21 மே 2020

ஆவரணா - The Veil - திரை - SL பைரப்பா

அப்யாரோஹ மந்திரம் – ப்ரஹதாரண்யக உபனிஷதம் 1.3.28

ஓம் அஸதோமா ஸத்மய தமஸோ மா ஜ்யோதிர் மய ம்ருத்யோர்மா அம்ருதம் மய |
உண்மையற்ற நிலையிலிருந்து என்னை உண்மை நிலைக்கு அழைத்துச் செல்வாயாக ! அறியாமை இருளிலிருந்து என்னை அறிவுப் பேரொளிக்கு அழைத்துச் செல்வாயாக! மரணத்திலிருந்து என்னை மரணமில்லா பெரு நிலைக்கு அழைத்துச் செல்வாயாக!
இன்று ஒரு முக்கிய செய்தி பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.  ராமர் கோவில் கட்ட நிலத்தை சீர்படுத்தும் பணியின் போது பழங்கால சிற்பங்கள், தூண்கள், கடவுள் சிலைகள் என ராமர் கோவிலிற்கான சான்றுகள் ஒவ்வொன்றாக வெளிப்பட்டு வருகின்றன. ஆனால் அவை அனைத்தையும் தொல்லியல் துறை முன்னமே கண்டு பிடித்து இருக்கலாமே என்ற கேள்வி எழுகின்றது. அவர்கள் கண்டுபிடித்து விட்டார்கள்.  கே.கே.முகமது, அயோத்தியில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் அங்கு கோவிலின் கட்டுமானம் இருப்பதை உறுதி செய்த ,பின்னரும், இடதுசாரிகள் உள்ளே புகுந்து அதை குழப்பி ஒரு பெரிய பிரச்சினையாக ஆக்கினார்கள். அது கோவிலே அல்ல, பெளத்த மடம் என்று வரலாற்றையே திரிக்க ஆரம்பித்தார்கள். அவர்களின் திரிப்பு இந்திய வரலாறு முழுவது பரவி கிடக்கின்றது.
திப்பு சுல்தானை விடுதலை போராட்ட வீரனாக்கி, அவன் மலபார் பகுதிகளில் செய்த அட்டூழியங்களை மறைத்தது, அவனின் மத வெறி மீது நாட்டு பற்று என்ற போர்வையை போட்டு மூடியது, காசியின் மசூதி இடிப்பிற்கு ஒரு கதை கட்டிவிட்டது என்று அவர்களின் செயல் நீளுகின்றது. காரணம், ஹிந்து மூஸ்லீம்களிடம் அமைதியை உண்டாக்குகின்றார்களாம். உண்மையின் மேல் அமையாத எதுவும் ஒரு நாள் அழிந்து படும் என்பதை அறியாத மூடர்கள். அதை கண்கூடாக அவர்களின் காசி, ராமேச்வரமான ரஷ்யாவிலேயே காணலாம். 

இன்றைக்கான தலை

கணேஷ் பாலா - அவருடைய பக்கத்தில் படம் பார்த்து கதை சொல் என இந்தப் படத்தை வெளியிட்டிருந்தார். சுஜாதாவின் தேஜஸ்வி பாதிப்பில் சும்மா எழுதியது

டொக் டொக்

"திறந்துதான் கதவு இருக்கு வா உள்ள" என்ற சத்தம் கேட்டது

"சார் நீங்க கேட்ட உப்பு போட்ட காப்பி" என்ற படி, கதவை திறந்து வந்த பேரர் உறைந்து போய் நின்றான், வலது கையிலிருந்த ட்ரே நடுங்கியது, அந்த குளிரிலும் வியர்வை அரும்பியது.

உள்ளே டீப்பாயின் மேலிருந்த தலையில் கையை வைத்து கொண்டிருந்த அவன், திரும்பி பார்த்து "வா இங்க" என்றான்.

