14 செப்டம்பர் 2017

சூல் - சோ. தருமன்

ஆசிரியரைப்பற்றி ஒரு சிறிய அறிமுகம். சோ. தருமன் கோவில்ப்பட்டி அருகிலிருக்கும் உருளைக்குடி கிராமத்தை சேர்ந்தவர். தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்த தருமன், அவரின் சமுதாய மக்களின் வரலாற்றை தூர்வை, கூகை என்னும் இரண்டு நாவல்களில் பதிவு செய்திருக்கின்றார். தன்னை ஒரு தலித் எழுத்தாளர் என்று குறுக்குவதை விரும்பாதவர். கரிசல் காட்டு கிராமத்து வாழ்வை பதிவு செய்த ஒரு சிறந்த எழுத்தாளர். 

தருமனின் எழுத்துக்களில் என்ன வித்தியாசம்? அவர் காட்டும் தலித் சமுதாயம்தான். தலித் மக்களை ஒரு வித அனுதாபத்துடன் அணுகும் மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்படுகின்றார். தலித் சமுதாயம் இப்படியும் இருந்தது என்பதை அவரது தூர்வை நாவலில் காட்டுகின்றார். பெரிய சம்சாரிகள், நிலம் வைத்து விவசாயம் செய்தவர்கள், பிற ஜாதியினரிடம் சகஜமாக பழகியவர்கள். கூகை நாவலில் தலித் மக்களுக்கும் பிராமணர்களுக்குமிருந்த உறவைப் பற்றி காட்டுகின்றார். பல போராளிகளுக்கு இது போன்ற விஷயங்கள் உவப்பாக இருக்காது. எரிச்சலாகக் கூட இருக்கும், ஆனால் எழுத்தாளன் என்பவன் கொஞ்சம் தயவு தாட்சண்யம் பார்க்காதவனாக இருக்க வேண்டுமல்லவா?

சூல் முதலிரண்டு நாவல்களிலிருந்து விலகி, அக்கால மக்களின் வேறு ஒரு வாழ்க்கையை காட்டுகின்றது. முதல் இரண்டும் நாவல்களும் சமூக, பொருளாதர மாற்றங்களை பேசுகின்றது. இந்நாவல் விவசாயம், ஆன்மீகம், பாரம்பர்ய அறிவு, அரசியல் மாற்றங்களை அதிகம் பேசுகின்றது. 


வெள்ளைக்காரன் வந்துதான் ரோடு போட்டான், ரயில் விட்டான், கப்பல் விட்டான் தொழில் வளர்ந்தது என்று பினாத்துபவர்கள் பல விஷயங்களை செளகர்யமாக மறந்துவிடுகின்றார்கள். வெள்ளைக்காரன் வருவதற்கு முன்பும் நம்மிடம் மருத்துவ அறிவு இருந்தது, பொறியியல் அறிவு இருந்தது, விவசாய அறிவு இருந்தது, சிறந்த நீர் மேலாண்மை இருந்தது. விவசாயம் அழிந்து கொண்டிருக்கின்றது என்ற குரல் எங்கும் கேட்கின்றது. நிலப்பிரத்துவ காலம் என்று தூற்றப்படும் காலத்தில் கூட சிறப்பாக கவனித்துக் கொள்ளப்பட்ட ஏரிகள், குளங்கள், கண்மாய்கள், நதிகள் இன்றைய ஜனநாயக நாட்டில் எந்த அழகில் இருக்கின்றன  மழையில்லாவிட்டால் வறட்சி நிவாரணம், மழை பொழிந்தால் வெள்ள நிவாரணம் இரண்டிற்கும் போராட்டம் நடக்கின்றது. மழை பொழியும் போது சேமிப்பதும், சேமிப்பதை இல்லாத போது பயன்படுத்துவதும்தானே நல்ல மேலாண்மை. அவையனைத்தும் இன்று எங்கு சென்றன? எப்படி காணமால் போயிற்று என்று கூறுகின்றது இந்நாவல்.

உருளைக்குடியில் ஒரு வெய்யில் காலத்தில் கதை ஆரம்பிக்கின்றது, கண்மாய் கரையை திறந்து கண்மாயிலிருக்கும் கரம்பை மண்ணை எடுக்கும் பணி தொடங்குகின்றது. விவசாயிகள் வண்டிகளில் கரம்பையை அள்ளி சென்று அவர்கள் வயலில் கொட்டுகின்றார்கள், கண்மாய தூர் வாரப்படுகின்றது. கண்மாய் கரை முழுவதும் கரையை பலப்படுத்தும் மரங்களும் செடிகளும் இருக்கின்றன. கண்மாயை பாதுகாப்பது நீர்ப்பாய்ச்சி. தூர்வாருவதை கண்காணிப்பது, கரையை பாதுகாப்பது, முறை வைத்து நீர்ப்பாய்ச்சி பயிர்களை காப்பது என்பதை கடமையாக செய்து வருபவன். அந்த நீர்ப்பாய்ச்சி தான் நாயகன். நாயகி கண்மாய்தான். 

சூல் என்னும் தலைப்பு குறிப்பது இந்த கண்மாயைத்தான். நிறை சூலியாக இருக்கும் கண்மாய் கொஞ்ச கொஞ்சமாக அழிந்து சூன்யமாக மாறுவது வரை கதை செல்கின்றது. 

கண்மாயை  சார்ந்து வாழும் உருளைக்குடி மக்களின் கதையை எளிமையான நடையில் கூறி செல்கின்றார். 

உருளைக்குடியில் ஒரு வெய்யில் காலத்தில் கதை ஆரம்பிக்கின்றது, கண்மாய் கரையை திறந்து கண்மாயிலிருக்கும் கரம்பை மண்ணை எடுக்கும் பணி தொடங்குகின்றது. விவசாயிகள் வண்டிகளில் கரம்பையை அள்ளி சென்று அவர்கள் வயலில் கொட்டுகின்றார்கள், கண்மாய தூர் வாரப்படுகின்றது. கண்மாய் கரை முழுவதும் கரையை பலப்படுத்தும் மரங்களும் செடிகளும் இருக்கின்றன. கண்மாயை பாதுகாப்பது நீர்ப்பாய்ச்சி. தூர்வாருவதை கண்காணிப்பது, கரையை பாதுகாப்பது, முறை வைத்து நீர்ப்பாய்ச்சி பயிர்களை காப்பது என்பதை கடமையாக செய்து வருபவன். கெத்து கெத்துவென்று நிறைந்து மறுகால் ஓடி கொண்டிருக்கும் கண்மாய், வெள்ளை வெளேர்னெறு வாய்க்கால்களில் ஓடி வயல்களை நிறைக்கும் நீர். துள்ளி விளையாடும் மீன்கள். கண்மாயை காக்கும் தெய்வங்கள். கருப்பன், கண்மாய் அடைப்பை எடுக்க உயிரை கொடுத்த நீர்க்குடும்பன், தண்ணீர் கேட்டு வந்து தவறாக நினைக்கப்பட்டு மரணமடைந்த கள்ளன், குரவை மீனால் இறந்த குரவன், காதலித்து கைவிட்டவனை கொன்று, கொல்லப்பட்டவனையும் உளியன் சாமியாக்கியவள், என்று கடவுளரின் கதைகள், பேயை புணர்ந்தவன் கதை, அனுமன் சாமி கதை என்று கிராமத்தில் மட்டும் கேள்விப்படக்கூடிய அமானுஷ்யக்கதைகள் சுவாரஸ்யமானவை.

