29 அக்டோபர் 2016

தூர்வை - சோ. தர்மன்

தூர்வை

தூர்வை என்ற வார்த்தையே இப்புத்தகத்தின் மூலமே கேள்விப்படுகின்றேன். தூர் என்றால் வேர் என்ற அர்த்தமுண்டு என்பது தெரியும் ஏதோ வேர் சம்பத்தப்பட்ட வார்த்தை என்று யூகித்தேன். சரிதான். அருகம்புல்லுக்கு அந்த பெயர். அருகம்புல்லின்  வேர் ஆழமானதாகவும், படர்ந்தும் இருக்கும். எளிதில் முழுவதும் அழிக்க முடியாது. மறுபடியும் துளிர்க்கும். 

ஒரு காலகட்டத்தை பற்றிய பதிவே இந்த தூர்வை. கோபல்ல கிராமம் நாவலுக்கும் இதற்கும் பல ஒற்றுமைகள் உண்டு. இரண்டும் கரிசல்காட்டு வாழ்க்கையை பேசுகின்றது, கிராமத்து வாழ்க்கை. ஒரு குடும்பத்தை வைத்துக் கொண்டு அவர்கள் கதை வழியாக ஊரின் கதையை சொல்வது. இரண்டிலும் உள்ள முக்கிய அம்சம், கதை. எழுதும் கதைகள் வேறு, சொல்லும் கதைகள் வேறு. சொல்லும் கதைகள் சுருக்கமானவை, அதில் ஒரு சுவாரஸ்யம், சொல்பவனின் கற்பனையும் கலந்தது இருக்கும். காதுகள் வழியே சென்று நமக்கு கற்பனானுபவத்தை தரும்.

தூர்வை அது போன்று கதைகளின் கலவை. மினுத்தான் - மாடத்தி குடும்பத்தை வைத்து ஒரு உருளக்குடி கிராமத்து கதையை சுவையாக கூறுகின்றார். எழுதவில்லை. கூறுகின்றார். நாம் எழுத்து வடிவில் கேட்கின்றோம். அத்தியாயம் என்று எதுவும் கிடையாது. எவ்வித பகுப்பும் இல்லை. எங்கு எப்பகுதி ஆரம்பித்து முடிகின்றது என்பதெல்லாம் கிடையாது. அவர் பாட்டிற்கு சொல்லிக் கொண்டே செல்கின்றார். கேட்ட, கண்ட அனைத்தையும் கொட்டிவிட வேண்டும் என்ற எண்ணமோ என்னவோ. ஆனால் எங்கும் சுவாரஸ்யம் குன்றவில்லை.காடு கரைகளில் வெள்ளாமை நன்கு விளைந்து, குதிர்களில் தானியம் நிறைந்து வழிந்த ஒரு காலகட்டத்தின் கதை. கதை மாந்தர்கள் அனைவரும் ஹரிஜன மக்கள் (இந்த பதம் நாவலில் வருவதுதான்). தலித் மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் என்று இன்று கூட செய்தி வெளியாகும் நிலையில், ஒரு தலித் குடும்பம் காடு கரையை கட்டி ஆண்டதை படிக்கும் போது முழுக்க முழுக்க "கதையோ" என்ற எண்ணம் வருகின்றது. வேல் தேவரும், கருப்பையா தேவரும் மினுத்தான் வீட்டில் உண்பதும், ஐயர் வீட்டு திண்ணையில் அமர்ந்து ஜோசியம் கேட்பது, பனையேறும் நாடார் விரட்டி வந்து பதனீர் தருவதும் முன்னுரையில் கி.ரா சொல்வது போன்று நமட்டு சிரிப்புடன்தான் தாண்டி செல்ல தோன்றும். ஆனால் உண்மையில் இப்படி இருந்திருக்க கூடாது என்று எப்படி சொல்ல முடியும். எங்கோ இருந்திருக்கின்றது. ஆசிரியர் நமக்கு, இப்படியும் உண்டு பாருங்கடா என்று.

