குறுநாவல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குறுநாவல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

27 ஜனவரி 2017

ஒரு நடிகை நாடகம் பார்க்கின்றாள் - ஜெயகாந்தன்

ஜெயகாந்தனின் சிறந்த நாவல்களில் ஒன்றாகக் கூறப்படும் நாவல். பீம்சிங் இயக்கத்தில் திரைப்படமாகவும் வந்துள்ளது. ஜெயகாந்தன கதைகளின் பிரச்சினை, அது பேசக்கூடிய பொருளின் காலம். சிலவற்றின் தேவை இன்று இல்லை. இந்நாவல் அது போன்ற தோற்றத்தை தரும் நாவல்.  கதை சுருக்கம், கல்யாணி நாடக நடிகை, ரங்கன் பத்திரிக்கை ஆசாமி. இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர். பின்னர் விவாகரத்து செய்ய விண்ணப்பிக்கின்றனர். ஆனால் கல்யாணியின் உடல்நலக்குறைவு அம்முடிவை சோதிக்கின்றது. 

சிறிய நாவல். கிண்டில் அன்லிமிட்டடில் படித்தது. கல்யாணியை ஒரு குற்றங்குறையில்லாத பெண்ணாக படைத்துவிட்டார். ரங்கனின் மீது அவளுக்கு இருப்பது எதிர்ப்பார்ப்புகளற்ற காதல். அது ஒரு பருப்பொருளாக் இருந்திருந்தால் ஏதாவது மியூசியத்தில் வைத்து காத்திருக்கலாம். கடைசியில் பைனரியாக வைத்து காக்கவேண்டியதுதான். சரி. ரங்கனின் மீது இருக்கும் இருப்பு அவளை அவன் பக்கம் இழுத்தாலும், திருமண என்பதை எதிர்பார்க்காததால், அவன் விலகிச்செல்லும் போதும் அதே மகிழ்ச்சியுடன் அவளாள் சிரிக்க முடிகின்றது என்று நாம் புரிந்து கொள்ள முடிகின்றது.

ரங்கன் என்றைக்குமான ஆண். அவனுக்கு அவனது பாசங்கற்ற உள்ளம் திருமணம் செய்யதூண்டுகின்றது. அதுவே அவனை விவாகரத்திற்கும் செலுத்துகின்றது. சில உறவுகள் எட்ட இருந்தால் மட்டுமே இனிக்கிம். அருகில் சென்றால் அது தொடர்வது கஷ்டம். உண்ணும் உணவிலிருந்து அரசியல் வரை எங்காவது உரசி தொலையும். திருமணம் என்பது கொஞ்சம் விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளது. திருமணம் கிட்டத்திட்ட ஒரு கட்டு. ஒரு ஒப்பந்தம், அதில் ஆரம்பிப்பது மெதுவாக மலர்ந்து ஒரு கடினமான பந்தமாக நிலை பெறுகின்றது. முதலில் அந்த ஒப்பந்தத்தை மதிப்பது அவசியம். ஒருவருடன் வாழும் போது, விட்டு கொடுத்தலும், அன்பும் தேவை. அந்த அன்பே அடிநாதம் என்பதையே நாவலும் காட்டுவதாக தோன்றுகின்றது. ஏதேதோ காரணங்களால் பிரிந்து சென்றாலும், இறுதியில் கல்யாணியின் உடல்நிலை காரணமாக அவளுடன் வாழுவதற்கு காரணம் அன்பேயன்றி ஜெயகாந்தனே கூறுவது போல மனிதாபிமானமாகது என்று தோன்றுகின்றது.

பாத்திரங்கள் வழக்கமான ஜெயகாந்தன் பாத்திரங்கள். பேசிக்கொண்டே அல்லது சிந்தித்துகொண்டே இருக்கின்றன. எதையும் ஆழக்கீறி ஆராய்ந்து பார்க்கின்றனர். வளவளவென்று பேசுவதும், அவர்கள் சிந்திப்பதை படிப்பது இந்நாவலில் மிகவும் சோர்வூட்டுகின்றது. அதுதான் எனக்கு பட்ட குறை.

மற்றபடி ஒரு நல்ல நாவல். ஆனால் எழுதப்பட்டமுறையும் நடையும் இன்றைக்கு எனக்கு அந்நியமாக தோன்றுவதால் ஒரு சிறந்த நாவலென்று கூற முடியாது.

