கடல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கடல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

15 ஜூலை 2014

கொற்கை - ஜோ டி குரூஸ்

முதற்கனல் முடித்த பின்னால் அடுத்து கையில் எடுத்தது கொற்கை.

வாங்கி வைத்து பல மாதங்கள் ஆகிவிட்டது. இரண்டு முறை ஆரம்பித்து படிக்க முடியாமல் வைத்துவிட்டேன். இந்த முறை விடவில்லை, நீயா நானா என்று பார்க்கலாம் என்று அமர்ந்துவிட்டேன். முதலில் படிக்க முடியாமைக்கு காரணம் ஆழி சூழ் உலகை படித்த கையோடு இதை எடுத்ததுதான். அதே நினைவில் இதை படிக்க முற்பட்டது, கதைக்கு உள்ளே நுழைய விடாமல் அடித்துவிட்டது.

ஆழி சூழ் உலகு, பரதவர்களின் கதை. இதுவும் அதேதான் ஆனால் வேறு வகை. பரதவர்கள் மீன் பிடித்தொழிலுடன், தோணித்தொழிலும் உள்ளார்கள். அவர்களின் வாழ்க்கையோடு, கொற்கையின் சரித்திரத்தை சொல்லுவதே இக்கதை. சுமார் 70 வருடக்கதை. 

கதை யாரையும் மையமாக கொண்டு அமைந்ததல்ல. கொற்கை நகரை அச்சாக கொண்டது. கொற்கை நகரின் மாற்றங்களே கதை. கொஞ்சம் தப்பினாலும் தூர்தர்ஷன் டாக்குமெண்டரி மாதிரி ஆகியிருக்கும். ஜோ.டி. குருஸின் திறமையால் சுவாரஸ்யமாகியுள்ளது. சில இடங்களில் தொய்வுண்டாகிறது, அலுப்பும் தட்டுகின்றது. நல்லவேளை அம்மாதிரியான பக்கங்கள் அதிகமில்லை.

05 மார்ச் 2014

விடிவதற்குள் வா! - சுஜாதா

ஆழி சூழ் உலகில் பல விஷயங்களிருந்தாலும் அதில் வரும் முக்கிய விஷயமான கிறிஸ்துவ மத மாற்றம் சம்பந்தமான உரையாடல்கள் அதிகம் கவர்ந்தது. கிறிஸ்துவர்களை தவிர மற்ற மதத்தினர் அவர்கள் மதத்தை பற்றி அதிகம் பேசி நான் பார்த்ததில்லை. பேசுவார்கள், பரஸ்பர ஆர்வத்தை பொறுத்து. கோவில்களில் அல்லது பண்டிகை நாட்களில் இது போன்றுதான் இருக்கும். ஆனால் கொஞ்சம் இடம் கிடைத்தாலும் போதனை செய்யும் பல கிறிஸ்துவர்களை கண்டுள்ளேன். போதனை, தங்கள் மதத்தின் சிறப்பு, அவர்களது பெருமை. அதோடு இருந்தால் பரவாயில்லை மற்றவர்களை வம்பிழுப்பதுதான் பிரச்சினை.

எனது ஊரில் இப்போது ஒவ்வொரும் மணிக்கும் பைபிள் வசனம் ஒலிப்பெருக்கி வழியே ஒரு கிலோமீட்டர் தள்ளி இருக்கும் என் வீடு வரை கேட்கின்றது. அனுமதி இலவசம். எங்கள் கோவில் ஊருக்கு வெளியே மலையடிவாரத்திலிருக்கின்றது. பெரும்பாலும் யாரும் வருவதில்லை, சனிக்கிழமைகளில் ஒன்றிரண்டு பேர் வருவதுண்டு. புரட்டாசி ஐந்து சனிக்கிழமைகளில் நல்ல கூட்டமுண்டு. இந்த கூட்டம் கண்ணை உறுத்தி அங்கு சர்ச் கட்ட இடம் வாங்கி அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டது. பின்னர் எதிர்ப்புகளால் கைவிடப்பட்டது. இது போன்று பல கோவில்களுக்கு அருகில் கட்டப்பட்ட சர்ச்சுகளின் கதைகள் ஏராளம்.

27 பிப்ரவரி 2014

ஆழி சூழ் உலகு - ஜோடி குரூஸ்

கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல், எப்போதோ பள்ளியில் படித்தது.

மீனவர்களுக்கும் கடலுக்கும் இடையிலான உறவை அழுத்தமாக சொல்லும் கதை எதையும் படித்ததில்லை. முதலில் கடற்கரை பற்றிய கதைகளே படித்ததில்லை. பா. ராகவனின் அலை உறங்கும் கடல், ராமேஸ்வரத்தை மையமாக கொண்ட கதை என்றாலும், அதில் மீனவர்களை பற்றி ஒன்றிரண்டு வார்த்தைகளே.

கடல் என்றால் அலுக்காத ஒரு காட்சி பொருள் என்றுதான் பல நாட்களாக என் எண்ணம், அதை மாற்றியது சுனாமி. அந்த அலைகளுக்கு பின்னால் ஒரு பெரிய சக்தி அமைதியாக உள்ளது என்பது தெரியவந்த பின் அதைக் காணும் போதெல்லாம் ஒரு சிறிய பயம் தோன்றும். சுனாமியின் போது துணிந்து இறங்கி பலரை காப்பாற்றியது மீனவர்கள், அதில் அதிகம் பாதிப்படைந்ததும் அவர்கள்தான். ஆனால் வெகுவிரைவில் அதிலிருந்து மீண்டு வந்துவிட்டனர்.

இடிந்தகரையில் பல ஆண்டுகளாக போராடிவரும் மீனவர்களை கண்டால் எனக்கு வியப்புதான். அவர்களின் தலைவர்களின் நோக்கம், அவர்களின் செயலில் எனக்கு சந்தேகம் இருந்தாலும், இப்பரதவர்களின் கட்டுப்பாடு ஆச்சர்யமளிக்கின்றது. அதுமாதிரியான கட்டுப்பாடு எப்படி வந்தது என்ற கேள்விக்கு விடை தருகின்றது இப்புத்தகம். வங்கக்கடலில் பரந்துள்ள மீனவர்களை சேர்த்துக் கட்டுவது கத்தோலிக்கம். சவேரியாரியால் மதம் மாற்றப்பட்டவர்கள். நன்றிக்காக மதம் மாறியவர்கள். உள்ளூர் மக்களுடன் ஏற்பட்ட போரில் தங்களுக்கு உதவி செய்த போர்ச்சுகீசியர்களுக்காக மதம் மாறினார்கள். . தங்களுக்கு போரில் உதவி செய்தவர்களுக்கு நன்றியாக  மதம் மாறினாலும் அவர்களின் தாய் மதத்தின் தொடர்ச்சியை விடாதவர்கள். பின்னாளில் சவேரியாரால் முழுவதும் மாறியவர்கள். அவர்களின் வாழ்க்கையை பற்றிய ஒரு புத்தகம். பதிவும் கொஞ்சம் பெரியது, பெரிய நாவலில்லையா!!!!