மகாபாரதத்தின் தனித்தன்மையே, அதை நம்மால் பல்வேறு தளங்களில் வைத்து வாசிக்க முடியும் என்பதுதான். பல்வேறு முடிச்சுகள் கொண்ட ஒரு சுவாரஸ்யமான கதையாகவும் வாசிக்க முடியும், தர்ம - அதர்ம விவாதங்களை காட்டும் ஒரு தர்ம நூலாகவும் படிக்க முடியும், முழுக்க முழுக்க ஒரு அரசியல் நூலாக, அரசுகளுக்கிடையிலான விவகாரங்கள், அரசியல் சதிகள் என்று ஒரு அரசியல் நூலாகவும் படிக்க முடியும். அனைத்தையும் விட்டு விட்டு, வெறும் மனிதர்கள், அடிப்படை மனித உணர்ச்சிகள், உறவுகள், அது காட்டும் வித்தைகள் என்று வாசிக்கலாம். அக்கால குடிமுறைகளை கூறும் நூலாகவும் படிக்கலாம்.
மகாபாரதத்தை பலர் பல கோணங்களில் எழுதியிருக்கின்றார்கள். ராஜாஜியின் எளிய சுருக்கம், சோவின் மகாபாரதம் பேசுகின்றது, அதை ஒரு தர்ம - அதர்ம விவாத நூலாகவும், அரசியல் நூலாகவும் பார்க்கின்றது. வெண்முரசு மகாபாரதத்தை பல வித கோணங்களில் காட்டும் ஒரு நூல். பாரதியாரின் பாஞ்சாலி சபதம், வில்லி பாரதம், இரண்டாம் இடம், இனி நான் உறங்கலாமா,காண்டேகரின் யயாதி, இ.பாவின் கிருஷ்ணா கிருஷ்ணா என்று இன்னும் பல ஆக்கங்கள் உள்ளன. சுமார் 300 மகாபாரத ஆக்கங்கள் இருப்பதாக கூறுகின்றனர். நண்பர் ஆர்.வி பலவித மகாபாரதக்கதைகளை தொகுத்து இங்கு அளித்துள்ளார். (அவரே பல மகாபாரத சிறுகதைகளையும் எழுதியுள்ளார்) இவற்றில் முக்கியமான ஆக்கங்களில் ஒன்று பர்வா. ஜெயமோகனும் பலவித மகாபாரத வடிவங்களை பற்றி இங்கே கூறுகின்றார்
பைரப்பா ஒரு புகழ் பெற்ற கன்னட எழுத்தாளர். அவரைப்பற்றிய ஒரு சிறப்பான அறிமுகத்தை ஜெயமோகன் எழுதியிருக்கின்றார். ஆர்வியும் சிலிக்கான் ஷெல்பில் எழுதியிருக்கின்றார்.