26 ஜூன் 2016

நைலான் கயிறு - சுஜாதா

சுஜாதாவின் முதல் கதை.

இறங்கினான் என்பதை ஒவ்வொரு வரியில் எழுதினார் என்பது போன்ற புதுமைகளை(!) பலர் பல இடங்களில் வியந்தோதியிருப்பதை படித்திருக்கலாம். இப்புத்தகம் பதிப்பில் இருக்கின்றதா இல்லையா என்பதை கண்டுபிடிக்கவே கொஞ்ச நாள் ஆனது. உயிர்மையின் சுஜாதா தொகுப்புகளில் இது இல்லை. கணேஷ் வசந்த் தொகுதியில் இது இல்லை. தொகுப்பும் இரண்டுடன் நின்று விட்டது. கிழக்கில் வெளியானதும் கவனத்தில் படாமல் போய்விட்டது. 

கதை வெளிவந்த ஆண்டை கவனத்தில் வைத்து படித்தால், இதன் வீச்சு புரியும். கணேஷ் மட்டும் அறிமுகம். வசந்தை கணேஷ் என்ற பெயரில் அறிமுகம் செய்திருக்கின்றார். 

01 மே 2014

இரவுக்கு முன் வருவது மாலை - ஆதவன்

சென்ற வருட பெங்களூரு புத்தக கண்காட்சியில் ஆதவனின் என் பெயர் ராமசேஷன் புத்தகத்தை வாங்கினேன். அப்போது அங்கிருந்தவர் அவரது மற்ற நாவல்களை பரிந்துரை செய்தார். தயக்கமாக இருந்ததால் வாங்கவில்லை. ஆனால் அப்புத்தகம் நன்றாக இருந்தது. துணிந்து மற்ற புத்தகங்களும் வாங்கினேன்.

இரவுக்கு முன் வருவது மாலை ஆதவனின் குறுநாவல்களின் தொகுப்பு. "இந்த திறமையான இளைஞரின் குறுநாவல்களை ஏன் நீங்கள் புத்தகமாக வெளியிடக் கூடாது" என்று சுஜாதாவால் அனுப்பி வைக்கப்பட்டு முதல் பிரசுரம் வந்துள்ளது. மீண்டும் இப்போது கிழக்கு செம்பதிப்பாக வெளியிட்டுள்ளது.
    
எ.பெ.ரா நாவலின் மூலம் கிடைக்கும் ஆதவனின் பிம்பம் இதிலும் தொடர்கின்றது கொஞ்சம். ஆதவனின் எழுத்துக்கள் அனைத்து மனிதனின் உள்ளே புகுந்து பார்க்க விளைகின்றது. சாதரண மனிதனின் உள்ளே ஓடக்கூடிய எண்ணங்களை பிரித்து நம் கண்முன் வைக்கின்றது.

27 மார்ச் 2014

கணேஷ் - வசந்த் கதைகள் - 1

என்னடா மறுபடியும் சுஜாதாவா என்பவர்களுக்கு, சாரி, என்ன செய்வது மனநிலையை பொறுத்துதான் படிக்கும் புத்தகமும் இருக்கும். ஜாலியான, கலகலப்பான புத்தகங்களை படிக்கலாம் என்பதால் சுஜாதா மட்டுமே மேஜையில்.

சுஜாதாவின் பிரபல நாயகர்கள் கணேஷ் - வசந்த். சீரியசான ஒரு சீனியர், அவனுக்கு ஜாலியான ஒரு ஜூனியர். ஏதோ ஆங்கில நாவலாசிரியரின் கதபாத்திரங்களின் இன்ஸ்ப்ரேஷன் என்று ஒரு வதந்தி கூட உண்டு. அவர்கள் தோன்றும் அனைத்து கதைகளும் சிறப்பானவை என்று கூற முடியாது. பெரும்பாலான கதைகள் பல பத்திரிக்கைகளுக்கு தொடர்கதைகளாக எழுதப்பட்டவை. பத்திரிக்கைகளின் தரத்தை பொறுத்தும் கதையின் தரம் வேறுபடும்.