இனி கதைகளில் மட்டும்தான் காண முடியுமோ என்று அச்சப்படக்கூடிய மனிதர்களை காட்டுகின்றார்.  கோவிலுக்கு செல்பவர்கள் தாகம் தணிக்க மோரளித்து, மரம் வளர்த்து நிழலிளிக்கும் கொப்புளாயி, மழைக்காலத்தில் பறவைகள் பசிக்கு என்ன செய்யுமோ என்று பதறி அவைகளுக்கும் உணவளிக்கும் மக்கள், தன் தெருவில் வந்து யாசகம் கேட்டால் அது அவமானம் என்று கேட்கும் முன் அன்னமளிக்கும் மக்கள் ஒருகாலத்தில் இப்படித்தான் மக்கள் இருந்திருக்கின்றனர் என்ற நினைப்பே நம்மிடம் கொஞ்ச அறவுணர்வை தூண்டலாம். 

தருமன் பலர் சொல்லத்தயங்குவதை மிக அழகாக போட்டுடைக்கின்றார். பள்ளக்குடிக்குள் சர்ச் நுழைகின்றது, அனைத்து பிரச்சினைகளும் ஆரம்பிக்கின்ன. மதமாற்றம் பற்றிய கூரிய விமர்சனங்கள் வருகின்றன. மதமாற்றம் எப்படி கொஞ்ச கொஞ்சமாக நமது பாரம்பர்யத்தை அழிக்கின்றது என்பதை தெளிவாக காட்டுகின்றார். அடுத்தது திராவிட அரசியலின் விஷ வேர்களின் பரவல். நிலங்களை வளைத்து போடும் திராவிட அரசியல்வாதி, அதை எதிர்க்கும் நீர்ப்பாய்ச்சியை விலக்கி எவனோ ஒருவனை கண்மாயின் காவலனாக்கும் அரசு எந்திரம் என்று போட்டு தாக்குகின்றார். 

நீர்ப்பாய்ச்சி கண்மாயின் பொறுப்பிற்கு அடையாமாக தனக்கு மகாராஜாவால் அளிக்கப்பட்ட மண்வெட்டியை நீருள் எறிவதில் நாவல் முடிகின்றது. 

நாவலை படித்தவுடன் ஒரு வெறுமை, எரிச்சல் உண்டாகின்றது. நம்மை ஆண்டவர்கள் மீதும், நம்மீதும், நமது பொறுப்பற்றத்தனம் குறித்தும் ஒரு போதாமை உண்டாகின்றது. கண்மாயை உடைத்தவன் ஒருவன் கதை இதில் வருகின்றது. ஜென்மபாவம் என்று கூறப்படுகின்றது. கண்மாயை உடைப்பதற்கும் முள் படர்ந்து தூர்ந்து போக விடுவதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை. அதற்கு சற்றும் குறையாத பாவம், ஆற்றை சுரண்டுவது. பரிகாரத்தையும் கூறுகின்றார், மரம் நடு, தண்ணீர் வரும் ஓடைகளை சரி செய், நீராதாரத்தை பெருக்கு என்று. நாவலில் பாபம் செய்பவர்களும், விரக்தி அடைந்தவர்களும் கடைசியில் சரணடைவது மரங்களிடம். அதுதான் இந்நாவலின் செய்தி என்று படுகின்றது.

இது போன்ற எழுத்துக்கள் மக்களிடையே கொண்டு சேர்க்கப்படவேண்டும். ஆனால் இதைப்பற்றி எந்த ஒரு பேச்சையும் காணோம். ஒருவேளை தருமனும் அறிவுஜீவி வழக்கப்படி நமது பாரம்பர்யத்தை கேவலப்படுத்தி எழுதினால் மட்டும்தான் அது நடக்குமோ என்னவோ. பெருமாள் முருகனை விட்டு சோ. தருமனுக்கு பயிற்சி அளிக்க சொல்ல வேண்டும். 

கண்டிப்பாக படிக்க வேண்டிய நாவல்.

2 கருத்துகள்:

  1. பகிர்வுக்கு நன்றி !

    நூல் குறித்து - பதிப்பகம், பக்கங்கள், விலை போன்ற விவரங்களையும் தந்தால் வாங்க முனைபவர்களுக்கு உதவலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த இணைப்பை தேட முடியவில்லை அன்று. புத்தக இணைப்பை சேர்த்துட்டேன். நன்றி

      நீக்கு