நாவலில் வரும் தலித் நிலவுடமையாளர்கள் பற்றி அவர் மொழியில்

//

உங்களுடைய தூர்வை நாவல் இதுவரை காட்டப்பட்ட தலித் வாழ்க்கைக்கு மாறுபட்ட ஒன்றைச் சித்தரிக்கிறது...

இந்த நாவலை வாசித்த பலரும் இதைச் சொன்னார்கள். எங்களுக்கு இதுவரை காட்டப்பட்ட தலித், தலைக்கு எண்ணெய் தடவாமல் பரட்டைத் தலையுடன் இருப்பான். அழுக்காக, நாற்றமுடையவனாக, வன்முறை விரும்பியாக இருப்பான். தலித் பெண்கள் எளிதில் சோரம்போகிறவர்களாக இருப்பார்கள். இப்படித்தான் தலித்துகள் குறித்து சித்தரிக்கப்பட்டுள்ளது. உங்களுடைய கதையில் வரும் தலித் நிலங்கள் வைத்திருக்கிறான், உழவு மாடு வைத்திருக்கிறான். மாட்டு வண்டி கட்டிப்போறான். இது என்ன முரணாக இருக்கிறதே எனச் சிலர் என்னிடம் கேட்கிறார்கள். இதுவரை காண்பிக்கப்பட்ட தலித் வாழ்க்கை ஒருபக்கச் சார்புடையவை. ஏற்கனவே காட்டப்பட்டுள்ள தலித் குறித்தான சித்திரங்கள் எல்லாம் இடதுசாரி மார்க்சிய எழுத்தாளர்களால் காட்டப்பட்டவையே. தலித் எழுத்தாளர்களும் இதைத் தொடர்ந்தார்கள். என்னுடைய கதைகள் இவை எல்லாவற்றையும் கேள்விக்குள்ளாக்கின. தலித்துகளுக்குத் தொடக்க காலத்தில் நிலங்கள் கிடையாதுதான். ஆனால் பின்பு அவர்கள் நிலவுடமையாளர்களாகச் செல்வச் செழிப்புடன் வாழ்ந்தார்கள். அந்த வாழ்க்கையைத்தான் என் கதைகளில் பதிவுசெய்கிறேன்.

தொடக்கத்தில் நிலங்கள் இல்லை என்றால் தலித்துகள் எப்படி நிலவுடமையாளர்கள் ஆனார்கள்?

முன்பெல்லாம் ஊரின் நிலங்கள் அத்தனையும் அந்த ஊரில் உள்ள பிராமணர்களுக்குச் சொந்தமானவையாகவே இருக்கும். அதில்தான் எல்லோரும் விவசாயக் கூலிகளாகப் பாடுபடுவார்கள். அந்தப் பிராமணர்கள் அரசு வேலை கிடைத்து பட்டணங்களில் குடியேறத் தொடங்கினர். அவர்கள் சென்ற பிறகு அந்நிலங்களை நிர்வகித்தவர்கள் பெரும்பாலும் தலித்துகளே. பிற்காலத்தில் அந்நிலங்களை அதில் பாடுபட்ட தலித்துகளுக்கே பிராமணர்கள் கையளித்துவிட்டாட்கள். பிராமணர்கள் சிலர் இலவசமாகவும் கொடுத்தார்கள். கொடுப்பதைக் கொடு எனச் சிறு தொகைக்கு நிலத்தைக் கொடுத்துச் சென்றவர்களும் உண்டு. இப்படித்தான் தலித்துகளுக்கு நிலங்கள் கிடைத்தன. எங்கள் பகுதியைப் பொருத்தவரை இதுதான் உண்மை. இன்று பிராமணர்கள் தலித்துகளுக்கான எதிரிகளாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள். இது மாபெரும் தவறு.


//

கி.ராவின் முன்னுரையில் வரும் இரண்டு கதைகளுமே சுவாரஸ்யமானவை. கருப்பு என்னும் காவல் காத்துகொண்டிருக்கின்றது. கொஞ்சம் வெள்ளந்தியான சாமி போல. மினுத்தான் - மாடத்தி, ஒரு காலத்தின் பிரதிநிதியாகத்தான் தெரிகின்றார்கள். நேர்மை, மனிதாபிமானம், கனிவு என்பதை ஒரு சிறப்பு தகுதி என்று என்னாமல் அதுதானே மனித இயல்பு என்று இருந்த மக்களின் காலம். சிறிய உதாரணம், ஒருவனை வேலைக்கு வரவேண்டாம் என்று நாயக்கர் சொல்கின்றார். ஏன் என்று மினுத்தான் கேட்கின்றான். அதற்கு வரும் பதில்" என்னடா அவன், சோறு சாப்புடும் போது, முதல்ல வாங்கின சோறட சரி, அடுத்து சோறு வேணும்ன்னு கேட்கவே மாட்டேங்கிறான்னு நாயக்கரம்மா கோச்சுகுது". என்ன மனிதர்கள். என் அம்மாவின் அப்பா நினைவிற்கு வந்தது. ஒரு முறை வீட்டின் பின்னால் கிணறு வெட்டும் பணி நடந்து கொண்டிருக்கின்றது. வேலையாட்கள் அனைவருக்கும் வீட்டில் உணவு. சாப்பிடுவதை வந்து பார்த்த தாத்தாவிற்கு கோபம். காரணம், அவர் சாப்பிட்ட குழம்பும், அவர்கள் சாப்பிட்டுக்கொண்டிருந்த குழம்பும் வேறு வேறு. உடனே கோபத்தில் உள்ளே பாய்ந்து பாட்டியை அடிக்க போக கலவரம். பாட்டி பாவம், "நாம சாப்ட்ற சாம்பார எப்படி அவங்களுக்கு ஊத்த முடியும், காரசாரமில்லாத ஒன்னு, அதான் அவங்களுக்கு வேற குழம்பு நல்ல காரமா இருக்றபடி வச்சேன்". இக்காலத்தை நீங்கள் இனி மீண்ம்டும் காண்பதெல்லாம் கனவு என்பதையே நாவல் காட்டுகின்றது.

நாவல் முழுக்க கதைகளாக பின்னி கிடக்கின்றன. சேவச்சண்டை போடும் உளியன், வேட்டையாடும் நரிக்குறவர்கள், எலி வேட்டைக்கு போகு ஊர் வண்ணான், வாளை மீனென்று தண்ணீர் பாம்பை பிடிப்பவன் என்று சின்ன கிராமத்து கதை மாந்தர்கள். குட்டி குட்டி கிளைக்கதைகள். சுவரஸ்யமான பாத்திரம் முத்தையன். மாடு மேய்ப்பவனிடம் ஆங்கிலம் பேசும் தோரணையும், மகஜரில் கையெழுத்து வாங்க வந்தவனிடம், கையெழுத்துப் போடத்தெரியாது என்பதை மறைக்க அடித்து விடும் அல்டாப்பும் மறக்க முடியா பாத்திரம். நாவல் அடிக்கடி வாய்விட்டு சிரிக்க வைத்தது. அனைத்து இயல்பான நகைச்சுவை. நிஜ வாழ்வில் நடக்கும் நிகழ்ச்சிகள்.

மாடத்தி - காலத்தின் பிரதிநிதி. அனைவருக்கும் வாரி வழங்கும் அன்னை (வர வர இந்த வார்த்தையை படித்தாலோ, கேட்டாலோ இயல்பாக ஒரு புராணகாலத்து பெண் நினைவிற்கு வருகின்றாள். வெண்முரசோபோபியா - மாபியா இல்லை போபியா) வேலைக்காரனுக்கும் நிலம் எழுதிவைக்கும் முதலாளித்துவ சிந்தனை ஒழிக.