பேரர் கால் நகர மறுத்தது. அந்த தலையை பார்த்தவாரே மெதுவாக நடந்து வந்தான். வாய் குழற "சாழ் சாழ், எனக்கு கல்லியாணம் கூட ஆகல"

"வா இங்க" என்று குரல் அழுத்தமாக வந்தது

ட்ரேயை அங்கிருந்த மேஜையில் வைத்துவிட்டு அருகில் வந்தான்

இந்த ரெண்டு விரல்ல ஒன்ன தொடு என்று சொல்ல, பேரர் பயந்து கொண்டே ஒரு விரலைத் தொட்டான், விரல் ஐஸ் மாதிரி குளிர்ச்சியாக இருந்தது.

ஹூம், என்றபடி, தன் தலையை கழட்டி டீப்பாயில் வைத்துவிட்டு, டீப்பாயிலிருந்த தலையை எடுத்து மாட்டிக் கொண்டு, பேரர் கொண்டு வந்த காப்பியை மூக்கின் அருகில் வைத்து உறிஞ்சினான். கப்பில் வெறும் பால் மட்டும் மிச்சமிருந்தது. சுவற்றில் மாட்டியிருந்த ஓவியத்தை கழட்டி, தலையுடன் சேர்த்து ஒரு பெட்டியில் வைத்துக் கொண்டு அறையை விட்டு சென்றான்.


30 ஏப்ரல் 2020

ரூஹ் - லக்‌ஷ்மி சரவணக்குமார்

கானகன் எழுதிய நாவலாசிரியரின் மற்றொரு படைப்பு.

எழுத்தாளர் சாருநிவேதிதா இவரைப் பற்றி மிக பெரிதாக எழுதியிருந்தார். வழக்கமாக அவர் பாராட்டினாலும், திட்டினாலும் எக்ஸ்ட்ரீம் லெவலி போவது வழக்கம். இந்த நாவலை பலமாக பாராட்டியிருந்தார்.

அன்பை பேசுகின்றது, கருணை, தூய உள்ளம், எக்ஸட்ரா எக்ஸட்ரா. இதுமாதிரிதான் இந்நாவலை பற்றி பலர் எழுதியிருந்தார்கள்.

இஸ்லாமிய பிண்ணனி கதை என்பதாகவும், சூஃபிகள் பற்றிய கதை என்றும் பல அறிமுகங்கள்.

உண்மையில் நாவல் அப்படித்தான் என்றால் இல்லை. இஸ்லாமிய பிண்ணனி என்றவுடன் ஒரு கடலோரக கிராமத்தில் அளவிற்கு நினைத்து கொள்ளக் கூடாது, சூஃபியிசம் பற்றி ஏதாவது வருமா என்றால் அதுவும் இல்லை. இஸ்லாமிய பாத்திரங்கள் இருக்கின்றன அவ்வளவுதான்.

கதையின் ஆரம்பத்தில் வரும் ஒரு சிறிய காட்சியே கதை மீது முதல் ஒவ்வாமையை உண்டாக்கிவிட்டது.   மாராட்டிய மாமன்னர் சத்ரபதி சிவாஜியின் கடற்படை தளபதி கானோஜி ஆங்க்ரே, அவர் ஏதோ ஒரு கொள்ளைக்காரர் போல சித்தரிக்கப்படுகின்றார்.

மராட்டிய கடற்படை பற்றிப் பேசிவிட்டு, கானோஜி ஆங்க்ரே பற்றிப் பேசாதிருக்க முடியுமா என்ன?  இவர்தான் மராட்டிய கடற்படையை புதியதொரு சிகரத்துக்கே கொண்டு சென்றவர்

மேலே உள்ளவை நமது பிரதமர் பேசியவை. இதைப் படித்தவுடனே நாவலின் மீது ஒரு விலக்கம் வந்துவிட்டது.

அதன் பின்னால் கதை தட்டு தடுமாறி செல்கின்றது. ஒரு இஸ்லாமிய பெண்ணிற்கும் ஒரு சிறுவனுக்கும் இடையிலான பாசத்தை பற்றி பேச ஆரம்பித்து, கதையை ஜிலேபி மாதிரி சுற்றி, நடுநடுவே ஆசிரியர் வந்து அமர்ந்து கொண்டு தத்துவங்கள் பல பேசி, ஒரு வழியாக எங்கோ சென்று முடித்துவிட்டார்.

