28 நவம்பர் 2016

கூகை - சோ. தர்மன்

சோ.தர்மன் எழுதிய மற்றொரு நாவல். தூர்வைக்கு பின் வெளிவந்தது. அப்படியே தூர்வைக்கு நேர் எதிரான ஒரு நாவல். தூர்வை ஒரு ஆனந்தமான வாழ்க்கையிலிருந்து மெதுவாக சரியும் ஒரு கதை. இது போராட்டத்திலேயா வாழ்ந்து முன்னேறி மெதுவாக சரியும் ஒரு கதை. இரண்டையும் ஒப்பிட வேண்டிய அவசியமில்லை என்றாலும், இரண்டுமே அக்கால தலித் மக்களின் வாழ்க்கையின் பகுதிகளை காட்டுகின்றது என்ற வகையில் ஒப்பிடவே தோன்றுகின்றது.

நாவலின் மொழி இதில் வேறுவிதமாக அமைந்துவிட்டது. இரவில் மட்டும் விழித்திருக்கும் ஒரு ஆற்றல் மிகுந்த பறவை, பகலிலேயெல்லாம் குட்டி குட்டி பறவைகளாலும் துன்புறுத்தப்படும் கூகை இங்கு தாழ்த்தப்பட்ட மக்களின் குறியீடாக வருகின்றது என்று அனுமானித்துக் கொள்ளலாம். 


இதில் அனைத்து ஜாதிகளின் பெயர்களும் தெளிவாக கூறப்படுகின்றன. அவர்களுக்கிடையிலான வித்தியாசங்கள், உழக்கில் கிழக்கு மேற்கு என்பது போன்று அவர்களுக்கிடையிலான ஏற்றத்தாழ்வுகள் எல்லாம் வந்து போகின்றன. சீனிக்கிழவனை மையமாக கொண்டு கதை போகின்றது. கூலிக்காரர்களாகவும், ஜமீன் நிலங்களிலும், மற்ற உயர் சாதி நிலங்களிலும் ஓசிக்கும் வாரச்சோற்றுக்கும் வேலை செய்யும் மக்களிடம், ஒரு பிராமணர் தன் நிலத்தை ஓப்படைத்து செல்கின்றார். அதை வைத்து முன்னேறும் அவர்கள், வேறு வகையில் மீண்டும் அதே பெரிய மனிதர்களிடம் மாட்டிக் கொள்வதுடன் கதை முடிகின்றது.

வழக்கமாக ஜாதி விஷயத்தில் (அனைத்து விஷயங்களிலும்தான்) பிராமணர்களை இழுத்து திட்டும் கூட்டத்திற்கு இந்நாவல் சற்றும் உவப்பாயிராது. பிராமணர்கள் தாழ்த்தப்பட்டவர்களை முன்னேற்றும் வகையில் நடந்து கொள்வது என்பதை அவர்களால் ஏற்று கொள்ள முடியாதுதான். ஆனால் என்ன செய்ய அதுதான் உண்மை என்கின்றார் ஆசிரியர். பலர் தங்கள் நிலங்களை நிலங்களை பார்த்துக்கொண்டவர்களிடமே தந்தனர். சிலர் இலவசமாக, குறைந்த அளவு பணம் பெற்றுக் கொண்டு, தவணைகளில் பணம் பெற்று கொண்டு. அவரவர் சக்திக்கும் மனதிற்குமேற்ப. 

சீனிக்கிழவன் பாத்திரம்  பெரிய மனிதர்களிடம் ஒரு பணிவை காட்டினாலும் தன் மக்களை முன்னேற்ற ஒவ்வொரு அடியாக எடுத்து வைக்கின்றான். ஆனால் அதே ஜனம் அவனை விலக்குவதுடன் முதல் பாகம் முடிகின்றது. சீனிக்கிழவனின் வார்த்தைகளாக வருபவை மிகவும் அர்த்தமுள்ளவை. பணம், மதிப்பு வந்தவுடன் முன்னேறுவதே புத்திசாலித்தனம், அதை வைத்து மற்றவர்களை பழி வாங்க முற்படுவது என்பது முட்டாள்த்தனம். தன்மானத்தை இழப்பது கூடாது, என்றாலும் வலிய போய விழுவது என்பது மடத்தனம்தான். 