ஒரு நாவல் ஆரம்பித்தது முதல் மகிழ்ச்சியாக போகின்றது என்றாலே சம்சயம்தான். பின்னால் ஏதோ இருக்கின்றது என்ற அர்த்தம். ஏனென்றால் பெரிதாக வளறும் ஒன்றின் வீழ்ச்சியும் பெரிதாகவே இருக்கும். மெதுவாக குறைய ஆரம்பிக்கும் மழை ஒரு புறம், ஆட்கள் பற்றாக்குறை மறுபக்கம். மழையை சமாளித்தாலும், ஆட்கள்பற்றக்குறை பெரிய பிரச்சினை. காலம் மாறுவதை நுணுக்கமாக கூறுகின்றார். வீட்டோடு இருந்து வேலை செய்யும் குருசாமி, பணம் தந்தால் வேலைக்கு வருவேன் என்பது மாற்றம். இதைத்தவறு என்றும் சொல்ல முடியாது. அனைத்திற்கும் பணம் செலவளித்து விவசாயி கையில் நிற்பது கொஞ்சம், பிறகு அந்த முதலீட்டளவிற்கே மிஞ்சும் என்றால் முதலீட்டை வைத்தே சாப்பிட்டுவிட்டு போகலாமே. மேல் பத்தியில் கூறிய, எனது தாத்தா காலத்தில் அவர் விவசாயம் மட்டுமே செய்து பத்து பெண்களை திருமணம் செய்து கொடுத்தார். இரண்டு மகன்களுக்கும் நிலம் வீடு என்று மிச்சமும் வைத்தார். அவரக்கு தேவையானதை அவரே விளைவித்து கொண்டார். நெல், பருத்தி, உளுந்து, கானம் என்று அனைத்தும் அவர் நிலத்திலேயே விளைந்ததே. ஆனால் அவருக்கு பின்னால் அதே நிலம், அதே கிணறு, வற்றாத தண்ணீர் ஆனால் விவசாயம் செய்ய முடியவில்லை.  அவரும் கரிசல் காட்டுக்காரர். சங்கரன் கோவில்.

கோவில்ப்பட்டி பகுதிகளி தீப்பெட்டி தொழிற்சாலை பல குடும்பங்களை வாழ வைத்திருக்கின்றது. கட்டை அடுக்கி பணம் சேர்த்தவர்கள் உண்டு. பெண்கள் கையில் பணம் புழங்க ஒரு காரணம். அதன் மறுபக்கம், விவசாய அழிப்பு. காடுகளில் கருவேலம். இரண்டு பக்கங்களையும் காட்டி செல்கின்றது.

இறுதிப்பகுதி, மினுத்தான் மகன் நகருக்கு இடம் பெயர்வதுடன் முடிகின்றது. ஒரு காலம் இடம் மாறி சென்றுவிட்டது.

ஆசிரியர் சோ. தர்மன். கோவில்பட்டிக்காரர். கிராமத்து நாவல் என்றாலும் குழப்பமான வட்டார வழக்கு எல்லாம் ஏதுமில்லை. எனக்கு அப்பகுதி பேச்சும் தெரிந்தது என்பதால் வித்தியாசமாக தெரியவில்லையோ என்னவோ. ஆழி சூல் உலகு, காடு போன்ற நாவல்களின் பேச்சு மொழியையே படித்து பின்னார், எந்த வட்டாரமாக இருந்தால் என்ன 

படிக்கவேண்டிய நாவல்.

தி ஹிண்டுவில் அவரது பேட்டி (கடைசிபாராவை எப்படி வெட்டாமல் விட்டார்கள் என்பது ஆச்சர்யம்தான்)
ஜெயமோகன் தளத்தில் அவரைப் பற்றிய கட்டுரை

புத்தக அட்டைப்படம் டிஸ்கவரிபுக் பேலசிலிருந்து. அங்கும் வாங்கலாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக