கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பாரளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எழுதிய தொடர்கதை. வீரயுக நாயகன் வேள்பாரி. விகடனில் தொடராக வெளிவந்து, ஒரு லட்சம் பிரதிகளுக்கு மேலாக விற்பனையாகி உள்ளது என்று புத்தக அட்டை சொல்கின்றது.
இன்றைய நிலையில் ஒரு லட்சம் பிரதி என்பது உண்மையில் ஒரு சாதனைதான். காவல்கோட்டம் இந்த அளவிற்கு போகவில்லை என்று அனுமானிக்கலாம். அதே ஆசிரியர், வரலாற்று தளம் இருந்தும் ஏன் இந்த வித்தியாசம். கண்டிப்பாக விகடன் காரணம் இல்ல. விகடனில் வரும் அனைத்து தொடர்களும் இப்படி விற்பதில்லை. பின் எப்படி என்று பார்த்தால் இரண்டு விஷயங்கள். நமது சினிமா ஆர்வம், புதிதாக கிளம்பி இருக்கும் தமிழர் உணர்வு (தமிழ் உணர்வு இல்லை, தமிழர் உணர்வு)
இது ஒரு பாகுபலி டைப் கதை. ஏன் பாகுபலி ஓடியது, பிரம்மாண்டமான திரையில் நம்ப முடியாத காட்சிகளை ஒரு காமிக்ஸ் வடிவத்தில் காட்டியது. இது அது போன்ற ஒரு நாவல். தமிழர் என்ற வார்த்தை ஒரு நல்ல வியாபார வார்த்தை. எதோடு சேர்த்தாலும் விற்கும், தமிழனின் பானம், தமிழனின் கலை, தமிழனின் கட்டிடம், தமிழனின் உணவு, தமிழனின் அறிவு இது அந்த வகையில் இது தமிழனின் சரித்திரம். புல்லரிப்புகளுடன் படிக்க ஏற்ற கதை.