வலம் இதழில் வெளியான என்னுடைய ஒரு சிறுகதை
http://valamonline.in/2020/10/padippu-short-story.html
தூர்வை, கூகை, சூல் ஆகிய நாவல்களை எழுதிய சோ.தர்மன் அவர்களின் அடுத்த நாவல் பதிமூனாவது மையவாடி. ஜெயமோகன் முன்னுரையுடன் வெளிவந்துள்ளது. முன்னுரை நாவலை எந்த கோணத்திலிருந்து படிக்கலாம் என்பதை மெலிதாக காட்டுகின்றது. எனக்கென்னவோ, வேறு ஒரு கோணத்தில் யாரும் படித்துவிட வேண்டாம் என்ற முன்னெச்சரிக்கை போலதான் தோன்றுகின்றது. தமிழ்ஹிந்து நாவலைப்பற்றி மிக எதிர்மறையான விமர்சனத்தை எழுதியிருந்தது. நாவலைப் பற்றியல்ல நாவலாசிரியரைப் பற்றி.சூல் நாவலுக்கு சாகித்திய அகடமி விருது கிடைத்ததும் இந்நாவலில் கிறிஸ்தவமத நிறுவனங்களைப் பற்றிய விமர்சனங்கள் வந்ததும், வழக்கம் போல அவருக்கு சங்கி பட்டம் கட்டிவிட்டார்கள். விட்டால் இனி கோவிலுக்கு செல்பவன், நெற்றியில் விபூதி வைப்பவன் என அனைவருக்கு இந்த பட்டம் கிடைக்கும். முட்டாள்கள்.
ஒரு சிறுவன் எப்படி ஒரு இளைஞனாக மாறுகின்றான் என்பதுதான் நாவல். கருத்தமுத்து உருளக்குடி கிராமத்திலிருந்து படிப்பதற்காக கிராமத்தை விட்டு வெளியே செல்கின்றான். பாடப்படிப்புடன் உலகத்தையும் கற்று கொள்கின்றான். சமூகம் அவனுக்கு கற்று கொடுக்கின்றது. அவனுக்கு வரும் குழப்பங்கள் அதிர்ச்சிகள் வழியாக அவன் மெதுவாக கற்று கொள்கின்றான். கல்வி, மதம், காமம், களவு, அன்பு எல்லாம் அவனுக்கு அனுபவங்களாக கிடைக்கின்றன. அதை அவன் எப்படி பயன்படுத்தி கொள்கின்றான்? எதைப் பெற்று கொள்கின்றான் என்பதுதான் நாவல்.
முன்னுரையில் ஜெயமோகன் கல்வியே ஒருவன் தன் தடைகளை விட்டு வெளியேறும் வழி என்பதே இந்நாவலின் அடிநாதம் என்பது போல சொல்கின்றார். ஓரளவுதான் அது சரி. கல்விதான் ஒருவனை எவ்வித தளைகளிலிருந்தும் அகற்றும். சமூக ஏற்றதாழ்வோ, பொருளாதார ஏற்றதாழ்வோ அனைத்தும் அறிவின் முன் அடங்கிதான் போக வேண்டும். அது இந்நாவலின் மிக மெலிதான ஒரு சரடு. ஆனால் தலைப்பை பின்தொடர்ந்தால் நமக்கு கிடைப்பது நாவலின் முக்கிய சரடான நிறுவனமயமாக்கப்பட்ட மதமும், அதனுள் இருக்கும் முரண்கள், பிரச்சனைகளும்.
"கவிஞர் ஹரன் பிரசன்னா" எழுதியுள்ள புதிய நாவல் மாயப் பெரு நதி. சாதேவி, புகைப்படங்களின் கதை என்று இரண்டு சிறுகதை தொகுப்பு வெளியிட்டுள்ளார். இது அவரின் முதல் நாவல். சாதேவி தொகுப்பை பற்றிய குறிப்பில்,
//தமிழகத்தில் தமிழை தாய் மொழியாய் கொண்டவர்களை விட பிற மொழியை வீட்டில் பேசுபவர்கள் அதிகமாக இருப்பார்கள் என்று நினைக்கின்றேன். எனது ஊரிலேயே வீட்டில் தமிழ் பேசுபவர்கள் குறைவுதான். கன்னடமும், தெலுங்கும் பேசுபவகளே அதிகம். அந்த மொழியும் தமிழுடன் கலந்து மிகவும் திரபடைந்து போயிருக்கும். பிராமணத்தமிழ் என்பதாக ஒன்று உண்டு, ஆனால் அந்த தமிழ் இந்த பிற மொழி பிராமணர்களிடம் இயல்பாக வருவது கிடையாது. என்னுடைய தமிழைக்கேட்டு பலருக்கு ஐயருன்னு சொல்லிட்டு அந்த பாஷை பேச மாட்டேங்கிறியே என்பார்கள். அது வராது, அந்தந்த ஊரின் வட்டார வழக்குதான் வாயில் வரும். அதே போல பல பழக்க வழக்கங்கள், பண்டிகைகள் எல்லாம் தமிழகத்து பிராமணர்களிடமிருந்து வித்தியாசப்பட்டே இருக்கும். உதாரணம், ஆடி மாதத்தில் யாரும் திருமணம் வைத்துக் கொள்ள மாட்டார்கள், ஆனால் தெலுங்கு, கன்னட பிராமணர்களுக்கு அம்மாவாசை தாண்டியது என்றால் அடுத்த மாதம் பிறந்ததாக கணக்கு. இந்த கூட்டத்தைப் பற்றி எந்த எழுத்தாளரும் பதிவு செய்ததில்லை. பிரசன்னா அதை ஓரளவிற்கு தீர்த்து வைக்கின்றார், சில கதைகள் மூலமாக மட்டும். சும்மா இப்படியும் ஒரு கூட்டம் தமிழகத்தில் இருக்கின்றது என்று தெரிந்து வைத்துக் கொள்ளமட்டும் பயன்படும்.// என்று எழுதியிருந்தேன்.
இந்த நாவலில் அதை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்கின்றார்.
இந்த ப்ளாக் ஆரம்பித்த புதிதில் எழுதி வைத்தது, அப்படியே புதைந்து போனது. இன்று அகழ்வார்ய்ச்சியில் கிடைத்தது. சராசரிக்கும் மோசமான கதைதான், இருக்கட்டுமே என்ன இப்போ.....
"லாரில போங்கய்யா"
பஸ் ஸ்டாண்டில் எங்கள் கூட்டத்தை கண்டவுடன் டபுள் விசில் குடுத்து பறந்தது பஸ். காரணம் பதினைந்து பேர், நாற்பது பெட்டி, பைகள். தவிர ஐந்து (இல்லை ஏழு, எட்டு, நினைவில்லை விடுங்கள்) குழந்தைகள். திருச்சிக்கு ஒரு திருமணத்திற்கு போய்விட்டு வந்திறங்கினோம்.
"பேசாம ஒரு வேன் பிடிச்சி போய்டலாமா?"
"வேண்டாம் ஒரு ஆட்டோல லக்கேஜ் எல்லாம் போட்டு விட்டுட்டு நாம பஸ்ல போய்டலாம்"
"ம்கும் ஆட்டோ, ஒரு மினி டோர் கூட பத்தாது"
"ஒன்னும் வேண்டாம், இப்போ ஒரு ப்ரைவேட் பஸ் வரும் போலாம்"
"இப்ப லாரில போங்கன்னு சொல்லிட்டு போனானே அதுதான் நீங்க சொன்ன பஸ்"
"அப்படியா"