இரண்டாம் பாகம் கொஞ்ச கொஞ்சமாக முன்னேறிய அச்சமூகத்தின் வீழ்ச்சி. கிறிஸ்துவ மதமாற்றத்தின் விளைவுகளை பூடகமாக அல்ல வெளிப்படையாகவே கூறுகின்றார். புதுப்பணக்காரன் வேலைகள் என்பார்கள். அது போலத்தான் புதிதாக மதம் மாறியவனும். மாறிய மதத்திற்கு அவன் காட்டும் விசுவாசம், பரம்பரையாக இருப்பவனை விட அதிகமாக இருக்கும். அவர்களே தான் குழியில் விழுந்ததை போல அடுத்தவனையும் சேர்த்து விழவைக்க பார்ப்பார்கள். அவன் செய்த செயலுக்கு நியாயம் கற்பித்து கொள்ளும் முயற்சி, தான் செய்தது சரி என்பதற்கு தனக்கே கூறிக்கொள்ளும் சாட்சி.
இரண்டாம் பாகம், அப்புசுப்பனை மையமாக கொண்ட பகுதி. நகரத்திற்கு சென்றும் எப்படி அவர்கள் மீண்டும் அதே ஜமீன்தார், பெரிய பணக்காரர்களிடம் மாட்டிக்கொள்கின்றார்கள் என்பதை காட்டுகின்றது.

நாவலின் நடுநடுவே ஆசிரியரின் குரலாக ஒலிக்கும் பகுதிகள் மிகவும் ஆயசத்தை கொடுக்கின்றன. கூகையை வைத்து ஆசிரியர் வந்து பேசிக்கொண்டிருப்பதை தாண்டுவது மிகக்கடினமாக இருக்கின்றது. வேண்டுமென்றே வலிய புகுத்திய பகுதியாகவே தெரிகின்றது. அழகாக சுருதி சுத்தமாக பாடும் ஒருவனை வம்படியாக கழுத்தை பிடித்து கூகை போல கத்த வைப்பது போல உள்ளது. இயல்பாக அப்படி கத்தி தொலைத்தாலும் பரவாயில்லை. முதல் நாவலில் இதெல்லாம் இல்லை. பாத்திரங்களும் பேச்சுத்தமிழிலிருந்து தடாலடியாக தூய தமிழுக்கு செல்கின்றார்கள். ஜெயகாந்தன் கதைகளில் எழுந்து நின்று பிரசங்கம் செய்யும் பாத்திரங்கள் போல மாறி மறுபடியும் தங்கள் உண்மையான் பாத்திரத்திற்கு வந்து சேர்கின்றார்கள்.

நாவல் வழியாக பல பிம்பங்களை உடைக்கின்றார். தாழ்த்தப்பட்டவர்கள் என்று பொதுவாக சொன்னாலும், அவர்களுக்குள் இருக்கும் ஏற்றத்தாழ்வுகள், பிரச்சினைகள், மதமாற்றம் என்னும் வியாதியின் விளைவுகள், அனைத்திற்கு காரணம் என்று வசைப்பாடப்படும் பிராமணர்களுக்கும் தாழ்த்தப்பட்டவர்களுக்குமிருந்திருக்க கூடிய இணக்கமான நிலை.

உரையாடல்கள், சம்பவங்களின் கோர்வை எல்லாம் இயல்பு. 

கூகை படிக்க கூடிய நாவல். ஆனால் தூர்வையை விட ஒரு படி கீழ்தான் வைக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக