நகைச்சுவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நகைச்சுவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

30 செப்டம்பர் 2015

அமெரிக்காவில் கிச்சா - கிரேசி மோகன்

பாலஹனுமான் தளத்தில் கிரேசி மோகனின் பேட்டி (துக்ளக்கில் வந்தது என்று நினைக்கின்றேன்) இரண்டு பகுதிகளாக வந்துள்ளது. கிரேசி மோகனின் நாடகம் மட்டுமல்ல, பேட்டியும் ஒரே மாதிரிதான். புதிய பேட்டியை படித்தாலும் எங்கோ படித்தது போல இருக்கும். காரணம், அனைவரும் அவரை ஒரே மாதிரி கேள்வி கேட்பதுதான். அவரின் பதிலும் ரெடி மேடாக இருக்கும். அவரின் ஆனந்த விகட பக்தி, ஜானகி டீச்சர், நண்பர் ரவி, சேப்பு குழந்தை கருப்பு குழந்தை உதாரணம் என்று சொல்லலாம்

இந்த பேட்டியில் கொஞ்சம் புதிய தகவல்கள், அவரின் நாடகத்தை பார்த்துவிட்டு சொல்லப்பட்டது, 'ஒன்று நாடகம் ப்ளாப், ஊத்தி மூடிக்கும். இல்லை இனிமே இதுதான் நாடகம்'.இரண்டாவது பலித்து விட்டது. கிரேஸி மோகனின் பாணி நகைச்சுவை என்பது துணுக்கு தோரணம் என்றாலும், வார்த்தை விளையாட்டு, ஆள் மாறாட்ட குழப்பம், அதையும் மீறி சில இடங்கள் மிகவும் ரசிக்கும் படி இருக்கும். ஏதோ ஒரு நாடகத்தில் முடி திருத்துபவரை பார்த்து ஒரு பெண் 'உங்களை எங்கயோ பார்த்திருக்கிறேனே' என்று கூற, அவர் 'சே சே, ஐ அம் ஒன்லி ஃபார் மென்' என்பார். என்னதான் சொன்னாலும் இன்றைய தேதியில் ஒரு நல்ல நகைச்சுவை எழுத்தாளர் என்றால் இவரைத்தான் சொல்ல முடியும்

இவரால் வேறு வகை எழுத்து எழுத முடியும். இவரது படு சீரியசான கதை ஒன்றை ஒரு தீபாவளி மலரில் படித்திருக்கின்றேன். கவிதை (வெண்பா??) வேறு எழுதியிருக்கின்றார். கவிதைக்கு இன்ஸ்ப்ரேஷன் வாலி போல. விகடனில் இவருக்கு ஒரு ஆஸ்தான இடமுண்டு பல தொடர்களை எழுதியிருக்கின்றார். அதில் ஒன்று அமெரிக்காவில் கிச்சா

23 அக்டோபர் 2014

சிங்கமய்யங்கார் பேரன் - சுஜாதா

கரும்பு தின்ன கூலியா என்று கேட்பார்கள், சாப்பிடவும் கூலி தருவதும் உண்டு என்று தெரிந்த காரணத்தால் அதை மேற்கோள் காட்ட முடியாமல் போனதற்கு மன்னிக்கவும். உங்களுக்கு தெரிந்த நல்ல பழ மொழியை பயன்படுத்தி கொள்ளவும். ..... போல, புத்தகத்தையும் தந்து அதற்கு ஒரு மதிப்புரை(!!!)யும் எழுத சொன்னால் வேண்டாம் என்றா சொல்வார்கள். அதைத் தானே இங்கு செய்து கொண்டிருக்கின்றேன் என்று முயற்சி செய்தேன். உடனே புத்தகமும் கிடைத்தது. மதிப்புரை.காமில் வெளியான எனது புத்தகத்தை பற்றிய எனது கருத்துக்கள். 


சினிமா காலத்திற்கு முன்பு மக்களை மகிழ்வித்தது நாடகங்களே. நாடக நடிகர்களைக் கடவுளாகப் பார்த்த மக்களைக் கொண்டது நம் தமிழகம். பெரும்பாலான நாடகங்கள் புராணக் கதைகளை அடிப்படையாகக் கொண்டவை, மெதுவாக சமூகக் கதைகள் உள்ளே வர ஆரம்பித்தன. திராவிட இயக்கங்களின் தாக்கம் அதை மேலும் வளரச் செய்தது. புராணங்கள் மூலம் பக்திக் கண்ணீரை பெருக்கெடுக்க வைக்கும் நாடகங்கள், குடும்ப, சமூகக் கதைகள் மூலம் சோகக் கண்ணீரை பெருக்கெடுக்க வைத்த நாடகங்கள், உள்ளத்தைக் கொதிப்படைய வைத்து வியர்வையைப் பெருக்கும் அரசியல் நாடகங்கள் என்று இருந்ததை மாற்றி, நக்கலும் கிண்டலுமாக மக்களை அடைந்தவர் எம். ஆர். ராதா. அந்த வகையில் சினிமாவின் வெற்றிக்கு பின்னும் நாடக உலகில் வெற்றி பெற்றவர் ராதா.