உயிர்மை அவரின் பெரும்பாலான எழுத்துக்களை தொகுத்துள்ளது. அதில் குறுநாவல் வரிசையில் இது மூன்றாவது தொகுதி, கணேஷ் - வசந்த் கதைகளில் முதல் பகுதி. அதில் உள்ள கதைகள் பற்றி இனி

05 மார்ச் 2014

விடிவதற்குள் வா! - சுஜாதா

ஆழி சூழ் உலகில் பல விஷயங்களிருந்தாலும் அதில் வரும் முக்கிய விஷயமான கிறிஸ்துவ மத மாற்றம் சம்பந்தமான உரையாடல்கள் அதிகம் கவர்ந்தது. கிறிஸ்துவர்களை தவிர மற்ற மதத்தினர் அவர்கள் மதத்தை பற்றி அதிகம் பேசி நான் பார்த்ததில்லை. பேசுவார்கள், பரஸ்பர ஆர்வத்தை பொறுத்து. கோவில்களில் அல்லது பண்டிகை நாட்களில் இது போன்றுதான் இருக்கும். ஆனால் கொஞ்சம் இடம் கிடைத்தாலும் போதனை செய்யும் பல கிறிஸ்துவர்களை கண்டுள்ளேன். போதனை, தங்கள் மதத்தின் சிறப்பு, அவர்களது பெருமை. அதோடு இருந்தால் பரவாயில்லை மற்றவர்களை வம்பிழுப்பதுதான் பிரச்சினை.

எனது ஊரில் இப்போது ஒவ்வொரும் மணிக்கும் பைபிள் வசனம் ஒலிப்பெருக்கி வழியே ஒரு கிலோமீட்டர் தள்ளி இருக்கும் என் வீடு வரை கேட்கின்றது. அனுமதி இலவசம். எங்கள் கோவில் ஊருக்கு வெளியே மலையடிவாரத்திலிருக்கின்றது. பெரும்பாலும் யாரும் வருவதில்லை, சனிக்கிழமைகளில் ஒன்றிரண்டு பேர் வருவதுண்டு. புரட்டாசி ஐந்து சனிக்கிழமைகளில் நல்ல கூட்டமுண்டு. இந்த கூட்டம் கண்ணை உறுத்தி அங்கு சர்ச் கட்ட இடம் வாங்கி அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டது. பின்னர் எதிர்ப்புகளால் கைவிடப்பட்டது. இது போன்று பல கோவில்களுக்கு அருகில் கட்டப்பட்ட சர்ச்சுகளின் கதைகள் ஏராளம்.

12 பிப்ரவரி 2014

ஈராறு கால்கொண்டெழும் புரவி - ஜெயமோகன்

ஜெயமோகனின் மற்றுமொரு நாகர்கோவில் குறுநாவல். ஈராறு கால்கொண்டெழும் புரவி. சித்தர் பாடல்கள், பட்டினத்தார் பாடல்கள் தெரிந்தவர்களுக்கான கதை. பாதிக்கு மேல் ஒன்றும் புரிய வில்லை. குறிப்பாக கடைசி பகுதி, புரிந்தவர்கள் மறக்காமல் இங்கு வந்து என்ன என்று தெரிவிக்கவும். தன்யனாவேன்.

இது போன்ற கதைகள் போரடித்துவிடும், இது அவ்வளவாக போரடிக்கவில்லை. காரணம் அவரின் நடை, ஊடாடும் நகைச்சுவை. மதுரை பக்கத்துக்காரன் என்றாலும், அம்மா வழி தமிழான திருநவேலி தமிழும் கொஞ்சம் பழக்கம், அதனாலோ என்னவோ நாகர்கோவில் தமிழும் பிடித்துவிட்டது. கதையை நான் முழுக்க படித்ததற்கு காரணம் அத்தமிழ்தான்.

07 பிப்ரவரி 2014

கன்னிநிலம் - ஜெயமோகன்

வழக்கமாக ஒவ்வொரு எழுத்தாளர்களுக்கும் ஒவ்வொருவிதமான எழுத்துக்களே கை கூடி வரும். அவர்களின் ஏரியா தாண்டினால் சொதப்பிவிடும். ஆனால் ஜெயமோகனுக்கு எல்லா வகை எழுத்தும் அட்டகாசமாக வருகின்றது.

