அமானுஷ்யம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அமானுஷ்யம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

13 மார்ச் 2013

பேய்க் கதைகளும் தேவதைக் கதைகளும் - ஜெயமோகன்

பேய்கள் சுவாரஸ்யமானவை. அனைவருக்கும் ஏதாவது பேய்க்கதைகள் கண்டிப்பாக தெரிந்திருக்கும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பேய்கள் பரிச்சியமாயிருக்கும். சிறுவயதில் சாதாரண கதைகளை கேட்பதில் உள்ள சுவாரஸ்யத்தை விட அமானுஷ்யக்கதைகள் தரும் சுவாரஸ்யம் அதிகம். என் பேய்கள் எனது பள்ளியிலேயே இருந்தது, தேடி அலைய வேண்டியதில்லை. பற்றாக் குறைக்கு எதிரில் இருந்த பள்ளிவாசல் மாடியில் கட்டி வைக்கப்பட்டிருந்த ஒரு ஜின் வேறு. 

பெரும்பாலும் பேய்கள் என்பது நமது மனதில் உருவாவதுதான். தேவதைகளும் அது போலத்தான். சிலரின் பேய்கள் சிலருக்கு தேவதையாகக் கூடும். பேய் பயம் என்பது பெரும்பாலும் உருவாக்கப்படுவதுதான். தானாக அது உருவாவது, உண்மையான பேயை பார்க்கும் போதுதான். தனியாக பல நாள் இருந்த வீட்டில், கூட இருந்தவனின் பேய் அனுபவம் என்னை தூங்க விடாமல் தடுத்தது. 

தமிழகத்தை விட மலையாளத்தில் அதிக அமானுஷ்ய கதைகள் உண்டு என்று நினைக்கின்றேன். தமிழில் அமானுஷ்யக் கதைகளுக்கு என்று வெகு சிலரே இருக்கின்றனர். சிறுவயதில் படித்தது கலாதர் என்பவரின் கதை. அஷ்டமாசித்திகளை விஞ்ஞானத்துடன் கலந்து எழுதியிருந்தார். பிறகு பேய்க்கதை மன்னன் :) பி.டி சாமி. ஆனால் அந்தளவிற்கு உவப்பாயில்லை. சிறுவயதில் படிக்கும் போதே பயம் வரவில்லை. 

இவ்விஷயத்தில் ஓரளவு வெற்றி அடைந்தவர் இந்திரா சவுந்திரராஜன். அவரது ரகசியம், விட்டுவிடு கறுப்பா, ருந்திர வீணை, சிவம், சிவமயம், காற்று காற்று உயிர் என்று அனைத்தும் படிக்க விறுவிறுப்பானவை.  ரகசியம் விகடனில் படு ஆர்வத்துடன் படித்த கதை. கதையின் சஸ்பென்ஸ் உடையும் இடம் கடைசி வரி. அது டி.வி தொடராக இன்னும் அட்டகாசமாக வந்தது. (டிவிடி கூட வந்துள்ளது, செம காஸ்ட்லி. வாங்க நினைத்தவன், மனைவியின் முறைப்பை கண்டு வைத்துவிட்டேன்) காற்று... கதையை இரவில் தனியாக படிக்க ஆரம்பித்து பயந்து வைத்துவிட்டேன். விஞ்ஞானத்தையும், அமானுஷ்யத்தையும் கலந்து, முடிக்கும் போது இரண்டில் எதை நம்புவது என்பதை வாசகனிடம் விட்டு விடும் திறமை இவரது சிறப்பு.