12 ஆகஸ்ட் 2020

மாயப் பெரு நதி - ஹரன் பிரசன்னா

"கவிஞர் ஹரன் பிரசன்னா" எழுதியுள்ள புதிய நாவல் மாயப் பெரு நதி. சாதேவி, புகைப்படங்களின் கதை என்று இரண்டு சிறுகதை தொகுப்பு வெளியிட்டுள்ளார். இது அவரின் முதல் நாவல். சாதேவி தொகுப்பை பற்றிய குறிப்பில், 

//தமிழகத்தில் தமிழை தாய் மொழியாய் கொண்டவர்களை விட பிற மொழியை வீட்டில் பேசுபவர்கள் அதிகமாக இருப்பார்கள் என்று நினைக்கின்றேன். எனது ஊரிலேயே வீட்டில் தமிழ் பேசுபவர்கள் குறைவுதான். கன்னடமும், தெலுங்கும் பேசுபவகளே அதிகம். அந்த மொழியும் தமிழுடன் கலந்து மிகவும் திரபடைந்து போயிருக்கும். பிராமணத்தமிழ் என்பதாக ஒன்று உண்டு, ஆனால் அந்த தமிழ் இந்த பிற மொழி பிராமணர்களிடம் இயல்பாக வருவது கிடையாது. என்னுடைய தமிழைக்கேட்டு பலருக்கு ஐயருன்னு சொல்லிட்டு அந்த பாஷை பேச மாட்டேங்கிறியே என்பார்கள். அது வராது, அந்தந்த ஊரின் வட்டார வழக்குதான் வாயில் வரும்.  அதே போல பல பழக்க வழக்கங்கள், பண்டிகைகள் எல்லாம் தமிழகத்து பிராமணர்களிடமிருந்து வித்தியாசப்பட்டே இருக்கும். உதாரணம், ஆடி மாதத்தில் யாரும் திருமணம் வைத்துக் கொள்ள மாட்டார்கள், ஆனால் தெலுங்கு, கன்னட பிராமணர்களுக்கு அம்மாவாசை தாண்டியது என்றால் அடுத்த மாதம் பிறந்ததாக கணக்கு. இந்த கூட்டத்தைப் பற்றி எந்த எழுத்தாளரும் பதிவு செய்ததில்லை. பிரசன்னா அதை ஓரளவிற்கு தீர்த்து வைக்கின்றார், சில கதைகள் மூலமாக மட்டும். சும்மா இப்படியும் ஒரு கூட்டம் தமிழகத்தில் இருக்கின்றது என்று தெரிந்து வைத்துக் கொள்ளமட்டும் பயன்படும்.// என்று எழுதியிருந்தேன். 

இந்த நாவலில் அதை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்கின்றார். 

03 ஆகஸ்ட் 2020

கரமுண்டார் வூடு - தஞ்சை பிரகாஷ்

சாரு நிவேதிதா அவரது தளத்தில் மிகவும் புகழ்ந்து எழுதியிருந்த ஒரு எழுத்தாளர் தஞ்சை பிரகாஷ். அதிலும் குறிப்பாக இந்த நாவலைப் பற்றி மிக உயர்வாக எழுதியிருந்தார். பொண்டாட்டி நாவலின் சூடு நினைவிலிருந்தாலும், இவர் பழைய எழுத்தாளர், அதனால் பரவாயில்லை என்று ஒரு எண்ணம். 

இந்நாவலை எந்த வகையில் சேர்ப்பது என்று தெரியவில்லை. நூறாண்டுகளுக்கு முன் வசதியாக இருந்த பல குடும்பங்கள், கால மாற்றத்தை உள் வாங்கததால் தேய்ந்து போனன. அது போன்று கால மாற்றத்தை சந்திக்கும் ஒரு குடும்பத்தின் கதை. அந்த குடும்பத்தின் சமூக கதையோடு பெண்களின் கதைகளையும் சொல்லியிருக்கின்றார். இரண்டையும் ஒன்றாக சேர்த்ததில் குழம்பிவிட்டது. கதை உடைப்பெடுத்த காவிரி வெள்ளம் போல நாலாப்பக்கமும் ஓடுகின்றது. 

வாழ்ந்து கெட்ட ஒரு வீட்டின் கதையையும், வீட்டி வெவ்வேறு வகைகளில் அடைக்கப்பட்ட பெண்களின் கதைகளும் இணைந்து வருகிறது. ஆற்றின் நடுவே இருக்கும் ஒரு வீடு. காவிரி அலைகள் எப்போதும் சுவற்றில் மோதும் சத்தக் கேட்கும் ஒரு வீடு. வீட்டு வெளிச்சுவரில் ஏறி காவிரியில் குதிக்கலாம், ஈரம் பட்டு பட்டு பாசி படிந்த சுவர்கள். இதுதான் முதலில் நாவலில் உள்ளே ஈர்க்கும் கண்ணி. இறுதியில் அதுவே இறுக்கவும் செய்கின்றது. 

31 ஜூலை 2020

காணாமல் போன பை

இந்த ப்ளாக் ஆரம்பித்த புதிதில் எழுதி வைத்தது, அப்படியே புதைந்து போனது. இன்று அகழ்வார்ய்ச்சியில் கிடைத்தது. சராசரிக்கும் மோசமான கதைதான், இருக்கட்டுமே என்ன இப்போ.....