வெள்ளிக்கிழமை வேலை செய்தால் உடலுக்கு நல்லதில்லை என்பதால், இவர் தளத்தை மேய்ந்து கொண்டிருந்தேன். ஏகப்பட்டதை எழுதி குவித்திருக்கின்றார், மூடுக்கு தகுந்தமாதிரி ஒன்றிலிருந்து ஒன்றாக தாவுவது வழக்கம். இன்று இக்கதை. ஆன்லைனில் படிப்பது அவ்வளவாக பிடிக்காது, ஆனால் வேறுவழியில்லை. சமீபத்தில் இப்படி ஒரு விறுவிறுப்பான கதையை படிக்கவில்லை. 

வடகிழக்கு மாநிலத்தில் ஏதோ ஒரு மூலையில், பர்மா எல்லையில் இருக்கும் ஒரு ராணுவ முகாமில் தொடங்கும் கதை, யாருமற்ற நிலத்தில் முடிவடைகின்றது. ராணுவ லெஃப்டினெட் நெல்லையப்பன், காட்டிற்குள் ஒரு போராளி பெண்ணை கைது செய்கின்றான். அவள் மேல் கொண்ட காதலால், காட்டிற்கு அலைந்து, துரோகியாகி, மீண்டும் அவளை அடைகின்றான்.

கதையை மூன்றாக பிரிக்கலாம், முதல் பகுதி ஆக்‌ஷன், இரண்டாம் பகுதி ரொமாண்டிக், கடைசி பகுதி ட்ரமாட்டிக். 

17 அக்டோபர் 2013

ஜெயமோகன் குறுநாவல்கள்

ஜெயமோகனின் குறுநாவல்களின் தொகுப்பு. அவரின் மொத்த குறுநாவல்கள் அனைத்தும் உள்ளதா, இல்லை தேர்ந்தெடுத்த கதைகளா என்று தெரியவில்லை. விதவிதமான கதைகள். ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமான களத்தில் எழுதப்பட்டுள்ளது. ஒரு சில கதைகள் குறுநாவல் என்பதை விட பெரிய சிறுகதைகள் என்று கூறலாம்.

ஜெயமோகனின் பெரிய பலமான தளம் தொன்மம் சார்ந்த கதைகள். அவரின் மற்ற கதைகளை விட அந்த மாதிரியான கதைகளே மிகவும் பிடித்தமாக உள்ளது.


கிளிக்காலம்

கிளிக்காலம், இரண்டுங்கட்டான் என்று கூறப்படும் வயதிலுள்ள சிறுவர்களை(?)ப் பற்றிய கதை. கதைநாயகன் பெயர் ஜெயன் (!). சிறுவர்கள் என்ற இடத்திலிருந்து பெரியவர்கள் என்ற இடத்திற்கு நகரும் கதை. அந்த பருவத்தினருக்கு இருக்கும் விபரீத சந்தேகங்கள், பெண்களை பற்றிய மயக்கங்கள் எல்லாம் இயல்பான உரையாடல்களில் வெளிப்படுகின்றது. மிகவும் கவரவில்லை.

பூமியின் முத்திரைகள்

பாதி கதையிலேயே தூக்கம் வருகின்றது. பயங்கர போரான கதையாக படுகின்றது எனக்கு. கதை உள்ளேயே போக மறுக்கின்றது. யாருக்காவது மிகவும் பிடித்திருக்கலாம்.  அவர்களுக்கு வாழ்த்துக்கள். கிறிஸ்துவ பிண்ணனியில் அமைந்த கதை.

18 மே 2013

மத்தகம் - ஜெயமோகன்

அலுக்காமல் பார்த்து ரசிக்க கூடிய விஷயங்கள் என்று சில உண்டு. குழந்தை. யானை. கடல். அதில் ஒன்றான யானையை பற்றிய கதை. யானை என்னும் ஒரு மிருகத்தை இத்தனை நெருக்கமாகவும், அதன் மனதை படிப்பவர்களும் உணரும் படி படைக்க முடியுமா என்ற பிரமிப்பு படித்து முடித்த பின்னும் போகவில்லை.

யானையை ரசிப்பது என்பது ஒரு குழந்தையை ரசிப்பது போலத்தான். யானையின் செய்கை எல்லாம் ஒரு கபடமற்ற குழந்தையின் செய்கை போலத்தான் தோன்றும். அவ்வளவு பெரிய உருவம் ஒரு சின்ன சங்கிலிக்கு கட்டுப்பட்டு அடங்கி இருப்பது என்பது ஒரு பார்வைக்குதான். அது நினைத்தால் அச்சங்கிலி தூள்தூளாகும். காட்டிலிருந்தாலும் நாட்டிலிருந்தாலும் யானை யானைதான். அது போனால் போகின்றது என்று மனிதனுக்கு கட்டுப் பட்டு இருக்கின்றது. 

