய கணக்கு, அனேகமாக எனக்கு ஒன்றிரண்டு வயதிருக்கும் போது வந்திருக்கும் போல. சாவியின் சிறுவயது அனுபவங்கள், பத்திரிக்கை துறையில் அடைந்த சுவாரஸ்யமான அனுபவங்களின் தொகுப்பு. சாவி சிறு வயதில் அதிக கஷ்டப்பட்ட ஒருவர், அதே சமயம் மிகுந்த சேட்டைக்கார ஆசாமி போல. அடிக்கடி வீட்டை விட்டு ஓடுவது, கோவில்களில் உண்டக்கட்டி வாங்கி தின்றுவிட்டு சுற்றுவது, காசில்லாமல் போகும் போது மீண்டும் வீடு திரும்புவது என்று ஜாலியாக இருந்திருக்கின்றார். ஏகப்பட்ட வேலைகளும் செய்திருக்கின்றார். கிங்காங் - தாராசிங் மல்யுத்தத்தை நடத்துவது, விளம்பர பலகைகள் எழுதுவது, போஸ்டர் ஒட்டுவது என்றும் இருந்திருக்கின்றார்.

பல சம்பவங்கள் ஒரு நல்ல சிறுகதைக்கான கருக்களை கொண்டிருக்கின்றது. அவரது நவகாளி யாத்திரை கட்டுரையை பற்றி பலர் எழுதியிருக்கின்றார்கள், ஆனால் அவர் காந்தியுடன் இருந்தது இரண்டு நாட்கள் என்பதுதான் உண்மை. விகடனில் வேலை வாங்க விகடன் பெயரில் பத்திரிக்கை ஆரம்பிப்பதாக கூறி,அதை வைத்தே வேலை வாங்கி, நடத்ததாத பத்திரிக்கையை மூட விகடனிடமே பணத்தையும் பெற்றது எல்லாம் பெரிய நரிகுளிப்பாட்டித்தனம்தான்.

06 மார்ச் 2013

வாஷிங்டன்னில் திருமணம் - சாவி

வீட்டைக் கட்டி பார், கல்யாணம் செய்து பார் என்ற பழமொழி எக்காலத்திற்கும்  பொருந்தும் போல. இன்று இந்த இரண்டும் காண்டிராக்டர்களால் செவ்வனே நடத்தி முடிக்கப்படுகின்றது. இருந்தும் கல்யாண பையனுக்கு மனைவி மட்டும் அல்ல, கல்யாண காண்டிராக்டரும் அமைவது இறைவன் கொடுத்த வரம். 

காண்டிராக்டர் கையில் அனைத்தையும் கொடுத்துவிட்டாலும், உள்ளே ஒரு டென்ஷன் ஓடிக் கொண்டே இருக்கும். அதை யாரிடமும் தர முடியாது. அந்த கடவுளே வந்து கவலையை விடு நான் பார்த்து கொள்கின்றேன் என்றாலும், நமக்கு அவர் யாரவது ஆதிமூலமே என்று கூப்பிட்டு ஓடிவிட்டால் என்ன செய்வது என்ற பயம் இருக்கும். 

இன்றைய விஞ்ஞான வசதிகள் நிறைந்த காலத்திலேயே ஒரு திருமணத்தை நடத்தி வைப்பது இவ்வளவு சிரமம் என்றால், ஒரு ஐம்பது, அறுபது வருடம் முன்பு எப்படி இருக்கும். இங்கு நடக்கும் கல்யாணத்தை அமெரிக்காவில் செய்தால் என்னவாகும்? 

திருவையாறில் வெள்ளைக்காரர்களை பார்த்த சாவி, அதை கொஞ்சம் மாற்றி யோசித்ததன் விளைவு இக்கதை. விகடனில் தொடராக வந்து பெரிய வெற்றி பெற்றது. நாடகமாக கூட வந்துள்ளது என்று நினைக்கின்றேன்.