"லாரில போங்கய்யா"

பஸ் ஸ்டாண்டில் எங்கள் கூட்டத்தை கண்டவுடன் டபுள் விசில் குடுத்து பறந்தது பஸ். காரணம்  பதினைந்து பேர், நாற்பது பெட்டி, பைகள். தவிர ஐந்து (இல்லை ஏழு, எட்டு, நினைவில்லை விடுங்கள்) குழந்தைகள். திருச்சிக்கு ஒரு திருமணத்திற்கு போய்விட்டு வந்திறங்கினோம். 

"பேசாம ஒரு வேன் பிடிச்சி போய்டலாமா?"

"வேண்டாம் ஒரு ஆட்டோல லக்கேஜ் எல்லாம் போட்டு விட்டுட்டு நாம பஸ்ல போய்டலாம்"

"ம்கும் ஆட்டோ, ஒரு மினி டோர் கூட பத்தாது"

"ஒன்னும் வேண்டாம், இப்போ ஒரு ப்ரைவேட் பஸ் வரும் போலாம்"

"இப்ப லாரில போங்கன்னு சொல்லிட்டு போனானே அதுதான் நீங்க சொன்ன பஸ்"

"அப்படியா"

19 ஜூலை 2020

நாரத ராமாயணம் - புதுமைபித்தன்


கிண்டிலில் மேய்ந்து கொண்டிருந்த போது நாரத ராமாயணம் என்று ஒன்று கண்ணில் பட்டது. புதுமை பித்தன் எழுதியது. ஒரு முறை சரிபார்த்து கொண்டேன், ஒரிஜினல் புதுமைபித்தன் தான் என்று. 300 வகை ராமாயணங்கள் உண்டு என்பார்கள். ராமரை அனைவரும் சொந்தம் கொண்டாடியதன் விளைவு. ஜைனர்கள், புத்தர்கள் என்று அனைவரும் ராமரை அவரவர் வசதிக்கு மாற்றி கொண்டார்கள். திராவிட புத்திசாலிகள், பிராமண ராவணனை சொந்தக்காரனாக்கி, ராவண காவியம் எழுதிக் கொண்டார்கள். 

புதுமைபித்தன் கிண்டலான எழுத்துக்கு சொந்தக்காரர். புதுமைபித்தன் நடை திருவிளையாடல் சிவாஜி  நடையை விட பிரபலமானது என்பதால் என்ன எழுதியிருக்கின்றார் என்று படிப்போம் என்று படித்தால், சரியான திராபை.

கடவுளும் கந்தசாமி பிள்ளையும், அகல்யை, காஞ்சனை போன்றவற்றை எழுதியவரா இதையும் எழுதினார் என்றுதான் நினைக்க வேண்டியிருக்கின்றது. ஹிந்து மதத்தில் கடவுள்களை ஜாலியாக நாம் கிண்டல் செய்யலாம், திட்டலாம். (பக்தியுடன் அவனை நம்பும் பக்தர்களுக்குதான் அந்த உரிமை, நம்பாத பொறுக்கிகளுக்கு இல்லை), அதனால் முதல் பகுதி கொஞ்சம் சுவாரஸ்யமாகவே இருந்தது. வயதான ராமருக்கு போரடிக்கின்றது. அதனால் மீண்டும் காட்டிற்கு சீதையுடனும், அனுமனுடனும் போகின்றார். வேறு ஏதாவது அரக்கன் வருவான், அவனுடன் போர் செய்யலாம் என்று. அனுமனுக்கு பர்ணசாலை கட்ட தெரியவில்லை என்று கொஞ்சம் ஜாலியா போகின்றது. 

17 ஜூலை 2020

பாலகுமாரன் - சில நாவல்கள்

கிண்டில் அன்லிமிட்டடில் கங்கை கொண்ட சோழன் படிக்கலாம் என்று நினைத்தால், கடைசி பாகத்தை மட்டும் அன்லிமிட்டடில் வைக்கவில்லை. வியாபார உத்தி போல. லைப்ரேரியில் முடிவு பகுதியை கிழித்து வைக்கும் ஆசாமி யாரோ ஐடியா கொடுத்துள்ளார். சரி போகட்டும், உடையார் எப்படி என்றால், அதில் சில பகுதிகளை காணவேயில்லை. சரி கிடைத்த சில நாவல்களை படிக்கலாம் என்று படித்தேன்.

பந்தயப்புறா

பாலகுமாரனைப் படித்து தெளிந்தேன், குரு என்றெல்லாம் பலர் பேசுவதற்கு காரணம், இது போன்ற நாவல்கள்தான். 80களில் இருந்த சூழல் இன்று எந்தளவிற்கு மாறியுள்ளது என்று தெரியவில்லை. ஒரு பெண் தன் தடைகளை விட்டு விலகி பறக்க நினைப்பதும், பறப்பதும்தான் கதை. புதிதாக வேலைக்கு சேரும் ஒருவருக்கு கிடைக்கும் அனுபவங்கள், அங்குள்ளவர்களின் முறைப்புகள், தரப்படும் சில வெட்டி வேலைகள் எல்லாம் பலரை நாவலுடன் தன்னை இணைத்து கொள்ள செய்யும். நான் முதன் முதலில் வேலைக்கு சென்றதுதான் நினைவிற்கு வந்தது. எனக்கு என்ன வேலை தருவது என்று தெரியாமல், சில நூறு பக்க ரிப்போர்ட்களை டைப் செய்ய சொன்னார்கள். வெட்டியாக அதையும் செய்து கொண்டிருந்தேன். இதில் பாலகுமாரனின் மனைவி ஒரு பாத்திரமாக வருகின்றார், சுயவிமர்சனம் போல. இறுதியில் வரும் காதல் எல்லாம் சினிமாக்கு லாயக்கான கதை. இருந்தும் ஓரளவிற்கு நல்ல நாவல்.