கேசவன் கஜராஜ கேசரி. திருவனந்தபுர மன்னரின் தோழன். அவனின் பாகன்களில் ஒருவன் பரமன். பரமன்தான் கதை சொல்லி. மொத்தம் ஐந்து அந்தியாயங்கள். தவறுதலாக குழியில் விழுந்த யானை அக்குழியிலியே பிரசவித்த குட்டி. குட்டி கொஞ்சம் வளர்ந்ததும் அரச கொட்டடிக்கு வருகின்றது. யானை வந்த வேளையில் நோய்வாய்ப்பட்ட தம்புரான் எழுந்து நடக்க, யானை  அவரின் தோழனாகின்றது. வளர்ந்ததும் திருவெட்டாறு கோவிலிக்கு விடப்படும் கேசவன், தம்புரான் பட்டத்திற்கு வந்தது அதுவும் ஒரு பட்டத்து யானையாக மாறுகின்றது. கடைசியில் தம்புரான் மறைந்ததும், பட்டத்திலிருந்து கீழே இறங்கி வருகின்றது. 

கதை என்று பெரிதாக ஒன்றுமில்லை என்றாலும் அது காட்டும் உலகம் வித்தியாசமானது. சாதரணர்கள் காண, கண்டிருக்க முடியாத உலகம். யானை, யானை வளர்ப்பு, யானைகளின் சுபாவம் என்று ஒரு சரடு. யானைகளுடனே வாழும் பாகன்களின் உலகம் என்று ஒரு சரடு.இரண்டிற்கும் ஊடே அதிகாரம் என்னும் ஒரு சரடு. இது அனைத்தும் பின்னி பிணைந்ததுதான் மத்தகம். 

மத்தகம் என்பது பாகன் அமரும் இடம். கேசவன் அம்மத்தகத்தில் யாரையும் அமர விடுவதில்லை. தம்புரானை மட்டுமே அவ்விடத்தில் அனுமதிக்கும். கதை உள்ளே பேசுவது அதிகாரத்தை பற்றி. தம்புரானின் தோழனாக இருக்கும் போது கம்பீரமாக ஒரு ராஜாவைப் போல இருக்கும் கேசவன், தம்புரான் இல்லை என்று தெரிந்ததும், அதிகார மாற்றத்தை உணர்ந்து சாதரண பாகனிடம் தன்னை ஒப்படைத்து கீழ்படிவதாக மாறுகின்றது. கஜகேசரியாக இருக்கும் வரை பாகனின் தவறுக்காக அவனை நெருங்க விடாத கேசவன், அவனை தன் மத்தகத்தில் ஏற்றி வைத்துக் கொள்கின்றது.

பாகன்களின் வாழ்க்கை. யானையின் காலடியில் வாழ்வது என்பது மரணத்துடன் இருப்பது போலத்தான். யானை கோபம் கொண்டால், ஒரு வினாடி போதும் பாகன் போய் சேர வேண்டியதுதான். பாகனின் சொல் பேச்சு கேட்கும் யானை எப்படி அவர்களை தாக்கும் என்பதற்கான் விடை இங்குள்ளது. பாகன்களின் பார்வையில் யானை, என்று அருமையாக காட்டியுள்ளார். கதை வெகுகாலத்திற்கு முன்பு நடக்கின்றது. பாகன்களின் பரிதாப நிலையை விட அவர்களின் மனைவிகளின் நிலை, எப்போது வேண்டுமானாலும் வாழ்க்கை பறி போகும் அபாயம், அதன் பின்னால் வாழ வேண்டிய கட்டாயம், அதற்காக அவர்கள் தரும் விலை. 

முக்கியமானது யானையின் குணாதியங்கள். காட்டிற்கு ராஜா சிங்கம் என்கின்றார்கள். உண்மையான ராஜா யானைதான். சிங்கம் ஒரு சோம்பேறி வேறு. யானையின் கம்பீரம், பலம் அனைத்தையும் விட அப்பலத்தை தன் கட்டிற்குள் வைத்திருக்கும் மனம். காட்டில் வாழும் மிருகங்களில் அசாத்தியமான நினைவாற்றலுடனும், பலத்துடனும், புத்திசாலித்தனத்துடன் இருக்கும் ஒரே மிருகம் யானைதான். எல்லா யானையும் ராஜா இல்லை. அனைவரும் தலைவராக முடியாதல்லவா. கேசவன் அப்படிப்பட்ட தலைவன். கஜராஜன். கேசவன் அவனுக்கு முந்தைய கஜராஜனான நாரயணனை கண்டு பயந்தாலும் அதை சீண்டிபார்க்கின்றான். கேசவனை சீண்ட கடைசியில் கொச்சு கொம்பன் வருகின்றான். 