அதன் பின்னர் அத்தகைய வெற்றியை கண்டவர் சோ. சோவின் சிறப்பு நாடக எழுத்தாளரும் அவர்தான். சோவின் நாடகங்கள் அந்தக் காலத்தை ஒட்டியவை, நாடகத்தை ரசிக்க அக்கால கட்டத்தைப் பற்றிக் கொஞ்சமாவது தெரிந்திருக்க வேண்டும். நாடகம் என்றவுடன் இவர்களைத் தவிர மற்றவர்கள் பட்டென்று நினைவில் வரமாட்டார்கள். காரணம் நாடகத்தை அழகாகக் கையாண்டவர்கள் மிகவும் குறைவு. அப்படி குறிப்பிடத்தகுந்த நாடக ஆசிரியர்கள் இந்திரா பார்த்தசாரதி, ஜெயமோகன், சுஜாதா.

05 ஆகஸ்ட் 2014

சாமானியனின் முகம் - சுகா

தாயார் சன்னதி எழுதிய சுகாவின் மூன்றாவது புத்தகம் சாமானியனின் முகம். அதிகம் சினிமா பற்றிய கட்டுரைகளே உள்ளது அதிலும் குறிப்பாக சினிமா இசை பற்றிய கட்டுரைகள்.

யாரும் அறியாத புதிய விஷயம் எதுவும் சொல்லவில்லை. சினிமா ஆள் என்பதால் சினிமா வம்புகள் தேடினால் ஒன்றுமில்லை. சும்மா அங்கங்கு நாலு கிசுகிசுவை சேர்த்திருக்கலாம்.

சுகா சிறுவயதிலிருந்து இசை கற்றவர் என்பது, இசைக் கருவிகளை வாசிப்பவர் என்பதும் அவரது முதல் புத்தகத்திலேயே தெரிந்துவிட்டது. இதில் அவரது திரையிசை பற்றி பல கட்டுரைகளும் நடுவில் மானே தேனே என்று வேறு சில கட்டுரைகளும் உள்ளது.


இப்புத்தகம் இளையராஜா ரசிகனால், இளையராஜா ரசிகர்களுக்கு பிடிக்கும் படி எழுதப்பட்டது. நான் ஏ.ஆர். ரகுமான் ரசிகனாக இருந்து ராஜாவிற்கு மாறியவன். ரேடியோ கேட்டு வளர்ந்ததில்லை, டீவி அவ்வளவாக பார்ப்பதுமில்லை. சொந்தமாக டேப் வாங்கி பாடல் கேட்கும் வசதி வந்த போது ஏ.ஆர். ரகுமான் வந்துவிட்டார். சென்னை வந்தபின், ரேடியோ மிர்ச்சியில் இரவும் 11 - 1 வரை ஒலிபரப்பாகி வந்த காதல் காதல் (பெயர் சரிதானோ என்னவோ?)  ராஜாவை அதிகம் கேட்கவைத்து, ராஜாவை மட்டும் கேட்க வைத்துவிட்டது. 

22 ஜூலை 2014

அப்புசாமி சீதாப்பாட்டி

பெரிது பெரிதாக இரண்டு புத்தகங்களை படித்த களைப்பில் குட்டியாக படிக்கலாம் என்று தேடிய போது கிடைத்தது அப்புசாமியும் 1001 இரவுகளும். படு பயங்கர தீவிர வீர இலக்கியவாதிகள் கொஞ்சம் எட்ட நின்று பார்த்துவிட்டு விலகுங்கள், இல்லாவிடில் கெட்ட கனவுகள் வரலாம்.  