படித்தவனுக்கும் அப்பாடா முடிந்ததே என்று ஒரு திருப்தி. வளவள என்று ஆசிரியர் பேசுவது பயங்கர எரிச்சல்.

ஒரு அரைகுறை முயற்சி.  

23 ஏப்ரல் 2020

கானகன் - லக்‌ஷ்மி சரவணகுமார்

காடு பற்றிய ஒரு நாவல். 

காட்டைப் பற்றி ஏற்கனவே காடு நாவல் பதிவில் எழுதியிருக்கிறேன். காடு நாவல் நினைவில் வராமல் இதை படிக்க இயலவில்லை. இரண்டும் வேறு வேறு விஷயங்களை பேசுபவை.

கானகன், காட்டை வேட்டையாடுவதன் மூலம் காட்டை அறிய நினைக்கும் ஒருவன், காட்டின் மிருகங்களை நேசிப்பதன் மூலம் காட்டை அறிய நினைக்கும் ஒருவன் இந்த இருவரைப் பற்றிய கதை. 

ஒரு புலி வேட்டையில் ஆரம்பிக்கும் கதை புலி வேட்டையில் முடிகின்றது.

கதை மேற்குதொடர்ச்சி மலையில் இருக்கும் அகமலை என்னும் பகுதியில் நடக்கின்றது. கதை ஆரம்பத்தில் புலி வேட்டையில் ஆரம்பிக்கின்றது, ஊருக்குள் புகுந்து நாசம் செய்யும் புலியை கொல்லும் தங்கப்பன், சிறந்த வேட்டைக்காரன். இருந்தும் கொன்றது தாய்ப்புலியை என்று தெரிந்த பின் வருந்துகின்றான். அதற்கு பின் கதையை எந்த தளத்தில் நகர்த்துவது என்ற குழப்பம் வந்து விட்டது போல தெரிகின்றது. மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் இருக்கும் உறவை வைத்து நகர்த்துவதா இல்லை காட்டிலேயே வாழும்  பூர்வகுடிகளின் நிலையை அரசியலாக  பேசுவதா என்று இரண்டிலும் கவனம் குவியாமல் போய்விட்டது.

09 மார்ச் 2020

இறவான் - பாரா

யதிக்கு பின்னால் எழுதப்பட்ட நாவல். யதியின் ஹேங்க் ஓவர் என்று சொல்லலாம். ஒரு இசைக்கலைஞனின் கதை என்று பொதுவாக அனைவராலும் கூறப்படுகின்றது. நூற்றாண்டிற்கு முன்னால் இசைக்கப்பட்ட ஹீப்ரூ மொழி இசை ஒருவனால் வாசிக்க முடிகின்றது, சிம்போனியை ஒரு நாற்பது பக்க நோட்டில் எழுத முடிகின்றது, கஞ்சா அடிக்கின்றான், சம்பந்தமில்லாமல் பேசுகின்றான். யதியில் தப்பிய ஏதோ ஒரு சகோதரன் இங்கு வந்து குதித்துவிட்டான் என்றுதான் சொல்ல வேண்டும், அந்தளவிற்கு மாயாஜாலம். 

கதை என்ற வஸ்து இருந்தால் அதைப் பற்றி ஏதாவது எழுதலாம், ஒரு க்ராக்கின் வாழ்க்கையை துண்டு துண்டாக வெட்டி போட்டிருக்கின்றார். ஒருவனுக்கு திடீரென்று தான் ஒரு இசை மேதை என்றும், யூதன் என்றும் தோன்றுகின்றது. அதன் பின் அவன் என்ன ஆனான் என்று வளவளவென்று பல பக்கங்களில் அடித்து துவைத்திருக்கின்றார் வாசகனை.

கதையுடன் எங்கும் வாசகனை ஒன்ற விடக்கூடாது என்பதில் பாரா மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளார் என்றே சொல்லவேண்டும்.