ஜெ.மோவிற்கு யானை என்றால் மிகவும் பிடிக்கும் போல. காடு நாவலில் வரும் கீறக்காதன், குட்டப்பன் யானையை பற்றி பேசும் விஷயங்கள். யானை டாக்டர். விஷ்ணுபுரத்தில் வரும் வீரன், பைரவன். ஊமைச் செந்நாயில் வரும் கொம்பன், மண் கதையில் வரும் இன்னொரு கொம்பன் என பல யானைகள். ஆனால் கதை முழுக்க வந்து கதையையே தன் மத்தகத்தில் கொண்டு செல்வது இந்த கேசவன் மட்டும் தான்.

ஜெயமோகனின் கதைகளில் என்னை அதிகம் கவர்வது இது போன்ற கதைகள்தான். காடு, மலை, தொன்மம் போன்ற விஷயங்களை இவரை அடித்துக் கொள்ள ஆள் இல்லை. ஒரு யானையுடன் ஒரு மணி நேரம் பயணம் செய்த உணர்வை தருகின்றது இக்கதை.



22 நவம்பர் 2012

விழா மாலைப் போதில் - அசோகமித்திரன்

கிழக்கு வெளியிட்டுள்ள குறுநாவல் தொகுப்பு. மொத்தம் நான்கு குறுநாவல்கள்.

பெரும்பாலன புத்தகங்கள் எல்லாம் ஏற்கனவே அவசர கதியில் படித்தவை. இப்போது அனைத்தும் இரண்டாம் ரவுண்ட்.

1. இன்ஸ்பெக்டர் செண்பகராமன்
2. விழாமாலைப் போதில்
3. என்றும் இன்று
4. மணல்

இன்ஸ்பெக்டர் செண்பகராமன்

ஒரு சிறுவனுக்கும் ஒரு இன்ஸ்பெக்டருக்கும் இடையிலான நட்பை பற்றிய கதை. ஐந்தாவது பாரம் படிக்கும் ஒரு சந்திரசேகரன் கூடப் படிக்கும் சினேகிதன் காந்திமதி. காந்திமதியின் மாமா இன்ஸ்பெக்டர் செண்பகராமன். ஒரு நாள் காந்திமதியுடன் வீடு திரும்பும் சந்திரசேகரனை சந்திக்கும் செண்பகராமன், அவனைப் பிடித்து போக அவனுடன் நட்பாகின்றார்.

சினிமாவிற்கு சந்திரசேகரனின் குடும்பத்தை அழைத்து செல்கின்றார், அவன் உடல்நிலை சரியில்லாத போது மருத்துவமனைக்கு அழைத்து செல்கின்றார். அதோடு அவனை வேறு ஒரு இடத்திற்கும் அழைத்து செல்கின்றார். அந்த இடத்தில் இருக்கும் பெண், செண்பகராமனின் மனைவிக்கு மகிழ்ச்சி தரக்கூடியதாகவளாக இல்லை.

ஒரு நாள் செண்பகராமன் இறந்து போகின்றார். செண்பகராமன் தொடர்பில் இருக்கும் பெண்ணை பார்க்க விரும்புகின்றார், அது நிறைவேறாமல் இறந்து போகின்றார். அந்த பெண்ணை கண்டு சந்துரு செண்பகராமன் குடுத்த பணத்தை தந்துவிட்டு விஷயத்தை சொல்கின்றான். கதை முடிந்தது.

இந்த சந்துருவும் 18ம் அட்சக்கோடு சந்துருவும் ஒரே ஆள் என்ற எண்ணம் தோன்றுகின்றது. அவனின் நாடக அனுபவம், லான்சர் பாரெக்ஸ் எல்லம் அதே போல் உள்ளது.  மிகச்சிறிய கதை, கொஞ்சம் பெரிய சிறுகதை என்றுதான் சொல்ல வேண்டும்.