அப்புசாமி சீதாப்பாட்டியை, குமுதத்தில் நடுப்பக்கத்தை தவிர உள்ளடக்கத்தையும் (முன்பு அது போன்ற ஒரு வஸ்து குமுதம், விகடனில் இருந்தது, இதை படித்துவிட்டு இப்போது போய் தேடி ஏமாந்து என்னை திட்ட வேண்டாம்) படிக்கும் பலருக்கும் தெரிந்திருக்கும்.  நான் குமுதத்தில் படித்ததில்லை, எங்கள் ஊர் நூலகத்தில் படித்தது. அப்போது மிகவும் பிடித்து ரசித்து படித்த வரிசை. அந்த பழைய நினைவில் வாங்கியிருந்தேன். இப்போது பிடிக்குமோ பிடிக்காதோ என்று நினைத்து படித்து பார்க்கலாமே என்று வாங்கியது. மோசமில்லை. படிக்க முடிந்தது.   

பாக்கியம் ராமசாமி, ஜ.ரா.சுந்தரேசன். குமுதத்தின் மும்மூர்த்திகளில் ஒருவர். நகைச்சுவை இலாகா. பல நகைச்சுவை கதைகளை, கட்டுரைகளை எழுதியுள்ளார். அடிக்கடி நான் ரா.கி.ரவுடன் குழப்பிக் கொள்வேன். இவருடைய நகைச்சுவையல்லாத கதைகளில் கொஞ்சம் புஷ்பா தங்கதுரை எட்டி பார்ப்பார்.  விகடனில் கொஞ்ச நாள் நகைச்சுவை கட்டுரைகள் எழுதி வந்தார், ஓரளவிற்கு சுமாராக இருந்தது.

24 மார்ச் 2013

தாயார் சன்னதி - சுகா

டீவியில் எதையோ பார்த்துக் கொண்டிருந்த போது அதில் யாரோ திருநெல்வேலித் தமிழை பேசிக் கொண்டிருந்தனர். நானும் விளையாட்டாக அதே போல் என் பெண்ணுடன் பேசி விளையாடிக் கொண்டிருந்தேன். அந்த தமிழ் கொஞ்ச நேரத்தில் என் மனைவிக்கு தலைவலியை உண்டாக்குகின்றது என்று தெரிந்தவுடன் இன்னும் பலமாக ஆரம்பித்து பேசிக் கொண்டிருந்தேன். ஒரிஜினல் திருநெல்வேலிக்காரர்கள் கேட்டிருந்தால் உதை கிடைப்பது நிச்சியம். அப்படியே இப்புத்தகம் நினைவிற்கு வந்தது, எடுத்து படிக்க ஆரம்பித்தேன்.

தாயார் சன்னதி என்ற தலைப்பை பார்த்த உடன் ஸ்ரீரங்கத்தை பற்றிய கதை என்றுதான் நினைத்தேன். அட்டைப்படமும் அதே போல் இருந்தது. ஒரு கோபுரம் ஒரு யானை, எனக்கு ஸ்ரீரங்கம் நினைவே வந்தது. வாங்கியபின் ஒரு சிறிய ஏமாற்றம். 

ஆனால் அது முழு  ஏமாற்றமல்ல. ஸ்ரீரங்கக்கதையல்ல தின்னவேலி கதை. திருநெல்வேலி என்றால் நினைவிற்கு வருவது அல்வா, அதே போல் அந்த தமிழ். இப்புத்தகத்தை படிக்கும் போது அந்த அல்வாவையும் அந்த தமிழையும் ருசித்து மகிழ்ந்த ஒரு திருப்தி கிடைக்கின்றது.

பாலுமகேந்திராவின் சிஷ்யர் சுகா. அவரின் தளத்தில் (அ) சொல்வனம் இணைய இதழில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு. புதிதான சரக்கை தன் கடையில் உடனே சூடாக போடும் விகடன் மூங்கில் மூச்சு என்ற பெயரில் தொடர்ந்தது. இப்போது வேறு பெயரில் வேறு யாரோ ஒருவரால் வருகின்றது. ஒரிஜினல் போல் அது இல்லை. கொஞ்சம் போரடிக்க ஆரம்பித்துவிட்டது.

தாயார் சன்னதி என்பது சுகா எழுதிய ஒரு கட்டுரையின் தலைப்பு. அவரது தாயாரை மருத்துவமனையில் சேர்ந்திருந்த போது அவர் கண்ட மற்ற தாயார்களை பற்றிய ஒரு கட்டுரை. மிகவும் நெகிழ்ச்சியான கட்டுரை.

