ஜெயகாந்தனின் குறுநாவல், விகடனில் வந்து பின்னால் அவரால் திரைப்படமாகவும் எடுக்கப்பட்ட நாவல்.
பெரும்பாலும் முன்னுரைகள் என்பவை அப்புத்தகத்தை பற்றிய சிறு குறிப்பாக அமையும், ஆனால் ஜெயகாந்தனின் முன்னுரைகள் பெரும்பாலும் ஒரு கட்டுரை போலவே அமையும். நூலையொட்டிய அவரது பல கருத்துக்கள், நாவல் என்னும் சட்டகத்தில் அடைக்க முடியாத எண்ணங்களை அவர் முன்னுரையில் எழுதுகின்றாரோ என்றும் தோன்றும். சில சமயம் அது ஒரு விளக்கம் போலவும், நாவலை படிக்க ஒரு கோனார் நோட்ஸ் போலவும் இருக்கும். அந்த காரணத்திற்காகவே அவரது முன்னுரைகளை படிப்பதில்லை. நாவலை படித்து முடித்த பின் அதை படிப்பது வழக்கம். "வாழ்வின் இருண்ட பக்கங்களை மட்டுமே காட்டுபவன்" என்ற பெயர் தனக்கிருப்பதாக அவரே மற்றொரு புத்தகத்தின் முன்னுரையில் கூறுகின்றார். அதற்கான பதில் இப்புத்தகத்தின் முன்னுரையில் கிடைக்கின்றது. ஒளிமிகுந்த நகரத்தில்தான் இருளடைந்த குடிசைகளும் இருக்கின்றன. இரண்டும் சேர்ந்ததுதான் நம்முலகம். ஏதாவது ஒன்றை மட்டும் பற்றிக் கொண்டு கூவுவது முட்டாள்த்தனம். அதைத்தான் முன்னுரையில் கொஞ்சம் பெரிய நடையில் விளக்குகின்றார்.
ஜெயகாந்தனை பற்றி பலர் கூறும் விமர்சனம், அவரது கதைகளின் இன்றைய தேவை. அக்னிபிரவேசம், சில நேரங்களில் சில மனிதர்கள், பாரீஸுக்கு போ போன்றவை இன்று கொஞ்சம் காலாவதியான விஷயம் போல இருக்கலாம். ஆனால் எங்கோ ஒரு மூலையில் அதற்கான தேவையிருக்கின்றது என்பது செய்திதாள்கள் காட்டும். இந்த நாவல், என்றைக்கும் தேவையிருக்கும் நாவல். நாவலில் பாத்திரங்கள் ஒரு சேரிப்பகுதி வாழ் மக்கள். ஆனால் நாவலில் வரும் அதே பிரச்சினை பங்களாவிலும் வரலாம்.