05 டிசம்பர் 2017

சாதேவி - ஹரன் பிரசன்னா

ஹரன் பிரசன்னா வலையுலகில் பிரபலர். http://www.haranprasanna.in/ என்ற வலைதளத்தில் பல ஆண்டுகளாக எழுதி வருபவர். பல கவிதைகள் புனைந்திருக்கின்றார், கிழக்கு பதிப்பகத்தில் பணிபுரிந்து வரும் இவர் வலம் இதழின் ஆசிரியர்களில் ஒருவர். முன்பு இவரைப் பற்றி பல வதந்திகளும் உண்டு, தவறாக ஏதுமில்லை. இட்லிவடை வலைதளத்தின் அதிபர், பிறகு ஏதோவொரு நெடுஞ்செழியன் என்ற பெயரில் பயங்கர கவிதை புனைவார் என்பது போன்ற வதந்திகள். 

இவரது கதைகள் பல அவரது தளத்தில் வெளியானவை, கவிஞர் என்று கண்டு கொண்டதால், இவரது கதைகளை விட்டு கொஞ்சம் தள்ளியே இருந்தேன். அவரது புதிய சிறுகதை தொகுப்பு சாதேவி. முதலில் என்னடா நூலுக்கு தலைப்பு இப்படியிருக்கின்றதே என்று நினைத்துக் கொண்டிருந்தேன். பிறகு அட்டைப்படத்தை கண்டபின் ஓரளவிற்கு யூகிக்க முடிந்தது.

பிரசன்னாவிற்கு பிடித்த எழுத்தாளர் அசோகமித்திரன் என்று தோன்றுகின்றது. பெரும்பாலான கதைகள் அவரது சாயல் தெரிகின்றது. அசோகமித்திரனின் சிறப்பு அவர் கதையை சிக்கலாக்குவதில்லை. சின்ன சின்ன வரிகளில் உணர்ச்சிக் கொந்தளிப்பின்றி சொல்லி செல்வது. அது போன்ற பாணியை தனதாக்கிக் கொண்டுள்ளார். ஒன்றிரண்டு வரிகளில் பெரிய நிகழ்வை காட்டும் கலை கைவந்துள்ளது.


பெரும்பாலான கதைகள் இயல்பான வாழ்வில் நாம் காணும் பாத்திரங்களை அடிப்படையாக கொண்டவை. ஒவ்வொரு குடும்பத்திற்கும் சொந்தமாக பல கதைகள் இருக்கும். அக்குடும்பத்திற்கே உரித்தானவை, அது போன்ற கதைகள்தான். சில கதைகள் முற்றிலும் வேறுபட்டு தனக்குதானே பேசிக்கொள்ளும் பாணி இல்லை மல்லாகக படுத்துக் கொண்டு விட்டத்தை பார்த்தபடி சிந்திக்கும் பாணி. பாண்டி ஆட்டப்படிப்பிற்கு உகந்தவை. 

தலைப்பு சிறுகதையான சாதேவி, துளசி மாடக்கதை, பட்டிக்காட்டு கிளவி கதை, வடிவு பெரியம்மை கதை சிறப்பாக அமைந்திருந்தது. இயல்பான நகைச்சுவை, தனித்து உறுத்தாத நடை, தனித்துவமான பாத்திரங்கள், கதையெங்கும் விரவிய மெல்லிய காமம். கச்சிதமான கலவை.

தமிழகத்தில் தமிழை தாய் மொழியாய் கொண்டவர்களை விட பிற மொழியை வீட்டில் பேசுபவர்கள் அதிகமாக இருப்பார்கள் என்று நினைக்கின்றேன். எனது ஊரிலேயே வீட்டில் தமிழ் பேசுபவர்கள் குறைவுதான். கன்னடமும், தெலுங்கும் பேசுபவகளே அதிகம். அந்த மொழியும் தமிழுடன் கலந்து மிகவும் திரபடைந்து போயிருக்கும். திருப்பதியில் சென்று நான் வீட்டில் பேசும் தெலுங்கில் வழி கேட்க, அவன் நீ தமிழ்லயே பேசு என்ற பதில் பெற்றேன். எங்கள் ஊர் மக்கள் பேசு கன்னடமும் மிக வினோதமாக இருக்கும். இங்கு பெங்களூரில் பேசும் கன்னடத்திற்கும் அதற்கும் பல வித்தியாசம உண்டு. பிராமணத்தமிழ் என்பதாக ஒன்று உண்டு, ஆனால் அந்த தமிழ் இந்த பிற மொழி பிராமணர்களிடம் இயல்பாக வருவது கிடையாது. என்னுடைய தமிழைக்கேட்டு பலருக்கு ஐயருன்னு சொல்லிட்டு அந்த பாஷை பேச மாட்டேங்கிறியே என்பார்கள். அது வராது, அந்தந்த ஊரின் வட்டார வழக்குதான் வாயில் வரும்.  அதே போல பல பழக்க வழக்கங்கள், பண்டிகைகள் எல்லாம் தமிழகத்து பிராமணர்களிடமிருந்து வித்தியாசப்பட்டே இருக்கும். உதாரணம், ஆடி மாதத்தில் யாரும் திருமணம் வைத்துக் கொள்ள மாட்டார்கள், ஆனால் தெலுங்கு, கன்னட பிராமணர்களுக்கு அம்மாவாசை தாண்டியது என்றால் அடுத்த மாதம் பிறந்ததாக கணக்கு. இந்த கூட்டத்தைப் பற்றி எந்த எழுத்தாளரும் பதிவு செய்ததில்லை. பிரசன்னா அதை ஓரளவிற்கு தீர்த்து வைக்கின்றார், சில கதைகள் மூலமாக மட்டும். சும்மா இப்படியும் ஒரு கூட்டம் தமிழகத்தில் இருக்கின்றது என்று தெரிந்து வைத்துக் கொள்ளமட்டும் பயன்படும்.

சமீபத்திய கதைகள் ஏதுமிருப்பது போல தெரியவில்லை. தொடர்ந்து எழுதினால் சிறப்பாக இருக்கும்.

1 கருத்து:

  1. நான் இவரது எழுத்துகளைப் படித்ததில்லை. கடைசி பாரா சுவாரஸ்யம். நீங்கள் தரும் புத்தகப் பகிர்வுகளில் இது போன்ற இடைவரிகள் ரசிக்க வைக்கின்றன.

    பதிலளிநீக்கு