06 மார்ச் 2013

வாஷிங்டன்னில் திருமணம் - சாவி

வீட்டைக் கட்டி பார், கல்யாணம் செய்து பார் என்ற பழமொழி எக்காலத்திற்கும்  பொருந்தும் போல. இன்று இந்த இரண்டும் காண்டிராக்டர்களால் செவ்வனே நடத்தி முடிக்கப்படுகின்றது. இருந்தும் கல்யாண பையனுக்கு மனைவி மட்டும் அல்ல, கல்யாண காண்டிராக்டரும் அமைவது இறைவன் கொடுத்த வரம். 

காண்டிராக்டர் கையில் அனைத்தையும் கொடுத்துவிட்டாலும், உள்ளே ஒரு டென்ஷன் ஓடிக் கொண்டே இருக்கும். அதை யாரிடமும் தர முடியாது. அந்த கடவுளே வந்து கவலையை விடு நான் பார்த்து கொள்கின்றேன் என்றாலும், நமக்கு அவர் யாரவது ஆதிமூலமே என்று கூப்பிட்டு ஓடிவிட்டால் என்ன செய்வது என்ற பயம் இருக்கும். 

இன்றைய விஞ்ஞான வசதிகள் நிறைந்த காலத்திலேயே ஒரு திருமணத்தை நடத்தி வைப்பது இவ்வளவு சிரமம் என்றால், ஒரு ஐம்பது, அறுபது வருடம் முன்பு எப்படி இருக்கும். இங்கு நடக்கும் கல்யாணத்தை அமெரிக்காவில் செய்தால் என்னவாகும்? 

திருவையாறில் வெள்ளைக்காரர்களை பார்த்த சாவி, அதை கொஞ்சம் மாற்றி யோசித்ததன் விளைவு இக்கதை. விகடனில் தொடராக வந்து பெரிய வெற்றி பெற்றது. நாடகமாக கூட வந்துள்ளது என்று நினைக்கின்றேன்.

27 பிப்ரவரி 2013

துப்பறியும் சாம்பு - தேவன்

தேவனின் மிகவும் பிரபலமான கதாபாத்திரம் துப்பறியும் சாம்பு. விளாங்காய் தலையும், ஜாடிக் காதுகளும், வழுக்கை தலையும், வளைந்த மூக்கும் கொண்ட ஒரு முட்டாள் (அ) அசடு சாம்பு. ஒரு நாள் ஒரு ஜவ்வாது வாசனையால் சாம்புவின் வாழ்க்கை மாறுகின்றது. ஒன்றுமில்லை வேலை போகின்றது. வேலை போன சாம்பு, வேறு குழப்பத்தில் சிக்கி ஏதோ உளற, அது வேலை செய்கின்றது. சாம்பு துப்பறிபவனாகின்றான். கோபாலன் என்னும் போலிஸ் இன்ஸ்பெக்டர் கூட சேர, சாம்புவின் திறமை (!) ஊரெங்கும் பரவுகின்றது. தமிழ் நாட்டிலும் பம்பாயிலும் பிரக்யாதி பெற்ற சாம்பு, லண்டனிலும் சென்று தன் திறமையை காட்டுவதில் முடிகின்றது.

ஐம்பது கதைகள் மொத்தம். தொடர்ச்சியாக எழுதினாரா, இல்லை விட்டு விட்டு அவ்வப்போது எழுதினார என்று தகவலில்லை. கதைகளை பார்த்தால் தொடர்ச்சியாக எழுதியதுபோலத்தான் உள்ளது.

அனைத்து கதைகளும் ஒரு சில டெம்ப்ளேட்டுகளில் அடைத்துவிடலாம். ஒரு குற்றம், சாம்பு ஏதாவது அச்சு பிச்சு என செய்ய போக, குருட்டு அதிர்ஷ்டத்தில் குற்றவாளி மாட்டிகொள்வான். கோபாலன் கண்ணில் நீர் வழிய சாம்பு நீர் கெட்டிக்காரனய்யா என்று புகழ, சாம்பு மெளனமாக முழிப்பான இல்லை மூர்ச்சையாகி விடுவான். குற்றம் பெரும்பாலும் நகை திருட்டு / வைரக்கடத்தல் / பணதிருட்டு. கொலைகள் பக்கம் சாம்பு அதிகம் போவதில்லை. கொஞ்சம் பயந்தாங்கொள்ளி.

