காடு பற்றிய ஒரு நாவல்.
காட்டைப் பற்றி ஏற்கனவே காடு நாவல் பதிவில் எழுதியிருக்கிறேன். காடு நாவல் நினைவில் வராமல் இதை படிக்க இயலவில்லை. இரண்டும் வேறு வேறு விஷயங்களை பேசுபவை.
கானகன், காட்டை வேட்டையாடுவதன் மூலம் காட்டை அறிய நினைக்கும் ஒருவன், காட்டின் மிருகங்களை நேசிப்பதன் மூலம் காட்டை அறிய நினைக்கும் ஒருவன் இந்த இருவரைப் பற்றிய கதை.
ஒரு புலி வேட்டையில் ஆரம்பிக்கும் கதை புலி வேட்டையில் முடிகின்றது.
கதை மேற்குதொடர்ச்சி மலையில் இருக்கும் அகமலை என்னும் பகுதியில் நடக்கின்றது. கதை ஆரம்பத்தில் புலி வேட்டையில் ஆரம்பிக்கின்றது, ஊருக்குள் புகுந்து நாசம் செய்யும் புலியை கொல்லும் தங்கப்பன், சிறந்த வேட்டைக்காரன். இருந்தும் கொன்றது தாய்ப்புலியை என்று தெரிந்த பின் வருந்துகின்றான். அதற்கு பின் கதையை எந்த தளத்தில் நகர்த்துவது என்ற குழப்பம் வந்து விட்டது போல தெரிகின்றது. மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் இருக்கும் உறவை வைத்து நகர்த்துவதா இல்லை காட்டிலேயே வாழும் பூர்வகுடிகளின் நிலையை அரசியலாக பேசுவதா என்று இரண்டிலும் கவனம் குவியாமல் போய்விட்டது.