ஐம்பதும் ஒரே மாதிரி என்றாலும், அனைத்தையும் ரசிக்கும் படி எழுதியுள்ளார். குழந்தைகள் விரும்பும் கதைகள் என்றாலும், நாமும் ரசிக்கலாம். சிரிப்பின் அளவு அவரவர் மனநிலையை பொருத்தது. குழந்தைமனமுடையவர்கள் விழுந்து விழுந்து சிரிக்கலாம். மிக சீரியசான, ஐம்பது வார்த்தைகளால் ஆன வாக்கியங்கள் கொண்ட குண்டு குண்டு புத்தகங்களை படிப்பவர்களும், எழுத்துக்களை கலைத்து போட்ட கவிதைகளை படிப்பவர்களும், எப்போதும்  வர்க்க வேறுபாடுகளை பேசி பேசி, பேசி பேசி களைத்து போகும் நபர்களும் யோசித்து படிக்கவும்.

12 பிப்ரவரி 2013

நான்காவது கொலை - ஜெயமோகன்

சனி, ஞாயிறு வேலை வெட்டி ஏதுமில்லை. டீவியும் டமார். இன்டர்நெட்டே கதி. வகை தொகையில்லாமல் கண்டதையும் படித்து களைத்து, மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் என்று ஜெயமோகன் அவர்களின் தளத்தில் இருந்த நகைச்சுவை வகை கட்டுரைகளை படிக்க ஆரம்பித்தேன். 

பெரும்பலானவை சிரிக்க வைத்தது. சில புன்னகைக்கவும், சில அழவும் வைத்தது.அய்யோ பாவம், இலக்கியம் எழுதி எழுதி நகைச்சுவை கட்டுரைகளில் கூட பெரிய பெரிய வரிகளாகவும், கடின வார்த்தைகளை போட்டும் எழுதுகின்றாரே என்று நினைத்துக் கொண்டேன். அப்போதுதான் இக்கதை நினைவில் வந்தது. திண்ணையில் எப்போதோ படித்தது. திண்ணை புது திண்ணையாகி பழைய திண்ணையில் தூங்கியவர்களை எங்கோ விரட்டி விட்டுவிட்டார்கள். இக்கதை பத்திரமாக சொந்தக்காரர் திண்ணையில் இருந்தது.

ஆரம்பித்ததில் இருந்து சிரித்துக் கொண்டே இருந்தேன். கிண்டல் கிண்டல் கதை முழுவதும் கிண்டல். திகம்பர சாமியாரில் ஆரம்பித்து, பரத் சுசீலா வரை. சூப்பர் மேனிலிருந்து ஜேம்ஸ்பாண்ட் வரை அனைவரையும் கிண்டலடித்துள்ளார். 

அனைத்து எழுத்தாளர்களின் நடையையும், கதாபாத்திரங்களையும் அவர் இஷ்டத்திற்கு உலாவ விட்டுள்ளார்.  கணேஷ் வசந்த், சங்கர் லால், ஆழ்வார்க்கடியான், இன்ஸ்பெக்டர் கோபாலன், துப்பறியும் சாம்பு, ஷெர்லக் ஹோம்ஸ் வாட்சன், சூப்பர் மேன், பேட் மேன், ஸ்பைடர் மேன், இரும்புக்கை மாயாவி, திகம்பர சாமியார் பெயரில்லா பாலகுமாரன் கதாபாத்திரம். அனைத்து எழுத்தாளர்களின் நடையும் இவருக்கு சரளமாக வருகின்றது. சுஜாதாவின் நடை அச்சு அசலாக பொருந்தி போகின்றது. இவர் அதே நடையில் ஒரு கதை எழுதி சுஜாதா எழுதினார் என்றால் கண்டிப்பாக நம்பிவிடுவார்கள். விஷ்ணுபுரமும், உபபாண்டவ புரமும் துணைக்கு வருகின்றது.

பகுதி 1, 234, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 1314 

மனசு ரிலாக்ஸாகும்.

19 அக்டோபர் 2012

ஸ்ரீமான் சுதர்சனம் - தேவன்


நடுத்தரவர்க்கம் என்றும் ஒரே மாதிரியாகத்தான் இருந்து வருகின்றது. தன்னை விட மேலாக உள்ளவர்களைப் பார்த்து ஏங்குவதும், தன்னைவிட கீழே உள்ளவர்களைப் பார்த்து தன்னை திருப்திப் படுத்திக் கொள்வதுமாக அன்றும் இன்றும் ஒரே மாதிரியாகத் தான் இருக்கின்றது. தவறு செய்யப் பயப்படுவதும், அதே சமயம் தவறு செய்யத் தூண்டும் சூழ்நிலைகளுக்கு நடுவில் இருப்பதும், செய்த தவறை நினைத்து தவிப்பதும், ஆசைக்கும் நேர்மைக்கும் நடுவில் வாழும் ஒரு வாழ்க்கை.